இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௩௩. கொல்லாமை.

குறள் – ௩௱௨௧ (அச்சில் உள்ளவாறு).

“அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.”

கோறல் = கொல்லுதல்.
பிறவினை = அறமற்ற வினைகள்.

‘யாதெனில்’ என்பதில் வந்த ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘யாது’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

“அறச்செயல் யாதெனில் கொல்லாமை. கொல்லுதல் அறமற்ற செயல்கள் அனைத்தின் விளைவுகளையும் தரும்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.”

குறள் – ௩௱௨௨ (அச்சில் உள்ளவாறு).

“பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.”

பல்லுயிர் = பல்லுயிரும். உம்மை விகாரத்தால் தொக்கது.
ஓம்புதல்= பேணுதல், காத்தல்.
தலை = தலைமையானது.

“பகுத்து உண்டு பல்லுயிரும் ஒம்புதல் நூலோர் தொகுத்த எல்லாவற்றுள்ளும் தலை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘நூலோர்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.”

குறள் – ௩௱௨௩ (அச்சில் உள்ளவாறு).

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.”

ஒன்றாக = ஒப்பற்றதான.
மற்று = மேலும்.
சார =தொடர.

முந்தைய குறளில் (குறளெண் – ௩௱௨௨) பல்லுயிரும் ஓம்புதலில் கொல்லாமை அடங்கினாலும் அதன்சிறப்பு கருதி ஒப்பற்றது என்னும் பொருளில் இக்குறளில் சொல்கிறார்.

“ஒப்பற்றதான கொல்லாமை நல்லது. மேலும் பொய்யாமை அதனை பின்தொடர நன்று” என்பதாம்.

‘சார’ என்னும் வினையெச்சம் ‘பொய்யாமை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

“ஒன்றாக கொல்லாமை நல்லது பொய்யாமை அதன்பின்சார நன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சார பொய்யாமை நன்று.”

குறள் – ௩௱௨௪ (அச்சில் உள்ளவாறு).

“நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி.”

நல்லாறு = நல்வழி.
சூழும் = தழுவும்.

‘எனப்படுவது’ என்னும் வினையெச்சம் ‘யாது’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘யாதொன்றும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

‘சூழும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நல்லா றெனப்படுவது* யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௨௫ (அச்சில் உள்ளவாறு).

“நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.”

நிலை = வாழ்வின் நிலையாமை/ வாழ்வின் துன்பநிலை.
நீத்தார் = துறந்தார்.
சூழ்வான் = தழுவுவான்.
தலை = தலைமை.

‘அஞ்சி’ என்னும் வினையெச்சம் ‘கொல்லாமை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘சூழ்வான்றலை’ என்பது ‘சூழ்வான் தலைமையானவன்’ எனவிரியும். இதனில் தொகுவது எதுவும் இல்லாததால் புணராது. மேலும் ‘சூழ்வான்’ என்பது ‘கொல்லாமை’ என்பதனைத்தழுவி ‘கொல்லாமையைச்சூழ்வான்’ ‘கொல்லாமையைத்தழுவுபவன்’ எனப்பொருள்படும்.

“வாழ்வின் நிலையாமையை/ வாழ்வின் துன்பநிலையை அஞ்சி துறந்தார் எல்லாருள்ளும் கொலையை அஞ்சி கொல்லாமையைத்தழுவியோர் தலைமையானவர்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாம் கொலையஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை.”

குறள் – ௩௱௨௬ (அச்சில் உள்ளவாறு).

“கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று.”

செல்லாது = அணுகாது.
உயிருண்ணும் = உயிரெடுக்கும்.
கூற்று = கூற்றுவன், காலன்.

“கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளை கூற்றுவன் அணுகான்; நெடுங்காலம் வாழ்வான்” என்பதாம்.

“கொல்லாமைமேற்கொண்டு ஒழுகுவான்வாழ்நாள்மேல் உயிருண்ணும் கூற்று செல்லாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘வாழ்நாள்மேல்’ என்பதில் வந்த ‘மேல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘வாழ்நாள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘செல்லாதுயிர்’ என்பதில் ‘உயிர்’ என்பது ‘உண்ணும்’ என்னும் வினைச்சொல்லைத்தழுவி உயிரைவுண்ணுமென இரண்டாம்வேற்றுமைத்தொகையாகும். தழுவும் சொற்களே புணரும்.

‘செல்லாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘உயிருண்ணும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். இப்பெயரெச்சம் ‘கூற்று’ என்னும் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும். பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது* உயிருண்ணும் கூற்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௨௭ (அச்சில் உள்ளவாறு).

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.”

தான் = இடைச்சொல்.

‘நீப்பினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

“தனது உயிர் போவதாயினும் மற்றொன்றன் இன்னுயிரை நீக்கும் வினைதான் செய்ய வேண்டா” என்பதாம்.

“தன்னுயிர் நீப்பினும் பிறிதின்னுயிர் நீக்கும் வினைதான் செய்யற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.”

குறள் – ௩௱௨௮ (அச்சில் உள்ளவாறு).

“நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை.”

நன்றாகும் = நன்மைதரும்.
ஆக்கம் = செல்வம்.
கடை = இழிந்தது.

“வேள்வித்தீயில் இடும் உயிர்கொலையினால் நன்மைதரும் பெருஞ்செல்வம் கிட்டுமெனினும் உயிர்க்கொலையால் பெறப்படும் அச்செல்வம் சான்றோர்க்கு இழிந்தது” என்பதாம்.

‘ஆகுமாக்கம்’ என்பதில் ‘ஆகும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.

‘எனினும்’ என்னும் காரணக்கிளவி ‘பெரிது’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளைத்தொடரச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘சான்றோர்க்குக்கொன்றாகுமாக்கம்’ என்னும் புணர்ச்சி பொருள்தழுவாப்புணர்ச்சி. ‘கொன்றாகும்’ என்பது ‘ஆக்கம்’ என்பதைத்தழுவும் செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். இதன் முடிக்கும் சொல்‌ ‘ஆக்கம்’ என்பது.
‘சான்றோர்க்குக்கொன்றாகும்’ எனப்புணர்த்தினால் ‘சான்றோர்க்காக கொன்று பெறப்படும்’ என்பதாக பொருள் மயங்கும். புணர்ச்சியால் பொருள் மயங்காது. ‘சான்றோர்க்கு’ என்பது விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்கு
கொன்றாகு மாக்கம் கடை.”

குறள் – ௩௱௨௯ (அச்சில் உள்ளவாறு).

“கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.”

கொலைவினையர் = கொல்லும் தொழிலோர்.
மாக்கள் = விலங்குகள் என்னும் இழிவுக்குறிப்பு.
புலைவினையர் = இழிதொழிலோர்.
புன்மை = இழிவு.
தெரிவார் = அறிந்தவர், தெளிந்தவர்.
அகத்து = நெஞ்சத்து.

“இழிவினை தெளிந்தாரது நெஞ்சத்து கொலைத்தொழிலோராகிய மாக்கள் இழிதொழிலோர் ஆவர்” என்பதாம்.

“புன்மைதெரிவாரகத்து கொலைவினையராகிய மாக்கள் புலைவினையர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௩௱௩௦ (அச்சில் உள்ளவாறு).

“உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.”

செயிர் = நோய்.
செல்லா = நீங்காத.

“செயிருடம்பின் செல்லாத்தீவாழ்க்கையவர் உயிருடம்பினீக்கியாரென்ப“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நோயுடம்பின் தீமை நீங்காத வாழ்க்கையுடையார் உயிரை உடம்பிலிருந்து நீக்கியவரென்ப (உயிர்க்கொலைபுரிந்தாரென்ப) என்பதாம்.

‘செயிருடம்பின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘உடம்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.”

தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button