
குறள் – ௲௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு).
“மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.”
மன் = ‘மறைக்க இயலவில்லை’ என்னும் பொருள்தரும் ஒழியிசையிடைச்சொல்.
இஃதோ = இதுவோ.
நோயை = கணவனைப்பிரிந்ததால் உற்ற துன்பம்.
“நோயை யான் மறைப்பேன்மன் இஃதோ இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவனைப்பிரிந்ததால் உற்ற துன்பத்தை யான் மறைப்பேன். அவ்வாறு மறைக்க இயலவில்லை. இந்நோயோ இறைப்பார்க்கு சுரக்கும் ஊற்றுநீர்போல மிகுகிறது” என்பதாம்.
‘யான்’ என்பது எழுவாயாகும் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நோயை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபுபேற்ற சொல் ‘இறைப்பவர்க்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘இறைப்பவர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘ஊற்றுநீர்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு*
ஊற்றுநீர் போல மிகும்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௬௰௨ (அச்சில் உள்ளவாறு).
“கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.”
கரத்தலும் = பிறர் அறியாது மறைத்தலும்.
ஆற்றேன் = இயலேன்.
இந்நோயை = பிரிவாகிய இத்துன்பத்தை.
நோய்செய்தார்க்கு = பிரிந்தவர்க்கு.
உரைத்தலும் = சொல்லுதலும்.
நாணு = நாணத்தை.
“இந்நோயை கரத்தலும் ஆற்றேன் நோய்செய்தார்க்கு
உரைத்தலும் நாணுதரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பிரிவாகிய இத்துன்பத்தை பிறர் அறியாது மறைத்தலும் இயலேன். இத்துன்பத்தை தந்தவர்க்கு சொல்லுதலும் நாணத்தைத்தரும்” என்பதாம்.
‘கரத்தலும்’ என்பது ‘கரவேன்’ என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘ஆற்றேன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உரைத்தலும்’ என்பது ‘உரையேன்’ என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘நாணுதரும்’ என்பது ‘நாணத்தைத்தரும்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும்; ஒற்றுமிகாது. இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணு தரும்.”
குறள் – ௲௱௬௰௩ (அச்சில் உள்ளவாறு).
“காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
னோனா வுடம்பி னகத்து.”
காமமும் = காதலும்.
நாணும் = நாணமும்.
காவா = காவடியாக.
நோனா = பொறுத்துக்கொள்ள இயலாத.
அகத்து = உள்ளிருந்து.
தூங்கும் = ஊசலாடும்.
“நோனாவுடம்பினகத்து காமமும் நாணும் என்னுயிர்காவா தூங்கும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவரது பிரிவென்னும் துன்பத்தைப்பொறுத்துக்கொள்ள இயலாத உடம்பின் உள்ளிருந்து உயிராகிய காவடியின் இருமுனையில் காதலும் நாணமும் நின்று ஊசலாடுகின்றன” என்பதாம்.
எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. ‘நாணும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது தனித்துநிற்கும்.
‘தூங்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்னோனா’ என்பது வலிந்த புணர்ச்சி. ‘என்நோனா’ என்றே புணர்ந்து ‘எனது நோனா’ எனவிரியும்.
செம்மைவடிவம் —
“காமமு நாணும் உயிர்காவா தூங்கும்என்
நோனா வுடம்பி னகத்து.”
குறள் – ௲௱௬௰௪ (அச்சில் உள்ளவாறு).
“காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.”
காமக்கடன் → காமக்கடல்.
மன்னும் = மன், உம் ஆகியன அசைநிலைகள்.
ஏமம் = காவல், காப்பு.
புணை = மரக்கலம், தெப்பம்.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கடல்போன்ற காதல் உண்டே. அதனைக்கடப்பதற்கு துணைபுரியும் மரக்கலம் இல்லை. கணவர் பிரிந்துள்ளார்“ என்பதாம்.
‘காமக்கடல்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உண்டே’ என்பது அறுதியிடும் தேற்றேகார ஆஆவினைமுற்று. தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘நீந்தும் ஏமப்புணை’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.”
குறள் – ௲௱௬௰௫ (அச்சில் உள்ளவாறு).
“துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.”
துப்பின் = பகைமைகண்.
எவனாவர் = எவராவார்.
மற்கொல் (மன்+கொல்) = மன், கொல் ஆகியன அசைநிலைகள்.
துயர்வரவு = துயரைத்தருதல். ஆற்றுபவர்= செய்பவர்.
“நட்பினுள் துயர்வரவாற்றுபவர் துப்பின் எவனாவர்மன்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நண்பராக உள்ளபோதே துயரை தருபவர் பகையின்போது எவராவரோ” என்பதாம்
‘துப்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘துப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘மன், கொல்’ என்னும் அசைநிலைகள் ‘என்னாவர்’ என்னும் வினாச்சொல்லைச்சார்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நட்பினுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நட்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.”
குறள் – ௲௱௬௰௬ (அச்சில் உள்ளவாறு).
“இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது.”
கடன் → கடல்.
மற்று = வினைமாற்று இடைச்சொல்.
காமம் = காதல்.
அடுங்கால் = துன்பந்தரும்போது.
“காமயின்பம் கடல் மற்று அஃதடுங்கால் துன்பம் அதனின் பெரிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காதலின்பம் கடலளவு; பிரிவால் அது துன்பந்தரும்போது அக்கடலினும் பெரிது” என்பதாம்.
இன்பம், துன்பம், காமம் என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணரா. மேலும் இவை எழுவாயுமாகும்.
‘கடல்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணரா.
‘மற்றுக்காமம்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. வினைமாற்றுப்பொருளில் வந்த ‘மற்று’ என்னும் இடைச்சொல் புணராது தனித்துநின்று தன்பணியைச்செய்யும்.
‘அடுங்கால்’ என்னும் வினையெச்சம் ‘துன்பம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அதனின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘அதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இன்பம் கடல்மற்று காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனின் பெரிது.”
குறள் – ௲௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).
“காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.”
கடும்புனல் = வலிமையான வெள்ளம்.
யாமத்தும் = நள்ளிரவிலும்.
யானே = நானே.
உளேன் = உள்ளேன்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“காமமாகிய வலிய வெள்ளத்தில் நீந்தியும் அதன் கரையைக்கடந்திலேன். நள்ளிரவிலும் (பிரிவால்) நானே தனித்து உள்ளேன்” என்பதாம். ‘நீந்தி’ என்னும் வினையெச்சத்தில் உம்மை மறைந்துநின்றது.
‘நீந்தி’ என்னும் வினையெச்சம் ‘கரை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘யானே’ என்பது அறுதியிடும் தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“காமக் கடும்புன னீந்தி கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.”
குறள் – ௲௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).
“மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை.”
மன்னுயிர் = உலகவுயிர்கள்.
துயிற்றி = துயிலச்செய்து, உறங்கச்செய்து.
அளித்து = கொடுத்து. அளித்த என்னும் பொருளது.
என்னல்லது = என்னையல்லாது, யானின்றி.
“மன்னுயிரெல்லாம் துயிற்றி அளித்து இரா(வுக்கு) என்னல்லது துணை இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உலகவுயிர்கள் அனைத்தையும் தூயசெய்து அருளிய இரவுக்கு என்னையல்லாது வேறுதுணை இல்லை. இரவும் இல்லாளும் உறங்கவில்லை” என்பதாம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
‘அளித்து’ என்னும் வினையெச்சம் ‘இரா (இரவு)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது. எனினும் வழுவமைதியாக யாப்பின்பொருட்டு புணர்ந்து.
‘அல்லது’ என்னும் இணைப்பிடைச்சொல் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணர்ந்து ‘என்னையல்லது’ என்னும் பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
யென்னல்லது* இல்லை துணை.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).
“கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா
ணெடிய கழியு மிரா.”
கழியும் = கடக்கும், நீங்கும்.
இரா = இராப்பொழுது.
“நெடிய கழியும் இந்நாளிரா கொடியார் கொடுமையின் தாம் கொடிய” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நீளக்கழியும் இந்நாளின் இராப்பொழுது கொடியார் செய்யும் கொடுமைகளிலும் கொடிது” என்பதாம்.
‘கொடுமையின்’ என்பதன்கண் ஒப்புப்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘கொடுமை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தாம்’ என்னும் எழுவாயாம் மறுப்பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘கொடிய’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘கழியும் இரா’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நா
ணெடிய கழியும் இரா.”
குறள் – ௲௱௭௰ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.”
உள்ளம் = மனம்.
உள்வழி = (கணவன்) உள்ள வழி.
செல்கில் = செல்லுமாயின்.
வெள்ளநீர்= வெள்ளமாகிய கண்ணீர்.
நீந்தலமன்னோ = நீந்தா.
மன் = நீந்தும் என்னும் வினையைச்சுட்டும் ஒழியிசைப்பொருளில் வந்த இடைச்சொல்.
ஓ = அசை நிலை.
“உள்ளம் போன்று என்கண் உள்வழிச்செல்கின் பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மனம் போன்று எனது கண்களும் கணவன் உள்ளவழியில் செல்லுமாயின் வெள்ளமாகிய கண்ணீரில் நீந்தா” என்பதாம்.
‘போன்று’ என்னும் உவமவுருபு ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘செல்கில்’ என்னும் வினையெச்சம் ‘பின்’ என்னும் காலப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஓ’ என்னும் அசைநிலை ‘மன்’ என்னும் இடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ளம்போன்று* உள்வழிச் செல்கில்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



