இலக்கணம்தமிழ்நன்னூல்படைப்புகள்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௨௪. புகழ்.

குறள் – ௨௱௩௧. (அச்சில் உள்ளவாறு.)

“ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.”

ஈதல் = வறியவர்க்கு கொடுத்தல்.
இசைபட = புகழ்பட.
ஊதியம் = பயன்.

‘ஈதல் இசைபடவாழ்தல் அதுவல்லது உயிர்க்கு ஊதியமில்லை’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“வறியவர்க்கு ஈக. அதனால் புகழ் உண்டாக வாழ்க. அப்புகழல்லது உயிர்க்கு பயன் பிறிதொன்று இல்லை. இசைபடவாழ்தற்கு கல்வி, ஆண்மை முதலிய காரணங்கள் உளவேனும் ‘உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநானூறு – 18)’ ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக ஈதல் என்றார்.“ இது பரிமேலழகனாரின் உரைவிளக்கம்.

இக்குறளின் எழுசீர்களும் புணர்த்தப்பட்டுள்ளன. எழுசீர்களையும் இடைவெளியில்லாது தொடர்ந்தொலித்து பொருளுணரமுடியாது. இது பொருளுணர்ச்சியற்ற புணர்ச்சி.

‘இல்லை’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லது*
ஊதிய மில்லை உயிர்க்கு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௩௨. (அச்சில் உள்ளவாறு.)

“உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்.”

உரைப்பார் = சொல்லுவார்.
இரப்பார் = இல்லையென வேண்டும் வறியார்.

“உரைப்போர் உரைப்பவையெல்லாம் புகழ்வரும்வழிகள் பலவற்றுள்ளும் இரந்தார் ஒருவர்க்கு ஈதலால் வரும் புகழையே’ என்பதாம்.

‘உரைப்பார்’ என்பது எழுவாயாகும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

‘இரப்பார்க்கு’ என்பதுடன் புணர்த்தப்பட்ட ‘ஒன்று’ என்பது வினைவேண்டா எண்ணளவையாகுபெயர். நான்காம்வேற்றுமை வினையொடும் வினைவேண்டும்பெயரொடும் புணருமேயன்றி வினைவேண்டாப்பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கு*ஒன்றீவார்மே னிற்கும் புகழ்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௩௩. (அச்சில் உள்ளவாறு.)

“ஒன்றா‌ வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பததொன் றில்.”

ஒன்றா = ஒன்றாக என்பதன் கடைக்குறை → ஒப்பற்ற.
பொன்றாது = இறவாது, மறையாது.
நிற்பது = நிலைப்பது.
இல் = இல்லை.

‘ஒன்றாவுயர்ந்த புகழல்லால் உலகத்து பொன்றாது நிற்பது ஒன்றில்லை’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘ஒன்றா’ என்னுஞ்சொல் ‘உயர்ந்த புகழ்’ என்பதனை விளக்கும். இச்சொல் உலகம் என்பதனைத்தழுவாது. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘அல்லால்’ என்னும் இணைப்பிடைச்சொல் ‘புகழ்’ என்னும் சொல்லினை இணைத்து தனது பணியை முடித்தது. அச்சொல் ‌ மீண்டும் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஒன்றா‌ உலகத்து* உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௩௪. (அச்சில் உள்ளவாறு.)

“நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.”

நிலவரை = நிலவுலகு.
நீள்புகழ்= இறவாப்புகழ்.
புலவர் = கலைவல்லார், ஞானிகள்.
புத்தேளுலகு = தேவருலகு.

‘நிலவரை நீள்புகழாற்றின் புத்தேளுலகு புலவரைப்போற்றாது’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘நிலவுலகில் இறவாப்புகழைப்பெற்றவரையல்லாது தன்னையடைந்த புலவோரை புத்தேளுலகு போற்றாது’ என்பதாம்.

‘ஆற்றின்’ என்பது வினையெச்சம். வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“நிலவரை நீள்புக ழாற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.”

குறள் – ௨௱௩௫. (அச்சில் உள்ளவாறு.)

“நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.”

நத்தம்= நத்தை, சங்கு.
கேடு= அழிவு.
வித்தகர்= வல்லவர், அறிவாளர்.

‘நத்தை இறந்து அதன் கூடான சங்கு நிலைப்பதுபோன்ற அழிவும், ஊனுடம்பு இறந்து புகழுடம்பு நிலைப்பதுபோன்ற இறப்பும் அறிவாளர்க்கன்றி மற்றையோர்க்கு அரிது’ என்பதாம்.

‘போல்’ என்னும் உவமச்சொல் ‘நத்தம்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தனது பணியை முடித்தது.
அச்சொல் வருமொழியுடன் மீண்டும் புணராது.

‘கேடும்’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிந்து மற்றொன்று தொடங்குகிறது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் புணராது விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

செம்மைவடிவம் —
“நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.”

குறள் – ௨௱௩௬. (அச்சில் உள்ளவாறு.)

“தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று.”

தோன்றல் = பிறத்தல், கண்காண வெளிப்படல்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘தோன்றின்’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘புகழ்’ என்னும் பெயருடன் புணராது.

‘தோன்றுக’’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. எனவே உயிர்முதலாகிய ‘அஃதில்லார்’ என்றே தொடங்கும்.

ஐந்தாஞ்சீரான ‘தோன்றலின்’ என்பதில் இடப்பொருளில் வந்த இன்னுருபு ‘தோன்றல்’ எனும் பெயரின் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்தது. அச்சொல் வருமொழியுடன் புணராது.

பரிமேலழகனார் உரை — “மக்களாய் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க. அக்குணமில்லாதவர் மக்களாய் பிறத்தலின் விலங்காய் பிறத்தல் நன்று.”

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் உரை — “மக்கள்முன் தோன்றின் புகழப்படுமாறு தோன்றுக. அஃதில்லார் மக்கள்முன் தோன்றலின் தோன்றாமை நன்று.”

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் உரையே பொருத்தமானது.

செம்மைவடிவம் —
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”

குறள் – ௨௱௩௭. (அச்சில் உள்ளவாறு.)

“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்.”

நோதல்= வருந்துதல்.

‘நோவார்’ என்பது உடன்பாட்டில் வந்து அடுத்துவந்த வினாவால் எதிர்மறையும் ஆயிற்று.

‘புகழ்பட வாழாதார் தம்மை நோவர். அவ்வாறு நோவாதார் தம்மை இகழ்வாரை நோவது எவன்’ என்பதாம்.

‘இகழ்வாரை’ என்பது வேற்றுமைவுருபேற்ற வினையாலணையும்பெயர். ‘தம்மை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையொடு பொருந்துமேயன்றி வினையாலணையும்பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.”

குறள் – ௨௱௩௮. (அச்சில் உள்ளவாறு.)

“வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.”

வசை = இகழ்ச்சி, பழிப்பு.
எச்சம் = எஞ்சி நிற்பது.

‘இசையென்னும் எச்சம் பெறாஅவிடின் வையத்தார் எல்லார்க்கும் (அது) வசை என்ப’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

இரண்டாஞ்சீரில்வந்த நான்காம்வேற்றுமைவுருபு குகரம் மூன்றாஞ்சீரில் சென்று பொருந்தும். அல்லாக்கால் ஒருவர் செய்வதனைத்தும் வசையென்றாகும்.

‘எல்லார்க்கும்’ என்னும் முற்றும்மைச்சொல் எதனுடனும் புணராது.

‘வசை’ என்பது ‌இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘வசை’ என்னும் பெயரை விளக்கி தனது பணியை முடித்தது. அச்சொல் வருமொழியுடன் மீண்டும் புணராது.

செம்மைவடிவம் —
“வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.”

குறள் – ௨௱௩௯. (அச்சில் உள்ளவாறு.)

“வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.”

வசை = பழி.
வண்பயன் = சிறந்த நலன்கள்.
இசை = புகழ்.
பொறுத்த = சுமந்த.

‘இசையிலா யாக்கைபொறுத்த நிலம் வசையிலா வண்பயன் குன்றும்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘புகழில்லா உடம்புகளைச்சுமந்த நிலத்தில் பழிக்கபடாத சிறந்த நலன்கள் குறையும்’ என்பதாம்.

‘குன்றும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.”

குறள் – ௨௱௪௦. (அச்சில் உள்ளவாறு.)

“வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.”

வசை = பழி.
இசை = புகழ்.

‘வாழ்வார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button