குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு -௰௮. வெஃகாமை.

குறள் – ௱௭௰௧. (அச்சில் உள்ளவாறு.)
“நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.”
நடுவு = நடுநிலை.
வெஃகி = கவ்வி, கௌவி, கவர்ந்து.
பொன்றி = அழிந்து.
“நடுவு இன்றி நன்பொருளை வெஃகில் (வெஃகுவானது) குடி அழிந்து குற்றமும் ஆங்கே தரும்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
வெஃகின், பொன்றி என்பன வினையெச்சங்கள். இவை குடி, குற்றம் எனும் பெயர்ச்சொற்களுடன் புணரா. வினையெச்சம் பெயர்ச்சொல்லுடன் புணராது.
வினையெச்சத்தையடுத்து பொருள்பொருத்தமான எச்சொல்லும நிற்கலாம். அவ்வாறு நிற்பவை இடைப்பிறவரல் எனப்படும். அவ்விடைப்பிறவரல் தனக்குமுன் நிற்கும் சொற்களுடன் எழுத்திடனடிப்படையில் புணரா. வெஃகிற்குடி, பொன்றிக்குற்றம் ஆகியன பொருளற்ற புணர்மொழிகள்.
செம்மைவடிவம் —
“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமு மாங்கே தரும்.”
குறள் – ௱௭௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.”
படுபயன் = பெறும்பயன்.
வெஃகி = விரும்பி.
பழிபடுவ = பழியைத்தருவன.
நடுவன்மை = முறைதவறியமை.
“நடுவன்மை நாணுபவர் படுபயனை விரும்பி பழிபடுவ செய்யார்” என கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘வெஃகி’ எனும் வினையெச்சம் ‘பழி’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பழிபடுவ’ என்பது ‘பழியைப்படுவ’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் தொகையாற்றல் இடைவெளிநீக்கத்தால் பெறப்படும்; வல்லினம் மிகுவதாலன்று.
செம்மைவடிவம் —
“படுபயன் வெஃகி பழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.”
குறள் – ௱௭௰௩. (அச்சில் உள்ளவாறு.)
“சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.”
சிற்றின்பம் = இழிந்த இன்பம்.
வெஃகி = விரும்பி.
மற்றின்பம் = நல்லின்பம்.
ஏ = அசைச்சொல்.
‘வெஃகி’ எனும் வினையெச்சம் ‘அறன்’ எனும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
வெஃகி என்பது ‘சிற்றின்பம்’ எனும் சொல்லைத் தழுவி ‘சிற்றின்பத்தை வெஃகி’ என பொருள்படும். தழுவுஞ்சொற்களே புணரும்.
‘இன்பம்’ எனும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எங்ஙனம் புணர்ந்ததெனின் தொடரொலிப்பின்பொருட்டு குற்றியலுகரப்புணர்ச்சி நிகழ்ந்தது . இது பொருள்திரியாப்புணர்ச்சி.
“மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம்வெஃகி அறனல்ல செய்யாரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.”
குறள் – ௱௭௰௪. (அச்சில் உள்ளவாறு.)
“இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.“
இலம் = இல்லை. ‘வறுமை’ என்பது இடப்பொருள் (contextual meaning).
புலம் = ஐம்புலன்கள்.
புன்மையில் = குற்றம் இல்லாத.
‘புன்மையில் காட்சியவர்’ இத்தொடரில் ‘புன்மை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இதனுடன் ‘இல்லாத’ எனும் எதிர்மறைப்பெயரெச்சம் புணராது. ‘இல்லாத’ எனும் எதிர்மறைப்பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல் ‘காட்சியவர்’ எனும் வினையாலணையும்பெயர்.
‘புன்மையில்’ என்பது ‘குற்றத்தில்’ என மயங்கும்.
“புலம்வென்ற புன்மை இல் காட்சியவர் இலமென்று வெஃகுதல் செய்யார்” என கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஐம்புலன்களை வென்ற குற்றம் இல்லாத தோற்றத்தவர் வறுமையின்பொருட்டும் (பிறர்பொருளை) கவர்தல் செய்யார்” என்பதாம்.
செம்மைவடிவம் —
“இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர்.“
குறள் – ௱௭௰௫. (அச்சில் உள்ளவாறு.)
“அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.”
அஃகி = நுணுகி.
அகன்ற = விரிந்த.
என்னாம் = என்ன பயன்.
வெறிய = தகாத.
“யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் அஃகியகன்ற அறிவு என் ஆம்” என கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அகன்ற அறிவு’ என்பது பெயரெச்சத்தொடர். ‘அகன்ற’ எனும் பெயரெச்சம் ‘அறிவு’ எனும் பெயருடன் புணராது. பெயரெச்சம் எதனுடனும் புணராது.
அறிவு+ என்+ஆம் → இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் + வினாச்சொல் + வினைமுற்று → அறிவென்னாம். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராதென்றும், வினாச்சொல் எதனுடனும் புணராதென்றும் வினைமுற்று பெரும்பான்மை தனித்திருக்குமென்றும் கூறிவந்திருக்கிறோம். தொடரொலிப்பின்பொருட்டு பொருள்திரியாப்புணர்ச்சி இவ்விடத்து நிகழ்ந்திருக்கின்றது.
செம்மைவடிவம் —
“அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.”
குறள் – ௱௭௰௬. (அச்சில் உள்ளவாறு.)
“அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.”
ஆற்றின்கண் = (இல்லற)நெறியின்கண்.
சூழ = நினைக்க.
கெடும் = கெடுவான்.
“அருளை விரும்பி நெறியின்கண் நின்றான் பொருளை விரும்பி பொல்லாத (எண்ணங்கள்) சூழ அருள் கெடும்” என்பதாம். இக்குறளை சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘ஆற்றின்கண்’ என்பதில் வந்த ஏழாம்வேற்றுமை கண்ணுருபு புணர்ந்து தன்பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும். இக்கண்ணுருபு ‘நின்றான்’ எனும் வினைக்கு முன்னொட்டாகாது.
‘பொல்லாதன’ எனும் பெயர்ச்சொல்லின் கடையெழுத்து குறைந்து ‘பொல்லாத’ என நின்றது. ‘‘வெஃகி’ எனும் வினையெச்சம் ‘பொல்லாதன’ எனும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகி
பொல்லாத சூழக் கெடும்.”
குறள் – ௱௭௰௭. (அச்சில் உள்ளவாறு.)
“வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டதற் கரிதாம் பயன்.”
வெஃகி = (பிறன் பொருளைக்)கவர்ந்து
விளைவயின் = விளையும்போது.
மாண்பு = பெருமை.
அரிது = இல்லை.
“வெஃகி ஆகும் ஆக்கத்தை வேண்டற்க. (அதனால்) விளையும் பயன்களில் பெருமை இல்லை” என்பதாம். இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௱௬௭௮. (அச்சில் உள்ளவாறு.)
“அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.”
அஃகாமை = சுருங்காமை.
வெஃகாமை = கவராமை.
“செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் பிறன்கைப்பொருளை வெஃகாமை வேண்டும்” என்பதாம். இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செல்வத்திற்கு+யாது+எனின் → ‘செல்வத்திற்கியாதெனின்’ எனும் புணர்மொழியில் குற்றியலிகரப்புணர்ச்சியும் குற்றியலுகரப்புணர்ச்சியும் நிகழ்ந்தன. இவையிரண்டும் பொருள்திரியா தொடரொலிப்புக்கான புணர்ச்சிகள்.
செம்மைவடிவம் —
“அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.”
குறள் – ௱௬௭௯. (அச்சில் உள்ளவாறு.)
“அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.”
வெஃகா = விரும்பா.
திறன் = தகுதி.
திரு = செல்வம்.
“அறனை அறிந்து (பிறன்பொருளை) வெஃகா அறிவுடையாரது திறனை அறிந்து ஆங்கே திரு சேரும்” என்பதாம். இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அறிவுடையார்ச்சேரும்’ என்பது தழுவாச்சொற்களின் புணர்ச்சி. எனவே சகரமெய் நீங்கும். ‘சேரும்’ எனும் வினைமுற்று ’திரு’ எனும் பெயரைத்தழுவி ‘ஆங்கே திரு சேரும்’ என்பதாம்.
‘திறன்’ எனும் பெயர் ‘அறிவுடையார்’ எனும் வினையாலணையும்பெயரைத்தழுவி ‘அறிவுடையார்திறன்’ என்னும் தொகையாகும். இத்தொகை ‘அறிவுடையாரதுதிறன்’ எனவிரியும். ‘அறிவுடையார்திறனறிந்து’ என பொருள்படும். தழுவும் சொற்களே புணரும்.
‘சேரும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று ‘திறன்’ எனும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறனறிந்து வெஃகா வறிவுடையார் சேரும்
திறனறிந் தாங்கே திரு.”
குறள் – ௱௮௰. (அச்சில் உள்ளவாறு.)
“இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.”
இறல் = இறுதி.
விறல் = வெற்றி.
செருக்கு = உறுதி.
“எண்ணாது வெஃகின் இறலினை ஈனும். வேண்டாமை என்னும் செருக்கு விறலினை ஈனும்” என்பதாம். இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘என்னும்’ எனும் இடைச்சொல் வேண்டாமை எனும் பெயருடன் புணர்ந்தபின் மீளவும் செருக்கு எனும் பெயருடன் புணராது. ஒரே இடைச்சொல் ஒரு பெயர்க்கு பின்னொட்டாகவும் மற்றொரு பெயர்க்கு முன்னொட்டாகவும் வராது.
செம்மைவடிவம் —
“இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னும் செருக்கு.”
எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.



