இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௩௦. வாய்மை.

குறள் – ௨௯௧. (அச்சில் உள்ளவாறு.)

“வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.”

வாய்மை = மெய்ம்மை.
இலாத = பயவாத (இல்லாத).
சொலல் = சொல்லுதல்.

‘எனப்படுவது’ என்பதையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்காவிடில் வினாப்பொருள் அழுத்தம் பெறாது.

‘யாதொன்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“வாய்மை யெனப்படுவது* யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௨௯௨. (அச்சில் உள்ளவாறு.)

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

இடத்த = போன்றன.
புரை = குற்றம்.
தீர்ந்த = நீங்கிய.

“புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்மையும் வாய்மையிடத்த“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௨௯௩. (அச்சில் உள்ளவாறு.)

“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்.”

பொய்யற்க = பொய்யினைச்சொல்லாதே.

“ஒருவன் தன்னெஞ்சு அறிவது ஒன்றனை பிறர் அறிந்திலரென்று பொய்சொல்வதை ஒழிக. பொய்சொன்ன அவனது நெஞ்சே அப்பாவத்தின் கரியாய் (சான்றாய்) நின்று அதன் பயனான துன்பத்தை எய்துவிக்கும்.“ இது பரிமேலழகனாரின் விளக்கம்.

‘பொய்த்தபின்’ என்பதில் வரும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பொய்த்த’ என்னும் பெயரெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது. மேலும் ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.”

குறள் – ௨௯௪. (அச்சில் உள்ளவாறு.)

“உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன்.”

ஒழுகின் = கடைப்பிடிப்பின்.
உலகத்தார் = உயர்ந்தோர்.
எல்லாம் = அனைவரது.
உளன் = உள்ளான்.

“தனது உள்ளத்திற்கேற்ப பொய்கூறாது ஒழுகுவானாயின் அவன் உயர்ந்தோர் அனைவரது உள்ளத்திலும் உள்ளவனாவான்” என்பதாம்.

‘உள்ளத்தால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அத்து’ என்னும் சாரியைபெற்று ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஒழுகின்’ என்னும் வினையெச்சம் ‘
‘உலகத்தார்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தா
ருள்ளத்து ளெல்லாம் உளன்.”

குறள் – ௨௯௫. (அச்சில் உள்ளவாறு.)

“மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை.”

“ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச்சொன்னால் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரின் சிறப்புடையவன்.“ இது பரிமேலழகனாரின் உரை.

இவ்விளக்கம் தவறு. வாய்மையொடுதான் ஒருவர் மனம்பொருந்தவேண்டும்.

“வாய்மையொடு மனம் பொருந்த மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் சிறப்புடையவர்” என்பதாம். ‘பொருந்த’ என்பது சொல்லெச்சம்.

‘வாய்மையொடு மனம் மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘மொழியின்’ என்னும் வினையெச்சம் ‘தவம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘செய்வாரின்’ என்பதில் வரும் ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘செய்வார்’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ் செய்வாரின் தலை.”

குறள் – ௨௯௬. (அச்சில் உள்ளவாறு.)

“பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்.”

எய்யாமை = மெய்வருந்தாது, முயலாது.

‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எய்யாமை’ என்பது இயல்புப்பொருள்தரும் எதிர்மறைத்தொழிற்பெயர். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘எல்லாவறமும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

“பொய்யாமையை ஒத்த புகழ் இல்லை. மெய்வருந்தாமலே, முயலாமலே எல்லாவறங்களின் நன்மையை பொய்யாமை தரும்” என்பதாம். மெய்வருந்தாமலே, முயலாமலே என்பதில் வரும் தேற்றேகாரம் சொல்லெச்சம். ‘பொய்யாமை’ ஈற்றில் நின்றும் பொருள்தரும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா வறமும் தரும்.”

குறள் – ௨௯௭. (அச்சில் உள்ளவாறு.)

“பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.”

ஆற்றின் = செய்யின்.

பொய்யாமை என்பது பெயரடுக்கு. இஃது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘ஆற்றின்’ என்னும் வினையெச்சம் ‘அறம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.”

குறள் – ௨௯௮. (அச்சில் உள்ளவாறு.)

“புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.”

‘நீரான்’ என்பதில் வந்த ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘நீர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அமையும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘வாய்மையால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘வாய்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.”

குறள் – ௨௯௯. (அச்சில் உள்ளவாறு.)

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.”

விளக்கு= ஒளி.

‘பொய்யா விளக்கு’ என்பது தன்னளவில் பொருள்தரும் பெயர்ச்சொல். நான்காம்வேற்றுமை ஒரு வினையைச்சார்ந்து தன்பொருளை வெளிப்படுத்தும் பெயர்களுடன் புணருமேயன்றி வினைசாராப்பெயர்களுடனன்று.

“இருளை நீக்கும் எல்லா விளக்குகளும் விளக்குகளல்ல.
அகயிருளை நீக்கும் பொய்யாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்காகும்” என்பதாம்.

“எல்லாவிளக்கும் விளக்கல்ல
பொய்யா விளக்கே சான்றோர்க்கு விளக்கு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு.”

குறள் – ௩௱. (அச்சில் உள்ளவாறு.)

“யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.”

மெய்யா = மெய்யாக, உண்மையாக.
எனைத்தொன்றும் = யாதொன்றும்.

“யாம் கண்டவற்றுள் வாய்மையின் நல்லபிற எனைத்தொன்றும் மெய்யாக இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“யாம் கண்டறிந்தவைகளுள் வாய்மையினும் நன்மையைத்தரும் எதுவொன்றும் உண்மையாகவே இல்லை” என்பதாம்.

‘வாய்மையின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘வாய்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button