இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு- ௪௧. கல்லாமை.

குறள் – ௪௱௧ (அச்சில் உள்ளவாறு).

“அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.”

அரங்கு = ஆட்டக்கட்டம்.
அற்றே = போன்றதே.
வட்டு = ஆட்டம் (தாயம், சதுரங்கம், சொக்கட்டான், ஆடுபுலி முதலானவை).
கோட்டி = அவை.
கோட்டிகொளல் = அவையில் பேசுதல்.

“ஆட்டக்கட்டமின்றி ஆடுவது போன்றதே முற்றறிவுதரும் நூல்களைக்கல்லாது அவையின்கண் பேசுதல்” என்பதாம்.

‘இன்றி’ என்னும் குறிப்புவினையெச்சம் ‘கோட்டி’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மை வடிவம் —
“அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றி கோட்டி கொளல்.”

குறள் – ௪௱௨ (அச்சில் உள்ளவாறு).

“கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று.”

காமம் = பெருவிருப்பம்.
காமுறுதன் → காமுறுதல் = விரும்புதல்.
இல்லாதாள் = இல்லாதவளாகிய.
அற்று = போன்றது.

“முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற்றற்று
கல்லாதான் சொற்காமுறுதல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘முலையிரண்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

“முலையிரண்டும் இல்லாத பெண்ணை விரும்புவதைப்போன்றது கற்காதான் பேசவிரும்புவது” என்பதாம்.

செம்மைவடிவம் —
“கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.”

குறள் – ௪௱௩ (அச்சில் உள்ளவாறு).

“கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்.”

நனி = மிக.
நல்லர் = நல்லவர்.

“கற்றார்முன் சொல்லாதிருக்கப்பெறின் கல்லாதவரும் நனிநல்லர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘கல்லாதவரும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘கற்றார்முன்’ என்பதன்கண் வந்த ‘முன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

“கல்லாதவர் தாம் கருதியதை கற்றார்முன் சொல்லாமல் இருப்பாரானால் அவர்களும் மிகநல்லவர்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.”

குறள் – ௪௱௪ (அச்சில் உள்ளவாறு).

“கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்.”

ஒட்பம் = ஒண்மை = நுண்ணறிவு.
கழிய = மிகவும்.
கொள்ளார் = ஏற்கார்.

“கல்லாதானொட்பம் கழியநன்றாயினும் அறிவுடையார் கொள்ளார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘ஒட்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘நன்றாயினும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

‘கொள்ளார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

“கல்லாதானது அறிவு ஓரோவழி மிகவும் நன்றாக இருப்பினும் அறிவுடையார் அதனை ஏற்கார்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“கல்லாதா னொட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.”

குறள் – ௪௱௫ (அச்சில் உள்ளவாறு).

“கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.”

தகைமை = தகுதி.
தலைப்பெய்து = கூடி.
சோர்வு = கருத்துக்குறை.
படும் = கெடும், தளரும்.

‘சொல்லாட’ என்னும் வினையெச்சம் ‘சோர்வு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

“கல்லாத ஒருவனது தகுதி கற்றாரைக்கூடி பேசும்போது கெடும் ” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வு படும்.”

குறள் – ௪௱௬ (அச்சில் உள்ளவாறு).

“உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்.”

மாத்திரை = அளவு.
மாத்திரையர் = அளவினர்.
பயவாக்களர் = பயனிலாக்களர்நிலம்.
அனையர் = ஒத்தார்.

“உளரென்னும் மாத்திரையரல்லால் கல்லாதவர் பயவாக்களரனையர்” ‌என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கல்லாதார் உயிருள்ளவரென எண்ணும் அளவினராகி பயன்தராத, விளையாத களர்நிலத்தினை ஒத்தார்“ என்பதாம்.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘உளர்’ என்ற வினைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அல்லால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் இடைச்சொல் ‘அல்’ என்னும் எதிர்மறைக்குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.”

 

குறள் – ௪௱௭ (அச்சில் உள்ளவாறு).

“நுண்மா ணுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.

நுண் = நுட்பம்.
மாண் = மாண்பு.
நுழைபுலம் = ஆராய்ச்சியறிவு.
எழில்நலம் = வனப்பு, தோற்றம்.
புனை = வடிவமைக்கப்பட்ட.
பாவை = படிமை.
அற்று = ஒத்தது.

“நுட்பமும் மாண்பும் மிக்கநூல்களில் ஆராய்ச்சியறிவு இல்லானின் எழில்நலம் மண்ணால் மாண்புற வடிவமைக்கப்பட்ட படிமையின் எழில்நலத்தை ஒத்தது; உணர்வற்றது” என்பதாம். ‘நூல்கள்’ என்பது சொல்லெச்சம்.

‘நுண்மாணுழைபுலம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நுண்மா ணுழைபுலம் இல்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று.”

குறள் – ௪௱௮ (அச்சில் உள்ளவாறு).

“நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு.”

கட் = கண் என்னும் ஏழாம்வேற்றுமைவுருபின் புணர்நிலை.
பட்ட = சேர்ந்த.
இன்னாதே = தீதே, கொடியதே.
திரு = செல்வம்.

“நல்லாரிடம் சேர்ந்த வறுமையின் கொடியதே கல்லாரிடம் சேர்ந்த செல்வம்” என்பதாம்.

‘வறுமையின்’ என்பதில் ஒப்புப்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு வறுமை என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு.”

குறள் – ௪௱௯ (அச்சில் உள்ளவாறு).

“மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரைனைத்திலர் பாடு.”

மேல் = மேல்வகுப்பு, உயர்குடி.
கீழ் = கீழ்வகுப்பு, தாழ்குடி.
அனைத்து = போல, ஒப்ப.
பாடு = புகழ், பெருமை.
இலர் = இல்லார்.

“கல்லார் மேற்பிறந்தாராயினும் கீழ்ப்பிறந்தும் கற்றாரனைத்து பாடு இலர்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கல்லாதார் மேல்குடியில் பிறந்தவராயினும் கீழ்க்குடியில் பிறந்தும் கற்றாரையொப்ப பெருமை இல்லார்” என்பதாம்.

‘ஆயினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘கீழ்ப்பிறந்தும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘கற்றாரனைத்து’ என்பதில் வந்த ‘அனைத்து’ என்னும் உவமச்சொல் ‘கற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரைனைத்து*இலர் பாடு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௪௱௰ (அச்சில் உள்ளவாறு).

“விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.”

அனையர் = ஒப்பர்.
இலங்குநூல் = விளங்கிய நூல்.
ஏனையவர் = மற்றவர்.

“இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர் விலங்கொடு மக்களனையர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“விளங்கிய நூல்களை கற்றாரோடு கல்லாத மற்றையர் விலங்குகளுக்கு ஒப்பானவர்” என்பதாம்.

‘மக்கள்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘அனையர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘ஓடு’ என்னும் வேற்றுமைவுருபு ‘கற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு* ஏனை யவர்.”

*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button