இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — காமத்துப்பால். இயல் — கற்பியல். தலைப்பு - ௱௨௰௨. கனவுநிலைவுரைத்தல். தலைமகள் தான் கண்ட கனவினது நிலையை தோழிக்கு சொல்லுதல்.

குறள் – ௲௨௱௰௧ (அச்சில் உள்ளவாறு).

“காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.”

காதலர் = அன்புடையார் (கணவர்).
கொல் = அசைச்சொல்.
விருந்து = சிறப்பு.

“காதலர்தூதொடு வந்த கனவினுக்கு யாது விருந்து செய்வேன்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அன்புடையாரது தூதொடு வந்த கனவினுக்கு யாது சிறப்பு செய்வேன்” என்பதாம்.

கனவினுக்கு+யாது → ‘கனவினுக்கியாது’ என்பது குற்றியலிகரப்புணர்ச்சி. யாப்பின்பொருட்டு புணர்ந்தது குற்றியலிகரயெழுத்தாம் ‘கி’ அலகுபெறாது.

செம்மைவடிவம் —
“காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.”

குறள் – ௲௨௱௰௨ (அச்சில் உள்ளவாறு).

“கயலுண்கண் யானிரப்ப துஞ்சிற் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.”

கயலுண்கண் = மீன்களைப்போன்ற மைதீட்டிய விழிகள்.
இரப்ப = வேண்ட.
துஞ்சின் = துயிலின்.
கலந்தார்க்கு = அன்பில் கலந்தார்க்கு, கணவர்க்கு.
உயலுண்மை = இருக்கும் நிலை, உண்மைநிலை.
சாற்றுவேன் = எடுத்துக்கூறுவேன்
மன் = உறங்காததால் கூறயியலவில்லை என்னும் ஒழியிசைப்பொருளில் வந்த இடைச்சொல்.

“யான் இரப்ப கயலுண்கண் துஞ்சின் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன்மன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“யான் வேண்ட எனது மீன்களைப்போன்ற மைதீட்டிய விழிகள் துயிலின் கணவர்க்கு பிரிவால் யான் இருக்கும் உண்மை நிலையை எடுத்துக்கூறுவேன். கண்கள் துயிலாததால் கூறயியலவில்லை” என்பதாம்.

‘யான்’ என்பது வேறுபடுத்தப்படாத எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.

‘துஞ்சின்’ என்ற செயினென்னும் வாய்பாட்டு எதிர்காலவினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை செறிவாக உணர்த்தும்.

‘கலந்தார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘உயல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது.

செம்மை வடிவம் —
“கயலுண்கண் யான்இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு*
உயலுண்மை சாற்றுவேன் மன்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௲௨௱௰௩ (அச்சில் உள்ளவாறு).

“நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர்.”

நனவினான் = நேரில். மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
நல்காதவரை = அன்புசெய்யாதவரை.
கனவினான் = கனவின்கண். மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
காண்டலின் = கண்டதால்.
உண்டு = உள்ளது.

“நனவினான் நல்காதவரை கனவினால் காண்டலின் என்னுயிர் உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நேரில் வந்து அன்புசெய்யாதவரை கனவின்கண் கண்டதால் எனது உயிர் நீங்காதுள்ளது” என்பதாம்.

‘நனவினான்’ என்பதன்கண் ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியை பெற்று ‘நனைவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நல்காதவரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபெற்ற சொல் ‘கனவு’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘கனவினால்’ என்பதன்கண் ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியை பெற்று ‘கனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காண்டலின்’ என்ற காரணப்பொருளில் வந்த செயினென்னும் வாய்பாட்டு எதிர்காலவினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை உணர்த்தும். புணரின் காரணப்பொருட்செறிவு குன்றும்.

‘உண்டு’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நனவினான் நல்கா தவரை கனவினால்
காண்டலின் உண்டு*என் னுயிர்.”

*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

குறள் – ௲௨௱௰௪ (அச்சில் உள்ளவாறு).

“கனவினா னுண்டாகுங் காம நனவினா
னல்காரை நாடித் தரற்கு.”

கனவினான் = கணவின்கண். மூன்றாம்வேற்றுமைக்குரிய ஆனுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
நனவினான் = நேரில் வந்து. மூன்றாம்வேற்றுமைக்குரிய ஆனுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
நல்காரை = அன்புசெய்யாரை.
நாடிதரற்கு → நாடிதருவதால் = தேடித்தருவதால். நான்காம்வேற்றுமைக்குரிய குவ்வருபு மூன்றாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
காமம் = காதல், இன்பம்.

“நனவினான் நல்காரை நாடித்தரற்கு கனவினான் காமம் உண்டாகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நேரில் வந்து அன்புசெய்யாரை தேடிக்கொண்டு வந்து கனவு தருவதால் அக்கனவினால் இன்பம் உண்டாகும்” என்பதாம்.

‘கனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘கனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘நனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உண்டாகும் காமம்’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

‘காமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.”

குறள் – ௲௨௱௰௫ (அச்சில் உள்ளவாறு).

“நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே யினிது.”

நனவினான் = நேரில். மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
ஆங்கே = அப்பொழுதே.
இனிது = இன்பமானது.

“ஆங்கே நனவினான் கண்டதூஉம் (இனிது) கனவும் தான்
கண்டபொழுதே இனிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘இனிது’ என்பது முன்னின்றும் பொருள்தரும்.

“நேரில் கண்டதும் அப்பொழுதே இன்பமானது. இப்போது கனவிலும் கண்டபொழுதே இன்பமானது. இருநிலையும் ஒத்த இன்பத்தை தருகிறது” என்பதாம்.

‘நனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘நனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கண்டதும்’ என்னும் வினையெச்சம் ‘ஆங்கே’ என்னும் காலச்சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கனவுந்தான்’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி. இதன்கண் வந்த ‘தான்’ என்பது தலைமகளைக்குறிக்கும் மறுபெயர்ச்சொல் புணர்ச்சியில் இடைச்சொல்லாக மயங்கும்

‘கண்டபொழுதே’ என்னும் அறுதியிடும் தேற்றேகாரச்சொல் புணரின் தேற்றேகாரச்செறிவு குன்றும். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.”

குறள் – ௲௨௱௰௬ (அச்சில் உள்ளவாறு).

“நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.”

கனவினான் = கனவின்கண்.
மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
காதலர் = அன்புர்.
நீங்கலர்மன் = பிரியார். ‘மன்’ என்பது ‌‘பிரிவார்’ என்னும் பொருள்தரும் ஒழியிசையிடைச்சொல்.

“நனவெனவொன்று இல்லையாயின் கனவினான் (வந்த) காதலர் நீங்கலர்மன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘வந்த’ என்பது சொல்லெச்சம்.

“நனவெனவொன்று இல்லையாயின் கனவின்கண் வந்த அன்பர் பிரியார்” என்பதாம்.

‘நனவெனவொன்று’ என்பது தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘இல்லையாயின்’ என்னும் வினையெச்சம் ‘கனவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘கனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நனவென வொன்று*இல்லை யாயின் கனவினான்
காதலர் நீங்கலர் மன்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

குறள் – ௲௨௱௰௭ (அச்சில் உள்ளவாறு).

“நனவினா னல்காக் கொடியர் கனவினா
னென்னெம்மைப் பீழிப் பது.”

நனவினான் = நேரில்வந்து. மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
நல்காக்கொடியர் = அன்புசெய்யா வன்னெஞ்சர்.
கனவினான் = கனவின்கண். மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
பீழிப்பது = வருத்துவது.
என் = ஏன்.

“நனவினான் நல்காக்கொடியர் கனவினான் (வந்து) எம்மைப்பீழிப்பது என்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘வந்து’ என்பது சொல்லெச்சம்.

“நேரில்வந்து அன்புசெய்யா வன்னெஞ்சர் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது ஏன்” என்பதாம்.

‘நனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘நனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘கனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘என்‘ என்னும் வினாப்பெயர் புணராது தனித்துநின்று வினாப்பொருளை செறிவாக உணர்த்தும்.

செம்மைவடிவம் —
“நனவினான் நல்காக் கொடியர் கனவினான்
என்எம்மைப் பீழிப் பது.”

குறள் – ௲௨௱௰௮ (அச்சில் உள்ளவாறு).

“துஞ்சுங்காற் றோண்மேல ராகி ஒஎவிழிக்குங்கா
னெஞ்சத்த ராவர் விரைந்து.”

துஞ்சுங்கால் = துயிலும்போது.
தோள்மேலராகி = தோளின்மேல் இருந்து.
நெஞ்சத்தராவர் = நெஞ்சில் குடிபுகுவார்.

“துஞ்சுங்கால் தோண்மேலராகி விழிக்குங்கால் விரைந்து
நெஞ்சத்தராவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“துயிலும்போது தோளின்மேல் இருந்து விழிக்கும்போது விரைந்து நெஞ்சில் குடிபுகுவார். கனவின்கண் தழுவுபவர் விழிக்கும்போது இல்லாராகி நெஞ்சின்கண் நினைவாகிறார்” என்பதாம்

‘துஞ்சுங்கால்’ என்னும் வினையெச்சம் ‘தோள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.‌

‘விழிக்குங்கால்’ என்னும் வினையெச்சம் ‘நெஞ்சத்தவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.‌

செம்மைவடிவம் —
“துஞ்சுங்கால் தோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து.”

குறள் – ௲௨௱௰௩ (அச்சில் உள்ளவாறு).

“நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.”

நனவினான் = நேரில்வந்து. மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
நல்காரை = அன்புசெய்யாரை.
நோவர் ‌= வருந்துவர்.
கனவினான் = கனவின்கண். மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.

“கனவினான் காதலர்காணாதவர் நனவினான் வந்து நல்காரை நோவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கனவின்கண் வந்து அன்புசெய்வாரை காணாதவர் நேரில்வந்து அன்புசெய்யாரை நினைத்து வருந்துவர்” என்பதாம்.

‘நனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘நனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘கனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காதலர்க்காணாதவர்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. இது‘காதலரை காணாதவர்‌’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற ‘காதலரை’ என்னும் சொல் ‘காணாதவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணா தவர்.”

குறள் – ௲௨௱௨௰ (அச்சில் உள்ளவாறு).

“நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்
காணார்கொ லிவ்வூ ரவர்.”

நனவினான் = நேரில். மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
நம்நீத்தார் = நம்மை நீங்கினார்.
கனவினான் = கனவின்கண்.
மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது.
காணார்கொல் = காணார். ‘கொல்’ என்பது அசைச்சொல்.

“கனவினான் காணார்கொல் இவ்வூரவர் நனவினான் நம்நீத்தாரென்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நம்மேல் அன்புசெய்வார் நமது கனவின்கண் வருவதைக்காணாத இவ்வூரார் உண்மையாகவே அவர் நம்மை நீங்கினாரென்பர்” என்பதாம்.

‘நனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘நனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கனவினான்’ என்பதன்கண் வந்த மூன்றாம்வேற்றுமைக்குரிய ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘கனவு’ என்னும் பெயருடன் புணர்ந்து ஏழாம்வேற்றுமைப்பொருளைத்தந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காணார்கொல்’ என்பதன்கண் வந்த ‘கொல்’ என்னும் அசைச்சொல் ‘காணார்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நனவினான் நம்நீத்தா ரென்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button