
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௧.
“சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.“
பொருளுணர்முறையில், “உயிர்க்கு சிறப்பீனும் செல்வமுமீனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
முதலில் வரும் நாற்சீர்களை ஒலித்து முடிக்கும்போது, நமது ஒலிப்புக்காற்றளவு மிகவும் குறைந்து அடுத்துவரும் மூச்சீர்களை ஒலிக்க இயலாது. எனவே அவ்விடத்தில் விட்டிசை நிகழ்ந்து விட்டிசைக்குங்கணத்தில் ஒலிப்புக்காற்று உள்ளே நுழையும்.
தொடரொலிப்பு புணர்ச்சியின் உடனாயவிளைவு. அச்சிட்டவாறு எழுசீர்களையும் பொருளுணருமாறு தொடர்ந்தொலிக்க இயலாது. தொடர்ந்தொலிக்க இயலாவிடத்தும் புணர்த்துவதால் யாது பயன்.
விட்டிசை என்பது புணர்ச்சியை மறுக்கும் உத்தியன்று; பொருளுணர்ச்சிக்கானது.
செம்மைவடிவம் —
“சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்கு
ஆக்க மெவனோ வுயிர்க்கு.“
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௨.
“அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.”
மூன்றாஞ்சீர் ‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
நான்காஞ்சீரில் வந்த ‘அது’ என்பது ‘அறம்’ என்பதன் மறுபெயர்ச்சொல். மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
“அறத்தினூஉங்கு ஆக்கம் இல்லை; அதனை மறத்தலினூங்கு கேடு இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
“அறத்தினும் ஆக்கம் இல்லை; அதனை மறத்தலினும் கேடு வேறில்லை” என விரியும்.
செம்மைவடிவம் —
“அறத்தினூஉங் காக்கமு மில்லை அதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௩.
“ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.”
‘வகையான்’ என்பதில் மூன்றாம்வேற்றுமையுருபு ‘ஆன்’ வந்துள்ளது. மூன்றாம்வேற்றுமை வினையைமட்டுமே ஏற்கும். ஈண்டு ஏற்குமென்பது புணரும் என்பது. எனவே ‘அறம்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
ஆறாஞ்சீரில் வரும் ‘எல்லாம்’ எனும் முற்றுப்பொருள்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௪.
“ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.”
‘வகையான்’ என்பதில் மூன்றாம்வேற்றுமையுருபு ‘ஆன்’ வந்துள்ளது. மூன்றாம்வேற்றுமை வினையைமட்டுமே ஏற்கும். ஈண்டு ஏற்குமென்பது புணரும் என்பது. எனவே ‘அறம்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
ஆறாஞ்சீரில் வரும் ‘எல்லாம்’ எனும் முற்றுப்பொருள்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௫.
“அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.”
‘நான்கும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய இந்நான்கையும் இழுக்கி (நீக்கி) இயன்றது அறம்“ என சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மை வடிவம் —
“அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கும்
இழுக்கா வியன்ற தறம்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௬.
“அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.”
‘அறத்தினை அன்றறிவாம் என்னாது செய்க’ என்பது கருத்து. ‘என்னாது’ என்பது வினையெச்சம். ‘அறம்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. யாப்பமைதிகருதி இதனை வழுவமைதியாக கொள்ளவேண்டும்.
‘மற்றது’ என்பது மற்றவை என்பதன்று. ‘மற்று’ என்பது அசைச்சொல். ‘பொன்றுங்கால் அது பொன்றாத்துணை’ என்றாகும்.
செம்மைவடிவம் —
“அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௭.
“அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.”
குறளின் செம்மைவடிவமும் இதுவே.
“சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்தாறு இதுவென வேண்டா“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
“அறத்தின்பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் (ஆகமத்தின் அளவையான்) உரைத்தல் வேண்டா; அது சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடை காட்சியளவை தன்னானே உணரப்படும்“ — பரிமேலழகனாரின் இவ்வுரை ஆய்வுக்குரியது.
‘பல்லக்கில் அமர்ந்தானையும் அப்பல்லக்கினை சுமப்பானையும் காட்டி அறத்தின்பயன் இதுவென வேண்டா’ என்பதே குறளின் பொருள். நேரடியாக சொல்வதே ஐயனின் வழிமுறை. எதனையேனும் உய்த்துணரவேண்டுமானால் எவ்வழியில் உய்த்துணரவேண்டுமென்பதற்கு வழியையும் அக்குறளிலேயே பொதித்து வைப்பார்.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௮.
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.”
பெருளுணர்முறை — “ஒருவன் வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃது
வாழ்நாள் வழியடைக்குங் கல்“ என்றவாறு.
செம்மைவடிவம் —
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௩௰௯.
“அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.“
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
இன்பம் என்னுமிடத்தில் முற்றுப்பொருளுடன்கூடிய அறுதியிடல் வருகிறது. முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
முற்றுச்சொல்லின் மகரம்
மகரத்தின்முன் நிற்காதென்னும் புணர்ச்சிவிதியைக்கூறின் இன்பமற்றெல்லாம் எனும் புணர்மொழியின் பொருள் யாது. இன்பம் எனும் சொல் மற்றெல்லாம் என்பதற்குரியதா. தழுவாச்சொற்கள் புணரா. புணரா என்பதால் மகரம் நீங்காது. பொருளுணர்ச்சியின்பொருட்டே இலக்கணம். இதற்கொரு அமைதி காண மகரத்தை பிறையடைப்புக்குறிகட்குள் இடவேண்டும்.
செம்மைவடிவம் —
“அறத்தான் வருவதே இன்ப(ம்)மற் றெல்லாம்
புறத்த புகழு மில.“
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௪. அறன்வலியுறுத்தல்.
குறள் – ௪௰.
“செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.”
‘அறனே’ என்பது தேற்றேகாரம்பெற்ற பெயர்ப்பயனிலை. முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘ஒருவற்கு’ என்பது ஈரிடத்தும் சென்று “ஒருவற்கு செயற்பாலதோரும் அறனே; ஒருவற்கு உயற்பாலதோரும் பழி” எனப்புணரும். பொருளுணர்முறையும் இதுவே. ‘மறனேயொருவற்கு’ என்பது தழுவுசொற்களன்று. தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“செயற்பால தோரு மறனே ஒருவற்
குயற்பால தோரும் பழி.”
முத்தையா சுப்பிரமணி.




