இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௱௩. குடிசெயல்வகை.

குறள் – ௲௨௰௧ (அச்சில் உள்ளவாறு).

“கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.”

கருமம் = வினை, செயல்.
கைதூவேன் = கைவிடேன்.
பீடு = வலிமை, பெருமிதம்.
இல் = இல்லை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஒருவன் வினைபுரிவதைக்கைவிடேனென்னும் பெருமையில் மிக்க வலிமையுடையது இல்லை“ என்பதாம்.

‘செய’ என்னும் வினையெச்சம் ‘ஒருவன்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பெருமையில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பெருமை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பீடுடையதில்’ என்னும் புணர்மொழியின் ஈற்றில் நின்ற ’இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று புணர்ச்சியால் வேற்றுமைவுருபாகவும் மயங்குவதால் புணராது.

செம்மைவடிவம் —
“கருமஞ் செயஒருவன் கைதூவே னென்னும்
பெருமையில் பீடுடையது* இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௰௨ (அச்சில் உள்ளவாறு).

“ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி
னீள்வினையா னீளுங் குடி.”

ஆள்வினை = முயற்சி.
ஆன்ற = நிறைந்த.
நீள்வினை = இடையறாத செயல்பாடு.
நீளூம் = உயரும், தொடரும்.
குடி = குலம்.

“முயற்சியும் நிறைந்த அறிவுமென்னும் இவ்விரண்டின் இடையறாத செயல்பாடுகளால் குலம் உயரும்” என்பதாம்.

எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும். ‘ஆள்வினையு மான்ற வறிவும்’ என்னும் புணர்ச்சியில் மகரப்புணர்ச்சியை நீக்காமல் ‘ஆன்ற’ என்பதை அறிய முடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா. ‘ஆன்ற அறிவு’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘அறிவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வினையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘வினை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘குடி நீளும்’ என்பது ‘நீளுங்குடி’ என முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனஇரண்டி
னீள்வினையால் நீளும் குடி.”

 

குறள் – ௲௨௰௩ (அச்சில் உள்ளவாறு).

“குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்.”

குடி = குலம்.
செய்வல் = உயரச்செய்தல்.
தெய்வம் = இறைவன்.
மடி தற்று = ஆடையை வரிந்து கட்டி. முந்துறும் = முன்னிற்கும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தனது குலத்தை உயரச்செய்வேனென்னும் ஒருவனுக்கு தெய்வம் தனது ஆடையை வரிந்து கட்டி முன்னின்று உதவும்” என்பதாம்.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘செய்வல்’ என்னும் வினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஒருவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘தெய்வம்’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘தெய்வம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘மடிதற்று’ என்னும் வினையெச்சம் ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“குடிசெய்வ லென்னும் ஒருவற்கு தெய்வம்
மடிதற்று தான்முந் துறும்.”

 

குறள் – ௲௨௰௪ (அச்சில் உள்ளவாறு).

“சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.”

சூழாமல் = கருதாமல்.
முடிவெய்தும் = நிறைவேறும்.
தாழாது = தளர்வின்றி.
உஞற்றுபவர்க்கு = முயல்பவர்க்கு.

“தங்குடியைத்தாழாது உஞற்றுபவர்க்கு சூழாமல் தானே முடிவெய்தும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தமது குலத்தை உயர்த்த தளர்வின்றி முயல்பவர்க்கு திட்டமிடாமலே வினை தானே நிறைவேறும்” என்பதாம்.

‘சூழாமல்’ என்னும் எதிர்மறைவினையெச்சத்தில் ஆகாரயெதிர்மறையிடைநிலையொடு ‘மல்’ என்னும் வினையெச்சவிகுதி புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘எய்தும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘தாழாது’ என்னும் வினையெச்சம் ‘உஞற்றுபவர்க்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழாது* உஞற்று பவர்க்கு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௰௫ (அச்சில் உள்ளவாறு).

“குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு.”

இலனாய் = இல்லானாய்.
சுற்றமா → சுற்றமாக என்பதன் கடைக்குறை = உறவாக.
சுற்றும் = சூழும்.

“குற்றமிலனாய் குடிசெய்து வாழ்வானை உலகு சுற்றமா சுற்றும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குற்றமில்லானாய் தமது குலத்தை உயரச்செய்து வாழ்வானை உலகோர் உறவாககொண்டு சூழ்வர்” என்பதாம்.

‘இல்லானாய்’ என்பதன்கண் வந்த ‘ஆய்’ என்னும் உருவகயிடைச்சொல் ‘இல்லான்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வாழ்வானை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘சுற்றம்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘சுற்றும் உலகு’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். ‘சுற்றும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“குற்ற மிலனாய் குடிசெய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு.”

 

குறள் – ௲௨௰௬ (அச்சில் உள்ளவாறு).

“நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்.”

நல்லாண்மை = நன்மைதரும் ஆளுமை.
இல்லாண்மை = குலத்தின் ஆளுமை.
ஆக்கி = உருவாக்கி.
கொளல் = கொள்ளுதல்.

“ஒருவற்கு நல்லாண்மையென்பது தான்பிறந்த இல்லாண்மையாக்கிக்கொளல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒருவற்கு நன்மைதரும் ஆளுமையென்பது தான் பிறந்த குலத்திற்கு ஆளுமையை உருவாக்கி அவ்வாளுமையை தனக்குரியதாகவும் கொள்ளுதல்” என்பதாம்.

‘என்பது’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நல்லாண்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஒருவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“நல்லாண்மை யென்பது* ஒருவற்கு தான்பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௰௭ (அச்சில் உள்ளவாறு).

“அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.”

அமரகத்து = போர்க்களத்து.
வன்கண்ணர் = மிகு ஆற்றலாளர்.
தமரகத்தும் = தன்குலத்தின்கண்ணும்.
ஆற்றுவார் = வினையாளர்.
மேற்றே = மேலதே.
பொறை = பொறுப்பு, சுமை.

“அமரகத்து பொறை வன்கண்ணர் மேற்றே. தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘மேற்றே’ என்பது முன்னின்றும் பொருள்தரும்.

“போர்க்களத்தின் சுமை மிகு ஆற்றலாளர் மேலதே. அதுபோல குலத்தின்கண்ணும் குடிசெயல்வகையாற்றுவார் மேலதே” என்பதாம்.

‘போல’ என்னும் உவமவுருபு ‘வன்கண்ணர்’ என்னுஞ்சொல்லை சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அமரகத்து வன்கண்ணர் போல தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.”

 

குறள் – ௲௨௰௮ (அச்சில் உள்ளவாறு).

“குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து
மானங் கருதக் கெடும்.”

பருவம் = ஏற்ற காலம்.
மடி = முயலாமை, முயற்சியின்மை.
மானம் = தன்மதிப்பு.
கெடும் = குலவுயர்வு அழியும்.

“குடிசெய்வார்க்கு பருவம் இல்லை. மடிசெய்து மானங்கருதக்கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குலத்தை உயர்த்த பாடுபடுவார்க்கு ஏற்ற காலமென்பது இல்லை. முயலாது தன்மதிப்பைக்கருத குலவுயர்வு அழியும்” என்பதாம்.

‘பருவம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.”

 

குறள் – ௲௨௰௯ (அச்சில் உள்ளவாறு).

“இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பா னுடம்பு.”

இடும்பைக்கே = துன்பத்திற்கு. ஏகாரம் அசைநிலை.
கொள்கலன் = பாண்டம்.
கொல், ஓ = அசைச்சொற்கள்.
குடும்பத்தை = குலத்தை.
குற்றம் = துன்பம்.
மறைப்பான் = நீக்குவான், போக்குவான்.

“குடும்பத்தை குற்றமறைப்பானுடம்பு இடும்பைக்கே கொள்கலங்கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. இரண்டாம்வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.

“குலத்தின் துன்பத்தை போக்குவானது உடம்பு துன்பத்திற்குரிய பாண்டம்” என்பதாம்.

‘குடும்பத்தை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘குற்றம்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தை
குற்ற மறைப்பா னுடம்பு.”

 

குறள் – ௲௩௰ (அச்சில் உள்ளவாறு).

“இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று
நல்லா ளிலாத குடி.”

இடுக்கண் = துன்பம்.
கால் = (மரத்தின்) அடிப்பகுதி.
கொன்றிட = அழித்திட.
வீழும் =விழும், சாயும்.
ஊன்றும் = நிலைநிறுத்தும்.
அடுத்த நல்லாள் = அடுத்த குடிசெயல்வகையாளர்.
இலாத = இல்லாத.
குடி = குலம்.

“இடுக்கண் கால்கொன்றிட ஊன்றும் அடுத்த நல்லாள் இலாத குடி வீழும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“துன்பமாகிய கோடரி குலமாகிய மரத்தின் அடிப்பகுதியை வெட்டிக்கொன்றிட நிலைநிறுத்தும் அடுத்த குடிசெயல்வகையாளர் இல்லாத குலம் வீழும்” என்பதா‌ம்.

‘வீழும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘ஊன்றும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சத்தின் விகுதி கெடாது; கெடின் பொருள் மாறுபடும்.

‘அடுத்தூன்றும் நல்லாள்’ என்பது நெடுந்தொடரெழுவாய். ‌எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button