
எளியமுறையில் வெண்ணெய்க்கட்டிகை செய்யும்முறை.
தேவையான பொருட்கள்:
- ௧. ஆறுமுட்டை.
- ௨. இருநூற்றைம்பதுகிராம் மா.
- ௩. இருநூற்றைம்பதுகிராம் சீனி.(கரும்புச்சீனி பயன்படுத்துவது நல்லது).
- ௪. இருநூற்றைம்பதுகிராம் வெண்ணெய்.
- ௫. ஆறுகிராம் புளிப்பூட்டி.(சோடாத்தூள் /சமையற்றூள்)
- ௬. ஒருதேக்கரண்டி மணமூட்டி. (உங்களுக்குப்பிடித்தது).
- ௭. இரண்டுதுளி நிறமூட்டி(விரும்பினால்).
செய்முறை:
முட்டையடிக்கக்கூடிய சட்டியொன்றில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவேண்டும் .(வெள்ளைக்கரு ,மஞ்சற்கரு போன்றவற்றை தனித்தனியாகவும் அடிக்கலாம்). முட்டை எந்தளவிற்கு நன்றாக அடிக்கப்படிகிறதோ அந்தளவிற்கு கட்டிகை மென்மையானதாகவரும் . அதன்பின்னர் இன்னொரு சட்டியில் வெண்ணெய்,சீனி போன்றவற்றை ஒன்றாக இட்டு சீனிமுழுவதும் கரைந்து வெண்ணெயுடன் ஒன்றிவரும்வரை நன்றாக அடிக்கவேண்டும். அதன்பின்னர் அடித்தமுட்டைக்கலவையை வெண்ணெய்ச்சீனிக்கலவைக்குள் இட்டு மீண்டும் நன்றாக அடிக்கவேண்டும் . எல்லாமே நன்றாக அடிக்கப்பட்டபின்னர் மா , புளிப்பூட்டி , மணமூட்டி( உங்களுக்குப்பிடித்தது) போன்றவற்றை இட்டு விரைவாக அடிக்காமல் மெதுவாக நன்றாகக்கலந்து விடவேண்டும் . அதன்பின் கட்டிகை செய்யுஞ்தட்டுமுழுவதும் வெண்ணெய்பூசி மாவைத்தூவிப்பரப்பி கட்டிகை ஒட்டாதவாறு செய்தபின்னர் (அல்லது வெண்ணெய்த்தாள் பயன்படுத்தலாம்.) கட்டிகைக்கலவையை அதனுள்ளேயிட்டு நிரவிவிட்டபின்னர் வெதுப்பகத்தை நூற்றெண்பது பாகையில் எல்லாப்பக்கமும் ஒரேயளவு சூடாகுவதுபோல சரிசெய்துவிட்டு, நாற்பது மணித்துளிகள் கட்டிகைக்கலவையை உள்ளே வைத்துவிடுங்கள். கட்டிகை வெதும்பியபின்னர் சூட்டடுப்பை நிறுத்திவிட்டு கட்டிகையை வெளியில் எடுக்கவும்.
உன்னிக்கவேண்டிய சிறியகுறிப்புகள்.
- கட்டிகைசெய்யும் சூட்டடுப்பை கட்டிகைக்கலவையை வைப்பதற்கு ஐந்துமணித்துளிகளுக்குமுன் போட்டுவிடவேண்டும்.
- கட்டிகைக்கலவை இறுக்கமாக இருந்தால் சிறிதளவுபால் அன்றேல் வெந்நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
- கட்டிகைசெய்யுந்தட்டை சூடாக்கியின் நடுவில் வைத்தல் வேண்டும் .
- கட்டிகை நிறமாகவேண்டுமென்றால்(சிவப்பு , பச்சை,மஞ்சள்,குருவகம் ) உங்களுக்குப்பிடித்த நிறமூட்டியை கட்டிகை கலவையுடன் சேர்த்துக்கலந்துவிட்டால் போதுமானது.
தவிர்க்கவேண்டியது :
வெண்ணெயில் ஏற்கனவே உப்புச்சுவையிருப்பதனால் ஒருதுளி உப்பைக்கூட சேர்க்கத்தேவையில்லை .
இப்பதிவின் நோக்கம்:
தமிழர்கள் தமிழில் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற நோக்கில் வெண்ணைய்க்கட்டிகை செய்வதற்கான எளியமுறையை தனித்தமிழில் கொடுத்துள்ளோம். இதிலுள்ள சொற்களைப்பயன்படுத்தி எம்மொழிக்கு வளஞ்சேர்ப்போம் வாருங்கள் .
“தமிழ்பேசு தமிழா”
நன்றி.
வாழ்கதமிழ்.




