
குறள் – ௨௬௧. (அச்சில் உள்ளவாறு.)
“உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.”
நோய் = இடர், துன்பம்.
நோன்றல் = பொறுத்தல்.
உறுகண் = துன்பம்.
உரு = வடிவு.
அற்றே = அவ்வளவிற்றே.
‘நோன்றல்’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. கருத்துமுடியுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘செய்யாமை’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. கருத்துமுடியுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘உயிர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘உரு’ என்னும் வினைவேண்டாப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன் புணருமேயன்றி வினைவேண்டாப்பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு* உரு.”
* குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௨௬௨. (அச்சில் உள்ளவாறு.)
“தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது.”
தவம் = பற்றின்மை.
அவம் = பயனின்மை, வீண்.
இலார் = இல்லார்.
‘தவமும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைபெற்ற சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அதனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அஃது’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை பெயருடன் புணராது.
‘தவமும் தவமுடையார்க்கு ஆகும். அஃதிலார் அதனை மேற்கொள்வது அவம்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.”
குறள் – ௨௬௩. (அச்சில் உள்ளவாறு.)
“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்”
துப்புரவு= உண்டி, மருந்து, உறையுள் முதலான.
வேண்டி = உதவ விரும்பி.
கொல் = அசைச்சொல்.
‘துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மற்றையவர்கள் தவம்மறந்தார்கொல்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
நான்காம்வேற்றுமைவுருபேற்ற ‘துறந்தார்க்கு’ என்னுஞ்சொல் ‘துப்புரவு’ என்னும் வினைவேண்டாப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன் புணருமேயன்றி வினைவேண்டாப்பெயருடன் புணராது.
‘கொல்’ என்னும் அசைச்சொல் ‘மறந்தார்’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தவம்’ என்னும் ஈற்றுச்சொல் வேறோரிடஞ்சென்று ‘மறந்தார்’ என்னுஞ்சொல்லுடன் பொருந்தி ’தவம்மறந்தார்’ (தவத்தினை மறந்தார்) என்றவாறு பொருள்தரும். தழுவுஞ்சொற்களே புணரும். ‘மற்றையவர்கள்’ என்பது எழுவாய். இது ‘தவம்’ என்னும் பெயருடன் புணர்ந்தால் பொருள்மயங்கும்.
செம்மைவடிவம் —
“துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்”
குறள் – ௨௬௧௪. (அச்சில் உள்ளவாறு.)
“ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்.”
ஒன்னார் = அல்லோர், பொருந்தாதார்.
தெறல் = அழித்தல்.
உவந்தார் = நல்லோர், பொருத்தியோர்.
ஆக்கல்= உயர்த்தல்.
‘ஒன்னார்தெறல்’ என்பது ‘ஒன்னாரைத்தெறல்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது.
‘தெறலும்’ என்பது ஒன்னாரைத்தழுவுஞ்சொல். அச்சொல் உவந்தாருடன் புணராது. மேலும் இவ்விடத்து கருத்துமாற்றம் நிகழ்கின்றது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘ஆக்கலும்’ என்பது உவந்தாரைத்தழுவுஞ்சொல். அச்சொல் ‘எண்ணின்’ என்னும் வினையெச்சத்துடன் புணராது.
‘எண்ணின்’ என்னும் வினையெச்சம் ’தவம்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க
செம்மைவடிவம் —
“ஒன்னார் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.”
குறள் – ௨௬௫. (அச்சில் உள்ளவாறு.)
“தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.”
கருமம் = கடமை. செய்யவேண்டிய செயல்கள்.
அவம் = செய்யத்தகாச்செயல்கள்.
மற்றல்லார் = தவஞ்செய்யாதார்.
‘தங்கருமஞ்செய்வார் தவஞ்செய்வார். மற்றல்லார் ஆசையுட்பட்டு அவஞ்செய்வார்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘மற்றல்லார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘செய்வார்‘ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.”
குறள் – ௨௬௭. (அச்சில் உள்ளவாறு.)
“சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.“
‘சுடரும்’ என்பது பெயரெச்சம். ‘பொன்’ என்னும் பெயரை முடிக்குஞ்சொல்லாக ஏற்கும். ‘சுடரும்’ என்பதனை ‘சுட’ என்னும் வினையெச்சத்துடன் புணர்த்தினால் வினைமுற்றாகி ‘பொன்’ என்பதனுடன் தொடர்புகொள்ளாது.
‘விடும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘துன்பம்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘சுட சுட’ என்பது வினையெச்ச அடுக்குத்தொடர். அடுக்குத்தொடர் புணராது இயல்பாகும்.
‘துன்பம் வருத்த, வருத்த பொறுத்துக்கொள்வார் சுட சுடரும் பொன்போல் ஒளிர்வர்’ என்பதாம்.
‘துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு சுட சுடரும் பொன்போல் ஒளிவிடும்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“சுடசுடரும் பொன்போ லொளிவிடும் துன்பம்
சுடசுட நோற்கிற் பவர்க்கு.“
குறள் – ௨௬௮. (அச்சில் உள்ளவாறு.)
“தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.”
அற = நீங்க.
“தன்னுயிர் தான் என்ற பற்றுகள் நீங்க பெற்றானை மன்னுயிரெல்லாம் தொழும்“ என்பதாம். தான் வாழ்வது பல்லுயிர் ஒம்புதலுக்கு என்பதாம்.
‘அற’ என்னும் வினையெச்சம் ‘பெற்றானை’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பெற்றானை’ என்னுமிடத்தில் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா. ‘பெற்றானை’ என்பது இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற வினையாலணையும்பெயர்.
செம்மைவடிவம் —
“தன்னுயிர் தானற பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.”
குறள் – ௨௬௯. (அச்சில் உள்ளவாறு.)
“கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு.”
கூற்றம் = எமன்.
குதித்தலும் = வெல்லுதலும்.
நோற்றலின் = தவத்தின்.
தலை = உயர்நிலை.
‘நோற்றலினாற்றல் உயர்நிலையடைவர்க்கு கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
‘குதித்தலும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘கூடும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நோற்றலினாற்றல்’ என்பது ஒருபொருள்தரும் புணர்மொழி. இது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலி
னாற்றல் தலைப்பட் டவர்க்கு.”
குறள் – ௨௭௦. (அச்சில் உள்ளவாறு.)
“இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.”
இலர் = பொருளற்றவர்.
நோலாதவர் = தவம்செய்யாதவர்.
‘இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் நோலாதவர் பலர்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘பொருளற்றவர் பலராகிய காரணம் தவஞ்செய்வார் சிலர்; தவஞ்செய்யாதவர் பலர்’ என்பதாம்.
இக்குறளின் செம்மைவடிவம் இதுவே.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!




