ஈழம்

கருப்பு யூலையென அழைக்கப்படும் கருப்புக்கடகம் : தமிழர்மீதான சிங்களவரின் இனவெறியின் உச்சம் :ஒருபார்வை .

கருப்புக்கடகம் : (கருப்பு யூலை) தமிழினவழிப்பு .

கருப்புக்கடகம் : (கருப்பு யூலை) தமிழினவழிப்பு .

கருப்பு யூலையென அழைக்கபடும் கருப்புக்கடகம் : தமிழர்மீதான சிங்களவரின் இனவெறியின் உச்சம் :ஒருபார்வை .

சிங்களவராட்சிக்காலம் தமிழர்களினிருண்டகாலமென்றே வரலாற்றுப்பக்கங்களில் எழுதப்படுமளவிற்கு மிகவும் கொடுமையானது.

இலங்கையின் மூத்தகுடிகளான தமிழரின் நிலப்பகுதிகள் சிங்களத்தால் பறிக்கப்பட்டபின்னரும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழரென்ற தேயவடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்கத்துடித்த சிங்களப்பேரினசாரரசு, நூறாயிரங்கணக்கான தமிழர்களைக்கொன்று இனப்படுகொலை செய்துமுடித்திருக்கிறது. காலங்கடந்தாலும் தமிழர்க்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் நம்குருதியை உறையவைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம்முணர்ச்சிகளை கொந்தளிக்கச்செய்பவை. ஈழத்தமிழரின் வரலாறுகளைப்படிப்போர் கண்ணீரின்றிக்கடக்க முடியா நிகழ்வுகளிலொன்று இக்கருப்பு யூலை எனப்படும் கடகத்திங்களின் குழப்பம்.

ஆயிரத்துத்தொள்ளாயித்து எண்பத்துமூன்றாமாண்டு கடகத்திங்கள் சிங்களப்பேரினசாரரசாலும், சிங்களயினவெறியர்களாலும் தமிழருக்கு நடத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்புக்கடகம்” என்று எல்லோராலும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய இனவழிப்பு நிகழ்வுகளிலிலொன்றாக பதிவுசெய்யப்பட்டுள்ளது .

ஒருமாந்தன் உணர்ச்சிமரத்துப்போய் உடைகளற்றநிலையில் தலையிற்கைவைத்து அமர்ந்திருக்க, சுற்றிலும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டமாயிருக்கும் புகைப்படத்தைக்காணாதோர் இருக்கமுடியாது. கடகக்குழப்பத்தின் சான்றாக ஞாலத்தின் உளச்சான்றை உலுக்கிய புகைப்படமொன்றே மேலே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக்கம்பலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இரக்கத்திற்குரிய எம்தமிழரை, சிங்கள இனவெறிக்கும்பலைச்சேர்ந்தோர் கண்டந்துண்டமாக வெட்டிவீசினர். குடும்பத்துடன் தமிழரை உயிரோடு தீயிட்டுக்கொளுத்தினர். ஐந்நூறிற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் ஈவிரக்கமின்றி இந்த வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். வணிகவளாகங்கள், கடைகள், எரிபொருள்நிலையங்கள், திரையரங்குகளென ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழரின் வணிக அமைத்துவங்களைக்குறிவைத்து காட்டுமிராண்டித்தனமாக சூறையாடினர்.

தமிழரின் உடைமைகள், வணிக நிலையங்கள், உடமைகள் தொடர்பான தரவுத்தெளிவுகள் ஏற்கனவே சிங்கள மேலாளர்களால் குழப்பர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தையழிக்கவேண்டுமென்ற நோக்கத்துடனே நன்குதிட்டமிடப்பட்டு இக்குழப்பம் அரங்கேற்றப்பட்டது. ஆறுநாள்கள் சிங்களவெறியரின்கையில் கொழும்பு மாநகரமும், தென்னிலங்கையும் இருந்தது. பெயரளவில் போடப்பட்ட ஊரடங்கிற்கும், சிங்கள ஆய்தப்படை மதிக்காமல் மறுப்புத்தெரிவித்து குழப்பக்காரர்களுடன் இணைந்துகொண்டு தமிழர்களைத்தாக்கியது. தலைநகரமெங்கும் தமிழர்களின் மரணவோலங்களும், தீயடங்காது எரியும் தமிழர்களின் வணிகநிலையங்களுமென கொழும்பு கோரமாய்க்காட்சியளித்தது. புத்தரின் கோட்பாடு அன்று பல்லிளித்தது. நூறாயிரத்து ஐம்பதினாயிரத்திற்கும் (1,50,000 ) மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உடைமைகளையிழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர்.

இன்னொரு ஏற்கமுடியாக்கொடுமை கடகத்திங்கள் இருபத்தைந்தாம் நாளன்று நடந்தேறியது. கொழும்பின் வெலிக்கடைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழரசியற்சிறையாளிகளான புரட்சிகர டெலோ அமைப்பை சார்ந்த குட்டிமணி, தங்கதுரை, யெகன், காந்திய அமைப்பைச்சார்ந்த மருத்துவர் ராசுசுந்தரம் மற்றும் எசு்.ஏ டேவிட் உட்பட முப்பத்தேழுபேர் சிறைச்சாலை மேலாளர்களின் ஒத்துழைப்போடு அவர்கள் அளித்த ஆய்தங்களைக்கொண்டு மிகக்கொடூரமாகத்தாக்கிப்படுகொலை செய்யப்பட்டனர்.

“இவ்வரசு என்னை ஒருநாள் கொன்றுவிடும். எனது கண்களை ஒரு ஈழத்தமிழருக்குப்பொருத்திவிடுங்கள். நான் காணவியலா தமிழீழத்தை என்கண்களாவது காணட்டும்!”

என்று செங்கோல் மன்றத்தில் கூறியவர் குட்டிமணி. “இக்கண்களிருந்தால்தானே ஈழத்தைப்பார்க்கும்” என்று குட்டிமணியின் கண்களைத்தோண்டியெடுத்து, அதனைக்காலால் மிதித்தான் சிங்கள இனவெறியனொருவன். அந்நாளோடுமட்டும் அக்கொடூரம் முடியவில்லை. மீண்டும் கடகம் இருபத்தெட்டாம்நாள் அச்சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. பதினெட்டுத்தமிழர் கொல்லப்பட்டனர். மூன்றே நாள்களில் ஐம்பத்தைந்து தமிழ்ச்சிறையாளிகள் சிங்கள இனவெறிக்கு இரையாக்கப்பட்டார்கள்.

தமிழரென்றயடையாளமே சிங்களவெறியர்களுக்கு வெறியேற்றிக்கொள்ள போதுமானதாகவிருந்தது. பெளத்த துறவிகளிலிருந்து சிங்களச்சிறையளிகள்வரை இனவெறியூன்றுவதற்கு வித்திட்டவர் சிங்களர் குருவாக ஏற்றுக்கொண்ட அநாகாரிக்க தர்மபாலா.

“சிங்களர் தனித்துவமானவர். பண்பாடற்ற காடையர்களால் சீரழிக்கப்படுமுன் ஒளிமயமான இவ்வழகிய தீவு ஆரியச்சிங்களர்களால் ஒரு நல்லுலகு ஞாலமாக உருவாக்கப்பட்டிருந்தது” – சிங்கள பெளத்த தேயசார்பின் தந்தை என்றழைக்கப்பட்ட அநாகாரிக்க தர்மபாலாவின் கூற்றுகள் இவை.

ஆனால,பழங்குடியினமான நாகரின் தேயமே ஒட்டுமொத்த இலங்கையுமென்பது வரலாற்றாசிரியர்களின் கூற்று. உண்மை வரலாறுயிப்படியிருக்க, இடையில்வந்து இலங்கைத்தீவைப்பறித்து, பழங்குடிகளான தமிழர்களையொடுக்க சிங்களர்களுக்கு வெறியூட்டிய வரலாற்றுத்திரிபுகளை வடிவமைத்தவர்களே இப்பெளத்த அடிப்படைசாரர்.

கருப்புக்கடகப்படுகொலைகளை பன்னாட்டு இதழ்களும் கண்டித்து இவ்வாறெழுதின.

“ஏனைய ஆசியநாடுகளின் குழப்பங்களிற்கும் இக்குழப்பத்திற்கும் தெளிவான வேறுபாடு, தமிழர்களின் வர்த்தகத்தளங்களைத்தேடி வன்முறைக்கும்பல்கள் கண்டுபிடித்து தாக்கியதே ஆகும். காவலர்களும், அரசப்படைகளும் கலகக்காரர்களுடன் சேர்ந்தே தாக்கினார்கள்” – (பைனான்சியல் டைம்சு், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று, எட்டாம்திங்கள் பன்னிரண்டு) .

“சேர்ந்து வாழ்வது கடினமானதென்றால் வடக்கில் தமிழர்களுக்குத்தனிநாடு கோரும் உரிமை இருக்கவே செய்கிறது” – (வாசிங்டன் போசு்ட் –ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று, மடங்கல் நான்கு).

தமிழ்நாட்டின் நாளிதழ்களும், இந்திய ஒன்றியத்தின் முதன்மைநாளிதழ்களும் இதனை தலைப்புச்செய்திகளாக்கின.

தமிழ்நாட்டிலும்,பன்னாட்டுத்தமிழர்களிடையிலும் இககருப்புக்கலகம் பெருங்கொந்தளிப்பை உருவாக்கியது. கட்சி, அமைப்பு வேறுபாடுகளின்றி தமிழகத்தின் பொதுமக்கள் இலங்கை அரசுக்கெதிரான பேரணி, ஊர்வலம், கம்பலைகள் எனத்தம் தமிழீழவுறவுகள் கொன்றொழிக்கப்பட்டதைக்கண்டித்து அணிதிரண்டனர். அனைத்துநாட்டுக்குமுகாயமும் கண்டனத்தைத்தெரிவித்தன. இந்தக்கருப்புக்கடகத்தின் பேரிரச்சல், பல்லாயிரந்தமிழிளையோரை படைக்கலன் தரித்த விடுதலைப்போரிற்சேர உந்தித்தள்ளியது. தமிழ்நாட்டுத்தமிழர் இந்தியப்படையை அனுப்பி அமைதியை நிலைநாட்டக்கோரிக்கை எழுப்பியதும் கடகக்கலவரத்தால் உருவானது.

கருப்புக்கடகம் என்பது ஆடித்திங்களில் தொடங்கிய நிகழ்வன்று. அது விடைத்திங்கள் (வைகாசி) லிருந்து தொடர்ச்சியாக நடந்துவருவது.ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று, விடைத்திங்கள் அங்கு நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பங்கேற்கக்கூடாதென்று தமிழீழவிடுதலைப்புலிகள் கொடுத்த அழைப்பின் பேரில் தமிழர்பகுதியில் தொண்ணூற்றெட்டு விழுக்காடு மக்கள் தேர்தலை முற்றுமுழுதாகப்புறக்கணித்தனர். தமிழீழவிடுதலைப்புலிகள் தலைமையில் தமிழர்பகுதியில் ஏற்பட்ட அரசியல்மாற்றம் யெயவர்தனேவை கடுஞ்சினமடையச்செய்தது. இதனால் யெயவர்த்தனே தனது படைகளைக்கட்டவிழ்த்துவிட, தமிழர் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். வீடுகளெரிக்கப்பட்டன. உடமைகள் சூறையாடப்பட்டன. இப்பதட்டம் வவுனியா முழுவதும்பரவியது. பின்பு திருகோணமலைப்பகுதிகளிலும் பரவியது. ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று கடகத்திங்களில் நாள்தோறும் தமிழர் கொல்லப்படுவது வாடிக்கையாகிப்போனது. கடகம் இருபத்துமூன்றுக்குமேல் இது உச்சத்தையடைந்தது. இதன்பின்பு தமிழீழவிடுதலைப்புலிகள் விடுத்த பொதுக்கடையடைப்பு முழுவீச்சில் நடைபெற்றது. அப்போது கொழும்பிலிருந்துவந்த யாழ்தேவி எனும் பெயர்கொண்ட தொடருந்து தமிழ் இளைஞர்களால் தீயிடப்பட்டது. இதனாலேற்பட்ட பதற்றத்தினால், யாழ்ப்பாண நாளிதழ்களுக்குத்தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, திருநெல்வேலித்தாக்குதல் எனப்படும் கன்னிவெடித்தாக்குதலில் பதின்மூன்று இலங்கைப்படைத்துறையினர் கொல்லப்படுகின்றனர். யாழ்ப்பாணத்திலேயே அவர்களின் உடல்களை அடக்கங்செய்திட படைத்துறையினர் விரும்பியபோதும், யெயவர்த்தனே அவர்களது உடலை கொழும்பில் சிங்களமக்கள நடுவில் பார்வைக்குவைத்து அடக்கம்செய்யமுடிவெடுத்தார். சிங்களஅரசான யெயவர்த்தனா அரசு படைத்துறையினரின் மரணத்தை இனவெறியைத்தூண்டும் நிகழ்வாக மாற்றியது. எந்தப்படைத்துறைவீரர்கள் மறைவிற்கும் கடைபிடிக்காத புதியமுறைகளில் இப்படைத்துறையினரின் இறுதியூர்வலம் நடந்தது. இறந்தோருக்கான அடக்கப்பெட்டிகள் எடுத்துவரப்படாமல் வேண்டுமென்றே சூழ்ச்சியுடன் நெகிழிப்பைகளில் உடல்களைக்கட்டிக்கொண்டு வந்தார்கள். இருட்டும்வரை இறுதி ஊர்வலத்தை பின்னுழுத்து சிங்களவர்களிடம் கொதிப்புணர்வைத்தூண்டச்செய்தனர். இச்சுணக்கம் பெரும்பாலான சிங்களவர்களை கொழும்பைநோக்கி வரச்செய்வதற்கு போதுமான காலமாகவிருந்தது.  அச்சசார்பர்களின் கெடுமதியால் தூண்டப்பட்ட சிங்கள வெறியர்களால் எளிய தமிழரின் குருதி அம்மண்ணில் ஆறாக ஒடியது. படிப்படியாகத்தென்னிலங்கைக்கும் வன்முறை பரவியது. இதனால் நூறாயிரத்து ஐம்பதினாயிரத்திற்கும் (1,50,000-) மேற்பட்டோர் தங்கள் உடைமைகளையிழந்து ஏதிகளாக்கப்பட்டனர்.. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாண்டனர். அச்சசார்படைகளால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது இப்படுகொலை என்பதை “கறுப்பு ஜூலை” எனப்படும் கருப்புக்கடகம் வெளிச்சமிட்டுக்காட்டியது.

“கருப்புக்கடகம்” தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான இனவெறித்தாக்குதல் என்றாலும், ஆங்கிலேயரிடமிருந்து இலங்கைத்தீவு விடுதலை பெற்றதுமுதல், சிங்களவர்களின் ஆட்சியின்கீழ் தொடர்ச்சியாகத்தமிழர்கள்மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனவெறி தாக்குதல்கள் அதற்கு அடித்தளமிட்டுள்ளன என்றே கூறலாம்.

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐப்பத்தாறில் “சிங்களம் மட்டும்” இயக்கம் நடத்திய பண்டாரநாயகா தலைமையின்போது, சிங்களத்தை அரசமொழியாக்கி, தமிழ்மொழி கீழிறக்கப்பட்டது. தமிழருட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிங்களமொழி தெரிந்தாகவேண்டும், இல்லையென்றால் பதவியுயர்வு, ஊதியவுயர்வு இல்லையென ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது தமிழர்களை சார்ப்புப்படுத்திய கூட்டமைப்புக்கட்சியான தந்தை செல்வா தலைமையில் இயங்கிய தமிழரசுக்கட்சி அமைதிவழிப்போராட்டமே நடத்தியது. அதற்கு பயனாக அம்பாறை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் படுகொலை செய்யப்பட்டு வணிகவளாகங்கள் சூறையாடப்பட்டன.

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டில் இனவெறி ஊட்டப்பட்ட மிருகங்களின் வேட்டையாடலில் நூற்றைம்பதற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏதிலிகளாக வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச்சென்றனர். அப்பொழுதும் தன்னாட்சிக்கோரிக்கையை மக்களிடம் எடுத்துச்செல்ல கூட்டமைப்புக்கட்சி அறவழியிலேயே போராடியது. ஆயிரத்துத்தொள்ளாயிரத்து அறுபத்தொன்றிலுல் அதேயறவழிப்போராட்டம்தான் நடத்தியது. அதேயாண்டு மூன்று திங்கள்களாக நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரசு நிறுவனங்கள் முடங்கியது. சிங்களச்சட்டத்திற்கு புறம்பாக தமிழ்த்தேய அஞ்சற்தலைகள் கூட்டமைப்புக்கட்சியினால் வெளியிட்டது. ஓரஞ்சற்தலைக்காக அறவழிப்போராட்ட தலைவர்களையடித்துயொடுக்கிட ஆய்தப்படைகளை யேவியது சிங்களப்பேரினசாரரசு. எப்பொழுதும் குறியாகும் இரக்கக்கத்திற்குரிய வகையில் மக்கள் அப்பொழுதும் காவலர்களின் குண்டாந்தடிகளுக்கு இரையானர்.

இப்படியே அறவழிப்போராட்டங்களும் தமிழர் படுகொலைகளும் தொடர்ந்தவண்ணமிருக்க தமிழர்களுக்கான அறவழிக்கட்சிகள் தமிழர்களின் அரசியல்விடுதலையை, தமிழ்த்தேய அடையாளத்தைக்காப்பாற்ற இணையத்தொடங்கின. அவர்களும் குறிக்கோளின் பாதைகளைவிட்டு பாராளுமன்றப்பதவிக்குள் முடங்கிவிட்டனர்.

இதற்கிடையில் இலங்கையரசின் 1967, 1971, 1979-ம் ஆண்டுகளில் கொண்டுவந்த தரப்படுத்துதல் சட்டங்கள் தமிழரின் கல்வியில் பேரிடியாய் நுழைந்தது. அதாவது, கூடியபுள்ளிபெற்ற, திறமைவாய்ந்த தமிழ்மாணாக்கர் வாய்ப்புக்களையிழக்க, குறைந்த புள்ளிகளைப்பெற்ற சிங்களமாணாக்கர் அவ்வாய்ப்புக்களைப்பெற்றனர். வேலைவாய்ப்பின்றி, உயர்படிப்பிற்கு வழியுமின்றி வெறுப்பும், சலிப்பும் புறவயச்சூழலாக இளையோரை புரட்சிப்பாதையைநோக்கி அடியெடுத்துவைக்கத்தூண்டியது. அறவழியை விரும்பாதவர்தமிழர் எனும் பொய்க்காட்சி கட்டமைக்கப்படுவது உண்மையன்று என்பதற்கும், தமிழினம் சிங்களப்பேரினவாசாரமைப்புகள் அடிக்க அடிக்கத்தன் கன்னங்களைக்காட்டிக்கொண்டேதானிருந்தது என்பதற்குமே இந்த அறவழிப்போராட்டங்கள் சான்றுகளாகும்.

பல்நூற்றுக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டபொழுதும் இயேசுவின் பரப்புரைகளையும், புத்தனின் கோட்பாட்டினையும் வரித்துக்கொண்டு அமைதியாகவேகடந்தனர் தமிழர். இனியும் இப்படியே கடந்தால் உயிருக்கு நேரானமொழியும், இனத்திற்கு உயிரானபண்பாடும் அழிக்கப்பட்டுவிடும் எனும் பேரச்சம் தோன்றியதாலேயே ஆய்தம்தரித்த போராட்டக்குழுக்கள் உருவாயின. அதில் விடுதலைப்புலிகளின் இயக்கம் நேரியபண்பாலும், ஒழுக்கநெறியாலும் சிங்களப்படைகளை எதிர்த்தது. வலுக்கொண்ட படையினரை எதிர்த்துநின்றனர் ;ஆனால் இனவெறிகொண்ட சிங்களவரசோ இரக்கத்திற்குரிய மக்களையே குறிவைத்தது.

“கருப்புக்கடகம்” நிகழ்வின் காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் உளத்தில் ஆறாக்காயங்களையும், முடிவற்றவலிகளையும் தமிழர் உளத்தை கிளறிக்கொண்டேயிருக்கும். சிங்களப்பேரினசாரரசு ஆயிரக்கணக்கான தமிழர்களையழித்தொழித்த ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எண்பத்துமூன்றாம் ஆண்டின் கருப்புக்கடகத்தையும்(ஜூலை)யும், நூறாயிரம் கணக்கான தமிழர்களைக்கொன்றுகுவித்த இரண்டாயிரத்து ஒன்பதாமாண்டின் விடைத்திங்களையும் என்றென்றும் தமிழர்கள் மறக்கவும், ஏற்கவும் மாட்டார்.

“எங்கள் சிக்கல்களுக்கு அமைதிவழியில் முடிவுகாணவேண்டுமென்றால் இனப்படுகொலைசெய்யும் சிங்களயாட்சியரின் உளப்போக்கின் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம்வேண்டும்” என்றார் தேயத்தலைவர் மேதகு பிரபாகரனார். பெளத்தஅடிப்படைசார், சிங்களப்பேரினத்தின் உளப்போக்குக்கொண்டவர் ஆளும்வரை இலங்கைக்குள் தமிழர்க்கு முடிவென்பது கானல்நீரே.

நன்றி .

முதன்மைக்குறிப்பு .

தமிழர்கள் என்போர் தமிழறிந்தோரே . மொழியழிந்தால் இனமழியுமென்பது மறுக்கமுடியா வரலாற்றுண்மை . எப்பதிவேனும் தமிழில் எழுதவேண்டும் என்பதால் புறமொழிச்சொற்களைமாற்றியமைத்து இப்பதிவை உங்களுக்குக்கொடுக்கிறது துளிப்பணிப்பகம் .

“வாழ்கதமிழ்”

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button