இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௬௰௧. மடியின்மை. (மடி = சோம்பல்).

குறள் – ௬௱௧ (அச்சில் உள்ளவாறு).

“குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு
மாசூர மாய்ந்து கெடும்.”

குன்றா விளக்கம் = அணையா விளக்கு.
மாசு = குற்றம்.
ஊர = படிய.
மாய்ந்து = ஒளி குன்றி, மங்கி.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“குடி என்னும் அணையா விளக்கு சோம்பல் என்னும் குற்றம் படிய ஒளிகுன்றி அணைந்துவிடும்“ என்பதாம் .

‘என்னும்’ என்ற விளக்கச்சொல் ‘குடி’, ‘மடி’ என்ற பெயர்களை ஒப்பிட்டு தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘விளக்கு’ என்னும் பொருள்தரும் ‘விளக்கம்’ இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘மாசு’ என்பது இயல்புப்பொருள்தரும் எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசு*ஊர மாய்ந்து கெடும்.”

*குற்றியலுகரமாகிய சுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௨ (அச்சில் உள்ளவாறு).

“மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.”

மடி = சோம்பல்.
மடியா = சோம்ப (நீங்க).
ஒழுகல் = செயல், நடத்தல்.
குடி = குடும்பம், வாழ்வு.

“குடியை குடியாக வேண்டுபவர் மடியை மடியா(க) ஒழுகல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வாழ்வு நல்லறமாக வேண்டுபவர் மடியை மடியாக்கி வாழ்க” என்பதாம்.

‘குடியை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவிரி ‘குடி’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“மடியை மடியா வொழுகல் குடியை குடியாக வேண்டு பவர்.”

 

குறள் – ௬௱௩ (அச்சில் உள்ளவாறு).

“மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.”

மடி = சோம்பல்.
மடிக்கொண்டு = மிகக்கொண்டு, இடமளித்து.
ஒழுகும் = வாழும்.
பேதை = அறிவிலி.
மடியும் = அழியும்.
முந்து = முன்னதாக.
குடி = குலப்பெருமை.

“மடிமடிக்கொண்டொழுகும் பேதை தன்னினும் பிறந்தகுடி முந்து மடியும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சோம்பலை மிகவும் ஏற்றுக்கொண்டு வாழும் அறிவிலி அழிவான்; அவன் பிறந்தகுடிப்பெருமை அவனுக்குமுன் அழியும்” என்பதாம்.

‘மடியும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘தன்னினும்’ என்பது ‘இன்’ என்னும் சாரியைபெற்ற தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.”

 

குறள் – ௬௱௪ (அச்சில் உள்ளவாறு).

“குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.”

குடி = வாழ்வு.
மடிந்து = அழிந்து.
மடி = சோம்பல்.
மடிந்து = ஏற்று.
மாண்ட= சிறந்த.
உஞற்று = முயற்சி.
இலவர்க்கு = இல்லார்க்கு.

“மடிமடிந்து மாண்ட உஞற்றிலவர்க்கு குடிமடிந்து குற்றம் பெருகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சோம்பலை அழித்து சிறந்த முயற்சி இல்லார்க்கு வாழ்வு அழிந்து குற்றமும் பெருகும்“ என்பதாம்.

‘பெருகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘மாண்டவுஞற்றி’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.”

 

குறள் – ௬௱௫ (அச்சில் உள்ளவாறு).

“நெடுநீர் மறவி மடி துயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன்.”

நெடுநீர் = காலந்தாழ்த்தல்.
மறவி = மறதி.
மடி = சோம்பல்.
துயில் = பேருறக்கம்.
கெடுநீரார் = கெடும் இயல்பினார்.
காமக்கலன் = விரும்பும் மரக்கலன்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“காலந்தாழ்த்தல், மறதி, சோம்பல், பேருறக்கம் ஆகிய இந்நான்கும் கெடும் இயல்பினார் விரும்பி ஏறும் மரக்கலன்” என்பதாம்.

எண்ணுப்பொருள்கள் புணராது தனித்துநின்று பொருளுணர்த்தும். துயினான்கும் என்பது நால்வகைத்துயில் என்வும் மயங்கும். எனவே துயில் வருமொழியுடன் புணராது.

‘நான்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.”

 

குறள் – ௬௱௬ (அச்சில் உள்ளவாறு).

“படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.“

படியுடையார் = (மற்றவர்) படிதலை உடையார்‌ (மன்னவன்).
பற்று = துணை.
மடி = சோம்பல்.
மாண்பயன் = சிறந்த பயன்.
எய்தல் = அடைய.
அரிது = இயலாது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மன்னவனது துணை அமைந்தயிடத்தும் சோம்பலுடையார் சிறந்த பயன்களை அடைதல் இயலாது” என்பதாம்.

‘பற்றமைந்தகண்ணும்’ என்பதன் விகுதி தெரிநிலைவும்மை. தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.“

 

குறள் – ௬௱௭ (அச்சில் உள்ளவாறு).

“இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர்.”

இடி = கடிந்து, வலிந்து.
இடிபுரிந்து = கடிந்துகூறி.
எள்ளும் = இகழும்.
மடிபுரிந்து = சோம்பி, சோம்பலைத்தழுவி.
மாண்ட = சிறந்த.
உஞற்று = முயற்சி.
இலவர் = இல்லார்.

“மடிபுரிந்து மாண்ட உஞற்று இலவர் இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“சோம்பி சிறந்த முயற்சியில்லார் கடிந்துகூறுதலையும் அதன்பின் இகழ்ச்சியையும் கேட்பர்” என்பதாம்.

வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் வேறுவேறு வினைகள் மயங்குமாறு புணரா. இடித்தலும், எள்ளலும் தொடர்ந்து நிகழ்வனவல்ல. காலயிடைவெளியில் நிகழ்வன. எனவே புணரா.

‘மாண்ட உஞற்றிலர்’ என்பதில் ‘உஞற்றிலர்’ என்பது எதிர்மறைத்தொழிற்பெயர். பெயரெச்சத்தொடரில் இயல்புப்பொருள்தரும் பெயர் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இடிபுரிந்து* எள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௮. (அச்சில் உள்ளவாறு).

“மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும்.”

மடிமை = சோம்பல்.
குடிமை = வாழ்வு/ அரசாட்சி.
ஒன்னார் = பகைவர்.
புகுத்தி = ஆக்கி.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மக்கள்/ அரசன்கண் சோம்பல் தங்கின் அவரை பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்” என்பதாம்.

‘குடிமைக்கண்’ வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘குடிமை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

எழுவாயாம்தன்மைபெற்ற ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.

‘ஒன்னார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமை குவ்வுருபேற்ற சொல் ‘அடிமை’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும்பெயர்களுடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“மடிமை குடிமைக்கண் தங்கின்தன் னொன்னார்க்கு*
அடிமை புகுத்தி விடும்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௯ (அச்சில் உள்ளவாறு).

“குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.”

குடி = வாழ்வு/ அரசாட்சி.
ஆண்மை = ஆளுந்தன்மை.
வந்த = நேர்ந்த.
மடியாண்மை = சோம்பல்.
மாற்ற = நீக்க.
கெடும் = நீங்கும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“வாழ்வை /அரசை ஆளுந்தன்மையுள் நேர்ந்த குற்றம் ஒருவன் சோம்பலை நீக்க நீங்கும்” என்பதாம்.

‘வந்த குற்றம்’ என்பது பெயரெச்சத்தொடர் . பெயரெச்ச்த்தொடரில் முடிக்குஞ்சொல்லான ’குற்றம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லின் விகுதி/ஈறு நீங்காது.

‘ஒருவன்’ என்பது எழுவாய். வினைமுதலாம் எழுவாய் வருமொழியாகி புணராது.

செம்மைவடிவம் —
“குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.”

 

குறள் – ௬௱௰ (அச்சில் உள்ளவாறு).

“மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு.”

மடி = சோம்பல்.
எய்தும் = அடையும்.
அடியளந்தான் = திருமால்.
தாஅயது = தாவியது என்பதன் இடையெழுத்து குறைந்து அளபெடுத்து நின்றது.
ஒருங்கு = ஒருமித்து.

“அடியளந்தான் தாஅயது எல்லாம் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“திருமால் மூவடியால் அளந்த உலகங்களெல்லாம் சோம்பலில்லாத மன்னவன் ஒருங்கே அடைவான்” என்பதாம்.

‘மன்னவன்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘எய்தும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அடியளந்தான்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button