
குறள் – ௯௱௰௧ (அச்சில் உள்ளவாறு).
“அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா
ரின்சொ லிழுக்குத் தரும்.”
விழையார்= விரும்பார்.
பொருள் = செல்வம்.
விழையும் = விரும்பும்.
ஆய்தொடியார் = தேர்ந்த வளையல்களை அணிந்த விலைமகளிர். (விலைமகளிர், பொதுமகளிர் என்பது அதிகாரமுறையால் பெறப்பட்டது).
இன்சொல் = இனிய மொழிகள். இழுக்கு = கேடு, துன்பம்.
“அன்பினால் விரும்பாது செல்வத்தை விரும்பும் தேர்ந்த வளையல்களை அணிந்த விலைமகளிரது இனிய மொழிகள் துன்பத்தைத்தரும்” என்பதாம்.
‘விழையும் ஆய்தொடியார்’ என்பது செய்யுமென்னும் வாய்ப்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘ஆய்தொடியாரின்ன்சொல்’ என்பது நெடுந்தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியா
ரின்சொல் இழுக்குத் தரும்.”
குறள் – ௯௱௰௨ (அச்சில் உள்ளவாறு).
“பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்.”
தூக்கி = கருதி, ஆராய்ந்து.
பண்புரைக்கும் = பெருமைகளைச்சொல்லும்.
பண்பில் (பண்பு+இல்) = குணமில்லா.
மகளிர் = விலைமகளிர்.
நயன் = நற்பயன்.
நள்ளா = விரும்பா.
விடல் = கைவிடுக, நீங்குக.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தாம் பெறும் பயன்களைக்கருதி தம்பெருமைகளைச்சொல்லும் குணமிலா விலைமகளிரை நற்பயன்கருதி விரும்பாது நீங்குக” என்பதாம்.
‘தூக்கி’ என்னும் வினையெச்சம் ‘பயன்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பண்பின்மகளிர்’ என்பது பண்பு+இல்(லாத)+ மகளிர் என்பதன் புணர்மொழி. இதன்கண் வந்த லகரம் னகரமாயின் ஏழாம்வேற்றுமைவுருபாகவும் மயங்கும். ‘இல்’ என்பது எதிர்மறைப்பொருள் நீங்கும்.
செம்மைவடிவம் —
“பயன்றூக்கி பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்.”
குறள் – ௯௱௰௩ (அச்சில் உள்ளவாறு).
“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று.”
பொருட்பெண்டிர் = விலைமகளிர்.
முயக்கம் = புணர்ச்சி, கலவி.
ஏதில் = தொடர்பில்லாத.
தழீஇ = தழுவிய.
அற்று = அது போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“விலைமகளிரது பொய்மைப்புணர்ச்சி இருட்டறையில் தமக்கு தொடர்பில்லாத பிணத்தைத்தழுவியதைப்போன்றது” என்பதாம்.
‘முயக்கம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘பொருட்பெண்டிர்பொய்ம்மைமுயக்கம்’ என்பது பல்லடைபெற்ற நெடுந்தொடரெழுவாய் ஆகும். எழுவாய் எதனுடனும் புணராது எனவும் கொள்க.
‘இருட்டறையில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இருட்டறை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.”
குறள் – ௯௱௰௪ (அச்சில் உள்ளவாறு).
“பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்.”
பொருட்பொருளார் = செல்வத்தை உண்மைப்பொருளாக கருதுவார்.
புன்னலம் = புல்லிய நலம், இழிந்த இன்பம்.
தோயார் = கருதார்.
அருட்பொருள் = அருளென்னும் மெய்ப்பொருள்.
ஆயும் = ஆராயும், தேறும்.
“அருட்பொருளாயும் அறிவினவர் பொருட்பொருளார் புன்னலந்தோயார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அருளென்னும் மெய்ப்பொருளைத்தேறும் அறிவுடையார் செல்வத்தை உண்மைப்பொருளாக கருதுவாரது இழிந்த இன்பத்தைக்கருதார்“ என்பதாம்.
‘தோயார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஆயும் அறிவினவர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொரு
ளாயும் அறிவி னவர்.”
குறள் – ௯௱௰௫ (அச்சில் உள்ளவாறு).
“பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட வறிவி னவர்.”
பொதுநலத்தார் = பொதுமகளிர், விலைமகளிர்.
புன்னலம் = இழிந்த நலன்.
தோயார் = கருதார்.
மதிநலம் = உயர்ந்த அறிவு.
மாண்ட = பெருமைமிக்க, மதிப்புற்ற.
“மதிநலத்தின் மாண்ட அறிவினவர் பொதுநலத்தார்புன்னலந்தோயார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உயர்ந்த அறிவினால் பெருமைபெற்ற அறிவினார் பொதுமகளிரின் இழிந்த நலனைக்கருதார்” என்பதாம்.
‘மாண்ட அறிவினவர்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.”
குறள் – ௯௱௰௬ (அச்சில் உள்ளவாறு).
“தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.”
பாரிப்பார் = காப்பார்.
தோயார் = தழுவார்.
தகைசெருக்கி = அழகினை மிகுத்து.
புன்னலம் = இழிந்த நலன்.
“தகைசெருக்கி
புன்னலம்பாரிப்பார்தோள் தந்நலம்பாரிப்பார் தோயார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தனது அழகினை மிகுத்து இழிந்த நலனைக்காப்பாரது தோளினை தமது நலனைக்காப்பார் தழுவார்” என்பதாம்.
‘செருக்கி’ என்னும் வினையெச்சம் ‘புன்னலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கி
புன்னலம் பாரிப்பார் தோள்.”
குறள் – ௯௱௰௭ (அச்சில் உள்ளவாறு).
“நிறைநெஞ்ச மில்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.”
நிறை = ஒழுக்கம் நிறைந்த.
தோய்வார் = தழுவுவர்.
பேணி = விரும்பி.
“நெஞ்சில் பிறபேணி புணர்பவர்தோள் நிறைநெஞ்சமில்லவர் தோய்வார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெஞ்சில் பிறவற்றைப் (அன்பு நீங்கலாக) பேணி புணர்பவரது தோளினை ஒழுக்கம் நிறைந்த நெஞ்சமில்லார் தழுவுவார்” என்பதாம்.
‘நெஞ்சில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பேணி’ என்னும் வினையெச்சம் ‘புணர்பவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“நிறைநெஞ்ச மில்லவர் தோய்வார் பிறநெஞ்சில்
பேணி புணர்பவர் தோள்.”
குறள் – ௯௱௰௮ (அச்சில் உள்ளவாறு).
“நிறைநெஞ்ச மில்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.”
நிறை = ஒழுக்கம் நிறைந்த.
தோய்வார் = தழுவுவர்.
பேணி = விரும்பி.
“நெஞ்சில் பிறபேணி புணர்பவர்தோள் நிறைநெஞ்சமில்லவர் தோய்வார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெஞ்சில் பிறவற்றைப் (அன்பு நீங்கலாக) பேணி புணர்பவரது தோளினை ஒழுக்கம் நிறைந்த நெஞ்சமில்லார் தழுவுவார்” என்பதாம்.
‘நெஞ்சில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பேணி’ என்னும் வினையெச்சம் ‘புணர்பவர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“நிறைநெஞ்ச மில்லவர் தோய்வார் பிறநெஞ்சில்
பேணி புணர்பவர் தோள்.”
குறள் – ௯௱௰௯ (அச்சில் உள்ளவாறு).
“வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்க ளாழு மளறு.”
வரைவிலா = வரையறையில்லா. மாணிழையார் = கவரும் அணிகலனார்.
புரையிலா = மறைத்தலில்லா.
பூரியர்கள் = கீழ்மக்கள்.
ஆழும் = அழுந்தும்.
அளறு = நரகம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கவரும் அணிகலன் அணிந்த வரையறையில்லா விலைமகளிரது மெல்லியதோள்கள் மறைத்தலறியா கீழ்மக்கள் அழுந்தும் நரகம்” என்பதாம்.
‘பூரியர்கள்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஆழும் அளறு’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.”
குறள் – ௯௱௨௰ (அச்சில் உள்ளவாறு).
“இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.”
இருமனப்பெண்டிர் = பொருட்பெண்டிர். (இருமனம் = உடம்பால் கூடி உள்ளத்தால் கூடாமை).
கள் = கள்ளுண்ணல்.
கவறு = சூது.
திரு = திருமகள், காண்போர் விரும்புந்தன்மை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உடம்பால் கூடி உள்ளத்தால் கூடாத இருமனப்பெண்டிர், கள்ளுண்ணல், சூது ஆகியன திருமகளால் விலக்கப்பட்டாரது தொடர்புகள்” என்பதாம்.
எண்ணும்மைகள் பெருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘கவறும்’ என்பது புணராது.
செம்மைவடிவம் —
“இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



