இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௯௰௬. குடிமை.

குறள் – ௯௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு).

“இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு.”

இல் = குடி. ஈண்டு நற்குடி எனப்பொருள்படும். “இல், குடி, குலம் என்பன ஒருபொருளன. ஈண்டு உயர்ந்தவற்றின் மேல” என்பது பரிமேலழகனாரின் விளக்கம்.
இயல்பாக = குணங்களாக. இயற்கையாக.
செப்பம் = செம்மை.
நாணு = நாணம் (பழிக்கு அஞ்சுதல்).
ஒருங்கு = ஒருசேர.

“செம்மையும் பழிக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர ஒருவரது குணங்களாதல் நற்குடியில் பிறந்தார்க்கல்லது இல்லை” என்பதாம்.‌

‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இயல்பாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘இயல்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘நாணும்’ என்பது புணராது.

செம்மைவடிவம் —
“இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாக
செப்பமு நாணும் ஒருங்கு.”

 

குறள் – ௯௱௫௰௨ (அச்சில் உள்ளவாறு).

“ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்.”

ஒழுக்கம் = அறநெறி.
வாய்மை = உண்மை.
நாணு = நாணம் (பழிக்கு அஞ்சுதல்).
இழுக்கார் = வழுக்கார், நீங்கார்.
குடி = நற்குடி.

“நற்குடியில் பிறந்தார் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய இம்மூன்றிலிருந்தும் வழுக்கார்” என்பதாம்.

எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும். ‘வாய்மையுநாணும்’ என்னும் புணர்ச்சியில் பிழையில்லை. எனினும் நீங்கள் ஒலிக்கும்போது புணர்ச்சியில் நீங்கிய மகரமெய் தன்னியல்பாக தோன்றக்காணலாம். தன்னியல்பாக தோன்றும் ஒலியை எழுத்தில் நீக்கவேண்டாம்.

எண்ணும்மைகள் பிறவற்றுடன் புணரா. ‘நாணும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது.

‘இம்மூன்றும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.”

 

குறள் – ௯௱௫௰௩ (அச்சில் உள்ளவாறு).

“நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.”

நகை = முகமலர்ச்சி, முறுவல்.
ஈகை = கொடை, கொடுக்கும் பண்பு. இன்சொல் = இன்பம்/நன்மைபயக்கும் பேச்சு.
இகழாமை = இழித்து பேசாமை. வகை = இயல்பு, குணம்.
வாய்மைக்குடிக்கு = மெய்யான நற்குடிகளுக்கு.

“வாய்மைக்குடிக்கு நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்கும்
வகையென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மெய்யான நற்குடிகளுக்கு முகமலர்ச்சி, கொடை, இன்பம்/நன்மைபயக்கும் பேச்சு, இழித்து பேசாமை ஆகிய நான்கும் இயல்புகளாகும் என்பர்” என்பதாம்.

இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் புணராது தனித்துநின்று தத்தம் பொருளை உணர்த்தும். எனவே ஈகை, இன்சொல், இகழாமை ஆகியன புணராது.

செம்மைவடிவம் —
“நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.”

 

குறள் – ௯௱௫௰௪ (அச்சில் உள்ளவாறு).

“அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.”

அடுக்கிய கோடி = கோடியின் மடங்கு.
பெறினும் = அடைந்தாலும்.
குடிபிறந்தார் = நற்குடியில் பிறந்தார்.
குன்றுவ = குறைவன, மதிப்பைக்குறைப்பன.
இலர் = இல்லார்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கோடியின் மடங்கு செல்வத்தை அடைவதாயினும் நற்குடியில் பிறந்தார் தமது மதிப்பைக்குறைக்கும் செயல்களைச்செய்யார்” என்பதாம்.

‘பெறினும்’ என்பது ‘பெறார்’ என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.”

 

குறள் – ௯௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).

“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று.”

வழங்குவது = கொடுப்பது, கொடை.
உள்வீழ்ந்தக்கண்ணும் = சுருங்கியயிடத்தும்.
பழங்குடி = நற்குடிவழிமரபினர்.
பண்பில் = குணத்தில்.
தலைப்பிரிதல் = நீங்குதல்.
இன்று = இல்லை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கொடுப்பது சுருங்கியயிடத்தும் நற்குடிவழிமரபினர் தமது நற்குணங்களிலிருந்து நீங்குவதில்லை” என்பதாம்.

‘வழங்குவது’ என்னும் வினையெச்சம் ‘உள்’ என்னும் இடப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘பண்பில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பண்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“வழங்குவது* உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரித லின்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௫௰௬ (அச்சில் உள்ளவாறு).

“சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.”

சலம்பற்றி = வஞ்சித்து.
சால்பில = இழிவான, தகாதன.
மாசற்ற = குற்றமற்ற.
குலம்பற்றி = நற்குடியைக்கருதி.
வாழ்தும் = வாழ்வோம்.

“மாசற்ற குலம்பற்றி வாழ்துமென்பார்
சலம்பற்றி சால்பில செய்யார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குற்றமற்ற நற்குடியைக்கருதி வாழ்வோம் என்பார் வஞ்சித்து தகாதனசெய்யார்” என்பதாம்.

‘பற்றி’ என்னும் வினையெச்சம் ‘சால்பு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“சலம்பற்றி சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.”

 

குறள் – ௯௱௫௰௭ (அச்சில் உள்ளவாறு).

“குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.”

குடிப்பிறந்தார்கண் = நற்குடிப்பிறந்தாரிடத்து.
விளங்கும் = காணும்.
குற்றம் = குறை.
விசும்பு = விண், வானம்.
மறு = களங்கம்.
உயர்ந்து = விளங்கி.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நற்குடிப்பிறந்தாரிடத்து காணப்படும் குறைகள் வானில் இருக்கும் நிலவிலுள்ள குறைகள்போல் எல்லோராலும் காணப்படும்” என்பதாம்.

‘விளங்கும் குற்றம்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘மறுப்போல்’ என்பது ‘மறுவினைபோல’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளி நீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை அறிவிக்கும் ‌

‘மறுபோல்’ என்பதன்கண் வந்த ‘போல்’ என்னும் உவமவுருபு ‘மறு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுபோல் உயர்ந்து.”

 

குறள் – ௯௱௫௰௮ (அச்சில் உள்ளவாறு).

“நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்.”

நலத்தின்கண் = செல்வவளமுள்ளபோது.
நாரின்மை = இரக்கமின்மை.
தோன்றின் = காணப்படின்.
குலம் = நற்குடி.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செல்வவளமுள்ளபோதும் ஒருவனிடம் இரக்கமின்மை காணப்படின் அவன் நற்குடியில் பிறந்தானாயென ஐயந்தோன்றும்” என்பதாம்.

‘நலத்தின்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்து, இன் ஆகிய சாரியைகளைப்பெற்று ‘நலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘குலத்தின்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்து, இன் ஆகிய சாரியைகளைப்பெற்று ‘குலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அவனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘குலம்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மை வடிவம் —
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்கண் ஐயப் படும்.”

குறள் – ௯௱௫௰௯ (அச்சில் உள்ளவாறு).

“நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.”

கிடந்தமை = நிலத்தின் வளம்.
கால் = முளைகள்.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் வாய்ச்சொல் குலத்தில் பிறந்தார்காட்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘போல’ என்னும் உவமவுருபு மறைந்து நிற்கின்றது. ‘காட்டுவதைபோல’ என்றாகும்.

“முளைகள் நிலத்தின் வளத்ததைக்காட்டுவதைப்போல வாய்ச்சொற்கள் நற்குடியில் பிறந்தாரைக்காட்டும்” என்பதாம்.

நிலத்தில், குலத்தில் என்பனவற்றில் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று நிலம், குலம் என்னும் பெயர்களுடன் புணர்ந்து தம்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணரா.

‘காட்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மை வடிவம் —
“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.”

 

குறள் – ௯௱௬௰ (அச்சில் உள்ளவாறு).

“நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.”

நலம் = நன்மை.
வேண்டின் = விரும்பின்.
நாணுடைமை = பழிக்கு அஞ்சுதல்.
குலம் = நற்குடி.
வேண்டுக = விரும்புக.
யார்க்கும் = எவர்க்கும்.
பணிவு = கீழ்ப்படிதல்.

“நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும். யார்க்கும் குலம்வேண்டின் பணிவுவேண்டுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நன்மைகளை விரும்பின் பழிக்கு அஞ்சும் பண்பு வேண்டும். நற்குலத்தாராக விரும்பின் எவர்க்கும் கீழ்ப்படிதலை விரும்புக” என்பதாம்.

‘வேண்டின்’ என்னும் வினையெச்சம் ‘நாணுடைமை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.‌

செம்மைவடிவம் —
“நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button