
பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோராலும் செய்தவை.
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௧.
“இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை.”
‘இல்வாழ்வானென்பான்’ என்பது இக்குறளின் எழுவாய்/வினைமுதல். இவ்வினைமுதல் இடைச்சொற்கள் எதனையும் ஏற்கவில்லை. திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இல்வாழ்வானென்பானியல்பு’ எனும் புணர்மொழி ‘இல்வாழ்வானென்பானது இயல்பு’ எனும் பொருள்தந்து பொருளை திசைமாற்றும். எதனை உடைய மூவர் எனவினவ விடைகிட்டாது அன்றோ.
ஒரு புணர்ச்சி நாம் கருதும் பொருளை வெளிப்படுத்தாக்கால் அப்புணர்ச்சியினால் பயன் என்ன.
‘மூவர்க்கும்’ எனும் முற்றும்மை எதனுடனும் புணராது.
எழுசீர்களும் புணர்ந்ததால் முயன்று தொடர்ந்தொலித்தாலும் எவ்வுணர்ச்சியும் வெளிப்படாது. உணர்ச்சி வெளிப்பட உரியயிடத்தில் விட்டிசைத்து எடுத்தலோசையை வழங்குக.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௨.
“துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.”
‘இல்வாழ்வானென்பான்’ என்பது இக்குறளின் எழுவாய்/வினைமுதல். இவ்வினைமுதல் இடைச்சொற்கள் எதனையும் ஏற்கவில்லை. திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘துணை’ எனும் பெயர்ப்பயனிலை புணராது தனித்து நிற்கும். ‘இல்வாழ்வானென்பான்றுணை’ எனும் புணர்மொழி ‘இல்வாழ்வானென்பானது துணை’ எனும் பொருள்தந்து பொருளை திசைமாற்றும். எவர்க்கு துணையென வினவ விடைகிட்டாது அன்றோ. ஒரு புணர்ச்சி நாம் கருதும் பொருளை வெளிப்படுத்தாக்கால் அப்புணர்ச்சியினால் பயன் என்.
எழுசீர்களும் புணர்ந்ததால் முயன்று தொடர்ந்தொலித்தாலும் எவ்வுணர்ச்சியும் வெளிப்படாது. உணர்ச்சி வெளிப்பட உரியயிடத்தில் விட்டிசைத்து எடுத்தலோசையை வழங்குக.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க. அல்லது “இல்வாழ்வானென்பான் துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் துணை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கும்
இல்வாழ்வா னென்பான் துணை.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௩.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.”
ரகரம் தகரத்தொடும் மகரம் வகரத்தொடும் புணரும்விதி இன்மையான் அச்சிட்டோர் புணர்த்தவில்லை.
அடுக்கிச்சொல்லி அடுக்கியதைத்தொகுக்கும் தொகையெண் புணராது தனித்து நிற்கும்; அல்லாக்கால் தொகையெண்ணும் அடுக்குகளுள் ஒன்றாக மயங்கும்.
‘தலையானது’ என பொருள்தரும் ‘தலை’ எனும் பயனிலை தனித்திருந்தால் மட்டுமே அதன் முதன்மை விளங்கும். இக்குறளின் நங்கூரச்சொல் இதுவே.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௪.
“பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.”
‘எஞ்ஞான்றும்’ என்பதில் முற்றும்மை உள்ளது. முற்றும்மை எதனுடனும் புணராது.
பொருளுணர்முறை — “பழியஞ்சி பகுத்து உண்ணும் வாழ்க்கைவழி எஞ்ஞான்றும் எஞ்சல் (வழக்கொழிதல்) இல்லை“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“பழியஞ்சி பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்றும் இல்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௫.
“அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.”
“அன்பும் அறனும் உடையதாயின் அஃது இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் (ஆகும்)” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்போம்.
‘அது’ எனும் சுட்டுப்பெயர்ச்சொல் தான் நிற்கவேண்டுமிடத்திற்கு செல்ல புணராது தனித்திருத்தலே நன்று. ‘பயனுமது’ எனப்புணர்த்தினாலும் அப்புணர்ச்சியிலிருந்து பிரிந்து சென்று பொருளுணர்த்தும். புணர்ச்சியென்பது பொருளுணர்ச்சிக்கானதாய் இருக்க பொருளுணர்தன்பொருட்டு புணர்ந்ததை தனிச்சொல்லாக்குவது முரணன்றோ. தொடரொலிப்பு புணர்ச்சியின் உடனாயவிளைவேயன்றி அதுவே புணர்த்தற்கான முதன்மைக்காரணமாகாது.
செம்மை வடிவம் —
“அன்பு மறனு முடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௬.
“அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்.”
ஆற்றின், ஆற்றில் = வழியில்.
ஆற்றில் = நடத்தினால்.
“இல்வாழ்க்கையை அறத்தின் வழியில் ஆற்றில் புறத்தாற்றில் போய்ப்பெறுவது எவன்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செய்யுளில் கருத்துணர்ச்சி வெளிப்படாவாறு புணர்த்திக்கொண்டே செல்லவேண்டா. இன்னின்ன எழுத்துகள் புணர்ந்தேயாகவேண்டுமென விதிக்கப்படவில்லை. இன்னின்ன எழுத்துகள் புணர்தற்குரியன. அவை புணருங்கால் இன்னின்ன விதிகளையேற்குமென விதிக்கப்பட்டன.
இக்குறளில் முப்பத்துமூன்று எழுத்துகள் உள்ளன. இதில் வல்லெழுத்துகள் இருபத்திரண்டு. இவ்வளவையும் தொடர்ந்தொலிக்க ஒலிப்புக்காற்றின் நீளம் கிட்டாது. வலிந்து ஒலித்தாலும் பொருளுணர முடியாது. பொருளுணர எவ்வாறு விட்டிசைக்கின்றோமோ அவ்வாறே புணர்த்தவேண்டும். விட்டிசைக்குமிடங்கள் புணரா. மொழியின் தலையாய பயன் கருத்தினை வெளிப்படுத்தலே; விதிகளும் அதன்பொருட்டே.
செம்மைவடிவம் —
“அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றில் புறத்தாற்றிற் போஒய் பெறுவ தெவன்.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௭.
“இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வா ருளெல்லாந் தலை.”
‘இயல்பினான்’ என்பதில் வரும் ‘ஆன்’ மூன்றாம்வேற்றுமையுருபு. மூன்றாம்வேற்றுமை பெயர்ச்சொற்களுடன் புணராது. ‘இல்வாழ்க்கை’ என்பது பெயர்ச்சொல்.
‘எல்லாம்’ எனும் முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வா ருளெல்லாம் தலை.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௮.
“ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.”
‘ஒழுக்கி’ எனும் வினையெச்சம் ‘அறன்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
‘இழுக்காவில்வாழ்க்கை’ என்பது ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். இதனில் வகரவுடம்படுமெய் ஆளப்பட்டுள்ளது. தொல்காப்பியனார் ‘உடம்படு மெய்யின் உருவு கொளல்வரையார்’ எனவிதித்தார். உரையாசிரியர்கள் வகரமும் யகரமும் உடம்படுமெய்யாவதை எடுத்தோதினர். அக்கருத்திலிருந்து உடம்படுமெய்க்கான சூத்திரத்தை நன்னூலார் உருவாக்கினார். திருக்குறள் நெடுகிலும் உடம்படுமெய்க்கான நன்னூற்சூத்திரமே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனது வினா என்னவெனில் திருவள்ளுவனார் நன்னுற்சூத்திரத்தை எவ்வாறு கடைப்பிடித்திருப்பார். தொல்காப்பியத்தையன்றோ கடைப்பிடித்திருப்பார். இஃது ஒருபுறம் அமைக.
‘இழுக்காவில்வாழ்க்கை’ என்பதில்
‘இழுக்காத’ என்பதன் ஈறுகெட்டு ‘இழுக்கா’ என நின்றது. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சங்களில் வருமொழி உயிர்முதனாக இருந்தால் இயல்பாகும்.
‘நோற்பாரினோன்மை’ என்பதில் இருநோன்மைகளை ஒப்பிடுகிறார். அறனின் இழுக்கா இல்வாழ்க்கையின் நோன்மை, துறவின் நோன்மை ஆகிய இரண்டும் ஒப்புநோக்கப்படுகின்றன. ‘நோற்பாரினோன்மை’ என்றால் ‘நோற்பாரது நோன்மை’ என பொருள்பட்டு, ஒப்புநோக்கல் நீங்குகிறது; பொருள் திசைமாறுகிறது. எனவே ஒப்புப்பொருள் வெளிப்பட புணர்த்தக்கூடாது.
(நோன்மை = மேன்மை).
‘முறையில் ஒழுகி அறனில் நீங்கா இல்வாழ்வாழ்க்கையின் நோன்மை, துறவின் நோன்மையினும் நோன்மை உடையது’ எனவிரித்து பொருள்காண்க.
செம்மைவடிவம்—
“ஆற்றி னொழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.
இல்வாழ்க்கை.
குறள் – ௪௰௯.
“அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.”
‘பட்டதே’ என அறுதியிடும் தேற்றேகார சொல் எதனுடனும் புணராது.
‘இல்வாழ்க்கை’ என்பது முற்றுப்பொருள்தருகிறது. முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘இல்லாயின்’ என்பது வரையறுக்குஞ்சொல். ‘இதுவாக இது வேண்டும்’ என்பதான வரையறை. ஒரு வரையறையை நின்று உணராமல் எவ்வாறு கடப்பது. ஐயன் சொல்வது வெற்றுச்செய்திகளன்று. உணர்ந்து கடைப்பிடிக்கும் வாழ்க்கைநெறிகள். ஓடுகிற ஓட்டத்தில் இருப்பவன் காணுங்காட்சியை தெளிவாக உணரயியலுமா; இயலாது.
குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.”
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௫.இல்வாழ்க்கை.
குறள் – ௫௰.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்.”
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
நன்றி
முத்தையா சுப்பிரமணி.




