
புணர்ச்சியும் தொடரொலிப்பும்.
புணர்மொழிகளை பிளவுபடாத ஒருசொன்னீர்மையில் தொடர்ந்தொலிக்கவேண்டும். மறுதலையாக சொன்னால் தொடர்ந்தொலித்தல் (விட்டிசையாமை) புணர்ச்சியின் உடனாயவிளைவு.
உடல்மேல் உயிரொன்றுதல், உடம்படுமெய்ப்புணர்ச்சி, உயிர்வர உக்குறள் நீங்குதல், இனமெல்லினமாதல் ஆகியன தொடரொலிப்பின் பொருட்டு நிகழும். இவ்வகைப்புணர்ச்சிகளில் புதிய பொருள் தோன்றா. இது பொருள்திரியாப்புணர்ச்சி எனப்படும். இத்தொடரொலிப்புப்புணர்ச்சி சொல்வோனது உள்ளத்திற்கியைய பிரிந்தும் நிற்கலாம். அவ்வாறு பிரிந்து நிற்பது விட்டிசை எனப்படும். விட்டிசையும் இலக்கணமே; இலக்கணமீறலன்று.
மேற்கூறிய நால்வகைப்புணர்ச்சியும் புணர்ந்தே வருமென இலக்கணம் வரையறுக்கவில்லை (not mandatory).
சொல்வதானால் எவ்விரு சொற்கள் புணருமென இலக்கணம் வரையறுக்கவில்லை. அது இயலாதது. இரு சொற்கள் புணர்ந்தால் எவ்வாறு புணரும் என்பதை இலக்கணம் வரையறுக்கின்றது.
புணருஞ்சொற்கள் இடைவெளியில்லாத ஒருசொன்னடைய எனவும் அவை அவ்வாறே பொருளுணரும் எனவும் பிரித்தால் புணர்ச்சி நீங்கி புதிய பொருள் நீங்குமெனவும் இலக்கணம் வரையறுக்கிறது. இவ்வரையறைகளை இலக்கணவாசிரியர்கள் தாமாக கற்பிக்கவில்லை. மொழியின் இயல்பில் வேரூன்றிய மரபினை எடுத்துரைத்தனர்.
சொற்புணர்ச்சி ஏன், எதற்காக.
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்லென சொற்கள் நால்வகைப்படும். இவற்றுள் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் தனித்துநின்று பொருள்தரும். பொருள்தருமென்பது முற்றுப்பொருளைத்தருவது. ‘மரம்’ எனும்போது நாம் ஒருபொருளை அறிகிறோம். அப்பொருளை உணர அச்சொல்லன்றி வேறுசொல் வேண்டியதில்லை. ‘வா’ எனும்போது ஒரு வினையை அறிகிறோம். அவ்வினையை உணர அச்சொல்லன்றி வேறுசொல் வேண்டியதில்லை. இந்நிலையே தனித்துநின்று பொருள்தருவதும், முற்றுப்பொருள்தருவதும் ஆகும்.
இடைச்சொற்கும் உரிச்சொற்கும் இந்நிலை இல்லை. அவை தனித்துநின்று பொருள் தராது பெயரையோ வினையையோ இடனாக கொண்டு அவற்றோடு புணர்ந்து அவற்றின் பொருளை விரிக்கும். ‘ஓடு’ எனும் சொல் தனித்து நிற்கும்போது மேற்கூரையில் வேயப்படும் ஒரு பொருளாகவோ, விரைந்து செல்லுதலைக்குறிக்கும் வினையாகவோ பொருள்படும். ‘அவற்றோடு’ எனும்போது மேற்கூறிய பொருளின் நீங்கி ‘உடன்’ எனும் சார்புப்பொருளைப்பெறுகிறது. இச்சார்புப்பொருள் தனித்து நின்றால் முற்றுப்பொருளைத்தராது. ‘உடன்’ எனும்போது ‘எதனுடன்’ எனும் வினா எழும். அவ்வினாவின் விடையைச்சார்ந்தே ‘உடன்’ என்பது பொருள்தரும். ‘மா’ எனும்போது மாம்பழம் எனும் ஒருவகை பழத்தைச்சுட்டும். ‘மா’ என்பது ‘பெரிய’ எனும் பொருள்தரும் உரிச்சொல்லாயினும் தனித்து நின்றால் முற்றுப்பொருள்தராது. எது பெரிது எனும் வினா எழும். அவ்வினாவின் விடையைச்சார்ந்தே ‘பெரிய’ என்பது பொருள்தரும். எடுத்துக்காட்டாக ‘மாநகர்’ என்பதில் ‘மா’ எனும் உரிச்சொல் நகர் எனும் பெயருடன் சேர்ந்து நகர் என்பதன் பொருளைச்சிறப்பிக்கிறது. எனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும் புணர்ச்சியால் பொருள்தரும் என்பதையும், அவ்வாறன்றி பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் புணர்ச்சியின்றியே பொருள்தருமென்பதும் விளங்கும்.
புணராமல் தனித்துநின்று பெயரும் வினையும் தரும் முற்றுப்பொருளை இயல்புப்பொருள் என்போம். இயல்புப்பொருள்தரும் ஒருசொல்லைக்கொண்டு நாம் கருதும் புதிய பொருளை வெளிப்படுத்த இயல்புப்பொருள் வேறுபடும்; அத்துடன் நாம் கருதிய பொருளை வெளிப்படுத்தும் உருபுகளையோ சொற்களையோ சேர்க்கவேண்டும். இதனையே நாம் புணர்ச்சி என்கிறோம். புணர்ச்சி நிகழ்வதும் இதன் பொருட்டே. ‘முருகன் மரத்தை நட்டான்’ என்பதில் ‘மரம்’ தனது இயல்புப்பொருளினும் மேம்பட்ட ஒரு பொருளைப்பெற்றது. இடைச்சொற்களாம் வேற்றுமைவுருபுகளின் சேர்க்கையாலும், அத்துடன் இயல்புப்பொருள்தரும் சொற்களின் கூட்டினாலும் பெயர்ச்சொற்கள் மேம்பட்ட/ வேறுபட்ட பொருளைப்பெறும். ‘நாட்டுப்புறப்பாடல்’ என்பதில் ‘பாடல்’ எனும் இயல்புப்பொருள்தரும் வருமொழி இடைச்சொல், பெயரெச்சம் முதலானவற்றை ஏற்று ‘நாட்டுப்புறத்தில் பாடப்படும் பாடல்’ என விரிந்தது.
இயல்புப்பொருள்தரும் வினைச்சொற்கள் ஈறு திரிதலாலும், விகுதிகளைப்பெறுதலாலும் இயல்புப்பொருள்தரும் சொற்களின் கூட்டினாலும் மேம்பட்ட/ வேறுபட்ட பொருளைப்பெறும். ‘முருகன் ஓடி வந்தான்’ என்பதில் ‘ஓடு’ எனும் இயல்புப்பொருள்தரும் ஏவல்வினையின் உகரயீறு நீங்கி, இகர வினையெச்சவிகுதி சேர்ந்து வினையெச்சமாகி முற்றுப்பொருளை இழந்து வினையெச்சமானது. ‘கூவும் குயில்’ என்பதில் ‘கூவு’ எனும் வினைப்பகுதியுடன் ‘உம்’ எனும் பெயரெச்சவிகுதி சேர்ந்து ‘கூவும்’ எனும் பெயரெச்சமாகி ‘குயில்’ எனும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லை முடிக்குஞ்சொல்லாக கொண்டு பொருள் முடிவினைப்பெற்றது.
இதுவரை கூறியவற்றால் இயல்புப்பொருள்தரும் சொற்கள் எதனுடனும் புணராயென்பதும், பெயருடனும் வினையுடனும் புணர்ந்து அவற்றின் பொருளை வேறுபடுத்திய இடைச்சொற்களும் உரிச்சொற்களும் மீளவும் புணராயென்பதும் விளங்கும்.
புணர்ச்சி இத்துணையோ எனின் அன்று. ‘விடாதிசைத்தல்’ எனும் தொடரொலிப்பு புணர்ச்சியின் உடனாய விளைவு. ஒலிப்பும் புணர்ச்சிக்கு ஒரு பொருட்டாகும்.
௧. உடல்மேல் உயிரேறுதல்
ஒலிப்பின்பொருட்டும் நிகழும். எடுத்துக்காட்டாக ‘நான் அவனில்லை’ எனுந்தொடர். இது முறைவிலக்கில்லா முறையன்று. எடுத்துக்காட்டாக ‘முருகன் அடிமை’ என்பதும் ‘முருகனடிமை’ என்பதும் ஒரே பொருளைத்தராது. ‘அவனில்லை’ என்பதில் மயக்கத்திற்கு வாய்ப்பில்லை. ‘முருகனடிமை’ என்பதில் பொருள் மயங்குகிறது. எனவே பொருள் மயங்குமாயின் உடல்மேலும் உயிரேறக்கூடாது.
௨. உடம்படுமெய்ப்புணர்ச்சி என்பது
ஒலிப்புக்கான புணர்ச்சிகளுள் ஒன்று. ‘மழையில்லை’ என்பதில் யகரவுடம்படுமெய் வந்து தொடரொலிப்பு நிகழ்கிறது. ஒரு புணர்மொழியில் முதன்மை பெறுவது நிலைமொழியே. இங்கு ‘இல்லை’ எனும் வினைமுற்றினும் ‘மழை’ எனும் பெயரே சிறக்கிறது. ஒரு மொழியில் வினைமுற்றே தலையாயது. வினைமுற்று தனித்துநின்று ஒரு தொடரின் (வாக்கியத்தின்) பொருளைத்தரும். ‘மழை இல்லை’ எனப்பிரிந்துநிற்குங்கால் இரண்டுமே சொல்லளவில் ஒத்த மதிப்பைப்பெற்றாலும் மொழியின் இயற்கையால் வினைமுற்று சிறப்புற்று மேலெழுகிறது. சொல்வோன் ‘இல்லை’ என்பதனை வற்புறுத்துகிறானென்பதும் மழையென்பது அவனுக்கு துணைநிலைக்குரியதெனும் கருத்தினை கேட்போன் பெறுகிறான். சொற்கள் தனித்துநிற்பதும் இடம்மாறி நிற்பதும் காரணம்கருதியே. ‘கற்க கசடற’ என்பதும் ‘கசடறக்கற்க’ என்பதும் பொருளளவில் வேறுபடாதது. எனினும் முன்னது உணர்ச்சித்தொடர்; பின்னது செய்தித்தொடர். இவ்வாறாக ஒலிப்புப்புணர்ச்சியாம் உடம்படுமெய்ப்புணர்ச்சியும் கருத்துணர்வு கருதி சேர்ந்தும் பிரிந்தும் நிற்கும்.
௩. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடுவதும் ஒலிப்புப்புணர்ச்சிக்கானதே. இதுவும் நிகழ்ந்தேயாகவேண்டுமென்பதில்லை. சொல்வோனது கருத்திற்கியைய விட்டிசைத்து பிரிந்தும் நிற்கலாம். மொழி நெகிழும். புணர்ந்தால் எவ்வாறு புணருமென இலக்கணம் வரையறுகின்றது. இன்னின்ன சொற்கள் புணர்ந்தேயாகவேண்டுமென முறைப்படுத்தப்படவில்லை.
தொடரொலிப்புக்கான மேற்கூறிய மூன்று புணர்ச்சிகளிலும் பொருள் மயக்கத்தைத்தவிர்க்கவும், உணர்ச்சியை வெளிப்படுத்தவும் புணராமல் பிரிந்து நிற்பது ‘விட்டிசை’ எனும் இலக்கணமாகும். ஒருசாரார் கருதுவதுபோல் விட்டிசைத்தல் புணர்ச்சியைத்தவிர்க்கும் உத்தியன்று; பொருளுணர்ச்சியை மேம்படுத்தும் இலக்கணம்.
இடைவெளி நீக்கத்தாலும் புணர்ச்சி நிகழும். ‘வெற்றிலைபாக்கு’ என்பது ‘வெற்றிலையும் பாக்கும்’ எனவிரியும் உம்மைத்தொகையாம். ‘வெற்றிலை பாக்கு’ எனப்பிரிந்துநின்றால் உம்மைத்தொகை ஆகாது. சொற்கிடையே இருக்கும் இடைவெளியைக்கடந்து புணர்ச்சி நீளாது. இதன்பொருட்டே புணர்மொழிகளையும் தொகைச்சொற்களையும் ஒருசொல்தன்மையில் இடைவெளியின்றி எழுதவேண்டும்; இடைவெளியுடன் எழுதக்கூடாது. செய்யுளில்மட்டுமே இடைவெளியைக்கடந்தும் பொருள் தொடர்புறும். அந்நிலையில் அவைகள் ‘சொல்’ எனும் இலக்கணத்தில் அடங்காது ‘சீர்’ எனும் பெயர்பெறும். இவ்வேறுபாட்டை நாம் மறக்கலாகாது.
ஒரு புதிய பொருளைத்தர சொற்கள் புணர்ந்தபின் அப்புணர்மொழி பிரியாது புணர்ந்தநிலையிலேயே பொருள்தரும். இது செய்யுளுக்கும் பொருந்தும். புணர்மொழியிலிருந்து ஒரு பகுதியைப்பிரித்து வேறோர் இடத்து வைத்து கொண்டுகூட்டினால் புணர்ச்சி நீங்கும். நீங்கும் புணர்ச்சியைச்செய்வானேன்.
தமிழில் பேச்சு, உரைநடை, செய்யுள் முதலான அனைத்திற்கும் ஓரிலக்கணமே; வேறுவேறு இலக்கணநெறிகள் இல்லை. நன்னூலினும் தொல்காப்பியமே செவ்விய இலக்கணநூல். தொல்காப்பியத்துடன் நன்னூல் முரணுமிடங்களில் நன்னூலை கைவிடுக.
மேற்கூறிய அடிப்படைகளில் அச்சிடப்பட்ட திருக்குறளில் இலக்கண முரண்களை எடுத்தெழுதி வருகிறோம். நூற்றிருபது குறள்களுக்கு எழுதியுள்ளோம். மேற்சொல்லிய மரபுகளாலும் நெறிமுறைகளாலும் குறளில் எவ்விடத்தும் தளை தட்டவில்லை; யாப்பமைதி கெடவில்லை. இத்தொடரைப்படித்து வரும் அன்புக்குரியோர் இக்கட்டுரையின் கருத்துகளை உள்வாங்க வேண்டுகிறோம்.
பெயர் வினை புணர்ச்சியும், இடைவெளிநீங்கும் புணர்ச்சியும்.
இயல்புப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராதென்பதை முன்னர் விளக்கினோம்.
பெயரும் வினையும் புணர்வதைக்காண்போம்.
‘ஊறுகாய்’ என்பது வினைத்தொகை. வினைத்தொகையை ‘காலம் கரந்த பெயரெச்சம்’ என்பர். இதில் ‘காய்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். ‘ஊறு’ என்பது பகுதி. பகுதி காலயிடைநிலைபெறாது. காலயிடைபெறாத எதுவும் வினைச்சொல்லாகாது. வினையென்பது முக்காலங்களுள் ஒன்றனில் அமையும்.
’ஊறு’ எனும் பகுதி ஏவல்வினையாக பெரும்பான்மை வரும். எனினும் அவ்வாறேதானென அறுதியிட முடியாது. ஏனெனில் ‘ஊறு’ என்பது ‘துன்பம்’ எனும் பெயராகவும் பொருள்படும்.
வினைப்பகுதி தன்னளவில் முற்றுப்பொருளைப்பெறாது. தனது முற்றுப்பொருளைப்பெற வேறுசொல்லை அவாவி நிற்கிறது. இயல்புப்பொருள்தரும் ‘காய்’ எனும் பெயர்ச்சொல் ஏன் புணர்ந்தது. ‘ஊறு’ எனும் முற்றுப்பொருள்தராத ஏவல்வினையின் முடிக்குஞ்சொல்லாக ‘காய்’ எனும் பெயர்ச்சொல் வந்தது. அவ்வாறானால் இடைவெளிநீக்கம் ஏன் நிகழ்ந்தது; ஒருசொல்தன்மையை ஏன் பெற்றது. ஏவல்வினைப்பகுதிக்கும் பெயருக்கும் இடையே காலயிடைநிலை மறைந்துள்ளது. இதனை இடைவெளிநீக்கம் உணர்த்துகிறது. தொகைச்சொற்களில் உருபுகளோ, சொற்களோ இவ்விரண்டுமோ மறைந்து நிற்கும். இதனால்தான் ‘தொகைச்சொற்கள் ஒருசொன்னடைய’ என இலக்கணம் வரையறுத்தது. ஒரு பொருளில் அகக்காரணங்களாலோ புறக்காரணங்களாலோ வினை நிகழும். வினைக்கு இடனாய் இருப்பது பொருள்; பொருளில்தான் வினை நிகழ்ந்தாக வேண்டும். காயில் நிகழும் ஒரு வினையை ஊறு எனும் ஏவல்வினை/வினைப்பகுதி காட்டுகிறது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் ஏவல்வினைக்கு முடிக்குஞ்சொல்லாய் நின்றது. காலயிடைநிலை மறைந்துநின்றதால் அதனை வெளிப்படுத்த இடைவெளிநீக்கம் நிகழ்ந்து அதன் உடனாய விளைவாக ஒருசொன்னீர்மைபெற்றது.
ஏவல்வினைகள் காலயிடைநிலைபெற்றால் முற்றுப்பொருள்தரும் இயல்புப்பெயர்ச்சொற்கள் புணராயென்பதை பெயரெச்சத்தில் காணலாம். ‘ஓடும் குதிரை’ எனும் பெயரெச்சத்தில் ‘ஓடும்’ என்பதில் ‘உம்’ எனும் எதிர்காலயிடைநிலை உள்ளது. எனவே இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லான ‘குதிரை’ முடிக்குஞ்சொல்லாக/ பொருள்முற்றுவிக்குஞ்சொல்லாக வந்தும் புணராது பிரிந்து நின்றது. முடிக்குஞ்சொல் என்பது வேறு; புணர்மொழி என்பது வேறு. எனவே பெயரெச்சங்கள் புணரா.
முடிக்குஞ்சொல்லென்பது புணராது இடைவெளிபெற்று அடுத்து நின்று பொருள்முடிவுதரும். நிலைமொழியீறு வருமொழிமுதல் அல்லது இரண்டும் இயல்பாகியோ விகாரப்பட்டோ ஒற்றுபெற்றும் தன்னினமெய்பெற்றும் இடைவெளியின்றி ஒருசொன்னீர்மையில் வருவது புணர்மொழியாம்.
‘ஓடாக்குதிரை’ எனும் ஈறுகெட்டயெதிர்மறைப்பெரெச்சத்தில் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லான ‘குதிரை’ புணர்ந்தது எவ்வாறு. ஓடா என்பதில் காலயிடைநிலை இல்லை. நிகழாச்செயலுக்கு காலம் இல்லை. காலங்காட்டாத ‘ஓடா’ எனும் எதிர்மறைவினைமுற்று ஒரு வினையை அறிவித்தாலும் முற்றுப்பொருளைத்தரவில்லை. எவை/எது ஓடா எனும் வினா எழுகிறது. இவ்வினாவின் விடையே எதிர்மறை எச்சவினையின் பொருளை முற்றுவிக்கிறது. இந்த எச்சவினையில் காலயிடைநிலை இல்லாததால் வினைச்சொல்போல் தனித்துநின்று முற்றுப்பொருளைத்தரவில்லை. ஈறுகெட்டயெதிர்மறைப்பெயரெச்சத்திலும் காலயிடைநிலை இல்லாததால் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணர்ந்தது.
இவ்விளக்கங்களால் காலயிடைநிலைபெற்ற வினைச்சொல்லுடன் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் ஒருகாலும் புணராதென்பது விளங்கும்.
உருபுகளோ சொற்களோ மறைந்து வராத நிலையிலும் இடைவெளி நீக்கம் புதிய பொருள்தரும் புணர்ச்சியை நிகழ்த்தும். எடுத்துக்காட்டாக ‘வருவது தானே வரும்’ என்பதும் ‘வருவதுதானே வரும்’ என்பதும் வேறுவேறு பொருள்தரும். முன்னதில் ‘தான்’ என்பது மறுபெயர்ச்சொல்லாகவும், பின்னதில் ‘தான்’ என்பது இடைச்சொல்லாகவும் பொருள் தருகிறது. எனவே இடைவெளிநீக்கம் என்பது தொகையாற்றலைத்தருவது மட்டுமன்றி பொருள்திரிபுணர்ச்சிக்கும் பொருட்டாகும்.
புணர்ச்சியால் நாம் கருதும் கருத்து கருத்து வெளிப்படாது மயங்குவது மயங்குபுணர்ச்சி எனப்படும். உரைநடைகளில் மயங்குபுணர்ச்சியை முற்றிலும் தவிர்க்க மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறிவுறுத்துகின்றார்.
செய்யுள் உட்பட நிலைமொழியீறு வருமொழிமுதல் எனும் இடனடிப்படையில் நாம் புணர்த்துகிறோம். இதனால் பொருள் மயங்குவது மட்டுமல்லாமல் புணர்ச்சி சிக்கலாகிறது. இதனை நீக்கி ஒன்றையொன்று அவாவிநிற்கும் சொற்களைப்புணர்த்துவோமாயின் பொருள் மயங்காது; செவ்விய புணர்ச்சி உருவாகும்.
புணர்ச்சியும் தொடரொலிப்பும்.
புணர்மொழிகளை பிளவுபடாத ஒருசொன்னீர்மையில் தொடர்ந்தொலிக்கவேண்டும். மறுதலையாக சொன்னால் தொடர்ந்தொலித்தல் (விட்டிசையாமை) புணர்ச்சியின் உடனாயவிளைவு.
உடல்மேல் உயிரொன்றுதல், உடம்படுமெய்ப்புணர்ச்சி, உயிர்வர உக்குறள் நீங்குதல், இனமெல்லினமாதல் ஆகியன தொடரொலிப்பின் பொருட்டு நிகழும். இவ்வகைப்புணர்ச்சிகளில் புதிய பொருள் தோன்றா. இது பொருள்திரியாப்புணர்ச்சி எனப்படும். இத்தொடரொலிப்புப்புணர்ச்சி சொல்வோனது உள்ளத்திற்கியைய பிரிந்தும் நிற்கலாம். அவ்வாறு பிரிந்து நிற்பது விட்டிசை எனப்படும். விட்டிசையும் இலக்கணமே; இலக்கணமீறலன்று.
மேற்கூறிய நால்வகைப்புணர்ச்சியும் புணர்ந்தே வருமென இலக்கணம் வரையறுக்கவில்லை (not mandatory).
சொல்வதானால் எவ்விரு சொற்கள் புணருமென இலக்கணம் வரையறுக்கவில்லை. அது இயலாதது. இரு சொற்கள் புணர்ந்தால் எவ்வாறு புணரும் என்பதை இலக்கணம் வரையறுக்கின்றது.
புணருஞ்சொற்கள் இடைவெளியில்லாத ஒருசொன்னடைய எனவும் அவை அவ்வாறே பொருளுணரும் எனவும் பிரித்தால் புணர்ச்சி நீங்கி புதிய பொருள் நீங்குமெனவும் இலக்கணம் வரையறுக்கிறது. இவ்வரையறைகளை இலக்கணவாசிரியர்கள் தாமாக கற்பிக்கவில்லை. மொழியின் இயல்பில் வேரூன்றிய மரபினை எடுத்துரைத்தனர்.
இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்புணர்ச்சி.
முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராதெனக்கண்டோம். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் என்பதும் இதே பொருளைத்தரும். திரிபில்பெயர்சொல் என்பதும் இதே பொருளைத்தரும்.
பெயர் பெயருடன் புணர்ந்து புதிய பொருளைத்தரும். எடுத்துக்காட்டாக தாமரை+கண் → தாமரைக்கண். ‘தாமரைமலர்போன்ற கண்’ என்னும் ஒப்புப்பொருள்தந்து உவமைத்தொகை என்னும் இலக்கணத்தைப்பெற்றது. தாமரை+மலர் → தாமரைமலர். மலர்களுள் தாமரை என்னும் ஒருவகை மலரைக்குறித்து இருபெயரொட்டுப்பண்புத்தொகை என்னும் இலக்கணத்தைப்பெற்றது.
★ இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் பெயரெச்சத்துடன் புணரும் முறை.
செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்றும் பெயரெச்சவாய்பாடுகள். இவை முறையே இறந்த, நிகழ், எதிர்காலங்களுக்கு உரியன. செய்த, செய்கின்ற என்னும் இரண்டு வாய்பாட்டுப்பெயரெச்சங்களின் முடிக்குஞ்சொற்களாகும் பெயர்ச்சொற்கள் புணராது தனித்துநின்று விட்டிசைக்கும்.
• ‘பாடிப்பறந்த குயில்’ — செய்த என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம்.
• ‘பாடிப்பறக்கின்ற குயில்’ — செய்கின்ற என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம்.
செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம் புணர்ந்தும் வரும். • ‘பாடுங்குயில்’. இங்கே நிகழும் புணர்ச்சி தொடரொலிப்புக்கான முன்னின்றமெய் திரிதல். இங்கே நிகழ்ந்தது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லின் பொருளைத்திரிக்கவில்லை. இது பொருள்திரியாப்புணர்ச்சி.
★ எதிர்மறைப்பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
எடுத்துக்காட்டாக ‘ஓடாத பேருந்து’. ஓடு+ஆ+அ (ஆகாரம் எதிர்மறைவுருபு, அகரம் பெயரெச்சவிகுதி) → ஓட்+ஆ+த்+அ (உயிர்வர குற்றுகரம் நீங்கியது. தகரம் எழுத்துப்பேறு காலயிடைநிலையன்று) → ஓடாத. காலயிடைநிலைபெறாதசொல் எச்சம் என்னும் வரையறைக்குள் வராது. அகரம் பெயரெச்சவிகுதி என்பதால் இதனை பெயரெச்சம் என்னும் வரையறைக்குள் கொண்டுவருகிறோம். அகரம் என்னும் பெயரெச்சவிகுதியின்றியே எதிர்மறைப்பொருள்தரும். ‘ஓடாப்பேருந்து’. இதனை ஈறுகெட்டயெதிர்மறைப்பெயரெச்சம் என்பர். எதிர்மறைப்பெயரெச்சங்கள் காலவுருபின்றி பெயரடையாக செயல்படுகின்றன. ஈறுகெடாதயெதிர்மறைப்பெயரெச்சம் விட்டிசைப்பதால் புணராது பிரிந்துநிற்கின்றது. விட்டிசைக்குமிடங்கள் புணரா. விட்டிசையும் இலக்கணமே. ஈறுகெட்டயெதிர்மறைப்பெயரெச்சத்தில் தொடரொலிப்பின் காரணமாக பொருள்திரியாப்புணர்ச்சி நிகழ்கின்றது.
★ வினைத்தொகை.
‘ஊறுகாய்’ என்னும் வினைத்தொகையில் ‘ஊறு’ என்னும் வினைப்பகுதி காலயிடைநிலையின்றி ‘காய்’ என்னும் பொருளின்/பெயரின் முக்காலவினைத்தொடர்ச்சியைக்காட்டியது. இங்கும் ‘காய்’ என்னும் பெயர்ச்சொல் தனது இயல்புப்பொருளை இழக்கவில்லை.
இதுவரை கூறியவற்றால் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் ஒருகாலும் வினைச்சொல்லுடன் புணராதென அறியலாம்.
வினைமுற்று புணர்தலும் புணர்ச்சியை ஏற்றலும்.
வினைமுற்று முற்றுப்பொருளை இழக்கும்வகையை முன்னர் விளக்கினோம். வினைமுற்று எதனுடன் புணருமென்பதனைக்காண்போம்.
★ வினையெச்சத்துடன் வினைமுற்று புணரும். எ-டு.
• முருகன் கற்றறிந்தான். ‘கற்று’ என்னும் வினையெச்சத்துடன் ‘அறிந்தான்’ என்னும் வினைமுற்று புணர்ந்தது.
★ முற்றெச்சத்தையடுத்துவரும் வினைமுற்று புணராமல் தனித்துநின்று முடிக்குஞ்சொல்லாகி முற்றுப்பொருளைத்தரும். எ-டு.
• முருகன் வந்தான் சென்றான். ‘வந்தான்’ என்பது ‘வந்து’ என்னும் பொருளில் துணைவினையானால் அது முற்றெச்சமாகும். இத்தொடர் ‘முருகன் வந்துசென்றான்’ என்னும் பொருள்தரும்.
மேற்கூறிய இருநிலைகளும் வினைமுற்று வருமொழியாகி புணர்தல்.
★ வினைமுற்றுடன் இடைச்சொல்லினை ஏற்று தனது முற்றுப்பொருளை இழக்கும். எ-டு.
• ‘நான் வரவேண்டுமாயின் எனது வழிச்செலவினை தாங்கள் ஏற்கவேண்டும்’. இத்தொடரில் முதலில் வந்த ‘வேண்டும்’ என்னும் வினைமுற்று ‘ஆயின்’ என்னும் இடைச்சொல்லினை ஏற்று அதன் முற்றுப்பொருளை இழந்தது.
★ வினைமுற்று வேற்றுமைவுருபினையேற்று வினையாலணையும்பெயராகும்போது புணர்ச்சியை ஏற்கும். எ-டு.
• ‘முருகன் வந்தான். வந்தானைக்கண்டு மகிழ்ந்தனர்’. ‘வந்தானை’ என்பது வினையாலணையும்பெயர்.
மேற்கூறிய இருநிலைகளும் வினைமுற்று நிலைமொழியாகி புணர்ச்சியை ஏற்றல்.
தொடர்வோம்.




