அரிய பற்றியம்இலக்கணம்சொல்விளக்கம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி

கடவுள்வாழ்த்து ;குறளெண் : ௫,௬,௭,௮.

குறள்களில் பொருள்மயங்குபுணர்ச்சி.

பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.

பால் — அறத்துப்பால்.

இயல் — பாயிரவியல்.

முதன்மைத்தலைப்பு – ௧. கடவுள்வாழ்த்து.

குறள் – ௫.

“இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.“

இக்குறளில் மூன்றாம் நான்காஞ்சீர்கள் புணரா. ‘சேரா’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. இக்குறளில் தோன்றுமெழுவாயாக இறைவனும், தோன்றாயெழுவாயாக மானிடரும் சுட்டப்பட்டு அவரவர்க்குரிய பண்புகளும் முடிவுகளும் கூறப்பட்டன.

பொருளுணர்முறையில், “இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா” என்றாகும். இதன்பொருள், ‘புகழ்தற்குரிய இறைவனதுமெய்மையைப் (பொருளைப்) புரிந்துகொண்டவரிடத்து இருளைத்தரும் இருவினைகளும் சேரா’ என்பதே.

அச்சிலுள்ளபுணர்ச்சி வினைமுற்றை ஒழித்தது. வினைமுற்றின்றி ஒருகருத்தைக்கூறமுடியாது. வினைமுற்று இன்மையால் ஏழுசீர்களுஞ்சேர்ந்து மானிடரைக்குறிக்கும்  நெடுந்தொடரெழுவாயானது.

செம்மைவடிவம் —

“இருள்சே ரிருவினையுஞ் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.“

————————————————

திருக்குறள்.

பால் — அறத்துப்பால்.

இயல் — பாயிரவியல்.

முதன்மைத்தலைப்பு – ௧. கடவுள்வாழ்த்து.

குறள் – ௬.

“பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.”

பொறிவாயில்கள் என்பது அவற்றால் உணரப்படும் உணர்வுகளுக்கும் ஆகிவரும். செய்யுளின் செம்மைவடிவமும் இதுவே.

பொறிவாயில்கள் ஐந்தன்கண் நிகழும்குற்றங்களை அறுத்தானது பொய்யில்லாவொழுக்கநெறியின்கண் நின்றார் நிலமிசை நீடுவாழ் வார் என்பதாம்.

———————————————————

பால் — அறத்துப்பால்.

இயல் — பாயிரவியல்.

முதன்மைத்தலைப்பு – ௧. கடவுள்வாழ்த்து.

குறள் – ௭.

“தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தாற் கல்லால்

மனக்கவலை மாற்ற லரிது.”

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே. சொற்களை இடம்மாற்றாமல் இதேவரிசையில் ஆற்றொழுக்காக பொருளுணரலாம்.

________________________________

குறளில் பொருள்மயங்குபுணர்ச்சி.

பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.

பால் — அறத்துப்பால்.

இயல் — பாயிரவியல்.

முதன்மைத்தலைப்பு- ௧. கடவுள்வாழ்த்து.

குறள் – ௮.

“அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்

பிறவாழி நீந்த லரிது.”

இக்குறளின் நான்காஞ்சீரின் ஈற்றுலகரம் றகமாக திரிந்தது வேண்டவொன்று. தொடரொலிப்பு என்பது புணர்ச்சியின் உடனாயவிளைவு. அச்சிலுள்ளவாறு ஒலிப்பதானால் எழுசீர்களையும் இடைவெளியின்றி தொடர்ந்தொலிக்கவேண்டும். அவ்வாறு ஒலித்தால் பொருளுணர்ச்சி கிட்டாது.

இக்குறளில் அறவாழி, பிறவாழி எனும் இருகருத்துகள் நுவலப்பட்டன. இவ்விருகருத்துகளையும் பிரித்தறிந்து தெளிவாக உணர  அவ்விடத்து விட்டிசைக்க வேண்டும். பொதுவாக ‘ஆல்’ எனும் இடைச்சொல் வருமிடங்களில் விட்டிசை நேரும்.

இன்னின்ன ஈற்றெழுத்துகளும், இன்னின்ன முதலெழுத்துகளும் புணரவேண்டுமென இலக்கணம் வரையறுக்கவில்லை. சொல்வோரது கருத்து வெளிப்படுமாறு சொற்களைப்புணர்த்தும் உரிமையை மொழி வழங்குகிறது. அவ்வாறு புணருஞ்சொற்கள் எவ்வாறு புணரவேண்டுமென இலக்கணம் வரையறுக்கிறது.

செம்மைவடிவம் —

“அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்த லரிது.”

‘அறவாழியந்தணனது தாள்களைச்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது’ என்றவாறு ஆற்றொழுக்காக பொருளுணரலாம்.

நன்றி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button