ஏனைய பற்றியம்வரலாற்றில் இன்று

பிரஞ்சுத்தேயநாள் வரலாறும், நிகழ்வும்-சிறுதொகுப்பு .

கடகத்திங்கள் பதின்நான்கு-கத்தோர்சு் யூவ்யே.

பசு்தில் நாள் – பிரான்சியர் விடுதலையின் விழிப்புநாள்.

ஏழாம்திங்கள்  பதின்நான்காம்நாள், பிரான்சின் தேயநாளென வையகம் அறிந்தநாளாகும். இந்நாள், தொன்மையான அரசியல் அடக்குமுறையைக்களைந்த நாள். பசு்தில் சிறைச்சாலை தாக்கப்பட்டதையும், அதன்மூலம் பிரெஞ்சுப்புரட்சி வேரூன்றியதையும் நினைவுகூரும்நாளாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இந்நாளுக்கான பிரான்சியரின் ஆழ்ந்த உணர்வுகளைக்காணும் போது, ‘Bastille Day’ என்ற ஆங்கிலச்சொற்பயன்பாட்டைக்காட்டிலும், பிரெஞ்சுக்காரர் இதனை எளிமையாக “ல பெத் நசுனல்”( ‘La Fête Nationale’ )அல்லது “லு கத்தோர்சு யூவ்யே” (‘Le quatorze juillet’) என்றே அழைப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப்பின்னணி.

பதினெட்டாம் நூற்றாண்டின் நிறைவில், பிரெஞ்சுமக்களிடையே வறுமை, உணவுக்குறை, கூடுதல் திறைசெலுத்தல், அரசபுறக்கணிப்பு போன்றவை ஏற்படுத்திய நெருக்கடியானது மாபெரும் புரட்சிக்குத்தூண்டுகோலாயிற்று.

மன்னர் பதினாறாம் லூயி, அரசி மேரி அந்துவானெத் ஆகியோர் மக்களின் வேண்டுகோள்களைக்கேட்காத நிலைமை உருவானபோது, மக்களிடம் கொந்தளிப்புப்பெருகியது. அச்சூழ்நிலையில், பாரீசின் கிழக்குப்பகுதியிலமைந்திருந்த பசு்தில் சிறைச்சாலை, அரச ஆட்சியின் அடக்கத்தைக்குறிக்கும் அடையாளமாகமாறியது. இதில் அரசுக்கெதிராகக்கருத்துக்கூறியவர்களே அடைக்கப்பட்டனர். அதேசமயம், அந்தச்சிறையில் வெடிமருந்துகள்,ஆய்தங்கள் போன்றன இருப்பதற்கான ஐயம் மக்களிடையே பரவியது.

தாக்குதல் – புரட்சியின்தொடக்கம்.

கடகம் பதின்நான்கு, ஆயிரத்து எழுநூற்று எண்பத்தொன்பதாம் ஆண்டன்று விடியற்காலையில், ஆய்தங்களோடுகூடிய மக்களின்பெரும்படை பசு்திலைச்சூழ்ந்தது. சிறையை காப்பாற்றமுயன்ற பேர்நார்ட் ரெனே டிலனாய் என்ற ஆளுநரின்முயற்சி தோல்வியடைந்தது. மக்கள் கோட்டைக்குள்நுழைந்து, ஏழு சிறையாளிகளை மீட்டனர்; ஆளுநர் டிலனாயை மக்களே கொன்றனர். இச்சிறை, மெல்ல மெல்ல செங்கல் செங்கலாகப்பெயர்க்கப்பட்டு அழிக்கப்பட்டது . அந்தச்செங்கற்கள் அரச அடக்குமுறையின் முடிவைக்குறிக்கும் நினைவுப்பொருளாக மக்களிடையே பகிரப்பட்டன.

பசுதில்நாள்.

இந்நாள், பிரான்சின் அரசு விடுமுறைநாளாக எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. பாரீசிலுள்ள “சோம்சலீசே” (Champs-Élysées) தெருவில், வியக்கவைக்கும் படைத்துறையணிவகுப்பு நடைபெறும்.நாட்டின் முதல்வர், மேலாளர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் முன்னிலையில், பிரெஞ்சுப்படைகள் அணிவகுத்து நிற்கும்.“லா மார்செய்சு்”La Marseillaise எனும் நாட்டுப்பாடல் முழங்க, மக்கள் நாட்டுப்பற்றின் உணர்வோடு இந்நாளைக்கொண்டாடுகின்றனர். வானவேடிக்கைகள், பண்பாட்டுநிகழ்வுகள், மக்கள்பேரணிகள் ஆகியனவும் இந்நாளில் நிகழ்வதுவழக்கம் .

பிரஞ்சியரின் பேருணர்வுக்கு இதுவோர் முத்திரை. 

பசு்தில் சிறைச்சாலையென்றால் அதுவொரு சிறையன்று;அது விடுதலையின் முத்திரை.அது அரசியல் கொடுங்கோலுக்கு எதிரான மக்கள்செயலின்வெளிப்பாடு.

“லிபெர்தே, எகலிதே, வ்றதெர்நிதே”“Liberté, Égalité, Fraternité”அதாவது விடுதலை, நேர்நிலை, அனைவரும் உடன்பிறந்தோரே என்ற மூவுரிமைகளின் ஒளிச்சுடராகவே பசு்தில்நாள் விளங்குகிறது.

முடிவுரை.

அமெரிக்கப்புரட்சி போன்றே, பிரெஞ்சுப்புரட்சியும் உலகப்பொது ஆளுமையைமாற்றியமைத்த மாபெரும்கண்ணோட்டமாக விளங்குகிறது. பசு்தில் நாள் என்பது வெறும் ஒருநிகழ்வன்று; அதுவோர் எண்ணத்தின்புரட்சி, ஒருவாழ்க்கைநோக்கின் மாற்றம்.இன்றையநாள் ஒவ்வொருவரும் மரபுகளையும், மாந்தவுரிமைகளையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியநாளாகும். 

நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button