இலக்கணம்இலக்கியம்தமிழ்நன்னூல்படைப்புகள்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி

பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௨௦. பயனில சொல்லாமை.

குறள் – ௱௯௧. (அச்சில் உள்ளவாறு.)

“பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.”

முனிய = வெறுப்ப.
எள்ள = இகழ.

‘முனிய’ எனும் வினையெச்சம் ‘பயன்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘சொல்லுவான்’ என்னுமிடத்தில் கருத்தின் இரண்டாம்நிலை தொடங்குகிறது. இவ்விடத்தில் விட்டிசை நேர்ந்து கருத்துணர்ச்சி ஏற்படும். விட்டிசைக்கும் இடங்கள் புணரா.

‘எல்லாரும்’ என்பதில் ‘எல்லாராலும்’ என்பதாக மூன்றனுருபு விகாரத்தால் தொக்கதென பரிமேலழகனார் விளக்குகின்றார்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“பல்லார் முனிய பயனில சொல்லுவான்
எல்லாரு மெள்ளப் படும்.”

குறள் – ௱௯௨. (அச்சில் உள்ளவாறு.)

“பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.”

நயனில = இன்னாத.
நட்டார்கண் = நண்பர்களிடத்து.

“பல்லார்முன் பயனில சொல்லல் நட்டார்கண் நயனில செய்தலின் தீது”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘முன்“ எனும் இடைச்சொல் காலத்தைக்குறித்தும் இடத்தைக்குறித்தும் வரும். இடத்தைக்குறித்தால் புணராது.
காலத்தைக்குறித்தால் புணரும். பல்லார்முன் என்பதில் இடத்தைக்குறித்ததால் புணராது.

‘சொல்லனயனில’ என்பதை பிரித்தாலன்றி கொண்டுகூட்டி பொருள்காண முடியாது. ஒரு புணர்மொழி பிரிந்து வேறிடம்சென்று பொருள்தருமானால் அவற்றைப்புணர்த்தக்கூடாது.

‘நட்டார்கண்’ என்பதில் கண்ணுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும். ஒரே வேற்றுமைவுருபு பெயர்க்கு பின்னொட்டாகவும் தொழிற்பெயர்க்கு முன்னொட்டாகவும் வராது.

‘செய்தலின்’ என்பதில் இன்னுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும். ஒரே வேற்றுமைவுருபு தொழிற்பெயர்க்கு பின்னொட்டாகவும் பெயர்க்கு முன்னொட்டாகவும் வராது.

செம்மைவடிவம் —
“பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.”

குறள் – ௱௯௩. (அச்சில் உள்ளவாறு.

“நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.”

நயனிலன் = நன்மையிலன்.
பாரித்து = விரித்து.

“பாரித்து பயனிலவுரைக்கும் உரை நயனிலன் என்பதைச்சொல்லும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.

குறள் – ௱௯௪. (அச்சில் உள்ளவாறு.)

“நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாரா
பண்பில்சொற் பல்லா ரகத்து.”

பல்லாரகத்து = பலரிடமும்.

“பல்லாரகத்து (சொல்லினும்) பயன்சாரா பண்பில்சொல் நயன்சாரா; நன்மையின் நீக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘சொல்லினும்’ என்பது சொல்லெச்சம்.

பண்பில்சொல் என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

“பயன்சாரா பண்பில்லாத சொற்களை பலரிடத்தும் சொல்வானை முறை சேராது. அவனை நன்மையிலிருந்து நீக்கும்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாரா
பண்பில்சொல் பல்லா ரகத்து.”

குறள் – ௱௯௫. (அச்சில் உள்ளவாறு.)

“சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.”

நீர்மை = முறைமை.

“நீர்மையுடையார் பயனில சொலின் சீர்மை சிறப்பொடு நீங்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“முறைமை (ஒப்புரவு) உடையார் பயனில்லாதவைகளைச்சொன்னால் அவர்தம் பெருமை, மதிப்பு ஆகியன நீங்கும்” என்பதாம்.

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.

குறள் – ௱௯௬. (அச்சில் உள்ளவாறு.)

“பயனிற்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.”

பாராட்டுவானை = பலகாலும் சொல்வானை.

“பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்; மக்கட்பதடி எனல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பயனிலாச்சொற்களை பலகாலும் சொல்லுவானை மகனென்று சொல்லற்க. மக்களுள் பதரென்று சொல்க. ‘மகனெல்’ என்புழி ‘அல்’ என்பது எதிர்மறையிடைநிலை. ‘பதடியெனல்’ என்புழி அல்லீற்று வியங்கோள்.

‘பயனிற்சொல்’ என்பதில் வந்த ‘இல்’ என்பது ‘இல்லை’ எனும் எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. வினைமுற்று பெயருடன் புணராது.

‘மக்கட்பதடி’ என்பது திரிபில்பெயர்ச்சொல் தொடரொலிப்பின்பொருட்டு ‘எனல்’ என்னும் வியங்கோள்வினைமுற்றுடன் புணர்ந்தது. இது பொருள்திரியாப்புணர்ச்சி.

செம்மைவடிவம் —
“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.”

குறள் – ௱௯௭. (அச்சில் உள்ளவாறு.)

“நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.”

பயனில = பயனற்ற.

“சான்றோர் நயனில சொல்லினுஞ் சொல்லுக; பயனில சொல்லாமை நன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. சான்றோர் எனும் எழுவாய் ஈரிடத்தும் சென்று பொருந்தும்.

‘சொல்லினும்’ என்பது ஏதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.”

குறள் – ௱௯௮. (அச்சில் உள்ளவாறு.)

“அரும்பய னாயு மறிவினர் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.”

“அரும்பயனை ஆயும் அறிவினர் பெரும்பயனில்லாத சொல்லைச்சொல்லார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘அரும்பயனாயுமறிவினர்’ என்பது நெடுந்தொடரெழுவாய்.

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.

குறள் – ௱௯௯. (அச்சில் உள்ளவாறு.)

“பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்.”

பொருடீர்ந்த → பொருள்தீர்ந்த = பயன் நீங்கிய.
பொச்சாந்தும் = மறந்தும்.
மருடீர்ந்த → மருள்தீர்ந்த = மயக்கம் நீங்கிய.

“மருள்தீர்ந்த மாசறு காட்சியவர் பொச்சாந்தும் பொருள்தீர்ந்த சொல்லார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

பொருடீர்ந்த, மருடீர்ந்த என்பதில் வந்த பொருள், மருள் என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இப்பெயர்ச்சொற்கள் ‘தீர்ந்த’ எனும் வினைச்சொல் புணராது.. பெயர்ச்சொல் வினையெச்சத்துடன் புணராது.

‘பொச்சாந்தும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.”

குறள் – ௨௦௦. (அச்சில் உள்ளவாறு.)

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.”

“சொல்லில் பயனுடைய சொல்லுக. சொல்லில் பயனிலாச்சொல் சொல்லற்க”. என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. சொல் என்பதனை பெயர்ச்சொல்லாக கொண்டு இவ்வாறு பொருளுரைக்கலாம்.

சொல் என்பதை வினைச்சொல்லாகவும் கொண்டு இக்குறளுக்கு பொருளுரைக்கலாம்.
அப்போது ‘சொல்லின்’ எனும் வினையெச்சம் ஆகும்.

பெயர்சொல்லாகி ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபேற்றாலும், வினையெச்சமாகி ‘இன்’ என்னும் காலயிடைநிலையை ஏற்றாலும் ‘பயன்’ என்னும் பெயருடன் புணராது. புணர்ச்சியில் லகரமும் னகரமும் றகரமாகவே திரியும். பொருண்நுட்பங்கருதி றகரத்திரிபை ஏற்க.

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.

எழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button