ஈகத்தாய் அன்னை பூபதி அம்மா நினைவுநாள் : ஈழத்தலைவர் மேதகுவின் பார்வை !
நினைவுநாள் .

தமிழீழத்தேய எழுச்சியின் மக்கள் வடிவமாக அறப்போர்புரிந்த அன்னைபூபதி அம்மாவின் முப்பத்தாறாம் ஆண்டு நினைவும் , நாட்டுப்பற்றாளர் நாளும் இன்றாகும். மறச்சாவு : (19.03.1988 -19.03.2024)
அன்னை பூபதியின் நினைவுநாளை நாட்டுப்பற்றாளர்நாளாக தமிழீழத்துமக்களும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களும் உணர்வுசார்ந்து நினைவுகூர்ந்து வருகின்றனர். விடுதலைப்போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர் எவ்வளவு ஒரு பெரிய ஆற்றலாகத்திகழ்ந்து வருகின்றனர் என்கின்ற உண்மையை உணர்த்தலே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தினூடாக தமிழீழத்தேயத்தினுள் நுழைந்த இந்தியப்படைத்துறை அடக்குமுறைப்படையாகமாறி தமிழீழமக்களின் உரிமைப்போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒத்திசைவாக தமிழீழத்தேயத்திற்கு ஒத்திசைவாக தமிழீழப்பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினர். இந்தத்தேயத்திற்கான பங்களிப்புக்களின் உச்சமாக ஈகத்தின் மிகுவுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
“இந்தியப்படை உடனடியாகப்போர்நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அமைதிப்பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்”. என்று வேண்டுகோள்விடுத்து மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அமைதி வழியில் உண்ணாநோன்புப்போராட்டத்தைத்தொடங்கினார். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு மீனத்திங்கள் பத்தொன்பதாம்நாள் காரிக்கிழமை காலை பத்துமணி நாற்பத்தைந்து மணித்துளியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் கோவில் முன்றலிலுள்ள மரநிழலின்கீழ் அன்னை பூபதி தனது சாகும்வரையிலான உண்ணாநோன்புப்போராட்டத்தைத்தொடங்கினார்.
தமிழீழ விடுதலைப்போராட்டம் மிக நெருக்கடியான வேளையை எதிர்கொண்ட காலமது. “இந்தியப்படைத்துறை எமது தாயகமண்ணில் காலடியெடுத்துவைத்த நாளையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாகக்கருதுகிறோம். எமது போராட்டத்தில் இந்தியப்படைத்துறை தலையீடு செய்தது ஓரிருண்ட பக்கம் என்றே சொல்லவேண்டும்”. என்று தமிழீழத்தேயத்தலைவர் மேதகு பிரபாகரன் இப்படைத்துறையின் இச்செயல் குறித்துக்கூறுமளவுக்கு அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது. பாரின் நான்காவது பெரிய படைகளைக்கொண்ட இந்தியப்படையினர் ஒருபுறம், சிங்கள பௌத்தப்பேரினசார்புகள் எண்ணங்களுக்குச்செயல் வடிவம்கொடுக்கும் இலங்கைப்படைத்துறையினர் மறுபுறம் இவையிரண்டிற்கும் துணையாக நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒருபுறம் என்று ஈழத்தமிழினம் இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது. தேயத்தலைவர் சொன்னதுபோல் தமிழீழப்போராட்ட வரலாற்றில் இருண்ட பக்கமே அக்காலம்!
இத்தனை பேரிடர்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் ஒரெளிய பெண்மணி, குடும்பத்தலைவி எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அமைதி வழியில் தொடங்குவதற்கு எத்துணை நெஞ்சுரமும், ஈகமும் , உளப்பான்மையும் அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் நினைத்துப்பார்க்கின்றோம்.
“எம்மைப்பாதுகாக்கவென வந்த இந்தியா இன்று இலங்கைப்படைத்துறையைக்காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டனர். இதனைத்தடுக்கலாமென்ற உறுதியுடன் நாம் இந்தப்போராட்டத்தில் இறங்கியுள்ளோம். மறச்சாவுகளைக்கண்டு நாம் பழகிப்போனோரே. எனது இறப்பை அடுத்தும், எமது நோக்கை நாமடைவோம். ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது” – என்று அன்னை பூபதி அவர்கள் ஈகவுணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு மீனத்திங்கள்பத்தொன்பதாம்நாள் காரிக்கிழமை காலை பத்து: நான்பத்தைந்துமணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணாநோன்புப்போராட்டத்தைத்தொடங்கிய அன்னை பூபதி அம்மா இறுதிமூச்சு, தமிழீழக்காற்றோடு மேழத்திங்கள் பத்தொன்பதாம்நாள் செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நாற்பத்தைந்து மணியளவில் கலந்துபரவியது.
முப்பத்தியொரு நீண்ட நாள்கள்!
எந்த அடக்குமுறைப்படைத்துறைக்கு எதிராக அன்னை பூபதி போராடினாரோ அந்தப்படைப்படையினர் ,இந்தியப்படையினர், பேரிழப்புகளுடனும், அளவிடற்கரிய இழிவுடனும் தமிழீழத்தைவிட்டு 24.03.1990 அன்று வெளியேறிச்சென்றது.
திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு பொதுவான தமிழ்ப்பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான ஈகமும் நாட்டுப்பற்றின் உச்சமாக அமைந்தது.
அன்னை பூபதியின் ஈகத்தின் முன்னரும் பின்னரும் தமிழீழத்தில் எத்தனையோ நாட்டுப்பற்றாளர் வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் யாவருடைய நாட்டுப்பற்றும், ஈகமும், பங்களிப்பும் எந்தவொரு விதத்திலும் எவருடைய ஈகத்திற்குக்குறைவானதன்று. ஆயினும் எல்லா நாட்டுப்பற்றாளரினதும் ஒரு குறியீடாக அன்னை பூபதி அம்மா விளங்குவது ஒரு பொருத்தமான ஒன்று என்றே நாம் கருதுகின்றோம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக தமது பங்களிப்புக்களை நல்கிவந்த, நல்கி வருகின்ற பரளாவிய நாட்டுப்பற்றாளர் தமிழ்ப்பெண்ணினத்தின் பங்களிப்பு என்பதானது தனித்துவமானது. தமது இனத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற அடக்குமுறைப்போர்களுக்கும் வன்முறைகளுக்கும் பெண்கள் கொடுக்கக்கூடிய விலையும் அளப்பரியது. தங்களுடைய கணவன்மார்களையும், தங்களுடைய புதல்வர்மாரையும் அவர்கள் பறிகொடுத்தனர். வேற்றுப்படைகளின் பாலிய வல்லுறவுகளுக்கும் ஆளானர். தாங்களும் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இவற்றிற்கும் அப்பால் தங்களது குடும்பங்களைப்பாதுகாத்துக்கொண்டு தமது நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கான பங்களிப்பினையும் தொடர்ந்து செய்துவந்தனர்.
ஒரு போராட்டக்காலத்தில் பெண்ணின் தேவையும் அளப்பெரியது என்பதைப்போராட்ட வரலாறுகள் இன்றும் உணர்த்தி நிற்கின்றன. போராளிகளுக்கு உணவளிப்பதுவும், உறைவிடந்தந்து பாதுகாப்பது, காயப்பட்டவர்களைப்பாதுகாப்பது பெண்களாகத்தான் இருந்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழ்ப்பெண்ணினத்தின் பங்களிப்பானது பாரளாவிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தைப்பெறக்கூடிய ஒன்றாகும்.
இவ்வகையில் ஒட்டுமொத்தத்தமிழீழப்பெண்களினதும், தமிழர்களினதும் சினத்தினையும், விடுதலை வேட்கையையும் வெளிப்படுத்துவதாகவே அன்னை பூபதியின் அறவழிப்போராட்டத்தை நாம் கருதவேண்டும். ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தபடி ஞாலத்தின் நான்காவது பெரிய படைத்துறையான இந்தியப்படைகளின் வன்முறைகளையும் சிங்கள படையினரின் நெருக்கடிகளையும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் அடாவடித்தனங்களையும் ஒருங்குசேர எதிர்கொண்டு, அன்னை பூபதி தனது அறவழிப்போராட்டத்தை சாகும்வரை மேற்கொண்டது என்பதானது விடுதலை வேட்கையின் உறுதியின் உச்சமானதுமாகும்.
ஓரினத்தின் அரசியல் விடிவிற்காகவும் அடக்குமுறைப்படைகளுக்கு எதிராகவும் உண்ணாநோன்புப்போராட்டம் ஒன்றை நடாத்தி, உயிரீகம் செய்திட்ட உலகின் முதற்பெண்மணி என்ற வகையிலும் ஒரு பொதுமையான குடும்பப்பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத்துறந்து, தனது நாட்டுக்காக முன்னெடுத்த உண்ணாநோன்புப்போராட்டமென்ற வகையிலும் அன்னை பூபதி அவர்களின் போராட்டம் பல விழுமியங்களைத்தொட்டு நிற்கின்றது. விடுதலைப்போராளியென்ற வகையில் ஈகர் திலீபன் ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈந்திருந்தார். ஆனால் போராளியாக இல்லாத ஒருவர், எளிமையான பெண்மணி,குடும்பத் தலைவி தன்னைத்தன் மக்களுக்காக மட்டுமன்றி, தனது போராளிகளுக்காகவும் தன்னைத தற்கொடையாக்கிய செயல் என்பதானது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்!
மக்களைக்காப்பாற்றுவதற்காகத்தம் உயிரைத்தருகின்ற போராளிகளின் குறிக்கோள்கள் தன் உயிரைத்தாரை வார்க்க முன்வந்த அன்னை பூபதியின் ஈகம் நாட்டுப்பற்றாளர்களின் ஈகத்திற்கும், ஒப்புவிப்பிற்கும் ஒரு குறியீடாகும்!
அவ்வகையில் அன்னை பூபதியின் நினைவு நாள் என்பதானது, “நாட்டுப்பற்றாளர்நாள்” என்று தமிழீழத்தேயத்தலைமையினால் வெளிப்படுத்தப்பட்டது மிகப்பொருத்தமானதாகும்.
அன்னை பூபதி அம்மா தமிழீழ நாட்டுப்பற்றாளரின் குறியீடாக அறியப்படுகின்ற இந்த வேளையில், நாட்டுப்பற்றாளரின் ஆற்றல் குறித்து சிலகருத்துக்களை முன் வைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
ஒரு தேயத்தின் நாட்டுப்பற்றாளர் என்போர் விடுதலைப்போராட்டத்தைத்தாங்குபவராக இருந்து வருகின்றனர். நாட்டுப்பற்றாளரை அழிப்பதன் மூலம் விடுதலைப்போராட்டத்தை நசுக்கி விடுகின்ற முயற்சியில் அடக்குமுறை அரசுகள் தொடர்ந்தும் செயல்பட்டு வந்திருப்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஈராக்கில் போர்புரிகின்ற அமெரிக்க படையினருக்குப்போர்த்திரைப்படம் ஒன்றை அமெரிக்க அரசு திரையிட்டு காட்டியிருப்பதாக முன்னர் செய்திகள் தெரிவித்திருந்தன. இது குறித்து சற்று ஊன்றி உன்னித்தால் புலப்படாத பலவற்றை நாம் அறிந்துகொள்ளக்கூடும்.
இந்தப்போர்த்திரைப்படத்தின் பெயர் “Battle of Algiers” இத்திரைப்படம் ஒரு புதிய திரைப்படமும் அன்று ! ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இத்திரைப்படம் வெளி வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த வளர்ச்சியடைந்த காலத்தில் அதாவது போரியல் துறையானது மிகுந்த தொழில் நுட்ப வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலகட்டத்தில் மிகப்பழைய திரைப்படம் ஒன்றை அமெரிக்க அரசு தன்னுடைய படையினருக்குத்திரையிட்டுக்காட்ட வேண்டியதன் நோக்கம் என்ன?
இதற்குப்பின்னால் மிக முக்கியமான பொருள் உள்ளது.
இந்த Battle of Algiers (1956–57) என்ற போர்த்திரைப்படம் பிரான்சு் நாட்டின் நிலப்பறிப்பை எதிர்த்து அல்யீரிய மக்கள் நடாத்திய போராட்டத்தைச்சொல்கிறது. அல்யீரியா கிட்டத்தட்ட நூற்றியிருபத்திநான்கு ஆண்டுகளாக பிரான்சு் நாட்டின் ஆளுமை ஆட்சியின்கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது. அல்யீரியாவின் தன்னாட்சிக்கான இப்போராட்டத்தை எதிர்த்து மிகக்கொடூரமான முறைகளில் படுகொலைகளை பிரான்சு் கட்டவிழ்த்துவிட்டது. அல்யீரியாவின் நாட்டுப்பற்றாளர்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். மிகக்கொடுமையான படுவதைகளுக்கு ஆளானார்கள். அல்யீரிய மக்களின் மனவலிமையைக்குலைத்து அவர்களைப்போராட்டத்தில் இருந்து விலக்குவதற்காக அனைத்து வகையான கொடூரங்களையும் பிரான்சு் படைத்துறை மேற்கொண்டது.
ஆயினும் அல்யீரிய மக்கள் தொடர்ந்து போராடினார்கள். மிகக்கொடிய வறுமைக்கு நடுவிலும் கண்ணீரையும் துன்பத்தையும் சுமந்து கொண்டு தமது விடுதலைக்காக அவர்கள் போராடினார்கள். மிகப்பெரிய இடர்பாடுகளையும் இழப்புக்களையும் அவர்கள் எதிர்கொண்டார்கள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தொடக்கம் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் ஆண்டு வரையில் இப்போர் நீடித்தது. கடைசியில் அல்யீரிய மக்களின் போராட்டம் வெற்றிபெற்று பிரான்சு் வெளியேறியது.
ஆனால் இப்போராட்டத்தைக்காட்டும் திரைப்படத்தை ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு அமெரிக்க அரசு திரையிட்டுக்காட்ட வேண்டிய கட்டாயம் என்ன?
ஏனென்றால் இப்போர்த்திரைப்படம் ஒரு மக்கள் போராட்டத்தை அடக்குவதற்குரிய கொடிய வழிகளைப்படம் பிடித்துக்காட்டியிருக்கின்றது. எப்படிப்பட்ட கொடிய வழிகளை பயன்படுத்தி பிரான்சு் படைத்துறை அல்யீரிய மக்களை , நாட்டுப்பற்றாளர்களைத்துன்புறுத்திக்கொன்று அவர்களின் உளவுறுதியைக்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதனை இத்திரைப்படம் தெளிவாகக்கூறியுள்ளது. பிரான்சு் படையினரின் இக்கொடிய வழிமுறைகள் ஈற்றில் கைகொடுக்காமற்போயிருந்தாலும் அன்று ஒரு போராட்டத்தை அழிப்பதற்கு எத்தகைய வழிமுறைகள் கையாளப்பட்டன என்பதை இத்திரைப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.
இதனைத்தான் ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப்படைத்துறைக்கு அமெரிக்கவரசு எடுத்துக்காட்டியுள்ளது.
இத்திரைப்படத்தைத்திரையிட்டுக்காட்டிய நிகழ்வு ஒரு செய்தியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ஒரு மக்கள் எழுச்சிப்போராட்டத்தை அடக்கியொடுக்க வேண்டுமென்றால் அந்தப்போராட்டத்தைத்தாங்கி நிற்கும் நாட்டுப்பற்றாளர்களை முதலில் நசுக்க வேண்டும் என்று அடக்கு முறையாளர்கள் தொடர்ந்து செயற்பட்டுவருவதை இச்செய்தி தெளிவுபடுத்தி நிற்கின்றது.
அவ்வளவிற்கு ஒரு விடுதலைப்போராட்டத்தைத்தாங்கி நிற்பவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது.
இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்தான் தமிழீழத்து நாட்டுப்பற்றாளர்களையும் அவர்தம் அளப்பரிய பணியையும், ஈகதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் விடுதலைப்புலிகள் எதிர்கொள்ளாத இடர்களை நாட்டுப்பற்றாளர்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். போராளிகள் களத்தின் எளிய நிலைக்கும் போர் முறைகளுக்கும் ஏற்ப இடம் மாறிச்செல்வார்கள். ஆனால் பொது மக்களாகிய நாட்டுப்பற்றாளர்களோ தமது வாழிடத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து மேளாளுமைகளுக்கு எதிராகப்போராடுவர். வன்முறையை எதிர்ப்பதற்குத் தம்மிடம் படைக்க ருவிகள் இல்லாதபோதும் அந்த வன்முறைக்கு முகம் கொடுத்து அதனை உள்வாங்குவர். அதனால் உயிரழிவையும், சொத்தழிவையும் தாங்கியும் கொள்வர். ஆயினும் தொடர்ந்தும் விடுதலைப்போராட்டத்தைத் தாங்கி நிற்பர்.
இலங்கை அரசுகளும் அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு உத்திகளைக்கையாண்டு தமிழீழத்து நாட்டுப்பற்றாளர் பலரை அழிக்கவும் அடக்கவும் முயன்று வருகின்றன. ஆனால் நாட்டுப்பற்றாளரின் விடுதலை வேட்கையை அழித்து விடமுடியாது என்பதைப்பல்வேறு விடுதலைப்போராட்டங்களோடு தமிழீழ விடுதலைப்போராட்டமும் சான்றாக நிற்கின்றது.
இங்கே மேலும் ஒரு முதன்மையானயமான செய்தியை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். அன்னை பூபதி அம்மா அறவழியிலான உண்ணாநோன்புப்போராட்டமும் ஈகச்செம்மல் திலீபனின் அறவழியிலான உண்ணாநோன்புப்போராட்டமும் அமைதி வேண்டி நடாத்தப்பட்ட போராட்டங்களாகும். ஒத்திசைவையும், அமைதியையும் நாடி நடாத்தப்பட்ட அமைதிவழி அறப்போராட்டங்களை மேலாளுமை செய்யும் ஆற்றல்கள் பொருட்படுத்துவதில்லை என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
அடிப்படையில் மகாத்மா காந்தியின் அமைதி வழிப்போராட்டங்களையும் ஏற்றுக்கொண்ட ஒரு தேயம்தான் இந்தியா.ஆனால் அத்தகைய இந்தியா கூட அடக்குமுறை என்று வரும்போது அறத்தையும் அமைதியையும் தூக்கி எறிந்து விடுகின்றது என்பதற்கு அன்னை பூபதியும் ஈகச்செம்மல் திலீபனும் சான்றுகளாக விளங்குகின்றனர். அறவழி அமைதிப்போராட்டங்களைக்கூறுகின்ற இந்தியாவே இவ்வாறு நடந்து கொள்ளும்போது தொடர்ந்து குறுதிவெறி கொண்டு அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற சிங்கள பௌத்தப்பேரினசார் அரசுகள் ஏற்புடைமையைக் கடைப்பிடிப்பர் என்று எவராவது இன்றும் நம்புவாராக இருந்தால் அது மடமைத்தனமானதாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழீழத்து நாட்டுப்பற்றாளர் பலரை சிங்கள அரசுகள் தொடர்ந்தும் கொலை செய்து வருவதைக்கருத்தில் கொள்ள வேண்டும். அதற்குரிய காரணியங்களையும் நாம் வரலாற்றுச்சார்பாக சொற்போர் செய்கின்றோம் . “மக்கள் எழுச்சிப்பேராட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால் அந்தப்போராட்டத்தைத்தாங்கி நிற்கும் நாட்டுப்பற்றாளரை நசுக்க வேண்டும்” என்று அடக்கு முறையாளர் தொடர்ந்து நினைத்து செயல்பட்டு வருவதையும் தமிழீழத்து நாட்டுப்பற்றாளர் மீதான படுகொலைகள் எடுத்துக்காட்டி நிற்கின்றன.
இத்தகைய உயரிய நாட்டுப்பற்றாளரும் அவர்களுடைய குறியீடான அன்னை பூபதியும் எம் போன்ற பொதுமை மக்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழுகின்றனர்.
“தேய எழுச்சியின் வெகுமக்கள் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.”
“தமிழீழ விடியலுக்காக இன்னுயிரை ஈர்ந்த ஈழத்தாய்” என்று , தமிழீழத்த்தேயத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அன்னையின் இன்னுயிரீகத்தின் பின்கூறினார்.
நன்றி.
வாழ்கதமிழ்.




