
குறள் – ௪௱௬௧ (அச்சில் உள்ளவாறு).
“அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்.”
அழிவது = செலவு.
ஆவது = வரவு.
ஊதியம் = பயன்.
சூழ்ந்து = ஆய்ந்து, சீர்தூக்கி.
“ஒரு செயலைச்செய்யுமுன் அச்செயலுக்கு செலவழியும் கைப்பொருளையும், செயல் முடிந்தால் நாம் பெறும் வரவையும் அச்செயல் பயக்கும் பயனையும் சீர்தூக்கி ஆய்ந்து செய்க” என்பதாம்.
ஆவதும் அழிவதும் என்பன எதிர்மறைகள். இவ்வெதிர்மறைகள் விளங்க விட்டிசைக்கவேண்டும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘பயக்குமூதியம்’ என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் இயல்புப்பொருள்தரும் பெயர் புணராது. மேலும் ‘பயக்கும்’ என்பதன் மவ்வீறு கெடவில்லை. மகரத்தை ஒலிக்க அடுத்து ஊகாரமே ஒலிக்கும்; மூகாரமன்று. இவ்விடத்து உடல்மேல் உயிரேறும் புணர்ச்சி மயக்கந்தரும். மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அழிவதூஉம் ஆவதூஉ மாகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.”
குறள் – ௪௱௬௨ (அச்சில் உள்ளவாறு).
“தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.”
தெரிந்த = தேர்ந்த, அறிந்த.
அரும்பொருள் = பெருஞ்செயல்.
“தாம் தேர்ந்துகொண்ட இனத்தொடு செய்யத்தகும்வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணி செய்துமுடிக்க வல்லார்க்கு எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை” என்பதாம்.
‘தெரிந்த இனம்’ என்பது ‘ஆராய்ந்த இனம்’ என்றும் ஆகும்.
‘தெரிந்த இனம்’ என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் இயல்புப்பொருள்தரும்பெயர் புணராது. ‘தெரிந்தவினம்’ என்பதை ‘தெரிந்த இனம்’ எனப்பொருளுணர்வதானால் புணர்ச்சி வேண்டா.
‘எண்ணி’ என்னும் வினையெச்சம் ‘செய்வார்க்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘செய்வார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அரும்பொருள்’ என்னும் இயல்புப்பொருள்தரும் வினசாராப்பெயருடன் புணராது.
‘யாதொன்றும்’ என்னும் முற்றும்மைச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணி செய்வார்க்கு*
அரும்பொருள் யாதொன்றும் இல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௬௩ (அச்சில் உள்ளவாறு).
“ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்.”
ஆக்கம் = ஊதியம், வருவாய்.
செய்வினை → வினைத்தொகை.
முதல் = கைப்பொருள்.
ஊக்கார் = துணைசெய்யார்.
“ஆக்கங்கருதி முதலிழக்குஞ்செய்வினை
அறிவுடையார் ஊக்கார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வருவாயைக்கருதி முதலையும் இழக்கும் செய்வினையை அறிவுடையார் ஊக்கார்” என்பதாம்.
‘முதலிழக்கும்’ என்பதன்கண் எச்சவும்மை விகாரத்தால் தொக்கி ‘முதலையும் இழக்கும்’ எனப்பொருள்தரும்.
‘ஊக்கார்’ என்பது வினைமுற்று. இவ்வினைமுற்று ‘அறிவுடையார்’ என்னும் எழுவாய்க்குரியது; ‘செய்வினை’ என்னும் வினைத்தொகைக்குரியதன்று. ‘செய்வினையூக்கார்’ எனும் புணர்ச்சி செம்மையன்று.
செம்மைவடிவம் —
“ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.”
குறள் – ௪௱௬௪ (அச்சில் உள்ளவாறு).
“தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்.”
இளிவு= இகழ்ச்சி, சிறுமை.
ஏதம், ஏதப்பாடு = குற்றம், துன்பம்.
“இளிவென்னும் ஏதப்பாடஞ்சுபவர் தெளிவிலதனைத்தொடங்கார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இகழ்ச்சி என்னும் குற்றத்திற்கு அஞ்சுபவர் தமக்கு தெளிவில்லாத செயல்களைத்தொடங்கார்” என்பதாம்.
‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘இளிவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.”
குறள் – ௪௱௬௫ (அச்சில் உள்ளவாறு).
“வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.”
வகை = வழிமுறை.
சூழாது = தீர ஆராயாது, தீர எண்ணாது.
எழுதல் = (படையெடுத்தல்), தொடங்குதல்.
பாத்திப்படுப்பது = பயிர்செய்வது. ஆறு = முறை, நெறி.
“ஒரு செயலைத்தொடங்குமுன் அது நிறைவேறும் வழிமுறைகளை தீர ஆராயாமல் தொடங்குதல் இடையூறுகளை (பகைவரை) பாத்திகட்டி பயிர்செய்து வளர்க்கும் ஒரு முறையாகும்” என்பதாம்.
‘சூழாது’ என்னும் வினையெச்சம் ‘எழுதல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“வகையறச் சூழாது* எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௬௬ (அச்சில் உள்ளவாறு).
“செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.”
செய்தக்க = செய்யத்தக்கன.
“செய்யத்தகாதவற்றை செய்வதால் கெடுதி நேரும். செய்யத்தக்கவற்றை செய்யாமையாலும் கெடுதி நேரும்” என்பதாம்.
‘செய்தக்கவல்ல’ எனப்புணர்த்தி ‘செய்தக்க அல்ல’ என பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா. ‘செய்தக்கவல்ல’ என்பது மயங்கு புணர்ச்சி.
மூன்றாமஞ்சீர் ‘செயக்கெடும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”
குறள் – ௪௱௬௭ (அச்சில் உள்ளவாறு).
“எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.”
எண்ணி = ஆராய்ந்து.
துணிக = தொடங்குக.
கருமம் = வினை, செயல்.
இழுக்கு = குற்றம்.
“கருமமெண்ணித்துணிக துணிந்தபின் எண்ணுவமென்பது இழுக்கு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செய்யத்தக்க வினைகளை முடிக்கும் வழியறிந்து தொடங்குக. வினைகளைத்தொடங்கியபின் முடிக்கும் வழிமுறைகளைக்காண்போமென்பது இழுக்கினைத்தரும்“ என்பதாம்.
மூன்றாஞ்சீரில் ஒரு கருத்து முடிகிறது. கருத்து முடியுமிடங்கள் புணரா.
‘துணிந்தபின்’ என்பதன்கண் வந்த ‘பின்’ என்னும் காலயிடைச்சொல் ‘துணிந்த’ என்னும் எச்சவினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.”
குறள் – ௪௱௬௮ (அச்சில் உள்ளவாறு).
“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.”
போற்றினும் = தடுப்பினும்.
ஆற்றின் = முறையாக.
பொத்துப்படும் = குற்றப்படும்.
“ஒரு வினையைத்தொடங்கும்போது அதனைமுடிக்கும் வழிமுறைகளை வருந்தி அறியாமல் தொடங்குவதால் நேருங்குறைகளை பலர்கூடி தடுத்தாலும் குறையுள்ளதாகவே முடியும்” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௪௱௬௯ (அச்சில் உள்ளவாறு).
“நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.”
ஆற்றல் = செய்தல்.
“அவரவர் பண்பறிந்தாற்றாக்கடை நன்றாற்றலுள்ளும் தவறுண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அவரவர் குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கு ஏற்ப செய்யாவிடின் நன்மைசெய்வதாலும் தவறுண்டாகும்” என்பதாம்.
‘ஆற்றலுள்ளும்’ என்பதன்கண் வந்த தெரிநிலையும்மை எதனுடனும் புணராது.
‘உண்டு’ என்னும் குறிப்புவினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு* அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௭௰ (அச்சில் உள்ளவாறு).
“எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு.”
எள்ளாத = இகழாத.
கொள்ளாத = பொருந்தாத, ஏலாத.
உலகு = உயர்ந்தோர், பிறர்.
“தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது. உலகு எள்ளாதயெண்ணிச்செயல் வேண்டும் ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. உலகு ஈரிடத்தும் சென்றுபொருந்தும்.
“தமக்கு ஏலாதவை பிறர்க்கும் ஏலாதன. உலகு இகழாததை எண்ணிப்பார்த்து செய்தல்வேண்டும்” என்பதாம்.
‘(செயல்)வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எள்ளாத யெண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.”
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



