
குறள் – ௮௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு).
“நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.”
நிழனீரும் = நிழலும் நீரும்.
இன்னாத = நலக்கேடு. நலக்குறைவு.
இன்னா = தீயன.
தமர்நீரும் = தம்மவர்/ துணைவர்இயல்பும்.
இன்னாவாம் = தீயனவாம்.
செயின் = தந்தால், செய்தால்.
“நிழனீரும் இன்னா செயின் இன்னாத. தமர்நீரும் இன்னா செயின் இன்னாவாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘செயின்’ என்னும் வினையெச்சம் முன்சென்று நின்றும் பொருள்தரும்.
“நலந்தரும் நிழலும் நீரும் நலக்கேட்டினைத்தருமானால் அவை தீயன. அதுபோல துணைவரின் இயல்புகள் கேட்டினைச்செய்தால் அவை தீயனவாம்” என்பதாம்.
‘நிழனீரும்’ என்னும் உம்மைத்தொகை பிறவற்றுடன் புணராது.
‘இன்னாத’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தமர்நீரும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘இன்னாவாம்’ என்பதன்கண் வந்த ‘ஆம் (ஆகும்)’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.”
குறள் – ௮௱௮௰௨ (அச்சில் உள்ளவாறு).
“வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.”
கேள் = உறவு.
“வாள்போல் பகைவரை அஞ்சற்க. கேள்போல் பகைவர்தொடர்பஞ்சுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வாள்போலும் கூர்மையும் வெளிப்பட்டும் தோன்றும் பகைவரை அஞ்சற்க. உறவினர்போல் தோன்றி உள்ளத்து பகையை மறைத்திருக்கும் பகைவரது தொடர்பிற்கு அஞ்சுக” என்பதாம்.
‘பகைவரையஞ்சற்க’ என்பது வேண்டாப்புணர்ச்சி. ‘யஞ்சற்க’ என்பதன்கண் புணர்ந்த யகரவுடம்படுமெய்யை நீக்காமல் ‘அஞ்சற்க’ என்பதை அறியமுடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.
‘அஞ்சற்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அஞ்சற்கவஞ்சுக’ என்பது இருவேறுவினைகள். வேறுவேறு வினைகள் தம்முள் புணராது நின்று தத்தம்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.”
குறள் – ௮௱௮௰௩ (அச்சில் உள்ளவாறு).
“உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.”
தற்காக்க = தன்னைக்காக்க.
உலைவிடத்து = தளர்ந்தபோது.
மட்பகையின் → மண்ணின்பகையால் = வெள்ளநீர்.
மாணம் = மாண்பு , வலிமை.
தெறும் = கெடும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உட்பகையை அஞ்சி தன்னைக்காத்துக்கொள்க. மண் தளர்ந்தபோது மண்ணின்பகையான நீரால் மண்ணின் வலிமை கெடும்” என்பதாம். உட்பகை வலிமையை அரிக்குமென்பதாம். ‘வலிமை’ என்பது அவாய்நிலையான் வந்தது.
‘அஞ்சி’ என்னும் வினையெச்சம் ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘காக்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘மட்பகையின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு மூன்றாம்வேற்றுமைப்பொருளில் வந்த வேற்றுமைமயக்கம்.
செம்மைவடிவம் —
“உட்பகை யஞ்சிதற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.”
குறள் – ௮௱௮௰௪ (அச்சில் உள்ளவாறு).
“மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்.”
மனமாணா = மனத்தால் பொருந்தா.
இனமாணா = இனத்திற்குப்பொருந்தா.
ஏதம் = குற்றம், துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“மனத்தால் பொருந்தாத உட்பகை தோன்றின் அஃது இனத்திற்கு பொருந்தா துன்பங்கள் பலவுந்தரும்” என்பதாம்.
‘தோன்றின்’ என்னும் வினையெச்சம் ‘இனம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘மாணாவேதம்’ என்பது பொருள்மயங்குப்புணர்ச்சி. புணர்ச்சியைப்பிரித்தே ‘ஏதம்’ என்பதை அறிய வேண்டியுள்ளது. பிரித்துப்பொருளுணர்வதாயின் புணர்ந்த வேண்டா.
செம்மைவடிவம் —
“மனமாணா வுட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவுந் தரும்.”
குறள் – ௮௱௮௰௫ (அச்சில் உள்ளவாறு).
“உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா
னேதம் பலவுந் தரும்.”
உறன் → உறல் = உறவு.
உறன்முறையான் = உறவுமுறையால்.
இறன் → இறல் = இறத்தல்.
இறன்முறையான் = இறத்தலுக்கு ஒப்பான.
ஏதம் = துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உறவுமுறையால் உட்பகை தோன்றின் அஃது இறத்தலுக்கு ஒப்பான துன்பங்கள் பலவும் தரும்” என்பதாம்.
‘முறையான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘முறை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தோன்றின்’ என்னும் வினையெச்சம் ‘இறல் (இறத்தல்)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“உறன்முறையான் உட்பகை தோன்றின் இறன்முறையான்
ஏதம் பலவுந் தரும்.”
குறள் – ௮௱௮௰௬ (அச்சில் உள்ளவாறு).
“ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது.”
ஒன்றாமை = உடன்படாமை.
ஒன்றியார் = உடன்பட்டார், நமர்.
படின் = நிகழின்.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
பொன்றாமை = அழிவின்மை.
ஒன்றல் = கைகூடல்.
அரிது = இயலாது.
“ஒன்றியார்கண் ஒன்றாமை படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உடன்பட்டாரிடம் உடன்படாமை நிகழின் எஞ்ஞான்றும் அழிவின்மை
கைகூடல் இயலாது” என்பதாம்.
‘ஒன்றாமையொன்றியார்’ என்பது பொருள்மயங்குப்புணர்ச்சி. ‘உடன்படாமையொடு ஒன்றியார்’ என்னும் பொருளைத்தரும். ‘உடன்பட்டார்கண் உடன்படாமை நிகழின்’ என்பதே குறளின் கருத்து.
‘ஒன்றியார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘ஒன்றியார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘படின்’ என்னும் வினையெச்சம் ‘எஞ்ஞான்றும்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்ற லரிது.”
குறள் – ௮௱௮௰௭ (அச்சில் உள்ளவாறு).
“செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
உட்பகை யுற்ற குடி.”
செப்பு = செம்பு, சிமிழ், குடுவை.
புணர்ச்சி = சேர்தல்.
கூடினும் = சேரினும்.
கூடாதே = சேராதே.
“உட்பகையுற்ற குடி செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உட்பகையுற்ற குடி சேர்ந்திருப்பதாக தோன்றினும் குடுவையும் அதன் மூடியும் சேர்ந்ததுபோல் ஒன்றாயினும் தனித்தவே” என்பதாம்.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘புணர்ச்சி’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கூடினும்’ என்பது ‘கூடாது’ என்னும் பொருள்தரும் எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘கூடாதே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை யுற்ற குடி.”
குறள் – ௮௱௮௰௮ (அச்சில் உள்ளவாறு).
“அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி.”
அரம் = தேய்க்கும் கருவி.
பொருத = உரசிய, தேய்த்த.
உரம் = வலிமை.
பொருது = போரிட்டு.
உற்ற = பெற்ற.
“உட்பகையுற்றகுடி அரம்பொருத பொன்போல உட்பகை பொருது உரம் தேயும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. உட்பகை என்னும் சொல் பின்னும்நின்று பொருள்தரும்.
“உட்பகையுற்றகுடி அரம் உரசிய பொன்போல உட்பகை தேய்க வலிமை தேயும்” என்பதாம்.
‘போல’ என்னும் உவமவுருபு ‘பொன்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தேயும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘பொருது’ என்னும் வினையெச்சம் ‘உட்பகை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அரம்பொருத பொன்போல தேயும் உரம்பொருது*
உட்பகை யுற்ற குடி.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௮௱௮௰௯ (அச்சில் உள்ளவாறு).
“எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாங் கேடு.”
எட்பகவு (எள்ளினது பகவு) = எள் பிளவு.
அன்ன = போன்ற, அளவின.
சிறுமைத்தே = அளவில் சிறிதே.
ஆம் = ஆகும்.
கேடு = துன்பம்.
“எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை கேடுள்ளதாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எள்ளினது பிளவுபோல சிறிதே ஆயினும் உட்பகை கேட்டினை உடையது” என்பதாம்.
‘சிறுமைத்தே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘ஆயினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். இழிவுச்சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘உட்பகை’ என்பது எழுவாய்த்தன்மையது. எழுவாய் எதனுடனும் புணராது.
‘உள்ளதாம்’ என்பதன்கண் ஈற்றில்நின்ற ‘ஆம் (ஆகும்)’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை யுள்ளதாம் கேடு.”
குறள் – ௮௱௯௰ (அச்சில் உள்ளவாறு).
“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று.”
உடம்பாடு → உடன்பாடு = பொருத்தப்பாடு.
குடங்கருள் = குடிலுள், குடிசையில்.
உடனுறைந்தது = சேர்ந்து வாழ்வது.
அற்று = போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பொருத்தப்பாடு இல்லாதவரொடு வாழும் வாழ்க்கை குடிலுள் பாம்போடு சேர்ந்து வாழ்வது போன்றது” என்பதாம்.
‘குடங்கருள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘குடங்கர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பாம்போடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘பாம்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு* உடனுறைந் தற்று.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




