
குறள் – ௲௫௰௧ (அச்சில் உள்ளவாறு).
“இரக்க விரத்தக்கார்க் காணின் கரப்பி
னவர்பழி தம்பழி யன்று.”
இரக்க = வேண்டுக, கேட்க.
இரத்தக்கார் = தகுதியுள்ள கொடையாளர்.
காணின் = கண்டால்.
கரப்பின் = மறைப்பின்.
அன்று = ஆகாது.
“இரத்தக்கார்காணின் இரக்க கரப்பின் அவர்பழி தம்பழியன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தகுதியுள்ள கொடையாளரைக்கண்டால் வேண்டுக. எதையும் கொடாது மறைப்பாராயின் அஃது அவரது குற்றம்; வேண்டுவோரது குற்றமாகாது” என்பதாம்.
‘இரக்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இரத்தக்கார்காணின்’ என்பது ‘இரக்கத்தக்காரைக்காணின்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகையாகும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும்.
‘கரப்பின்’ என்னும் வினையெச்சம் ‘அவர்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று.”
குறள் – ௲௫௰௨ (அச்சில் உள்ளவாறு).
“இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை
துன்ப முறாஅ வரின்.”
இரத்தல் = வேண்டல்.
இரந்தவை = வேண்டியவை.
துன்பமுறாஅ → துன்பமுறாது = துன்பமின்றி.
வரின் = வந்தால், பெறின்.
“இரந்தவை துன்பமுறாஅ வரின் இரத்தல் ஒருவற்கு இன்பம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கொடையாளரது பண்பாட்டினால் வேண்டியவை துன்பமின்றி பெறின் வேண்டல் ஒருவற்கு இன்பமாகும்” என்பதாம்.
‘இன்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இரத்தல்’ என்பது தொழிற்பெயர். ‘ஒருவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் தொழிற்பெயருடன் புணராது.
‘இரத்தலிரந்தவை’ என்பது பொருளற்ற புணர்ச்சி. மேலும் செய்யுளில் ‘இரத்தல்’ என்பது கருத்துமுடிவினைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருமிடங்கள் புணரா.
செம்மைவடிவம் —
“இன்பம் ஒருவற்கு* இரத்தல் இரந்தவை
துன்ப முறாஅ வரின்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௫௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோ ரேஎ ருடைத்து.”
கரப்பில்லா = மறைக்காத.
கடன் = கடமை.
இரப்பு = வேண்டல்.
ஏஎர் → ஏர் = அழகு, விரும்பத்தக்கது.
“மறைத்தலறியா உள்ளத்தால் கொடுத்தல் தமது கடமையென உணர்வார்முன் நின்று வேண்டுதல் விரும்பத்தக்கது” என்பதாம்.
’நெஞ்சின்’ என்பதன்கண் வந்த ’இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘முன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அறிவார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் உறவாகும். ‘நின்று’ என்னும் வினையெச்சத்துக்கு முன்னொட்டாகாது.
‘நின்று’ என்னுமிடத்தில் விட்டிசைத்து பொருணர்ச்சியைப்பெறுக. விட்டிசைக்குமிடம் புணராது.
‘இரப்பும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல் . சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று*
இரப்பும்ஓ ரேஎ ருடைத்து.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௫௰௪ (அச்சில் உள்ளவாறு).
“இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு.”
இரத்தல் = வேண்டல்.
ஈதல் = கொடுத்தல்.
கரத்தல் = மறைத்தல்.
தேற்றாதார் = அறியாதார்.
மாட்டு = இடத்து.
“கரத்தல்கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் ஈதலே போலும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மறைத்தலை கனவிலும் அறியாதாரிடத்து வேண்டுவதும் தருவதைப்போன்றதே” என்பதாம்.
கரத்தலறியா ஈவாரும் வேண்டியபோதே கொடுப்பதால் அவ்வேண்டலே ஈதலாகிறது.
‘இரத்தலும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல் . சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘போலும்’ என்னும் உவமவுருபு எதனுடனும் புணராது.
‘கனவிலும்’ என்பது நிகழாது என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மை. எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.”
குறள் – ௲௫௰௫ (அச்சில் உள்ளவாறு).
“கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது.”
கரப்பிலார் = மறைக்காதார்.
வையகத்து = உலகத்து.
உண்மையான் = உள்ளமையால். கண்ணின்று (கண்+நின்று) = கண்ணெதிரே நின்று.
மேற்கொள்வது = இரப்பினை மேற்கொள்வது.
“கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தம்மிடமுள்ளதை மறைக்காது கொடுக்கும் கொடையாளர் உலகத்தில் உள்ளதால் ஒருவர்முன் நின்று உயிரோம்பற்பொருட்டு வேண்டலை மேற்கொள்கின்றனர்” என்பதாம்.
‘ஆன்’ என்னும் காரணயிடைச்சொல் ‘உண்மை’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நின்று’ என்னும் வினையெச்சம் ‘இரப்பவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“கரப்பிலார் வையகத் துண்மையான் கண்ணின்று*
இரப்பவர் மேற்கொள் வது.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௫௰௬ (அச்சில் உள்ளவாறு).
“கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்.”
கரப்பிடும்பை = மறைத்தலென்னும் துன்பம்.
நிரப்பிடும்பை = வறுமையால் வரும் துன்பம்.
ஒருங்கு = ஒருசேர.
கெடும் = நீங்கும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“மறைத்தலென்னும் நோயில்லாதாரைக்காணின் வறுமையால் வரும் துன்பங்களெல்லாம் ஒருசேர நீங்கும்” என்பதாம்.
‘காணின்’ என்னும் வினையெச்சம் ‘நிரப்பு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லாம் ஒருங்கு கெடும்.”
குறள் – ௲௫௰௭ (அச்சில் உள்ளவாறு).
“இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து.”
இகழ்ந்து = இழித்துப்பேசி.
எள்ளாது = நகைக்காது.
ஈவாரை = கொடுப்பாரை.
காணின் = கண்டால்.
உள்ளம் = நெஞ்சம்.
உள்ளுள் = உள்ளே.
உவப்பது = இன்புறுவது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இழித்துப்பேசி நகைக்காது கொடுப்பாரைக்கண்டால் நெஞ்சம் உள்ளே இன்புறும்” என்பதாம்.
‘எள்ளாது’ என்னும் வினையெச்சம் ‘ஈவார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘மகிழ்ந்து’ என்னும் வினையெச்சம் ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘உள்ளம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இகழ்ந்தெள்ளாது* ஈவாரைக் காணின் மகிழ்ந்து*உள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௫௰௮ (அச்சில் உள்ளவாறு).
“இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால
மரப்பாவை சென்றுவந் தற்று.”
இரப்பார் = வேண்டுவார்.
ஐ = அசை நிலை.
ஈர்ங்கண் = குளிர்ந்த.
மாஞாலம் = பெரிய உலகம்.
மரப்பாவை = மரப்பதுமை.
அற்று = அது போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஈயென வேண்டுவார் இல்லையாயின் குளிர்ந்த இப்பெரிய உலகம் ஆட்டுவிக்கப்படும் மரப்பதுமைகள் வந்துசெல்வது போன்றது” என்பதாம்.
ஐகார அசைநிலை ‘இரப்பார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இல்லாயின்’ என்னும் வினையெச்சம் ‘ஈர்ங்கண்மாஞாலம்’ என்னும் பல்லடைபெற்ற பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஞாலம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.”
குறள் – ௲௫௰௯ (அச்சில் உள்ளவாறு).
“ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண்
மேவா ரிலாஅக் கடை.”
ஈவார்கண் = கொடையாளரிடத்து.
என் உண்டாம் = என்ன உண்டு.
தோற்றம் = புகழ், மதிப்பு.
இரந்துகோள் = வேண்டிப்பெறும்.
மேவார் → மேவுவார் = விரும்புவார்.
இலாஅக்கடை → இலாக்கடை = இல்லாதபோது.
“இரந்துகோள் மேவார் இலாஅக்கடை ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் ”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒன்றனை வேண்டிப்பெற விரும்புவார் இல்லாதபோது கொடையாளரிடத்து என்ன புகழுண்டாம்; யாதுமில்லை” என்பதாம்.
‘ஈவார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘ஈவார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்னுண்டாம்’ என்பது வினா. இவ்வினா எதனுடனும் புணராது தனித்துநின்று வினாப்பொருளை சிறப்பிக்கும்.
‘தோற்றம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இரந்துகோண்மேவார்’ என்பது நெடுந்தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோண்
மேவார் இலாஅக் கடை.”
குறள் – ௲௬௰ (அச்சில் உள்ளவாறு).
“இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி.”
இரப்பான் = வேண்டுவோன். வெகுளாமை = சினவாமை.
நிரப்பிடும்பை = வறுமையால் வரும் துன்பம்.
சாலும் = நிறைவான.
கரி = சான்று.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வேண்டுவோன் சினவாமை வேண்டும். ஏன். வேண்டுவோனது வறுமையால் வந்த துன்பமே அதற்குரிய நிறைவான சான்று” என்பதாம்.
‘தானேயும்’ என்பது தேற்றேகாரமும் சிறப்பும்மையும் பெற்று அறுதிப்பொருள் தருஞ்சொல். புணரின் அறுதிப்பொருள் குன்றும். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘சாலும் கரி’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.”
நன்றி.
வாழ்க தமிழ்.




