குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௨௩. ஈகை.

குறள் – ௨௱௩௦. (அச்சில் உள்ளவாறு.)
“சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.”
“சாதலின் இன்னாதது இல்லை. ஈதல் இயையாக்கடை அதூஉம் இனிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இனிததூஉம்’ என்னும் அளபெடை பொருள்வேறுபாட்டினைக்காட்ட விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
செம்மைவடிவம். —
“சாதலி னின்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.”
குறள் – ௨௱௨௯. (அச்சில் உள்ளவாறு.)
“இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.”
இன்னாது = தீது.
மன்ற = ஒருதலையாக.
நிரப்பிய = சேர்த்த.
தமியர் = தாமே தனித்து.
“மன்ற நிரப்பிய தாமே தனியருணல் இரத்தலின் இன்னாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஒருதலையாக தாம் சேர்தவற்றை தாமே தனியராய் உண்ணல் இரத்தலின் தீது’ என்பதாம்.
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௨௱௨௮. (அச்சில் உள்ளவாறு.)
“ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.”
கொல்= ஐயப்பொருளில்வந்த இடைச்சொல்.
தாமுடைமை = தமது பொருள்கள்.
வன்கணவர் = அருளற்றவர்.
‘தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௨௱௨௭. (அச்சில் உள்ளவாறு.)
“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.”
பாத்து = பகுத்து.
ஊண் = உணவு.
மரீஇயவனை = பழகியவனை.
தீண்டல் = அணுகல்.
‘அவனை’ என்னும் இரண்டாம்வேற்றுமையுருபேற்றசொல் வினையொடு புணருமேயன்றி ‘பசி’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
‘என்னும்’ என்ற உம்மீற்றுவுவமச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பாத்தூண் மரீஇ யவனை பசியென்னும்
தீப்பிணி தீண்ட லரிது.”
குறள் – ௨௱௨௬. (அச்சில் உள்ளவாறு.)
“அற்றா ரழிபசி தீர்த்தலஃ தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”
அற்றார் = வறியர்.
அழிபசி = எல்லா நன்மைகளும் அழியவரும் பசி.
வைப்புழி = வைக்குமிடம்.
‘வறியாராது அழிபசியைத்தீர்த்தலே பெருமைப் பெற்ற ஒருவன் அப்பொருளை வைக்குமிடம்’ என்பதாம்.
‘பொருள்பெற்றான் ஒருவன் அது வைப்புழி அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘தீர்த்தல்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அற்றா ரழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”
குறள் – ௨௱௨௫. (அச்சில் உள்ளவாறு.)
“ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.”
ஆற்றுவார் = தவமாற்றுவார்.
ஆற்றல் = வலிமை.
பசியாற்றல் = பசியைப்பொறுத்தல்.
மாற்றுவார் = போக்குவார், நீக்குவார்.
‘பசியைப்பொறுத்தல் தவமாற்றுவாரின் ஆற்றல். அவ்வாற்றலும் அப்பசியைப்போக்குவாரின் ஆற்றலுக்குப்பின்னது’ என்பதாம்.
மூன்றாஞ்சீரில் ஒரு கருத்து முடிகிறது. பசியாற்றல் என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
ஆறாஞ்சீரான ‘ஆற்றலின்’ என்பதில் இடப்பொருளில் வந்த இன்னுருபு ஆற்றல் எனும் பெயரின் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்தது; மீண்டும் வருமொழியுடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலின் பின்.”
குறள் – ௨௱௨௪. (அச்சில் உள்ளவாறு.)
“இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு.”
இன்னாது = துன்பமானது.
“நம்மிடம் இரந்தார் மேலும் சிறிது தருகயென இரக்கும்நிலைக்கு நாம் ஆளாதல் (இரக்கப்படுதல்) இன்னாதது. இரப்பவரின் இன்முகத்தைக்காணுமளவு ஈதல் வேண்டும்” என்பதாம்.
‘இன்னாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இன்னாது இரக்கப்படுதல்’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிந்து அடுத்த கருத்து தொடங்குகிறது. இக்கருத்து மாற்றத்தை உணர விட்டிசைக்கவேண்டும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
“இரந்தவரின் இன்முகம் காணுமளவு ஈயாது இரக்கப்படுதல் இன்னாது“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஈயாது’ என்பது சொல்லெச்சம்.
செம்மைவடிவம் —
“இன்னாது* இரக்கப் படுதல் இரந்தவ
ரின்முகங் காணு மளவு.”
*முற்றியலுகரமாம் துகரம் குற்றியலுகரம்போல் இவ்விடம் அலகுபெறாது.
குறள் – ௨௱௨௩. (அச்சில் உள்ளவாறு.)
“இலனென்னு மெவ்வ முரையாமை யீதற்
குலனுடையான் கண்ணே யுள.”
எவ்வம் = குற்றம்.
உரையாமை = சொல்லாமல். (செய்யாமல் என்பது இடப்பொருள்)
குலம் = உயர்குலம்.
‘இல்லை என்னும் குற்றத்தைச்செய்யாமல் (சொல்லாமல்) ஈதல் உயர்குலத்துப்பிறந்தான்கண்ணே உள்ளது’ என்பதாம்.
முதலடியின் நாற்சீர்கள் சேர்ந்து நெடுந்தொடரெழுவாய் ஆகும். அதனையடுத்து விட்டிசைக்கும். ஈதற்குலம், ஈயாக்குலம் என்னும் குலவகைகள் இல்லை. ஈதல் உயர்குலத்தின் பண்புகளுள் ஒன்று. விட்டிசைக்குமிடங்கள் புணரா.
தேற்றேகாரம் ‘கண்’ என்னும் இடனுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்தது. மீண்டும் வருமொழியுடன் புணராது. தேற்றேகாரம் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள.”
குறள் – ௨௱௨௨. (அச்சில் உள்ளவாறு.)
“நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.”
நல்லாறு = நல்வழி, நன்னெறி.
கொளல் = ஏற்றல்.
“ஏற்றல் நன்னெறியென்பார் உளராயினும் ஏற்றல் தீது. ஈதலால் மேலுலகத்தை எய்தாரென்பார் உளராயினும் ஈதலே நன்று.
‘எனினும்’ என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இல்லையென விளக்கி நின்றது” — இது பரிமேலழகனாரின் விளக்கம்.
‘எனினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘மேலுலகம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இல்லெனினும்’ என்பது எதிர்மறையை உணர்த்தும் சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“நல்லா றெனினும் கொளறீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.”
குறள் – ௨௱௨௧. (அச்சில் உள்ளவாறு.)
“வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.”
குறியெதிர்ப்பு = கைம்மாறு, மறுபயன்.
நீரது = தன்மையது.
‘ஈவதே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி .
வாழ்க தமிழ்.




