குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௰௫. பிறனில் விழையாமை.

குறள் – ௱௪௰௧ . (அச்சில் உள்ளவாறு.)
“பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.”
பிறன்பொருளாள் = பிறனுக்கு உரிமையானவள்.
பெட்டு = விரும்பி.
“பிறனுக்கு உரிமையானவளை விரும்பி அவளைச்சேரும் பேதைமை ஞாலத்தின் அறம், பொருள் ஆகிய இரண்டினை தெளிந்தார்கண் இல்லை“ என்பதாம் .“பிறனது பொருளாளை பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தின்
அறம்பொருள் கண்டார்கண் இல்.” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘ஞாலத்தறம்“ என்பது ‘ஞாலத்தின் அறம்’ எனவிரியும். விகாரத்தால் இன்னுருபு தொங்கியது.
‘கண்டார்கண்’ என்பதில் வரும் ஏழன்வேற்றுமைவுருபு வினையாலணையும்பெயருடன் புணர்ந்து.தனது பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும். ஒரே உருபு வினையாலணையும்பெயரக்கு பின்னொட்டாகவும் வினைமுற்றுக்கு முன்னொட்டாகவும் வராது.
செம்மைவடிவம் —
“பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்.”
குறள் – ௱௪௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.”
அறன்கடை = அறத்தின் கீழ்நிலை.
பிறன்கடை = பிறனது இல்வாயில்.
“அறத்தின் கடை(நிலை)மில் நின்றாருளெல்லாம் பிறளனது கடையில் நின்றாரின் பேதையார இல்லை” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.“அறத்தின் கீழ்நிலையில் நின்றாருளெல்லாம் பிறன்மனையாளின் வாயிலில் நின்ற பேதையரின் கீழானோர் இல்லை” என்பதாம் . பிறனில்விழைதல் அறத்தின் கீழ்நிலைக்கும் கீழானது என்பதாம்.‘நின்றாருளெல்லாம் எனும் புணர்மொழியைக்கவனிக்கவும். ’ ‘நின்றாருள்’ என்பதன் ‘உள்’ இடப்பொருளில்வந்த ஏழன்வேற்றுமைவுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது. அவ்வுருபு மீளவும் ஏன் புணர்ந்தது. ‘எல்லாம்’ எனும் வருமொழி நின்றார் எனும் நிலைமொழியைத்தழவும். தனித்து நின்று பொருள்விளக்கம் பெறாது. எனவே ளகரமெய்யின்மேல் அகரவுயிர் ஏறியது. ளகரம் இரட்டிக்காததையும் காண்க. எனவே ‘உள்’ எனும் வேற்றுமைவுருபு தன்பொருளில் மயங்கவில்லை. பொருள்திரியா தொடரொலிப்புக்கும் இது நல்ல சான்று. “உள்ளொன்று வைத்து புறமொன்று . . . ” என்பதில் ‘உள்ளம்’ எனும் பொருள்தரும் ‘உள்’ எனும் பெயரின் ஒற்று இரட்டிப்பதை ஒப்புநோக்குக.
‘பேதையார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.”
குறள் – ௱௪௰௩. (அச்சில் உள்ளவாறு.)
“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்.”
விளிந்தார் = இறந்தார்.
மன்ற = உறுதியாக.
தெளிந்தார் = நம்பியவர்.
“மன்ற தெளிந்தாரது இல்லாளிடம் தீமை புரிந்தொழுகுவார் விளிந்தாரின் வேறல்லர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.“(நம்மை) உறுதியாக நம்பியவரது இல்லாளிடம் தவறிழைத்து நடப்பவர் இறந்தாரின் வேறல்லர்” என்பதாம். ‘தெளிந்தாரின்’ என்பது ‘தெளிந்தவரது இல்லாளிடம்’ எனவிரியும். ‘இன்’ என்பதில் ‘இடம்’ எனும் ஏழனுருபு தொக்கது. ஏழாம்வேற்றுமை பெயர்ச்சொற்களில் வினைவேண்டும்பெயருடனே புணரும். ‘தீமை’ என்பது தனது பொருளை வெளிப்படுத்த ஒரு வினையை வேண்டிநிற்கும் பெயரன்று. ‘தீமை’ என்பது வினைவேண்டாப்பெயர். வினைவேண்டாப்பெயருடன் ஏழாம்வேற்றுமை புணராது.
செம்மைவடிவம் —
“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரின்
தீமை புரிந்தொழுகு வார்.”
குறள் – ௱௪௰௪. (அச்சில் உள்ளவாறு.)
“எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.”
எனைத்துணை = அளவற்ற.
தினைத்துணை = தினையளவு.
“பிறனில் புகல் எனைத்துணையராயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பிறனது இல்லத்தில் புகுவான் அளவற்ற சிறப்புகளை உடையவரானாலும் என்ன பயன்; தினையளவும் தேரான்” என்பதாம்.‘ஆயினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மைச்சொல் எதனுடனும் புணராது.
‘என்னாம்’ என்பது ‘என்ன ஆகும்’ என்பதன் புணர்மொழி. ‘ஆகும்’ எனும் வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எனைத்துணைய ராயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.”
குறள் – ௱௪௰௫. (அச்சில் உள்ளவாறு.)
“எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.”
இறத்தல் = நெறிகடந்து செல்லல்.
விளியாது = நீங்காது.
“எளிதென (பிறன்)இல்லினை இறப்பவன் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழியை எய்தும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘என’ என்பது வினையெச்சம். வினையெச்சம் ‘இல்லம்/இல்லாள்’ எனும் பொருள்தரும் ‘இல்’ எனும் பெயருடன் புணராது.‘இறப்பான்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.‘எய்தும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.”
குறள் – ௱௪௰௬. (அச்சில் உள்ளவாறு.)
“பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.”
இகவா = நீங்கா.
இறப்பான் = நெறிகடந்து செல்வான்.
“(பிறனது) இல்லாளை இறப்பான்கண் பகை, பாவம், அச்சம், பழியென நான்கும் இகவா ஆகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.‘என’ எனும் இடைச்சொல் ஓரிடத்து நின்றாலும் எண்ணப்படும் பொருள் ஒவ்வொன்றனுடனும் சென்று பொருந்தும். ‘பாவமச்சம்’ எனப்புணர்த்தினால் இடைச்சொல் எங்ஙனம் சென்று பொருந்தும். வரிசைப்படுத்ததும்போது ஒவ்வொன்றையும் விட்டிசைத்து வரிசைப்படுத்தினால் கருத்துணர்ச்சி மிகும்.‘நான்கும்’ என்பது எண்ணிக்கையின் முடிவினைக்குறிக்கும் முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.‘இகவாவாம்’ என்பது ‘இகவா ஆகும்’ என்பதன் புணர்மொழி. ‘ஆகும்’ எனும் வினைமுற்று எதனுடனும் புணராது. புணர்தல் என்பது வருமொழியொடு புணர்தலைக்குறிக்கும். ‘ஆகும்’ எனும் வினைமுற்று ‘இல்லாள்’ எனும் வருமொழியாகிய பெயருடன் புணராதென்பது.
செம்மைவடிவம் —
“பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.”
குறள் – ௱௪௰௭. (அச்சில் உள்ளவாறு.)
“அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.”
“பிறனது இயல்பாய் ஆனாளது பெண்மையை நயவாதவன் அறயியல்புடன் இல்வாழ்வான் எனப்படுவான்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.“ ‘ஆன்’ உருபு இங்கு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறம் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்” என பரிமேலழகனார் உரைக்கின்றார். அறனியலான் என்பது மூன்றாம்வேற்றுமையின் ஆனுருபு பெற்ற சொல். மூன்றாம்வேற்றுமைவுருபுகள் பெயர்ச்சொல்லுடன் புணரா. மேலும் ஒரே வேற்றுமைவுருபு ஒரு பெயர்க்கு பின்னொட்டாகவும் மற்றொரு பெயர்க்கு முன்னொட்டாகவும் வராது.
செம்மைவடிவம் —
“அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.”
குறள் -௱௩௰௮. (அச்சில் உள்ளவாறு.)
“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.”
ஒழுக்கு = ஒழுக்கம்.
‘ஒன்றோ’ என்பது வினா. வினாச்சொல்லையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்கும் இடங்களில் புணர்ச்சி நிகழாது.‘பொருளுணர ஒலித்தல்’ என்பது புணர்ச்சியின் முதன்மையான பண்புகளுள் ஒன்று. புணர்த்திவிட்டால் விட்டிசைக்காது தொடர்ந்தொலிக்கவேண்டும். ‘சான்றோர்க்கறனொன்றோ’ என்பதை தொடர்ந்தொலித்தால் பொருளுணர்ச்சி கிட்டாது. ‘சான்றோர்க்கு அறனொன்றோ’ என்றவாறு விட்டிசைத்தால் எளிதில் பொருள் விளங்கும். பொருளுணர்ச்சி தோன்றுமாறு புணர்த்த வேண்டும். “பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றோ. (அஃதே) ஆன்ற ஒழுக்கு” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு*
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.”
*குற்றியலுகரமாம் குகரம் மெய்யெழுத்தைபோல அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.
குறள் – ௱௪௰௯. (அச்சில் உள்ளவாறு.)
“நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார்.”
நாமநீர் = அச்சந்தரும் கடல்.
வைப்பு = உலகு.
“நாமநீர்வைப்பில் நலக்குரியார் யாரெனின் பிறற்குரியாடோடோயாதார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.“நாமநீரால் சூழப்பட்ட உலகில் நலத்துக்குரியவர் யாரெனின் பிறனுக்குரியாளின் தோளினை தோயாதார்” என்பதாம். ‘யாரெனின்’ என்பது பயனிலையாக வந்த வினாச்சொல். முற்றுப்பொருள்தரும். வினாவினையடுத்து விட்டிசையும் நேரும். இக்காரணங்களால் இவ்விடத்தில் புணர்ச்சி நிகழாது.
‘வைப்பில்’ என்பதில் வரும் ‘இல்’ ஏழாம்வேற்றுமைவுருபு. இல்லுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும் . ஒரே இடைச்சொல் ஒருபெயர்க்கு பின்னொட்டாகவும் மற்றொரு பெயர்க்கு முன்னொட்டாகவும் வராது.
செம்மைவடிவம் —
“நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியா டோடோயா தார்.”
குறள் – ௱௫௰. (அச்சில் உள்ளவாறு.)
“அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.”
“அறத்தை கடந்து அல்லன செயினும் பிறனுக்கு வரையறுக்கப்பட்ட பெண்ணை நயவாமை நன்று” என்பதாம்.
‘அறன்வரையான்’ என்பது எழுவாய். திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.”
எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.




