
குறள் – ௭௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு).
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.”
பொருளல்லவர் = பயனில்லார்.
பொருளாக = பயனுள்ளதாக. பொருளல்லது = செல்வமல்லது.
பொருள் = மெய்ம்மை/ பயன்.
“பொருளல்லவரை பொருளாக செய்யும் பொருளல்லது பொருள் இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பயனில்லாரை பயனுள்ளதாக செய்யும் செல்வமல்லது மெய்ம்மை இல்லை” என்பதாம்.
‘பொருளல்லவரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற பெயர்ச்சொல் ‘பொருள்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.
‘பொருளாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘பொருள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பொருளல்லதில்லை’ என்னும் புணர்மொழியில் ‘அல்லது’ என்னும் இணைப்பிடைச்சொல் ‘பொருள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பொருளல் லவரை பொருளாக செய்யும்
பொருளல்லது* இல்லை பொருள்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௫௰௨ (அச்சில் உள்ளவாறு).
“இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.”
இல்லாரை = செல்வமில்லாரை.
எள்ளுவர் = இகழ்வர்.
சிறப்பு = மதிப்பு (மதிக்க).
“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செல்வமில்லாரை எல்லாரும் இகழ்வர். செல்வரை எல்லாரும் மதிப்பார்” என்பதாம்.
‘இல்லாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘எல்லார்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.
‘எல்லாரும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘செல்வரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘எல்லார்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.”
குறள் – ௭௱௫௰௩ (அச்சில் உள்ளவாறு).
“பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.”
பொருள் = செல்வம்.
பொய்யா விளக்கம் = அணையா விளக்கு.
எண்ணிய = நினைத்த, கருதிய.
இருள் = துன்பம்.
தேயம் = நாடு.
அறுக்கும் = போக்கும்.
“பொருளென்னும் பொய்யா விளக்கம் எண்ணிய தேயத்துச்சென்று இருளறுக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செல்வமென்னும் அணையா விளக்கு செல்வமுடையார் கருதும் நாட்டிற்குச்சென்று அவர்தம் துன்பங்களைப்போக்கும்” என்பதாம்.
‘விளக்கம்’ (விளக்கு) என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அறுக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.”
குறள் – ௭௱௫௰௪ (அச்சில் உள்ளவாறு).
“அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.”
அறன் = அறம்.
ஈனும் = கொடுக்கும்.
திறன் → திறம் = திறமை, தகுதி.
தீது = தீமை.
இன்றி = இல்லாமல்.
வந்த = ஈட்டிய.
“திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
அறனீனும் இன்பமும் ஈனும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவர் தந்திறமையை அறிந்து தீமை செய்யாது ஈட்டிய செல்வம் அறத்தைக்கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்” என்பதாம்.
‘அறனீனும்’ என்பதன்கண் வந்த ‘ஈனும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இன்பமும்’ என்பது ஆக்கவும்மைச்சொல். ஆக்கவும்மை எதனுடனும் புணராது.
‘இன்பமுமீனும்’ என்பதன்கண் வந்த ‘ஈனும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.”
குறள் – ௭௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).
“அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.”
அருள் = உயிரிரக்கம்.
புல்லார் = பொருந்தார், ஏற்கார். புல்லாது என்னும் பொருளில் வந்தது.
புரளவிடல் = நீங்க விடுக, விலக்குக.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உயிரிரக்கமும் அன்பும் இல்லாது வந்த பொருளாக்கத்தைப்பொருந்தாது விலக்குக” என்பதாம்.
‘அருளொடுமன்பொடும்’ என்னும் புணர்மொழியில் புணர்ச்சியைப்பிரித்து ‘அன்பொடும்’ என்பதை அறியவேண்டியுள்ளது. புணர்ச்சியைப்பிரித்து பொருளறிவதாயின் புணர்ந்த வேண்டா.
செம்மைவடிவம் —
“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.”
குறள் – ௭௱௫௰௬ (அச்சில் உள்ளவாறு).
“உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.”
உறுபொருள் = உடையார் இன்மையால் வந்த செல்வம்.
உல்கு பொருள் = தீர்வை, சுங்கம், ஆயம், வரி முதலியவற்றால் வந்த செல்வம்.
ஒன்னார் = பகைவர்.
ஒன்னார்த்தெறுபொருள் = பகைவரிடம் பெறும் திறையும், வென்ற பகுதியும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உடையார் இன்மையால் வந்த செல்வமும், தீர்வை, சுங்கம், ஆயம், வரி முதலியவற்றால் வந்த செல்வமும், தனது பகைவரை வென்று பெறும் திறையும் வென்ற பகுதியும் வேந்தனது செல்வங்கள்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் வேறுவேறு நிலைகளைச்சுட்டும் எண்ணும்மைகள் பொருள் மயங்குமாறு புணரா. உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த்தெறுபொருள் ஆகியன வேறுவேறு வழிகள் வந்த செல்வங்களாதலால் புணரா.
செம்மைவடிவம் —
“உறுபொருளும் உல்கு பொருளும்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.”
குறள் – ௭௱௫௰௭ (அச்சில் உள்ளவாறு).
“அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.”
அருள் = உயிரிரக்கம்.
ஈனும் = பெற்ற.
குழவி = மகவு.
செவிலி = வளர்ப்புத்தாய்.
உண்டு = வாழும் (இடப்பொருள்).
“அன்பு ஈன் அருளென்னும் குழவி பொருளென்னும் செல்வச்செவிலியால் உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அன்பு பெற்ற உயிரிரக்கமென்னும் குழவி செல்வமென்னும் வளர்ப்புத்தாயால் வாழும்” என்பதாம்.
‘அருளென்னும்’ என்பதன்கண் வந்த ‘என்னும்’ என்ற சுட்டிடைச்சொல் ‘அருள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அன்பீன்’ என்னும் புணர்மொழியில் ‘அன்பு’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘பொருளென்னும்’ என்பதன்கண் வந்த ‘என்னும்’ என்ற சுட்டிடைச்சொல் ‘பொருள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘செவிலியால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘செவிலி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அருளென்னும் அன்பு*ஈன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.”
*குற்றியலுகரமாகிய புகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௫௰௮ (அச்சில் உள்ளவாறு).
“குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.”
தன்கைத்து ஒன்று உண்டாக = தனது கையில் செல்வம் இருக்க.
வினை = செயல்.
ஆல் = அசைச்சொல்.
“தன்கைத்து ஒன்று உண்டாக செய்வான் வினை குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தனது கைப்பொருள்கொண்டு செய்யும் வினை குன்றில் ஏறிநின்று தரையில் நடக்கும் யானைப்போரை அச்சமின்றியும் தெளிவாகவும் காண்பதை ஒத்தது; செய்யும் வினை அச்சமும் வருத்தமும் இன்றி முடியும்” என்பதாம்.
‘கண்டற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தன்கைத்து’ என்பதன்கண் வந்த ‘கைத்து’ என்னுஞ்சொல் பெயராயும் ஏழாம்வேற்றுமைப்பொருண்மையும் பெற்ற சொல். ‘கையிலுள்ள’ என்பது இதன் தெளிந்த பொருள். ஏழாம்வேற்றுமைப்பொருள் வெளிப்பட்டதால் மறுபுணர்ச்சிபெறாது.
‘ஒன்றுண்டாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘உண்டு’ என்னும் வினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்து*ஒன்
றுண்டாக செய்வான் வினை.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௫௰௯ (அச்சில் உள்ளவாறு).
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.”
செறுநர் = பகைவர்.
செருக்கு = ஆணவம், வன்மை.
எஃகு = படைக்கலன் (கூரிய வாள்).
இல் = இல்லை.
“செறுநர்செருக்கறுக்கும் எஃகாம் பொருளைச்செய்க. அதனில் கூரியது இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. எஃகு+ஆம் → எஃகாம் என்பதன்கண் ‘ஆம்’ என்பது அவாய்நிலையான் வந்தது.
“பகைவரின் ஆணவத்தை அழிக்கும் படைக்கலனாம் செல்வத்தைத்தேடுக. அதனின் கூரிய படைக்கலன் இல்லை” என்பதாம்.
‘பொருளை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘செறுநர்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.
‘எஃகு’ என்பது பெயர்ப்பயனிலை. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘அறுக்குமெஃகு’ என்பது ‘அறுக்கும் எஃகு’ என்ற முன்பின் மாறிய வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அதனில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கூரியதில்’ என்பது பொருள்மயங்குப்புணர்ச்சி. இதன்கண் வந்த ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று புணர்ச்சியில் வேற்றுமைவுருபாகவும் மயங்கும்.
செம்மைவடிவம் —
“செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகு*அதனில் கூரியது* இல்.”
*குற்றியலுகரங்களாகிய குகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௭௱௬௰ (அச்சில் உள்ளவாறு).
“ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு.”
ஒண்பொருள் = நற்பொருள்.
காழ்ப்ப = நிரம்ப, மிக.
இயற்றியார்க்கு = சேர்த்தார்க்கு.
எண்பொருள் = எளிய பொருள் (எளிதாக கிட்டும் பொருள்).
ஏனையிரண்டும் = அறம், இன்பம் என்னும் இரண்டும்.
ஒருங்கு = சேர்ந்து.
“ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு ஏனையிரண்டும் ஒருங்கு எண்பொருள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நற்பொருளை நிரம்ப ஈட்டினார்க்கு அறம், இன்பம் என்ற ஏனையிரண்டும் எளிதாக கிட்டும் பொருள்கள்” என்பதாம்.
‘காழ்ப்பவியற்றியார்க்கு’ என்பது ‘காழ்ப்ப இயற்றியார்க்கு’ என்னும் பெயரெச்சத்தொடராகும். இத்தொடரில் ‘இயற்றியார்’ என்பது வினையாலணையும்பெயர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘இயற்றியார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘எண்பொருள்’ என்னும் வினையைச்சாராது பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் மட்டுமே புணரும்.
‘எண்பொருள்’ என்பது இயல்புப்பொருள்தருஞ்சொல். இயல்புப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘இரண்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு* எண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




