இலக்கணம்தமிழ்

ஆறுமுகநாவலர் தமிழிலக்கணம்;எழுத்தியல்.

முதற்பகுதி

ஆறுமுகநாவலர் தமிழிலக்கணம்.

தமிழ் கூறும் நல்லுலகின் பெருமைக்குரிய ஆறுமுகநாவலர் அவர்களது இலக்கண வரையறை கொண்டு இவ்விலக்கணத்தரவுகளை , பகுதிபகுதியாக இவ்விடம் பதிவு செய்கிறேன் .

பிறமொழிக்கலப்பற்ற நல்லதொரு இலக்கணநூலை வழங்கும் நோக்கொடு இப்பதிவுகள் கொடுக்கப்படவுள.

கூடுதலான விளக்கங்கட்காக தொல்காப்பியத்திற்கு விளக்கவுரையெழுதிய சிலரின் மேன்மையான கருத்துகளை இணைத்து இவ்விலக்கண நூல் எழுதப்படுகிறது.

எழுத்தாளர்பற்றி,

தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடான பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் துளிவானொலியின் தலைமைப்பணிப்பகமான
துளிப்பணிப்பகத்தால் இந்நூல் எழுதப்படுகிறது.

பெயர் : நிலா
நிறுவுநர்/அமைத்துவம் : துளிப்பணிப்பகம் (தலைமைப்பணிப்பகம்)
கிளை அமைத்துவங்கள்:துளிவானொலி , துளியறக்கட்டளை , தூயதமிழ்த்துளிமன்றம்.
பணி : தமிழ்த்தொண்டர், வானொலி ஒலிபரப்பாளர்.
கொள்கை : கற்றோர் கல்லாதோரென அனைவரின் அடிப்படையுரிமை “கலப்பின்றி மொழிபகர்தல்” . எத்தனை படைப்புகள் வெளியானாலும் அத்தனை படைப்பும் மொழிக்கலப்பின்றி வெளியாக வேண்டும்.
வழிகாட்டி : தமிழீழத்தேயத்தலைவர் பிரபாகரன்.
தொடர்பெண் :துளிவானொலி : 0033605546867
இணையத்தளம் :www.thulivaanoli.com
எமக்கான அடையாளச்சொல்லியம் : “தமிழேயெங்கள் முகவரி”

“இவ்வெழுத்தை என்தாய்க்கு ஒப்புவிக்கின்றேன்”

முதற்பகுதி

“தலைப்பு : எழுத்து”

௧. எழுத்தியல்.

௧. இலக்கணநூல்

இலக்கண நூலெனப்படுவ, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையுமறிந்து நெறிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங்கருவியாகி நிற்பதாம்.

௨. அந்நூல் , எழுத்து, சொல், தொடர்மொழி எனும் மூன்று தலைப்புகளைக்கொண்டு வகைப்படுத்தப்படும்.

எழுத்துக்களின் பெயர்.

௩. எழுத்தெனப்படுவ , சொல்லுக்கு முதற்பொருட்டாகிய ஒலியாம்.

அதாவது , சொல்லொன்றைச்சொல்வதற்கு முதன்மையாக அமைவது ஒலி . அவ்வொலியே எழுத்தெனப்படும் எனக்கூறப்பட்டுள்ளது .

௪. எழுத்தானது , உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

௧. உயிரெழுத்து.

௫. அ, ஆ, இ, ஈ, உ, ஊ,எ,ஏ,ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களும் உயிரெழுத்துகள் எனப்படும்.

௬. இவ்வுயிரெழுத்துகள் இருவகைப்படும்.
அவையாவன.
குற்றெழுத்து, நெட்டெழுத்து.

 குற்றெழுத்து.

௭. அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குற்றெழுத்தாம். இவை குறில் எனவும் பெயர்பெறும்.

அதாவது , எழுத்துகளில் குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களுக்கு குற்றெழுத்தென்று பெயர்
(ஒரு மாத்திரையளவு ஒலிப்பவை).

நெட்டெழுத்து.

௮. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் நெட்டெழுத்தாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.

அதாவது , எழுத்துகளில் இரண்டு மாத்திரையளவு நீண்டொலிக்கும் எழுத்துக்களுக்கு நெட்டெழுத்தென்று பெயர்.

௨.மெய்யெழுத்து.

௯. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்,ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களும் மெய்யெழுத்துகளாம். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

௰. மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும்.
அவையாவன வல்லெழுத்து, மெல்லெழுத்து இடையெழுத்து என்பவாம்.

௧. வல்லெழுத்து.

௰௧. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர்பெறும்.

வன்மை + எழுத்து = வல்லெழுத்து .

அதாவது ,வன்மையான ஓசைகொண்ட எழுத்து வல்லெழுத்தெனப்படும் . “வல்லென்று இசைப்பதாலும் “வல்” என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்தெனப்படுகிறது“ என்று இளம்பூரனார் அவர்கள் விளக்கியுள்ளார் .

௨.மெல்லெழுத்து.

௰௨. மெல்லெழுத்துகள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர்பெறும்.

மென்மை + எழுத்து = மெல்லெழுத்து.

அதாவது , மென்மையான ஓசைகொண்ட எழுத்து மெல்லெழுத்தெனப்படும். “மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது” என்று இளம்பூரனார் கூறியுளார்.

௩.இடையெழுத்து.

௰௩. இடையெழுத்துகள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம் , இடையெனவும் பெயர்பெறும்.

இடை+ எழுத்து = இடையெழுத்து .

அதாவது ,வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்திலிருந்து பிறப்பதால் இடையினமெனப்படுகின்றன.”இடைநிகரவாகி ஒலித்தலாலும், இடை நிகர்த்தாயமிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது” என தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரனார் தெளிவுபடுத்தியுளார் .

சுட்டெழுத்து.

௰௫. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப்பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம்.

அதாவது ,சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மாந்தரையோ சுட்டிக்காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும்.

எடுத்துக்காட்டு :
அவன்,இவன், உவன், அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.

வினாவெழுத்து.

௰௬. எகரம் மொழிக்கு முதலிலும், ஆகாரமும் ஓகாரமும் மொழிக்குக் கடையிலும், ஏகாரம் மொழிக்கு முதலிலுங்கடையிலும், வினாப்பொருளில் வரும்போது, வினாவெழுத்துக்களாம்.

அதாவது , வினாப்பொருளைக்குறிக்கும் எழுத்து வினாவெழுத்தெனப்படும்.

எடுத்துக்காட்டு:
எவள், கொற்றனா, எக்கொற்றன் , கொற்றனோ, ஏவள், கொற்றனே.

“யா” என்னும் உயிர்மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப்பொருளில் வரும்போது வினாவெழுத்தாம்.

எடுத்துக்காட்டு:
யாவன்,யாங்ஙனம்.

இனவெழுத்து.

௰௬.அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஔகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும் ஓரினமாகும்; அவை இவ்விரண் டோரினமாகாவாம்.

இனவெழுத்தென்றால் , எழுத்துகள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக விளங்குகின்றன. தமிழெழுத்துகளில் பெரும்பாலானவை ஒப்புமையுடையன. அவ்வாறு ஒப்புமையுடைய் யெழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

௩. உயிர்மெய்யெழுத்து.

௰௭. உயிர்மெய்யெழுத்துக்களாவன. பன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந்தனித்தனி ஏறிவருதலாலாகிய இருநூற்றுப்பதினாறுமாம்.

அதாவது ,உயிர் +மெய் +எழுத்து = உயிர்மெய்யெழுத்து.

உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுடனும் தனித்தனியாக ஒன்றோடொன்று புணர்வதால் பிறக்கும் எழுத்து உயிர்மெய்யெழுத்தெனப்படும்.

அவை, ககர நிரை தொடக்கம் னகரநிரை முதலியவைகளாம்.

உயிர்மெய்க்குற்றெழுத்துத் ‘தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு ; ஆக உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு.

உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர் மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு; உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு; ஆக உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு.

௪. ஆய்தவெழுத்து.

௰௮. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாம். அஃதாவது , ஃ.

எடுத்துக்காட்டு . எஃகு, கஃசு, அஃது, பஃறி.

மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும் , மெய் பதினெட்டும் உயிர்மெய் இருநூற்று நாற்பத்தேழும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநூற்று நாற்பத்தேழெழுத்துகளும் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கிவருவதைக்கண்டோம்.

அடுத்தபகுதியில் எழுத்துகளின் மாத்திரையளவுகள் பற்றிக்காண்போம்.

நன்றி
வாழ்க தமிழ் .

தொடரும்……

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button