இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௱. பண்புடைமை

குறள் – ௯௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு).

“எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.”

எண்‌ = எளிய.
பதம் = செவ்வி, பக்குவம்.
எய்தல் = அடைதல்.
யார்மாட்டும் = எல்லோரிடத்தும்.
வழக்கு = நெறி, முறைமை.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்.” பாடு = குணம், இயல்பு.

“யார்மாட்டும் எண்பதத்தால் பண்புடைமையென்னும் வழக்கெய்தல் எளிதென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எல்லோரிடத்தும் காட்டும் எளிய பக்குவத்தால் பண்புடைமையென்னும் நெறியை அடைதல் எளிதென்ப” என்பதாம்.

‘பதத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று‌ ‘பதம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“எண்பதத்தால் எய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.”

 

குறள் – ௯௱௯௰௨ (அச்சில் உள்ளவாறு).

“அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.”

ஆன்ற = மாட்சிமை, மாண்பு.
வழக்கு = நன்னெறி.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“அன்புடைமை மாண்பமைந்த குடியின்கண் பிறத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமையென்னும் நன்னெறிகள்” என்பதாம்.

‘ஆன்ற’ என்னுஞ்சொல் ‘குடி’ என்பதற்கு உறவாகும். அன்புடைமையைத்தழுவாது. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘இவ்விரண்டும்’ என்னும் சுட்டுமுற்றும்மைச்சொல் வருமொழியாகி புணராது.

செம்மைவடிவம் —
“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.”

 

குறள் – ௯௱௯௰௩ (அச்சில் உள்ளவாறு).

“உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு.”

உறுப்பு = உடம்பு.
ஒத்தல் = ஒத்திருத்தல்.
ஒப்பன்று = ஒத்திருத்தல் ஆகாது.
ஆல் = அசைச்சொல்.
வெறுத்தக்க = செல்வமெனத்தக்க.
ஒப்பதாம் = ஒத்திருத்தலாம்.
ஒப்பு = ஒத்தது.

“மக்கள் உறுப்பொத்தல் ஒப்பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மக்கள் உடம்பால் ஒத்திருத்தல் ஒத்திருத்தலாகாது. செல்வமெனத்தக்க அவர்தம் பண்புகளால் ஒத்திருத்தலே ஒத்தல்” என்பதாம்.

‘மக்கள்’ என்பது எழுவாய். எழுவாய் வருமொழியாகி புணராது.

‘பண்பொத்தல்’ என்னுமிடத்தில் விட்டிசைத்து பொருளுணர்ச்சியைத்தரும். விட்டிசைக்குமிடம் புணரா.

‘ஒப்பதாம்’ என்பதன் ஈற்றில் ‘ஆம் (ஆகும்)’ என்னும் குறிப்புவினைமுற்று நிற்கின்றது. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.”

 

குறள் – ௯௱௯௰௪ (அச்சில் உள்ளவாறு).

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு.”

நயன் → நயம் = அன்பு.
நன்றி = நன்மை.
புரிந்த = செய்த.
பயனுடையார் = உதவுவார்.
பாராட்டும் = போற்றும்.

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்பு உலகு பாராட்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அன்பொடு நன்மை செய்த பயன்தருவாரது பண்பினை உலகு போற்றும்” என்பதாம்.

‘பாராட்டும் உலகு’ என்பது முன்பின்னாக நின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.”

 

குறள் – ௯௱௯௰௫ (அச்சில் உள்ளவாறு).

“நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.”

நகையுள்ளும் = விளையாட்டு வகையாலும்.
இன்னாது → இன்னாதது = துன்பந்தருவது.
இகழ்ச்சி = இகழ்தல்.
பகை = பகைவர்.
உள்ளும் = மதிக்கும்.
பண்புள = பண்புள்ள.
பாடறிவார் மாட்டு = குணமறிந்து நடப்பாரிடத்து.

“பகையுள்ளும் பண்புள பாடறிவார்மாட்டு நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பகைவர் மதிக்கும் பண்புகளைக்கொண்ட குணமறிந்து நடப்பாரை விளையாட்டு வகையாலும் இகழ்தல் துன்பந்தரும்” என்பதாம்.

‘நகையுள்ளும்’ என்பது நினைக்கக்கூடாது என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

‘இன்னாது (இன்னாதது)’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நகையுள்ளும் இன்னாது* இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௯௰௬ (அச்சில் உள்ளவாறு).

“பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.”

பட்டு = கண்பட்டு (கண்ணோட்டத்தால்).
அதுவின்றேல் = அஃது இல்லையானால்.
புக்கு = புதைந்து.
மாய்வது = அழிவது.
மன் = உறுதி.

“பண்புடையார்ப்பட்டு உலகம் உண்டு. அதுவின்றேல் (உலகம்) மண்புக்கு மாய்வது மன்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க. ‘உலகம்’ என்பது பின்னும்நின்று பொருள்தரும்.

“புண்புடையாரது கண்பட்டு (கண்ணோட்டத்தால்) உலகம் உள்ளது. அஃது இல்லையானால் உலகம் மண்ணில் புதைந்து அழிவது உறுதி” என்பதாம்.

‘உண்டு’ என்னும் குறிப்புவினைமுற்று ‘உலகம்’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அது’ என்னும் சுட்டுப்பெயர் பண்புடையாரது கண்ணோட்டத்தைச்சுட்டும். எனவே ‘உலகம்’ ‌என்னும் பெயரைத்தழுவாது. தழுவும் சொற்களே புணரும்.

செம்மைவடிவம் —
“பண்புடையார்ப் பட்டுண்டு* உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.”

*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௯௰௧ய௭ (அச்சில் உள்ளவாறு).

“அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.”

அரம் = அறுக்கும் கருவி.
கூர்மை = நுண்ணறிவு, கூர்மதி.
மரம் = ஓரறிவு உயிர்.
மக்கட்பண்பு = பண்புடைமை.

“மக்களுக்குரிய குணமறிந்து ஒழுகும் பண்பிலார் (பண்புடைமை இல்லார்) அரம்போலும் நுண்ணறிவு உடையரேனும் ஓரறிவு உயிராகிய மரத்தினை ஒப்பர்” என்பதாம்.

‘போலும்’ என்னும் உவமவுருபு ‘அரம்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கூர்மையரேனும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.”

 

குறள் – ௯௱௯௰௮ (அச்சில் உள்ளவாறு).

“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.”

நண்பு = நட்பு.
ஆற்றாராகி = செய்யாராகி.
நயமில = அன்பில.
ஆற்றாராதல் = செய்யாராதல்.
கடை = இழிவு, இழுக்கு .

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நட்பினைச்செய்யாராகி அன்பில செய்வார்க்கும் பண்புடைமையை செய்யாராதல் இழுக்கு” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௯௱௯௰௯ (அச்சில் உள்ளவாறு).

“நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.”

நகல் = சிரித்துப்பேசி மகிழ்தல்.
மாயிரு = மிகப்பெரிய.
ஞாலம் = உலகம்.
பாற்பட்டன்று = சார்ந்ததன்று.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“பண்புடைமையால் சிரித்துப்பேசி மகிழும் வல்லமை இல்லார்க்கு மிகப்பெரிய இவ்வுலகத்தின் பகற்பொழுதும் இருளாகும்” என்பதாம்.

‘பாற்பட்டன்று’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று* இருள்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲ (அச்சில் உள்ளவாறு).

“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.”

பண்பிலான் = பண்பற்றவன்.
நன்பால் = நல்ல பால். கலந்தீமையால் = கொள்கலத்தின் குற்றத்தால்.
திரிந்தது = கெட்டது.
அற்று = அதுபோல.

“நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நல்ல பால் கொள்கலத்தின் குற்றத்தால் கெட்டது போன்றது பண்பற்றவன் பெற்ற பெருஞ்செல்வம்” என்பதாம். பண்பற்றவன் பெற்ற பெருஞ்செல்வம் பயனற்றது என்பது.

‘பெருஞ்செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘தீமையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘தீமை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி .
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button