இலக்கணம்தமிழ்

ஆறுமுகநாவலர் தமிழிலக்கணம்;எழுத்தியல்.

இரண்டாம்பகுதி

இரண்டாம்பகுதி

“தலைப்பு : எழுத்து”

௧. எழுத்தியல்.

எழுத்துக்களின் மாத்திரை

கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது மாத்திரை எனப்படும்.

௨௰. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று; நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.

மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந்தனித்தனி மாத்திரை அரை.

உயிர்மெய்க்குற்றெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.

௨௰௧. உயிரெழுத்துக்களுள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற்குறைவாக ஒலித்து நிற்கும். அவ்வுகரத்துக்குக்குற்றிய லுகரமென்றும், அவ் விகரத்துக்குக்குற்றிய லிகரமென்றும் பெயராம்.

௨௰௨. குற்றியலுகரமாவது, தனிக்குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப்பின்னே மொழிகளினிறுதியில் வல்லினமெய்களில் ஏறி நிற்கும் உகரமாம்.

அக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையினாலே, நெடிற்றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடக்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரமென ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், ஏனையவைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பலவெழுத்து மொழியாகியும் வரும்.

எடுத்துக்காட்டு:
நாகு, ஆடு… நெடிற்றொடர்க்குற்றியலுகரம்
எஃகு, கஃசு…ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்
வரகு, பலாசு …உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்
கொக்கு, கச்சு … வன்றொடர்க்குற்றியலுகரம்
சங்கு, வண்டு… மென்றொடர்க்குற்றியலுகரம்
அல்கு, எய்து…இடைத்தொடர்க்குற்றியலுகரம்

௨௰௩. தனிக்குற்றெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறிநிற்கும் உகரமும், மெல்லினமெய்களிலும் இடையின மெய்களிலும் ஏறிநிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.

எடுத்துக்காட்டு:
நகு, கொசு, கடு, அது; கணு, திரு, வழு; பூணு, வாரு; உருமு, கதவு; நெல்லு, கொள்ளு.

௨௰௪. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக்குற்றியலுகரம் திரிந்த இகரமாம்.

எடுத்துக்காட்டு:

நாகு +யாது =நாகியாது
எஃகு + யாது = எஃகியாது
வரகு + யாது = வரகியாது
கொக்கு + யாது = கொக்கியாது
நுங்கு+யாது = நுங்கியாது
அல்கு +யாது = அல்கியாது

அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேலேறி நிற்கும் இகரமும் குற்றியலிகரமாம்.

௨௰௫. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றெழுத்துக்களுள்ளும், சிற்சில தம்மாத்திரைகளைவிட மிகையாகவொலிக்கும். அவ்வுயிரெழுத்துக்கு உயிரளபெடை யென்றும், அவ்வொற்றெழுத்திற்கு ஒற்றளபெடை யென்றும் பெயராம்.

௨௰௬. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினும் கடையிலாயினும் தம்மாத்திரையிலிருந்து மிகையாகி ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். அளபெடுக்கின்ற நெட்டெழுத்துக்குப்பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.

எடுத்துக்காட்டு. ஆஅடை, ஈஇடு, ஊஉமை,ஏஎடு, ஐஇயம், ஓஒடு, ஔஉவை, பலாஅக; பலாஅ.

சிலவிடங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப்பின்னளபெடுக்கும்.

எடுத்துக்காட்டு: எழுதல் = எழூஉதல்,
வரும் = வரூஉம், குரி = குரீஇ.

௨௰௭. ஒற்றளபெடையாவன, மொழிக்கிடையிலாயினும் கடையிலாயினும் தம்மாத்திரையின் மிகையாகியொலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்துமெய்களும் ஆய்தமுமாம். அளபெடுக்கின்ற ஒற்றெழுத்துக்குப்பின் அவ்வொற்றெழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழும் குறிலிணைக்கீழும் வரும்.

எடுத்துக்காட்டு:

நுங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்ங்கலந்த.

௨௰௮. குற்றியலுகரத்துக்கும் குற்றியலிகரத்துக்கும் தனித்தனி மாத்திரை அரை; உயிரளபெடைக்கு மாத்திரை மூன்று; ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.

௨௰௯. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், பண்ணிலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச்சொல்லிய அளவைக்கடந்து நீண்டொலிக்கும்.

முதனிலை

௩௰. பன்னிரண்டுயிரெழுத்துகளும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.

எடுத்துக்காட்டு:
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.

கரி, சரி, தலை, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.

௩௰௧. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்.

எடுத்துக்காட்டு:

  •  களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டை, கோடை, கௌவை.
  • சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு.
  •  தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தையல், தொண்டு, தோடு, தௌவை.
  •  நஞ்சு, நாரி,நிலம்,நீறு,நுகம், நூல்,நெல்,நேர்மை, நைதல், நொய்து, நோய், நெளவி.
  •  பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பெளவம்.
  •  மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோவாய், மௌவல்.

௩௰௨. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.

எடுத்துக்காட்டு:
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வௌவால்.

௩௰௩. யகரமெய், அ. ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.

எடுத்துக்காட்டு: யவனர், யானை,

௩௰௪. ஞகரமெய், அ, ஆ,  எ, ஒ, என்னும் நான்குயிரொடு மொழிக்கு முதலாகி வரும்.

எடுத்துக்காட்டு: ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்

இறுதி நிலை

௩௰௫. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.

உ-ம். விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உறிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

எழுத்துக்களின் சாரியை

௩௰௬. உயிர்நெட்டெழுத்துக்கள் காரச்சாரியை பெற்றும்; அவைகளுள், ஐ ஒள இரண்டும் காரச்சாரியையேயன்றிக்கான்சாரியையும் பெறும்.

எடுத்துக்காட்டு. ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ரகாரம், ஐகாரம், ஓகாரம், ஒளகாரம், ஐகான், ஔகான்.

உயிர்க்குற்றெழுத்துகளும், உயிர்மெய்க்குற்றெழுத்துகளும், சுரம், காரம், கான் என்னும் மூன்று சாரியைகள் பெறும்.

எடுத்துக்காட்டு:
அகரம், அகாரம், அஃகான், சுகரம், சுகாரம், சுஃகான்.

மெய்யெழுத்துகள், அ என்னுஞ்சாரியையும், அதனோடு கரம், காரம், கான் என்னுஞ்சாரியைகளும் பெறும்.

எடுத்துக்காட்டு: சு, ங, ககரம், சுகாரம், சுஃகான், ஙகரம், ஙகாரம்,ஙஃகான்.

உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெற்றும், மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம்.

போலியெழுத்துக்கள்

௩௰௮. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும், அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஔகாரம் போன்றும் ஒலிக்கும்.

எடுத்துக்காட்டு: ஐயன் = அய்யன்; ஔவை = அவ்வை.

எழுத்தியல் முற்றிற்று.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button