இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௫௭. வெருவந்த செய்யாமை (அஞ்சத்தக்கன செய்யாமை).

குறள் – ௫௱௬௧ (அச்சில் உள்ளவாறு).

“தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தாங் கொறுப்பது வேந்து.”

தக்காங்கு = தகுந்தவாறு (நடுநிலையுடன்).
நாடி = ஆராய்ந்து.
தலைச்செல்லா வண்ணத்தால் = மீண்டும் செய்யா வகையால்.
ஒத்தாங்கு = குற்றத்திற்கேற்ப.
ஒறுப்பது = ஒறுத்தல் (தண்டிப்பது).
வேந்து = வேந்தன்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஒருவன் செய்த குற்றத்தை தகுந்தமுறையில் ஆராய்ந்து அவன் மீண்டும் அக்குற்றத்தைச்செய்யாவகையில் குற்றத்திற்கேற்ப ஒறுப்பவன் வேந்தன்” என்பதாம்.

‘நாடி’ என்னும் வினையெச்சம் ‘தலை’ (வழி) என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது. மேலும், ‘நாடுதல்’ வேந்தன்தொழில். ‘தலைச்செல்லாமை’ குற்றஞ்செய்தவன் பின்பற்றவேண்டியது. இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.

‘வண்ணத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘வண்ணம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஆங்கு’ என்னும் இடப்பெயர் ‘ஒறுப்பது’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு* ஒறுப்பது வேந்து.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௬௨ (அச்சில் உள்ளவாறு).

“கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.“

கடிது = வன்மைகாட்டி, விரைந்து.
ஓச்சி = உயர்த்தி.
நெடிது= நீண்ட(காலம்).
ஆக்கம் = மேன்மை, சிறப்பு.

“நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர் கடிதோச்சி மெல்லயெறிக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நீண்டகாலமேன்மை நீங்காமலிருக்க விரும்புவார் ஒறுக்குங்குங்கால் அஞ்சுமாறு விரைந்து வலியகாட்டி மென்மையாக ஒறுக்க” என்பதாம்.

‘மெல்லவெறிக’ என்பதிலும் ‘மெல்லயெறிக’ என யகரவுடம்படுமெய் பெறுதல் ஒலியொப்புமையும் பொருட்டெளிவும் கொண்டது. “உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” என்பது தொல்காப்பியம்.

‘ஆக்கம்’ என்னும் இயல்புப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கடிதோச்சி மெல்ல யெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.“

 

குறள் – ௫௱௬௩ (அச்சில் உள்ளவாறு).

“வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லைக் கெடும்.”

வெருவந்த = அஞ்ச, நடுங்க.
ஒழுகும் = செயல்படும்.
வெங்கோலன் = கொடுங்கோலன்.
ஒருவந்தம் = ஒருதலையாக, அறுதியாக.
ஒல்லை = விரைந்து.
கெடும்= கெடுவான்.

“குடிகளஞ்சச்செய்து செயல்படும் கொடுங்கோலன் ஆயின், அவன் அறுதியாக விரைந்து கெடுவான்” என்பதாம்.

‘அறுதியாக’ என்னும் பொருள்தரும் ‘ஒருவந்தம்’ என்னுஞ்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘ஆயின்’ என்னும் எதிர்காலக்காரணப்பொருளில் வந்த வினையெச்சம் புணராது தனித்துநிற்கும்.

‘ஒல்லை’ என்னும் வினையடை ‘கெடும்’ என்னும் வினைமுற்றை விளக்குகின்றது. வினைமுற்றுக்குமுன் வரும் வினையடையோ, வினையெச்சமோ வினைமுற்றுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும்.”

 

குறள் – ௫௱௬௪ (அச்சில் உள்ளவாறு).

“இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.”

இறை = அரசன்.
கடியன் = கொடியன்.
உறை = வாழ்நாள் (வாணாள்).
கடுகி = குறைந்து.
ஒல்லை = விரைந்து.
கெடும் = அழியும்.

“கொடிய அரசனென மக்கள் உரைக்கும் இன்னாச்சொல்லால் வேந்தனது வாழ்நாள்குறைந்து விரைந்து அழியும்” என்பதாம்.

‘உரைக்குமின்னாச்சொல்’ என்பதன்கண் வந்த ‘உரைக்கும்’ என்னும் பெயரெச்சம் ‘இன்னாச்சொல்’ என்னும் முற்றுப்பொருள்தரும் பெயருடன் புணராது.

‘ஒல்லை’ என்னும் வினையடை ‘கெடும்’ என்னும் வினைமுற்றுக்குரியது; கடுகி என்னும் வினையெச்சத்திற்கு உரியதன்று. எனவே ‘கடுகியொல்லை’ என்பது தழுவாப்புணர்ச்சி. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘ஒல்லை’ என்னும் வினையடை ‘கெடும்’ என்னும் வினைமுற்றை விளக்குகின்றது. வினைமுற்றுக்குமுன் வரும் வினையடையோ, வினையெச்சமோ வினைமுற்றுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்த
னுறைகடுகி ஒல்லை கெடும்.”

 

குறள் – ௫௱௬௫ (அச்சில் உள்ளவாறு).

“அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.”

அரும் → அருமை = எளிதில்கிட்டாமை.
செவ்வி = காட்சி.
அரும் செவ்வி → செவ்வியருமை = காட்சிக்கு அரியன். இன்னாமுகத்தான் = கடுகடுத்த முகத்தான்.
பேஎய் → பேய் = அலகை.
கண்ட = காத்த.
அன்னது = அத்தன்மையது.
உடைத்து = கொண்டது.

“காட்சிக்கு அரியனாய், கடுகடுத்த முகத்தானாய் உள்ளானது பெருஞ்செல்வம் பேயால் காக்கப்பட்ட தன்மையைக்கொண்டது; ஒருவர்க்கும் பயன்படாது” என்பதாம்.

‘அருஞ்செவ்வி’ என்பது ‘அருஞ்செவ்வியான்’ எனவிரிந்து அருஞ்செவ்வியான், இன்னாமுகத்தானென இருபண்புகளைக்குறிக்கும். வேறுவேறு பண்புகள் புணரா.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.”

 

குறள் – ௫௱௬௬ (அச்சில் உள்ளவாறு).

“கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.”

கண் = கண்ணோட்டம், இரக்கம்.
நீடின்றி = நீடிக்காமல்.
ஆங்கே = அப்பொழுதே.
கெடும் = நீங்கும், அழியும்‌.

‘கொடுஞ்சொற்களும் இரக்கமின்மையும் உடையனாயின் அவனது பெருஞ்செல்வம் நிலைக்காது அப்பொழுதே நீங்கும்’ என்பதாம்.

‘ஆயின்’ என்னும் எதிர்காலக்காரணப்பொருள்வினையெச்சம் புணராது தனித்துநிற்கும்.

‘நெடுஞ்செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘இன்றி’ என்னும் குறிப்புவினையெச்சம் ‘ஆங்கு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.”

 

குறள் – ௫௱௬௭ (அச்சில் உள்ளவாறு).

“கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்.”

கடுமொழி = கொடிய பேச்சு.
கையிகந்த = அளவுகடந்த.
தண்டம் = ஒறுத்தல்.
அடுமுரண் = வெல்லும் வலிமை.
தேய்க்கும் = அறுக்கும்.

“கொடிய பேச்சும், அளவுகடந்த ஒறுத்தலும் வேந்தனது வெல்லும் வலிமையை அறுக்கும் அரம்” என்பதாம்.

‘தேய்க்கும் அரம்’ என்பதன்கண் வந்த ‘தேய்க்கும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சத்தொடரில் முற்றுப்பொருள்தரும் அரம் என்னும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘அடுமுரண்தேய்க்கும்’ என்பது ‘அடுமுரணைத்தேய்க்கும்’ எனவிரியும். ணகரம் டகரமாக திரியாது. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் நிலைமொழியும் வருமொழியும் ஒருசொன்னீர்மையாய் இயல்பாய் இருக்கும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் தேய்க்கும் அரம்.”

 

குறள் – ௫௱௬௮ (அச்சில் உள்ளவாறு).

“இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.”

இனம் = உறவு.
இனத்தாற்றி = உறவுடன் கூடி.
எண்ணாத = ஆராயாமல்.
சினத்தாற்றி = சினத்தைச்சேர்ந்து. சீறின் = வெகுளின், சினப்பின்.
சிறுகும் = அருகும், குறையும்.
திரு = மேன்மையும் செல்வமும்.

“இனத்தாற்றியெண்ணாத வேந்தன்றிரு சினத்தாற்றிச்சீறின் சிறுகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தமக்கு உறவான அரசியல் சுற்றத்தொடு கூடி ஆராயாது சினத்தினைக்கூடி வெகுண்டால் வேந்தனது மேன்மைகள் குறையும்” என்பதாம்.

‘சிறுகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘திரு’ என்பது ‘வேந்தனது திரு’ எனவாகும். வேறிடம் சென்றுபொருந்தி பொருள்தரும் சொற்கள் புணரா; புணரின் பொருள்மயங்கும்.

‘சீறின்’ என்னும் எதிர்காலக்காரணப்பொருளில் வந்த வினையெச்சம் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு.”

 

குறள் – ௫௱௬௯ (அச்சில் உள்ளவாறு).

“செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.”

செரு = போர்.
போழ்து = பொழுது.
சிறை = அரண்.
வெரு = அச்சம்.
வெய்து = விரைந்து.
கெடும் = கெடுவான்.

“சிறைசெய்யா வேந்தன் செருவந்தபோழ்தில் வெருவந்து வெய்து கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அரண்செய்யா வேந்தன் போர் வந்த காலத்து அஞ்சி விரைந்து கெடுவான்” என்பதாம்.

‘போழ்தில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘போழ்து’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.”

 

குறள் – ௫௱௭௰ (அச்சில் உள்ளவாறு).

“கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.”

கல்லார் = அறிவற்றோர்.
பிணிக்கும் = சேர்த்துக்கொள்ளும்.
கடுங்கோல் = கொடுங்கோல்.
நிலக்கு= நிலத்திற்கு.
பொறை = சுமை.

“கடுங்கோல் கல்லார்பிணிக்கும். அதுவல்லது பொறை நிலக்கில்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கொடுங்கோல் கல்லாதவரைச்சேர்த்துக்கொள்ளும். அதனைப்போன்றதொரு சுமை நிலத்திற்கு இல்லை” என்பதாம்.

‘கல்லார்ப்பிணிக்கும்’ என்பது ‘கல்லாரைப்பிணிக்கும்’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது.

‘பிணிக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘கடுங்கோல்’ என்பது செய்யுளில் பெயர்ப்பயனிலையாய் நின்று முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

எத்தொடரிலும் வினைமுற்று முடிக்குஞ்சொல்லாதலே சிறப்பு. கொண்டுகூட்டில் நிலக்கில்லை என்றாகும். வேறோரிடஞ்சென்று பொருந்தி பொருள்தருஞ்சொற்கள் புணராது. எனவே ‘இல்லை’ என்னும் குறிப்பு வினைமுற்று புணராது நிற்கும்.

‘நிலத்திற்கு’ எனப்பொருள்தரும் ‘நிலக்கு’ (செய்யுள்விகாரம்) என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘பொறை’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும்பெயர்களுடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“கல்லார் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது*
இல்லை நிலக்கு பொறை.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button