ஈழம்

தமிழீழத்தின் தேயக்கொடியும் அதன் உறுதிப்பாட்டுக்கொள்கைகளும்.

ஈழக்கொடி

தமிழீழத்தேயக்கொடியும் அதன் உறுதிப்பாட்டுக்கொள்கைகளும். 

புலிக்கொடி ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்தியேழாம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரநாளில் (நளி இருபத்தேழு, ஆயிரத்துத்தொள்ளாயிரத்துத்தொண்ணூறு) முதற்றடவையாக மேதகு பிரபாகரனது பாசறையில் ஏற்றிவைக்கப்பட்டது.

நிறங்களும் குறிக்கோளும்

இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.

தனிச்சிறப்புமிக்க தேயத்தின் இனமான தமிழீழத்தேயத்தவர்கள் தனக்குரியமண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியலுரிமையும் மாந்தவுரிமையுமாகும். தமிழீழமக்கள் நடத்துகின்ற தேய விடுதலைப்போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நேர்மையானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின்பால் நிற்குமென்பதையும் மஞ்சள்நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலைபெற்ற தமிழீழத்தனியரசினை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப்பெற்றுவிட்டதாக எடுத்துக்கொள்ளமுடியாது. தமிழீழக்குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். பிரிவினை, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக்குமுகாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும். ஏற்றத்தாழ்வற்ற ஒருமைப்பாடும், நேர்மையும் குமுகாயநெறியும் நிலைப்படுத்தப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் தமிழீழ அரசியற்குறிக்கோளை சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத்துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத்தாங்கிக்கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போடகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப்போன்ற உறுதியானவுள்ளம் வேண்டும். அசையா நம்பிக்கைவேண்டும். தளராவுறுதி வேண்டும். இவற்றை கறுப்புநிறம் குறித்துக்காட்டுகின்றது.

விடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளைநிறம் குறித்துநிற்கிறது.

வகையும் அளவும்

பொதுக்கொடி 4‘ x 6‘
விடுதலைப்புலிகள் இருப்பிடங்கள், அரசநிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவமைப்புக்கள், குமுகாயமைப்புக்கள் போன்ற எல்லாப்பொதுவிடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பதாக இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.

உள்ளிடக்கொடி 3‘ x 5‘
அரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.

எழுச்சிக்கொடி 2‘ x 3‘
பொதுவிடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.

வீட்டுக்கொடி 2‘ x 3‘
தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளரெவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிகவளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப்பறக்கவிடலாம்.

அணிவகுப்புக்கொடி 2‘ x 3‘
அணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.

தமிழீழத்தின் தேயக்கொடிப்பயன்பாட்டு நெறிக்கோவை

பெருமையும் கொடிவணக்கமும்
நாட்டைப்போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத்தேயக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச்சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.
நாட்டின் எல்லைப்புறப்பகுதிகளிலும், குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.
வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் தேசியக்கொடியைப்பறக்க விடலாம்.
தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.

கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணியாளணியினர் (படையணிகள்,தொண்டர்(சாரணர்) இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் மொழிந்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.

சீருடை அணிந்தோர்தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற்களைதல் வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின்மீது வைத்துக்கொடி வணக்கம் செலுத்தவேண்டும்.

தமிழீழக்குடியுரிமையாளரல்லாதாரும் வலதுகையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது நேர்நிலையில் (Attentntion) நிற்கவேண்டும்.

வணக்கத்துக்குரிய தேயக்கொடியை உடையாக அணியவோ, உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.

தேயக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகளை பெறுமதியான பொருட்களிலோ, உடைகளிலோ பொறிக்கலாம்.

தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ, எழுத்துக்களையோ, சொற்களையோ, எண்களையோ, வடிவங்களையோ, படங்களையோ எழுதவோ, வரையவோகூடாது.

தேவைக்குப்பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேயக்கொடியைப்பதிக்கக்கூடாது.

தேயக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச்சரிசெய்து விடவேண்டும்.

கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக்காயவிட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.

தேயவுடர் நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்பறக்கவிடப்படுவதன் மூலம் நாட்டின் இடர் உணர்த்தப்படுகின்றது.

கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்றகொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற்பறப்பதே நாட்டின் மிகுவிடரை உணர்த்துவதாயின் தேயக்கொடி சிதைவுறுவதோ, கீழே வீழ்த்தப்படுவதோ, வீசப்படுவதோ, கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப்பார்க்க முடியா இழிநிலையாகும்.

தேயக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறேதாவது வகையிற்பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும்.

பழந்துணியாகப்பயன்படுத்துவதோ, குப்பைத்தொட்டியிற்போடுவதோ தேசத்திற்குச்செய்யப்படும் இழிவாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.

கொடிவணக்கத்தின்போது செய்யக்கூடாதவை

தேயக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்நாட்டைச்சென்றடைவது போன்று, தேயக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேயக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.

தேயக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்கநிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்குநாடு வேறுபட்டமுறையில் அமைந்திருக்கும். அவ்வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேயக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.

தேயக்கொடியைத்தலைகீழாகப்பறக்கவிடக்கூடாது.

மடித்தபடி மேலேற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது.

தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடி இருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.

தேயக்கொடிப்பாடல்

பாடல்: ஏறுதுபார் கொடி

ஏறுது பார் கொடி என்ற பாடல் புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டது ,தமிழீழத்தேயக்கொடி ஏற்றப்படும் போது பாடப்படுகிறது.

ஏறுதுபார் கொடி ஏறுது பார்
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ்

ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத்
திக்கிலும் மானத்தைச் சேர்த்தகொடி
காலத்தை வென்றுமே நின்றகொடி – புலி
காட்டியபாதையில் சென்ற கொடி
(ஏறுதுபார்)

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
சீறிடும் கொடியிது – தமிழ்
மக்களைக் காத்த நம்மானமா வீரரை
வாழ்த்திடும் கொடியிது – புலி
வீரத்தின் கொடியிது – மா
வீரனின் கொடியிது (ஏறுதுபார்)

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்
சாற்றிய கொடியிது – தமிழ்
ஈழத்தின் கொடியிது – புலி
ஏந்திய கொடியிது (ஏறுதுபார்)

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது – சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்
உலவிய கொடியிது – சம
தர்மத்தின் கொடியிது – எங்கள்
தாயவள் கொடியிது – (ஏறுதுபார்)

ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது – பிர
பாகரன் என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது – தமிழ்த்
தேசத்தின் கொடியிது – எங்கள்
தேசியக் கொடியிது (ஏறுதுபார்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button