தமிழீழத்தில் தேயத்தலைவரால் கொண்டுவரப்பட்ட மணக்கொடைத்தடைச்சட்டம்.
ஈழநாதம் நாளிதழில் “நமதுநோக்கு” எனும் தலைப்பில் வெளியான செய்தி.

மணக்கொடைத்தடைச்சட்டம்.
மாந்த குமுகாயம் வளர்ச்சியடையும்போது குமுகாயமாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகும். திராவிட நாகரிகத்தில் இல்லாத ஆனால், பின்னர் ஆரியத்தின் வன்கவர்வு தமிழர்களிடையே பெண் அடிமைக்கோட்பாட்டுடன் மணக்கொடையென்ற பெண்களின் கீழ்நிலையை உறுதிப்படுத்தும் கொடுப்பனவும் தமிழர் நடுவில் புகுத்தப்பட்டது.
தமிழ்மக்களின் தாயகம் ஐரோப்பியரால் வன்கவர்வு செய்யப்படும்வரை தமிழர்களின் ஆட்சியின் கீழ்த்தான் இருந்துவந்தது . அக்காலகட்டத்தில் வழமையிலிருந்த குமுகாயச்சார்பான சட்டவொழுங்குகளில் மணக்கொடைக்கொடுப்பனவும் ஒருபகுதியாக இருந்தது . ஆண் மேலாண்மையின் முத்திரையாக இருந்துவந்தது. எம்மை வன்கவர்வு செய்த ஐரோப்பியர், தமிழரிடையே வழக்கத்திலிருந்த குமுகாய ஒழுங்குமுறைகளை மாற்றம்செய்யாது அவற்றைத்தொடரவிட்டு தங்களின் பொருண்மிய நலன்களை பேணுவதிலேயே கண்ணாக இருந்தனர். ஒல்லாந்தர் ஒருபடி முன்னேறி தமிழ்மக்கள் நடுவில் வழக்கிலிருந்த சட்டங்களையும் ஒழுங்கு நெறிகளையும் “தேசவழமைக்கோவை” என்று கோவைப்படுத்தினர். ஆங்கிலேயரிடம் ஆட்சி கைமாறியபோதும் அவர்களும் தமிழ்மக்கள் மீது தமது ஆட்சியை இத் தேசவழமைக்கோவையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தினர். மணக்கொடைக்கொடுப்பனவும் பழையமுறையிலேயே தொடர்ந்து வழக்கத்திலிருந்தது.
பெண்கள் உடலமைப்பைத்தவிர ஆண்களைவிட வேறெந்த வகையிலும் குறைந்தோரல்லர். உடலுழைப்பில் ஆண்களுக்கீடாக அவர்கள் உழைப்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு முன்னர் கல்விகற்கும்வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது அவர்கள் கல்விகற்கும் வாய்ப்பைப்பெற்றுள்ளனர் . அதுவும் கடும்போராட்டத்தினூடாகத்தான் கிடைத்திருக்கிறது .கல்வி கற்றதனால் பெண்கள்,ஆண்கள்செய்யும் தொழில்கள் யாவற்றையும் செய்வதை நாம் காண்கின்றோம். தமிழீழத்தில் பெண்கள் போராளிகளாக திறம்படத்திகழுவதும் கண்கூடு. இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து பண்டப்பொருளாகக்காட்டும் மணக்கொடைக்கொடுப்பனவு கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாகவேண்டும்.
மணக்கொடுப்பனவை இல்லாமல் செய்வதென்று தமிழீழத்தேயத்தலைவர் உறுதிபூண்டுவிட்டாலும் அதை நடைமுறைப்படுத்த பல அமைப்புகள் தேவைப்பட்டன. வழக்காடுமன்றுகள் தேவைப்பட்டன .அவற்றில் கடமையாற்ற சட்டவாளர்கள், சட்ட ஒப்போலைப்பகுதியினர் தேவைப்பட்டனர். இதற்காக சட்டக்கல்லூரி உருவாக்கப்பட்டு சட்டவாளர், வழக்கறிஞர், சொங்கோல்மன்றத்தலைவர்,சட்டவாக்கப்பகுதியினர் உருவாகினர். செங்கோல்மன்றங்கள் நிறுவப்பட்டன. சட்டவாக்கங்கள் அணியம்செய்யப்பட்டு தேயத்தலைவரின் ஏற்புடமையோடு வெளியிடப்பட்டது.
மணக்கொடைக்கொடுப்பனவை தடைசெய்வதற்குமுன்னர் நடைமுறையிலிருந்த தேயவழமைச்சட்டம் மாற்றி அமைக்கப்படவேண்டியதாயிற்று. ஆயிரத்துதொள்ளாயிரத்து தொண்ணூற்றுமூன்றாம் ஆண்டின் மூன்றாம் எண் “தமிழீழ தேசவழமை“சட்டத்தின்மூலம் பெண்கள் தமக்கான உடமைகளையும், உரிமைகளையும், தேடிய தேட்டவுடமை அரைப்பங்கையும் கணவனின் எழுத்து மூலமான ஒப்புதலின்றி கையாளலாமென்ற சட்டம் இயற்றப்பட்டது.
இதற்கடுத்ததாகத்தான் இன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் மணக்கொடைத்தடைச்சட்டம் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின்படி தமிழீழத்தில் இதுவரைகாலமும் நிலவிவந்த மணக்கொடை வாங்கல் தடைசெய்யவும், உடமைகளைப்பகிர்வதனை ஒழுங்குசெய்யவும், இவ்ஒழுங்கேற்பாடுகளை மீறுவோரை ஒறுப்பதற்கும், குடும்பவொழுங்கில் முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், இதனால்பெறும் குற்றக்காசுகளையும், பறிமுதல் உடைமைகளையும் பெண்கள் மறுவாழ்வுக்குப்பயன்படுத்துவற்குமான ஏற்பாடுகள் தெளிவாகச்செய்யப்பட்டுள்ளன .
“இன்று அமுலுக்குவரும் மணக்கொடைத்தடைச்சட்டம் தமிழ்மக்களின் குமுகாயவரலாற்றில் பெரும் திருப்புமுனையாகும்” என்றசெய்தி மணக்கொடைத்தடைச்சட்டம் நடைமுறைக்குவந்த நாளான ,ஒன்று ஒன்பது ஆயிரத்துதொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்தாம் ஆண்டு ஈழநாதம் நாளிதழில் நமதுநோக்கு எனுந்தலைப்பில் வெளியானது .
“மூலவெழுத்திலிருந்த சங்கதச்சொற்கள் நீக்கப்பட்டு சிறு திருத்தங்களுடன் பதிவுசெய்துள்ளோம்” .
நன்றி.
வாழ்க தமிழ் !




