
உம்மைப்புணர்ச்சி.
‘உம்’ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் எண்பொருளையும் தரும்.
சிறப்பும்மையென்பது உயர்வு, இழிவென இருவகைப்படும். எச்சவும்மையென்பது இறந்தது தழீஇய, எதிரது தழீஇயயென இருவகைப்படும்.
மேற்கூறிய வரிசைமுறையில் எடுத்துக்காட்டுகளைக்காண்போம்.
• ‘கற்றிலன் ஆயினும் கேட்க.’ இத்தொடரில் ‘கற்றிலன் ஆயினும் ’ என்பதற்கு ‘கற்க’ என்னும் எதிர்மறைப்பொருளில் ‘உம்’ வந்ததால் எதிர்மறைவும்மை எனப்படும்.
• ‘வீரரும் அஞ்சும் போர்க்களம்.’ இத்தொடரில் போர்க்களத்தின் உயர்வு சொல்லப்பட்டதால் வீரரும் என்பதில் வந்த உம்மை உயர்வுச்சிறப்பும்மை எனப்படும்.
• ‘பொருட்செல்வம் பூரியார்கண்ணும் ஊள.’ இத்தொடரில் ‘பூரியாரின்’ இழிவு சொல்லப்பட்டதால் இழிவுச்சிறப்பும்மை எனப்படும். பூரியார் = அறிவற்றவர்.
• ‘வளவன் உதவினும் உதவும்.’ இத்தொடரில் வளவனின் உதவிகுறித்த ஐயம் தோன்றுவதால் ஐயவும்மை எனப்படும்
• ‘முருகனும் பேசினான்.’ இத்தொடரில் முருகனுக்குமுன் வேறுசிலரும் பேசியது பெறப்படுவதால் இஃது இறந்ததுதழீஇய எச்சவும்மை எனப்படும்.
• ‘முருகனும் பேசுவான்.’ இத்தொடரில் முருகன் பேசவுள்ளது பெறப்படுவதால் இஃது எதிரதுதழீஇய எச்சவும்மை எனப்படும்.
• ‘எல்லாரும் பேசினர்.’ இனி பேசுபவர் எவருமில்லையென எஞ்சாப்பொருளைத்தருதலால் முற்றும்மை எனப்படும்.
• ‘இரவும் பகலும் மாறிமாறி வரும்.’ இத்தொடரில் எண்ணுதற்கண் உம்மை வருதலால் எண்ணும்மை எனப்படும்.
• ‘அது பாம்புமன்று கயிறுமன்று மரக்குச்சி.’ இத்தொடரில் இன்னதென தெரிவித்ததால் தெரிநிலைவும்மை எனப்படும்.
• ‘தேன் மருந்துமாயிற்று.’ இத்தொடரில் தேன் உணவானதுடன் மருந்தும் ஆயிற்றென்பதால் ஆக்கவும்மை எனப்படும்.
எண்ணும்மை தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. எ-டு.
• ‘பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் . . . ’ என்பதில் நகரமெய்பெற்று எண்ணும்மைகள் புணர்ந்தன. இது பொருள்திரியாப்புணர்ச்சி; ஒலியியல்பினால் நிகழும் தொடரொலிப்புப்புணர்ச்சி. உம்மையடுத்து வருமொழி வல்லினமானால் மகரமெய்
இனமெல்லினமெய்யாக திரியும்.
‘உம்’ என்னும் இடைச்சொல்லின் மகரமெய் திரியாதபோது விட்டிசையை ஏற்படுத்தும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
தொடர்வோம்.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




