
குறள் – ௮௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு).
“அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.”
இன்மை = இல்லாமை.
பிறிது = பிற, ஏனைய.
இன்மையா = இல்லாமையாக.
வையாது = கொள்ளாது.
“இன்மையுள் இன்மை அறிவின்மை பிறிதின்மையின்மையா உலகு வையாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இல்லாமையுள் இன்மை அறிவின்மை. பிற இல்லாமைகளை இல்லாமையாக உலகு கொள்ளாது” என்பதாம்.
‘அறிவின்மை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘இன்மையுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உலகு வையாது’ என்பது ‘வையாதுலகு’ என முன்பின் மாறிவந்த வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
யின்மையா வையாது* உலகு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு).
“அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் றவம்.”
நெஞ்சு = மனம்.
உவந்து = விரும்பி.
ஈதல் = கொடுத்தல்.
பிறிதியாதும் = வேறெதுவுமில்லை.
தவம் = பேறு.
“அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பெறுவான்றவம் பிறிது யாதும் இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவிலான் மனம்விரும்பி கொடுத்தல் அதனைப்பெறுவானது பேற்றினாலன்றி அதற்கு வேறெந்த காரணமும் இல்லை” என்பதாம்.
‘அறிவிலான்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘யாதும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது
செம்மைவடிவம் —
“அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் றவம்.”
குறள் – ௮௱௪௰௧௩ (அச்சில் உள்ளவாறு).
“அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது.”
பீழிக்கும் = வருத்தும், துன்புறுத்தும்.
பீழை = துன்பம்
செறுவார் = பகைவர்.
அரிது = இயலாது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அறிவிலார் தமக்கு தாமே செய்துகொள்ளும் துன்பங்களை அவர்தம் பகைவர்க்கும் செய்தல் இயலாது” என்பதாம்.
‘தாந்தம்மை’ என்பது பொருள்மயங்குப்புணர்ச்சி. தாம், தம் என்னும் மறுபெயர்ச்சொற்கள் தம்முள் புணரா. இவை முன்பின் மாறிநின்று ‘தமக்கு தாமே’ எனப்பொருள் தரும். ‘தம்மை’ என்பதில் இரண்டாம்வேற்றுமைவுருபு நான்காம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
‘செறுவார்க்கும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்த லரிது.”
குறள் – ௮௱௪௰௪ (அச்சில் உள்ளவாறு).
“வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.”
வெண்மை= புல்லறிவு, அறிவின்மை.
ஒண்மை = விளங்கிய அறிவு.
செருக்கு = தன்முனைப்பு (ஆணவம்).
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“புல்லறிவெனப்படுவது யாதெனின் விளங்கிய அறிவினர் யாமென்னும் தன்முனைப்பு” என்பதாம்.
‘படுவது’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘என’ என்னும் மற்றுமொரு விளக்கயிடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது. எனப்படுவது ‘என்பது’ எனும் பொருளது.
‘எனின்’ என்னும் காரணயிடைச்சொல் ‘யாது’ என்னும் வினாவுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘யாமென்னும்’ புணர்ச்சியில் ‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘யாம்’ என்னும் மறுப்பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“வெண்மை யெனப்படுவது* யாதெனின் ஒண்மை
யுடையம்யா மென்னும் செருக்கு.”
* குற்றியலுகரமாகிய துகரம் குற்றியலிகரமாக திரியாது; அலகுபெறாது.
குறள் – ௮௱௪௰௫ (அச்சில் உள்ளவாறு).
“கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும்.”
கல்லாத = கற்காத, அறியாத.
மேற்கொண்டு = ஈடுபட்டு.
ஒழுகல் = செயல்.
வல்லதூஉம் = தேர்ந்ததிலும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கற்றறியாததில் ஈடுபட்டு செய்து பிழைபடுதல் குற்றமில்லாமல் தேர்ந்து செய்யும் செயல்களிலும் பிறர்க்கு ஐயத்தைத்தரும்” என்பதாம்.
‘கொண்டு’ என்னும் வினையெச்சம் ‘ஒழுகல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வல்லதூஉம் ’என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கல்லாத மேற்கொண்டு* ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயந் தரும்.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௪௰௬ (அச்சில் உள்ளவாறு).
“அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி.”
அற்றம் = மானக்கேடு, இழிவு.
புல்லறிவு = சிற்றறிவு.
தம்வயின் = தம்மிடம்.
மறையாவழி = நீக்காதபோது.
ஓ = அசைநிலை.
“தம்வயின் குற்றம் மறையாவழி அற்றம் மறைத்தல் புல்லறிவு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஓ’ அசைச்சொல்.
“தமது குற்றத்தை நீக்காதபோது அக்குற்றத்தால் நேர்ந்த இழிவை மறைத்தல் சிற்றறிவு” என்பதாம்.
அற்றம், குற்றம் என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தம்வயின்’ என்பதன்கண் ‘இடம்’ என்னும் பொருளில் வந்த ‘வயின்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தம்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.”
குறள் – ௮௱௪௰௭ (அச்சில் உள்ளவாறு).
“அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.”
அருமறை = அரிய அறிவு.
சோரும் = தளரும்.
பெருமிறை = மிக்க கேடு, பேரழிவு.
செய்யும் = செய்வான்.
“அருமறை சோரும் அறிவிலான் தனக்கு தானே பெருமிறை செய்யும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அரிய அறிவினைப்பெறுவதில் தளரும் அறிவிலான் தனக்கு தானே பெருங்கேட்டினைச்செய்து கொள்வான்” என்பதாம்.
‘சோரும் அறிவிலான்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.”
குறள் – ௮௱௪௰௮ (அச்சில் உள்ளவாறு).
“ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
போஓ மளவுமோர் நோய்.”
ஏவவும் = கட்டளையிட்டும், சொல்லியும்.
செய்கலான் = செய்யான்.
தேறான் = தெளியான், அறியான்.
நோய் = துன்பம்.
“சொல்லியும் செய்யான் தானாகவும் அறியான் அவ்வுயிர் நீங்குமளவும் துன்பப்படும்” என்பதாம்.
‘ஏவவும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘செய்கலான்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல் எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.
‘தேறான்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘போஓமளவும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒ மளவும்ஓர் நோய்.”
குறள் – ௮௱௪௰௯ (அச்சில் உள்ளவாறு).
“காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு.”
காணாதான் = ஒன்றுமறியான் (புல்லறிவாளன்).
காட்டுவான் = கற்பிப்பான்.
காணான் = கற்பித்தலை ஏற்க காணான்.
காணாதான் = ஒன்றுமறியான் (புல்லறிவாளன்).
கண்டானாம் = (கற்பிப்பானை) அறிந்தானாம்.
தான் கண்டவாறு = தன்னைப்போல புல்லறிவாளனாக.
“காணான் தான் காணாதாற்காட்டுவான். காணாதான் தான் கண்டவாறு கண்டானாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறியாதான் தான் அறியாததைக்கற்பிப்பான். கற்பானும் அறியாதானது அறிவின்மையையே கண்டானாம்” என்பதாம்.
‘காணாதது’ என்னும் பொருள்தரும் ‘காணாது’ என்னும் வினையுடன் ‘ஆல்’ என்னும் அசைச்சொல் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
‘கண்டானாம்’ என்பதன்கண் வந்த ‘ஆம் (ஆகும்)’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“காணாதால் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.”
குறள் – ௮௱௫௰ (அச்சில் உள்ளவாறு).
“உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.”
உலகத்தார் = உயர்ந்தோர்.
இல் = இல்லை.
வையம் = உலகம்.
அலகை = பேய்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உயர்ந்தோரால் உண்டெனப்படுவதை இல்லையென்பான் உலகத்தில் பேயாக கருதப்படுவான்; மாந்தனாக கருதப்படான்” என்பதாம்.
“உயர்ந்தோரால் ‘உண்டெனப்படுவதை இல்லையென்பான்’ என்னுந்தொடர் ‘உலகத்தாருண்டென்பதில்லென்பான்’ என்னும் நெடுந்தொடரெழுவாயாக வந்தது.
‘வையத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘வையம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்து*
அலகையா வைக்கப் படும்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



