இலக்கணம்ஏனைய பற்றியம்தமிழ்நன்னூல்படைப்புகள்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு -௰௭ . அழுக்காறாமை.

குறள் – ௱௬௰௧ .(அச்சில் உள்ளவாறு.)

“ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.”

ஆறா(க) = முறையாக, வழியாக.
அழுக்காறு = பொறாமை.

“ஒருவன் தனது நெஞ்சத்து அழுக்காறு இல்லாத இயல்பினை ஒழுகும் முறையாக கொள்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஆறா’ என்பது ‘ஆறாக’ எனும் சொல்லின் கடையெழுத்து நீங்கிய சொல். இதனை உணர இவ்விடத்து விட்டிசைக்கவேண்டும். ஆகாரயீற்றுச்சொல்போல் புணராது.
‘கொள்க’ என்பது வியங்கோள்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஒருவன்’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தனது நெஞ்சத்து’ எனும் விரியின் தொகைநிலை ’தன்னெஞ்சத்து’ என்பதாம். எனவே ‘தன்’ என்பது ‘நெஞ்சத்து’ எனும் சொல்லுடன் புணர்ந்து தொகையாகுமேயன்றி ‘ஒருவன்’ எனும் எழுவாயுடனன்று.
‘நெஞ்சத்து’ என்பது ‘அத்து’ சாரியை பெற்ற சொல். அத்துச்சாரியை புணர்ந்து தனது பணியை முடித்தது. அதன்பின் அதனை மற்றொரு சொல்லுடன் புணர்த்தினால் சாரியையின் பொருள் மயங்கும்.
‘‘இல்லாத’ என்பது எதிர்மறைப்பெயரெச்சம். ‘இல்லாத இயல்பு’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சம் முடிக்குஞ்சொல்லான பெயருடன் புணராது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் (தன்பொருளில் வேறுபாடாக பெயர்ச்சொல்) காலயிடைநிலைபெற்ற வினைச்சொற்களுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஒழுக்காறா கொள்க ஒருவன்தன் னெஞ்சத்து*
அழுக்கா றிலாத இயல்பு.”

*குற்றியலிகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

குறள் – ௱௬௰௨. (அச்சில் உள்ளவாறு.)

“விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னன்மை பெறின்.”

விழுப்பேறு = நன்மையான பேறு.
அன்மை = இன்மை.

‘யார்மாட்டும் அழுக்காறு இன்மை பெறின் விழுப்பேறுகளில் அஃது ஒப்பது இல்லை’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘யார்மாட்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றி னன்மை பெறின்.”

குறள் – ௱௬௰௩. (அச்சில் உள்ளவாறு.)

“அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.”

அழுக்கறுத்தல் = அழுக்காறு = பொறாமை.

“அறத்தின் ஆக்கத்தை வேண்டாதானென்பான் பிறனது ஆக்கத்தைப்பேணாது பொறாமைகொள்வான்“ என்பதாம் .
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘பேணாது’ என்பது எதிர்மறைவினையெச்சம். இவ்வினையெச்சம் ‘அழுக்கு’ (பொறாமை) எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணாது* அழுக்கறுப் பான்.”

*குற்றியலுகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

குறள் – ௱௬௰௩. (அச்சில் உள்ளவாறு.)

“அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.”

அழுக்கறுத்தல் = அழுக்காறு = பொறாமை.

“அறத்தின் ஆக்கத்தை வேண்டாதானென்பான் பிறனது ஆக்கத்தைப்பேணாது பொறாமைகொள்வான்“ என்பதாம் .
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘பேணாது’ என்பது எதிர்மறைவினையெச்சம். இவ்வினையெச்சம் ‘அழுக்கு’ (பொறாமை) எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணாது* அழுக்கறுப் பான்.”

*குற்றியலுகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

குறள் – ௱௬௰௪. (அச்சில் உள்ளவாறு.)

“அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.”

இழுக்காறு = தீநெறி.
ஏதம்= துன்பம்.
படுபாக்கு = வருவது (பாக்கு – வினையெச்சவிகுதி).

“தீநெறியால் துன்பம் வருவது அறிந்து பொறாமையால் அல்லவை செய்யார்” என்பதாம்.
“இழுக்காற்றின் ஏதம் படுபாக்கறிந்து அழுக்காற்றின் அல்லவை செய்யார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
அழுக்காற்றின், இழுக்காற்றின் என்பன மூன்றாம்வேற்றுமைவுருபேற்ற சொற்கள். அல்லவை, ஏதம் என்பன பெயர்ச்சொற்கள் மூன்றாம்வேற்றுமை பெயர்ச்சொற்களுடன் புணராது. மேலும் வேற்றுமைவுருபுகள் பெயர்சொற்களொடு சேர்ந்து புணர்ந்து தனது பணியை முடித்தது. மீண்டும் புணர்ச்சிபெற்றால் பொருள் மயங்கும்.
‘செய்யார்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.”

குறள் – ௱௬௰௫. (அச்சில் உள்ளவாறு.)

“அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.“

ஒன்னார் = பகைவர்.
வழுக்கியும் = தவறியும்.

“பகைவர் தவறினாலும் அழுக்காற்றை உடையவர்க்கு கேட்டினைத்தருவதற்கு அது (அழுக்காறு) சாலும்” என்பதாம்.
“ஒன்னார் வழுக்கியும் அழுக்காறுடையார்க்கு கேடீன்பது அது சாலும் ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அதுசாலும்’ என்பதை முதலிருசீர்களுடன் புணர மூன்றாஞ்சீரில் முற்றுப்பொருள் கிட்டுகிறது. அவ்வாறானால் பின்வரும் நாற்சீரும் எங்ஙனம் தொடர்புபெறும். கொண்டுகூட்டு நிகழாது. ‘அதுசாலும்’ என்பது ஈற்றில் நின்று பொருள்முடிவினைத்தரும். புணர்மொழிகளைப்பிரித்து பொருளுணர்வதானால் புணர்வது பயனற்றது.
‘சாலும்’ என்பது வினைமுற்று. ‘ஒன்னார்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘வழுக்கியும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அழுக்கா றுடையார்க்கு* அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.“

*குற்றியலுகரமாம் குகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

குறள் – ௱௬௰௬. (அச்சில் உள்ளவாறு.)

“கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்.”

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக்கெடும்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கொடுப்பதைக்கண்டு பொறாமைகொள்வானது சுற்றம் உடையும் உணவும் இல்லாது கெடும்” என்பதாம்.
‘கொடுப்பது’ என்பது வினையெச்சம். ‘அழுக்கறுப்பான்’ என்பது வினையாலணையும்பெயர். வினையெச்சம் பெயருடன் புணராது. இங்கே ஏன் புணர்ந்தது. ‘கண்டு’ எனும் சொல்லெச்சம் தொக்கியுள்ளது. ‘கொடுப்பதைக்கண்டு அழுக்கறுப்பான்’ எனவிரியும். இப்புணர்ச்சி தொகையின்பொருட்டு நிகழ்ந்தது. தொகைச்சொற்கள் ஒரு சொன்னடைய.
‘சுற்றம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லாம். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
4, 5, 6, 7ஆம் சீர்களைப்புணர்த்தியவாறு தொடர்ந்தொலிக்க இயலாது. இரண்டு அளபெடைகளை ஒலித்து சீர்கள் நான்கையும் ஒலிக்க நமது ஒலிப்புக்காற்றளவு போதாது. இடையில் ஈரிடத்து விட்டிசைக்கும். விட்டிசைக்கும் இடம் புணராது.

செம்மைவடிவம் —
“கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.”

குறள் -௱௬௰௭. (அச்சில் உள்ளவாறு.)

“அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.”

அவ்வித்து = பொறாது.
செய்யவள் = திருமகள்.
தவ்வை= அக்கை, மூத்தவள் (மூதேவி).
விடும் = நீங்கும்.

“அவ்வித்து அழுக்காறுடையானை செய்யவள் தவ்வைக்குக்காட்டி விடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அவ்வித்து’ எனும் வினையெச்சம் ‘அழுக்காறு’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற ‘உடையானை’ எனும் வினையாலணையும்பெயர் ‘செய்யவள்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.
செய்வாள், தவ்வை எனும் வேறுவேறு வினைமுதல்கள் ‘செய்யவடவ்வை’ எனப்புணராது.
“அவ்வித்து அழுக்காறுடையானை செய்யவள் (அவனுக்கு) தவ்வையைக்காட்டி நீங்கும்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“அவ்வித்து* அழுக்கா றுடையானை செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.”

*குற்றியலுகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

குறள் – ௱௬௰௮. (அச்சில் உள்ளவாறு.)

“அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.”

செற்று= அழித்து.
உழி = கண் எனும் பொருள்தரும் ஏழாம்வேற்றுமைவுருபு.

“அழுக்காறென ஒரு பாவி திருசெற்று தீயுழி உய்த்துவிடும்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘என’ எனும் இடைச்சொல் ‘அழுக்காறு’ எனும் பெயரை இடனாக கொண்டு புணர்ந்தது. ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயர் ‘பாவி’ எனும் பெயருக்கு உரியது; ‘என’ எனும் இடைச்சொற்கு உரியதில்லை. எனவே ‘எனவொரு’ என்பது தழுவாச்சொற்கள். தழுவாச்சொற்கள் புணரா.
‘திருவினைச்செற்று’ எனும் இரண்டாம்வேற்றுமைவிரிநிலையின் தொகைநிலையே ‘திருசெற்று’ என்பது இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது.
‘செற்று’ என்பது வினையெச்சம். வினையெச்சம் ‘தீ’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘உழி’ எனும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தீ’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தனது பணியை முடித்தது. அது மீளவும் ‘உய்த்து’ எனும் வினையெச்சத்திற்கு முன்னொட்டாகாது. புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும்.

செம்மைவடிவம் —
“அழுக்கா றெனஒரு பாவி திருசெற்று
தீயுழி உய்த்து விடும்.”

குறள் – ௱௬௰௯. (அச்சில் உள்ளவாறு.)

“அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்.”

அவ்வியம் = பொறாமை.
செவ்வி = நல்ல, நன்மை.

“அவ்வியநெஞ்சத்தானாக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப்படும்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அவ்வியநெஞ்சத்தானது ஆக்கமும் செவ்வியானது கேடும் நினைக்கப்படும்” என்பதாம் .
‘ஆக்கமும்’, ‘கேடும்’ என்பன எண்ணும்மைகள். எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது.
‘ஆக்கம்’ என்பது அவ்வியநெஞ்சத்தானுக்குரியது; செவ்வியானுக்குரியதன்று. தழுவுஞ்சொற்களே புணரும். ‘ஆக்கமுஞ்செவ்வியான்’ எனப்புணர்த்தினால் ‘செவ்வியானது கேடும்’ என்பதன் தொகைநிலை தோன்றாது.

செம்மைவடிவம் —
“அவ்விய நெஞ்சத்தா னாக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.”

குறள் – ௱௬௰௯. (அச்சில் உள்ளவாறு.)

“அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.”

அழுக்கறுதல் = பொறாமை.
அகன்றார் = (செல்வத்தில்) பெருகியவர்.
தீர்ந்தார் = (செல்வத்தில்) அருகியவர்.

‘அழுக்கற்று’ என்பதன் குற்றுகரம் உயிர்வர நீங்குமானால் ‘அழுக்கற்றகன்றார்’ எனும் ஒருவகையினரைச்சுட்டும். ‘அழுக்கற்று’ என்பது வினையெச்சம். ‘அகன்றார்’ என்பது வினையாலணையும்பெயர். வினையெச்சம் பெயருடன் புணராது.
‘இல்லை’ எனும் குறிப்புவினைமுற்று எதனுடனும் புணராது.
‘பெருக்கத்தில்’ என்பதில் வரும் ஏழன்வேற்றுமைவுருபு ‘இல்’ புணர்ந்து தனது பணியை முடிந்துவிட்டது. மீளவும் மற்றொரு பெயர்க்கு முனானொட்டாகாது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அழுக்கற்று* அகன்றாரு மில்லைஅஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.”

*குற்றியலுகரமாம் றுகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button