இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — காமத்துப்பால். இயல் — களவியல். தலைப்பு - ௱௯. தகையணங்கு உறுத்தல். தகை = அழகு, தகுதி, நன்மை. அணங்கு = தெய்வப்பெண். உறுத்தல் = வருத்துதல். தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்தந்தருதலைச்சொல்லுதல்.

குறள் – ௲௮௰௧ (அச்சில் உள்ளவாறு).

“அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.”

அணங்குகொல் = (தீண்டி வருத்தும்) தெய்வப்பெண்ணோ.
ஆய்மயில்கொல்லோ = ஆய்ந்து படைக்கப்பட்ட மயிலோ. கொல், ஓ என்பன ஐயயிடைச்சொற்கள்.
கனங்குழைமாதர்கொல் = கனத்த காதணி அணிந்த மானிடப்பெண்ணோ.
மாலும் = மயங்குகிறது.

“அணங்குகொல் ஆய்மயில்கொல்லோ கனங்குழை மாதர்கொல் என்னெஞ்சு மாலும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“இவள் தீண்டி வருத்தும் தெய்வப்பெண்ணோ ஆய்ந்து படைக்கப்பட்ட மயிலோ கனத்த காதணி அணிந்த மானிடப்பெண்ணோ எனது நெஞ்சு மயங்குகிறது” என்பதாம்.

ஐயப்பொருளில் வந்த ‘கொல்’ என்னும் இடைச்சொல் ‘அணங்கு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

ஐயப்பொருளில் வந்த ‘கொல்’ என்னும் இடைச்சொல் ‘மாதர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘மாலும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் னெஞ்சு.”

 

குறள் – ௲௮௰௨ (அச்சில் உள்ளவாறு).

“நோக்கினா ணோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.”

நோக்கு = கருத்தூன்றி காணல்.
எதிர்நோக்கு = அவ்வாறே கருத்தூன்றி காணல் .
தாக்கணங்கு = நோக்கி வருத்தும் தெய்வப்பெண்.
தானை = படை.
கொண்டன்னது = கொண்டது போன்றது.
உடைத்து = தன்மையது.

“நோக்கெதிர்நோக்குதல் நோக்கினாள் தாக்கணங்கு தானைகொண்டன்னதுடைத்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கண்டதற்கு அவ்வாறே கருத்தூன்றி நோக்கினாள். கருத்தூன்றி நோக்கியது தாக்கி வருத்தும் தெய்வப்பெண் படைகொண்டு தாக்கிய தன்மையது” என்பதாம்.

‘நோக்கினாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘தானைகொண்டன்னது’ என்பதன்கண் வந்த தானை எழுவாய். இது ‘தானையைக்கொண்டன்னது’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளியின்மையும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை அறிவிக்கும்.

செம்மைவடிவம் —
“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைகொண் டன்ன துடைத்து.”

 

குறள் – ௲௮௰௩ (அச்சில் உள்ளவாறு).

“பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.”

பண்டு = முன்பு.
கூற்று = காலன்.
இனி = இப்போது.
பெண்டகையால் = பெண்ணியல்பால்.
பேரமர்கட்டு = விரும்பத்தூண்டும் பெரிய.
அமர் = மாறுபடு.
கட்டு = கண்களிடத்து.

“கூற்றென்பதனை பண்டறியேன் பெண்டகையால் பேரமர்க்கட்டு இனியறிந்தேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“முன்பு காலனென்பானைக்கண்டறியேன். பெண்மையால் விரும்பத்தூண்டும் பெரிய மாறுபடும் கண்களிடத்து இப்போது அதனையறிந்தேன்” என்பதாம்.

‘என்பதனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இனி’ என்னும் இடப்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும். மேலும் ஐயுருபேற்ற இந்த விளக்கயிடைச்சொல் ‘கூற்று’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பெண்டகையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘பெண்டகை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.”

 

குறள் – ௲௮௰௪ (அச்சில் உள்ளவாறு).

“கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.”

பெண்டகை = பெண்மை.
பேதை = பெண்.
அமர்த்தன = மாறுபட்டன.

“கண்டாருயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைகண் அமர்த்தன” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“காண்பாரின் உயிரைப்போக்கும் தோற்றத்துடன் பெண்மைகொண்ட இவள்கண்கள் மாறுபட்டன” என்பதாம்.

‘போக்கும் தோற்றம்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘அமர்த்தன கண்’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது. மேலும் ‘கண்’ என்பது ‘பேதையினது கண்’ என்றவாறு இணையும்.

செம்மைவடிவம் —
“கண்டா ருயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.”

குறள் – ௲௮௰௫ (அச்சில் உள்ளவாறு).

“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
ணோக்கமிம் மூன்று முடைத்து.”

கூற்றமோ = காலனோ.
கண்ணோ = பெண்ணின் கண்களோ.
பிணையோ = மருளும் பெண்மான்கண்ணோ.
மடவரல் = பெண்.
நோக்கம் = விரும்பத்தூண்டும் நோக்கு.
உடைத்து = உடையது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“உயிரைப்போக்குவதால் காலனோ இயல்பாக நோக்குவதால் பெண்ணோ மருள்வதால் பெண்மான்கண்ணோ இவள்நோக்கு இம்மூன்றுதன்மையும் உடையது” என்பதாம்.

‘இம்மூன்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.”

 

குறள் – ௲௮௰௬ (அச்சில் உள்ளவாறு).

“கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்‌.”

கொடும்புருவம் = (வில்போல்) வளைந்த புருவம்.
கோடா → கோடி = வளைந்த.
மறைப்பின் = கண்பார்வையை சுருக்கின்.
நடுங்கு அஞர் = நடுங்கும் துன்பம்.
செய்யல = செய்யா.
மன் = அசைச்சொல்.

“கொடும்புருவம் கோடாமறைப்பின் இவள்கண் நடுங்கஞர் செய்யலமன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வில்போல் வளைந்து கொடுமைபுரியும் புருவம் மேலும் வளைவதால் இவளது கண்கள் சுருங்கி நடுங்கும் துன்பத்தை செய்யா” என்பதாம். கண்கள் சுருங்குவதால் அவை வெளிப்படுத்தும் மாறுபாட்டின் கூர்மை குறைவதாக தலைவன் கருதுகிறான்.

‘கொடும்புருவம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘கோடாமறைப்பின்’ என்பதையடுத்து விட்டிசைத்து பொருளுணர்ச்சிதரும். புணர்ச்சிகள் பொருளுணர்ச்சிக்கானவை. ‘கோடாமறைப்பினடுங்கஞர்’ என்னும் புணர்மொழியைப்பிரிக்காது பொருளுணர இயலாது. பிரித்துப்பொருளுணர்வதாயின் புணர்ச்சியின் பயனென்.

‘மன்’ என்னும் அசைச்சொல் ‘செய்யல’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்‌.”

 

குறள் – ௲௮௰௭ (அச்சில் உள்ளவாறு).

“கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.”

கடாஅக்களிறு → கடாக்களிறு = மதயானை.
கட்படாஅம் → கட்படாம் = மத்தகங்களை மூடிய ஆடை, முகப்படாம்.
படாஅமுலை = தளரா முலை, கைப்படா முலை.
துகில் = ஆடை.

“மாதர்படாஅமுலைமேல் துகில் கடாஅக்களிற்றின்மேல் கட்படாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மாதரது தளரா முலைமேலுள்ள ஆடை மதயானையின் மத்தகங்களின் மேலுள்ள கண்படாமை ஒத்துள்ளது” என்பதாம்.

‘களிற்றின்மேல்’ என்பதன்கண் வந்த ‘மேல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு இன்சாரியைபெற்று ‘களிறு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கட்படாஅம்’ என்னுமிடத்தில் ஒருகருத்து முற்றுப்பெறுகிறது. முற்றுப்பொருள்தருமிடங்கள் புணரா.

‘முலைமேல்’ என்பதன்கண் வந்த ‘மேல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘முலை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.”

 

குறள் – ௲௮௰௮ (அச்சில் உள்ளவாறு).

“ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு
ணண்ணாரு முட்குமென் பீடு.”

ஒண்ணுதற்கோஒ → ஒண்ணுதற்கோ (ஒள்+நுதற்கு+ஓ) = ஒளி பொருந்திய நெற்றிக்கோ. ‘ஓ’ என்பது வியப்புக்குறிப்பு.
உடைந்ததே = அழிந்ததே.
ஞாட்பினுள் = போர்க்களத்தில்.
நண்ணார் = பொருந்தார், பகைவர்.
உட்கும் = போரிட அஞ்சும்.
பீடு = பெருவலிமை.

“ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என்பீடு ஒண்ணுதற்கோஒ உடைந்ததே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“போர்க்களத்தில் பொருந்தாரும் அஞ்சும் எனது பெருவலிமை இப்பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றிக்கு அழிந்ததே” என்பதாம்.

‘ஒண்ணுதற்கோ’ என்பதன்கண் வந்த ‘ஓ’ என்னும் வியப்புக்குறிப்புச்சொல் ‘ஒண்ணுதல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஞாட்பினுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு இன்சாரியைபெற்று ‘ஞாட்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

’நண்ணாரும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.”

 

குறள் – ௲௮௰௯ (அச்சில் உள்ளவாறு).

“பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
கணியெவனோ வேதில தந்து.”

பிணை = பெண்மான்.
ஏர் மடநோக்கும் = அழகிய வெருவும் (அஞ்சும்) பார்வையும்.
நாணும் = பெண்மைகுணமாகிய நாண்.
அணி = அணிகலன்கள்.
எவனோ = எதற்கோ.
ஏதில தந்து = பொருந்தாப்பிறவற்றைக்கொடுத்து.

“பிணையேர்மடநோக்கும் நாணும் உடையாட்கு ஏதில தந்து அணி எவனோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பெண்மானின் அழகிய வெருவும் (அஞ்சும்) பார்வையும் பெண்மைகுணமாகிய நாணும் உடையாளுக்கு பொருந்தாப்பிறவற்றைக்கொடுத்து அணிவித்தல் எதற்கோ” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘நாணும்’ என்பது புணராது.

‘உடையாட்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அணி’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘அணி’ என்பது அணிகலன் என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘எவனோ’ என்னும் வினாப்பெயர் வினாப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பிணையேர் மடநோக்கு நாணும் உடையாட்கு*
அணிஎவனோ ஏதில தந்து.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௯௰ (அச்சில் உள்ளவாறு).

“உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.”

அடுநறா = காய்ச்சிய மது.
கண்டார் = பார்த்தவர்.
இன்று = இல்லை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“காய்ச்சிய மது உண்டாரை மயங்கி மகிழச்செய்யும். காமத்தைப்போல் கண்டாலே மகிழச்செய்வதில்லை” என்பதாம்.

‘உண்டார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘உண்டார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அடுநறா’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘அடுநறாக்காமம்’ என்பது பொருளற்ற புணர்ச்சி. அடுநறா, காமம் என்பன மாயையே உண்டல், காண்டல் என்னும் இருவேறு வினைக்கு தொடர்புடையன. எனவே புணரா.

‘காமம்போல்’ என்பதன்கண் வந்த ‘போல்’ என்னும் உவமவுருபு ‘காமம்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உண்டார்கண் அல்லது* அடுநறா காமம்போல்
கண்டார் மகிழ்செய்த லின்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button