ரோசாப் பூ என்பதற்கான தமிழ்ப்பெயர்!

ரோசா மலருக்கான தமிழ்ப் பெயரை உங்களால் எங்குமே கண்டுகொள்ள முடியாது .. அதற்கான சான்றுகள் தமிழர்களின் பண்டைத்தமிழ் இலக்கியங்கள் எதிலுமே காணமுடியாது .
சங்கப்புலவர்களுள் முக்கியமானவரான கபிலர் இயற்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
99 மலர்களின் பெயர்கள் கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகிறார் கபிலர்.
“ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
உரிது நாறு அவிழ்தொத்து உந்துழ் கூவிளம்
எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வால்பூங் குடசம்
எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லினர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமலர் ஆவிரை வேரல் சூரல்……..
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள்தாள் தாமரை
ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி”
இப்பூக்களின் பெயர்களை நிரைப்படுத்துவது நம் வண்டமிழுக்குக் கிடைத்த அரிய செல்வமாகும்.
இப்படி கபிலரின் பாடலிலும் கூட ரோசா இடம்பெறவில்லை .
ரோசா மலரானது மொகலாயர்கள் , இசுலாமியர்கள் வருகைக்குப் பின்னரே இலங்கை இந்தியா போன்ற ஆசியக் கண்டங்களில் பயிரிடப்பட்டிருக்கிறது .ஏனோ அதற்கு தமிழ்ப் பெயர் சூட்டப்படவில்லை என்பதே உண்மை .
குருவகம், எயிறு , இளஞ்சிவப்பு மற்றும் வெண்சிவப்பு என்பன ரோசு என்ற நிறத்திற்கான தமிழ்ப் பெயர்கள் . ரோசாப் பூவானது எத்தனை நிறங்களில் பூக்கிலும் ரோசு என்ற நிறத்தை வைத்தே அதற்கான பெயரும் அமைந்துள்ளது .
ரோசாவானது மலர்களிலேயே அழகான மலர் . ரோசாவை பிடிக்காது என்று யாரும் கூறுவதும் இல்லை . மலர்களில் சிறந்த இந்த மலருக்கு குருவகம் என்ற பெயரை இட்டால் காரணப் பெயராகவும் ரோசு என்கின்ற ஆங்கில நிறத்திற்கான தமிழ்ச் சொல்லாகவும் அமையும்.
தமிழர் பண்பாட்டோடும் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்து பயணப்படும் பூவான குருவகப்பூவைத் தமிழில் சொல்வதால் அப்பூவிற்கான தமிழ்ப்பெயரொன்று தமிழர்களுக்குக் கிடைப்பதோடு , குருவகம் என்ற நிறமும் தங்கு தடையின்றி தமிழர்களில் வாயில் நுழையட்டுமே.
எழுத்தாக்கம் : துளிவானொலி




