
குறள் – ௭௱௧ (அச்சில் உள்ளவாறு).
“கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி.”
கூறாமை = சொல்லாமல்.
குறிப்பு = மனக்கருத்து.
எஞ்ஞான்றும் = எக்காலத்தும்.
மாறாநீர் = வற்றாத நீர்.
வையக்கு → வையகத்துக்கு.
அணி = அணிகலன்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வெளிப்பட கூறாமல் ஒருவரது மனக்கருத்துகளை அறியவல்லான் எக்காலத்தும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்திற்கு அணிகலன்” என்பதாம்.
‘நோக்கி’ என்னும் வினையெச்சம் ‘குறிப்பறிவான்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘அணி’ (அணிகலன்) என்னும் பெயர்ச்சொல் வையக்கு (வையகத்திற்கு) என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன் மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு* அணி.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௨ (அச்சில் உள்ளவாறு).
“ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்.”
அகத்தது = மனக்கருத்து.
ஒப்ப = ஒத்ததாக.
கொளல் = கொள்க, கருதுக.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவரது மனக்கருத்தினை ஐயத்திற்கு இடமின்றி உறுதியாக உணர்வானை தெய்வத்தோடு ஒத்ததாக கொள்க” என்பதாம்.
‘ஐயப்படாஅது’ என்னும் அளபெடையை விட்டிசைக்க கருத்து சிறக்கும். மேலும் ‘படாது’ என்னும் வினையெச்சம் ‘அகம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அகத்தது’ என்பதன்கண் வந்த ‘அது’ என்னும் ஆறாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘அகம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உணர்வானை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘தெய்வம்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘தெய்வத்தோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘தெய்வம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஐயப் படாஅது* அகத்தது*
உணர்வானை
தெய்வத்தோடு* ஒப்பக் கொளல்.”
*குற்றியலுகங்களாகிய துகரமும் டுகரமும் அலகுபெறா.
குறள் – ௭௱௩ (அச்சில் உள்ளவாறு).
“குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.”
குறிப்பு = குறி.
உறுப்பினுள் = (நாட்டின்) கூறுகளுள்.
யாது = எதனையும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவரிடத்து நிகழும் குறிப்புகளைக்கொண்டு அவர்தம் மனக்கருத்தினை உணர்வாரை நாட்டின் உறுப்புகளுள் எதனைக்கொடுத்தாவது கொள்க” என்பதாம். நாட்டின் உறுப்புகளாவன பின்வரும் பத்து — நாடு, ஊர், ஆறு, மலை, யானை, குதிரை, தேர், முரசு, மாலை, கொடி.
‘குறிப்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘குறிப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உணர்வாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘உறுப்பு’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.”
குறள் – ௭௱௪ (அச்சில் உள்ளவாறு).
“குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
யுறுப்போ ரனையரால் வேறு.”
குறித்தது = மனத்தில் கருதியது.
ஆல் → ஆதல் என்பதன் இடைக்குறை.
வேறு = பிறிது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவர் மனத்தில் கருதியதை அவர் வெளிப்படக்கூறாமலே அறிவாரோடு ஏனையோர் உறுப்புகளால் ஒருதன்மையராதல் வேறு; அறிவால் ஒருதன்மையர் ஆகார்” என்பதாம்.
‘கூறாமைகொள்வார்’ என்பது ‘கூறாமையைக்கொள்வார்’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது.
‘கொள்வாரோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கொள்வார்’ என்னும் வினையாலணையும்பெயரொடு புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உறுப்போர்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“குறித்தது கூறாமை கொள்வாரோடு* ஏனை
உறுப்போர் அனையரால் வேறு.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௫ (அச்சில் உள்ளவாறு).
“குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்.”
குறிப்பின் = குறிகளின்.
குறிப்பு = மனக்கருத்து.
உணராவாயின் = உணராவிடில். பயத்தவோ = பயனுடையதோ.
“குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“குறிகளின் கருத்தை உணராவிடில் உடலுறுப்புகளுள் கண் என்ன பயனுடைத்தோ; பயனில” என்பதாம்.
‘குறிப்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘குறிப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆயின்’ என்னும் வினையெச்சம் ‘உறுப்பு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘உறுப்பினுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘உறுப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.”
குறள் – ௭௱௬ (அச்சில் உள்ளவாறு).
“அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டும் முகம்.”
அடுத்தது = தன்னையடுத்துள்ள பொருள்.
நெஞ்சம் கடுத்தது = மனம் (வெளிப்படுத்த) நினைத்தது.
“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தன்னையடுத்துள்ள பொருள்களை உள்ளபடி காட்டும் பளிங்குபோல மனம் வெளிப்படுத்த நினைப்பதை முகம் காட்டும்” என்பதாம்.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘பளிங்கு’ என்னும் பெயரைப்புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நெஞ்சம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.”
குறள் – ௭௱௭ (அச்சில் உள்ளவாறு).
“முகத்தின் முதுகுறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.”
உவப்பினும் = மகிழினும்.
காயினும் = வெறுப்பினும்.
முதுகுறைந்தது = இளமையானது, செயல்விரைவு கொண்டது.
முந்துறும் = முன்னிற்கும்.
“உவப்பினும் காயினும் தான் முந்துறும் முகத்தின் முதுகுறைந்தது உண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மகிழினும் வெறுப்பினும் முந்தி அறிவிக்கும் முகத்தினும் விரைந்த செயல்பாடு கொண்டது உண்டோ” என்பதாம்.
‘உண்டோ’ என்னும் வினாச்சொல் எதனுடனும் புணராது தன்வினாப்பொருளைத்தெளிவுறுத்தும்.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘காயினும்’ என்பது புணராது தனித்துநிற்கும். மேலும் ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
செம்மைவடிவம் —
“முகத்தின் முதுகுறைந்த துண்டோ உவப்பினுங்
காயினும் தான்முந் துறும்.”
குறள் – ௭௱௮ (அச்சில் உள்ளவாறு).
“முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.”
அமையும் = நிறைவுறும்.
முகநோக்கி = முகத்தை நோக்கி.
அகநோக்கி = மனத்தை ஆராய்ந்து.
உற்றது = கருதியது.
“முகநோக்கி அகமுற்றதுணர்வார்பெறின் (அவர்தம்) முகநோக்கி நிற்க அமையும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘முகநோக்கி’ என்னும் சொற்றொடர் ஈரிடத்தும் சென்று பொருந்தும்.
“முகத்தை நோக்கி மனத்தில் கருதியதை உணர்வாரைப்பெறின் அன்னாரது முகம்காண நிற்க கருதியது நிறைவுறும்” என்பதாம்.
நிற்றலும் அமைதலும் வேறுவேறு வினைமுதலின் செயல்கள். வேறுவேறு வினைமுதலின் செயல்கள் புணரா.
வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்க புணரா. ‘நோக்கியுற்ற’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி.
‘உணர்வாரைப்பெறின்’ என்பதன் தொகை ‘உணர்வார்பெறின்’ என்பது. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது.
செம்மைவடிவம் —
“முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார் பெறின்.”
குறள் – ௭௱௯ (அச்சில் உள்ளவாறு).
“பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்.”
கேண்மை = நட்பு, உறவு.
வகைமை = நோக்கவேறுபாடு.
“கண்ணின்வகைமையுணர்வார்பெறின் பகைமையுங்கேண்மையும் கண்ணுரைக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கண்ணினது நோக்கவேறுபாட்டை உணர்வாரைப்பெறின் பகையா நட்பா என்பதனை அவர்தம் கண்களே உரைக்க அறியலாம்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. ‘கேண்மையும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது.
‘கண்ணுரைக்கும்’ என்பதன்கண் வந்த ‘உரைக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உணர்வாரைப்பெறின்’ என்பதன் தொகை ‘உணர்வார்பெறின்’ என்பது. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது.
செம்மைவடிவம் —
“பகைமையுங் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை யுணர்வார் பெறின்.”
குறள் – ௭௱௰ (அச்சில் உள்ளவாறு).
“நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற.”
நுண்ணியமென்பார் = நுட்பமென்பர்.
காணுங்கால் = ஆராயுங்கால்.
“அளக்குங்கோல் நுண்ணியமென்பார் காணுங்கால் கண்ணல்ல பிற இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அளக்குங்கோல் நுட்பமானதென்பார் ஆராயுங்கால் கண்களினும் பிற இல்லை. ஏனெனில் அளக்குங்கோல் பருப்பொருளை அளக்கும்; கண் காணா நுண்பொருளையும் அளக்கும்” என்பதாம்.
‘காணுங்கால்’ என்னும் வினையெச்சம் ‘கண்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘என்பார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அல்லது’ என்னும் இடைச்சொல் ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மை வடிவம் —
“நுண்ணிய மென்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது* இல்லை பிற.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




