
குறள் – ௯௱௧ (அச்சில் உள்ளவாறு).
“மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது.”
மனை = மனையாள்.
விழைவார் = பெரிதும் காமுறுவர்.
மாண் = மாண்புற்ற.
எய்தார் = பெறார்.
வினை = செயல்.
வேண்டா = விரும்பா.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“காமத்தின்பொருட்டு மனையாளை பெரிதும் காமுற்று அவள்சொல்வழி நடப்பார் மாண்புற்ற பயன்களைப்பெறார். செயலை விரும்புவார் விரும்பாக்குணமும் அதுவே” என்பதாம்.
‘பொருளுமது’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. மகரமெய்மேலேறிய அகரத்தைப்பிரித்தாலொழிய ‘அது’ என்னும் சுட்டுப்பெயரை உணரமுடியாது. பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.
செம்மைவடிவம் —
“மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.”
குறள் – ௯௱௨ (அச்சில் உள்ளவாறு).
“பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.”
பேணாது = ஆராயாது.
விழைவான் = விரும்புவான்.
ஆக்கம் = மேன்மை.
நாணாக = மானக்கேடு.
நாணுத்தரும் = தலைக்குனிவைத்தரும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஆராயாது பெண்ணின் காமத்தை விரும்புவானது மேன்மை பெரியதோர் மானக்கேடாகி தலைக்குனிவைத்தரும்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௯௱௩ (அச்சில் உள்ளவாறு).
“இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று
நல்லாரு ணாணுத் தரும்.”
இல்லாள் = மனையாள்.
தாழ்ந்த = கீழ்ப்படிந்த.
இயல்பின்மை = ஆணியல்பின்மை.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
நாணுத்தரும் = தலைக்குனிவைத்தரும்.
“மனையாளிடத்து காமம்வேண்டி கீழ்ப்படியும் ஆணியல்பின்மை நல்லார்முன் தலைக்குனிவைத்தரும்” என்பதாம்.
‘இல்லாள்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இல்லாள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இயல்பின்மை’ என்பதனையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது. விட்டிசைத்தல் பொருட்டெளிவின்கண் நிகழ்வது.
‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘தாழ்ந்த இயல்பின்மை’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘நல்லாருணாணு’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. புணர்ச்சியை நீக்காமல் ‘உள்’ என்னும் வேற்றுமைவுருபை அறியவியலாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.
செம்மைவடிவம் —
“இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.”
குறள் – ௯௱௳௪ (அச்சில் உள்ளவாறு).
“மனையாளை யஞ்சு மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.”
மறுமை = மறுமைக்குரிய வாழ்வின் பயன்.
வீறு = பொலிவு, வெற்றி.
இன்று = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“காமம்வேண்டி மனையாளுக்கு அஞ்சுபவன் மறுமைக்குரிய வாழ்வின் பயனைப்பெறான். அவனது வினையாற்றலும் பொலிதல்/மாண்புறுதல் இல்லை” என்பதாம்.
‘அஞ்சும் மறுமையிலாளன்’ என்னும் பெயரெச்சத்தொடரில் ‘அஞ்சும்’ என்னும் செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம் ‘மறுமை’ என்னும் பெயருடன் புணராது. பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.”
குறள் – ௯௱௫ (அச்சில் உள்ளவாறு).
“இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்.”
இல்லாள் = மனையாள்.
மற்று = அசைச்சொல்.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
நல்லார்க்கு = தக்கார்க்கு.
செயல் = செய்ய.
“இல்லாளை அஞ்சுவான் நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காமம்வேண்டி இல்லாளை அஞ்சுவான் தான் தேடிய பொருளைக்கொண்டு தக்கார்க்கு நல்லன செய்ய எஞ்ஞான்றும் அஞ்சுவான்” என்பதாம்.
‘இல்லாளையஞ்சுவான்’ என்பது தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘அஞ்சும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இல்லாளை யஞ்சுவான் அஞ்சும்மற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.”
குறள் – ௯௱௬ (அச்சில் உள்ளவாறு).
“இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்தோ ளஞ்சு பவர்.”
இமையார் = (கண்ணிமையாத) தேவர்.
பாடு = பெருமை.
இல்லாள் = மனையாள்.
அமையார் (அமை+ஆர்) தோள்= அழகுமிக்க தோள்கள்.
“இல்லாளமையார்தோளஞ்சுபவர் இமையாரின் வாழினும் பாடிலரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இல்லாளின் அழகு பெற்ற தோள்களை தழுவாமை நேரிடுமோவென அஞ்சுபவர் தேவர்களைவிட உயர்ந்து வாழ்ந்தாலும் பெருமை இலரே” என்பதாம்.
‘பாடிலரே’ என்பது தேற்றேகாரவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இமையாரின் வாழினும் பாடிலரே இல்லா
ளமையார்தோ ளஞ்சு பவர்.”
குறள் – ௯௱௭ (அச்சில் உள்ளவாறு).
“பெண்ணேவல் செய்தொழு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.”
ஏவல் = கட்டளை.
நாணுடை = நாணமுடைய.
பெருமையுடைத்து = போற்றுதற்குரியது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“காமம்வேண்டி மனையாளின் கட்டளைகளைச்செய்து நடக்கும் ஆணினினும் நாணத்தையுடைய பெண்ணே போற்றற்குரியள்” என்பதாம்.
‘ஒழுகும் ஆண்மை’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘ஆண்மையின்’ என்பதன்கண் ஒப்புப்பொருளில் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமையுருபு ‘ஆண்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.”
குறள் – ௯௱௮ (அச்சில் உள்ளவாறு).
“நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.”
நட்டார் = நண்பர்.
நன்றாற்றார் = நல்லன செய்யார்.
குறை = இல்லாமை.
முடியார் = தீரார்.
நன்னுதலாள் = அழகிய நெற்றியாள் (மனையாள்).
பெட்டாங்கு = விரும்பியவாறு.
“நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் நட்டார்குறைமுடியார் நன்றாற்றார்”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அழகிய நெற்றியையுடைய மனையாள் விரும்பியவாறு நடப்பவர் தம்நண்பரது இல்லாமையைத்தீரார்; நல்லன செய்யார்” என்பதாம்.
செம்மைவடிவம் —
“நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.”
குறள் – ௯௱௯ (அச்சில் உள்ளவாறு).
“அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்.”
ஆன்ற பொருளும் = மாண்புற்ற செல்வமும்.
பிறவினை = பிற கடமைகள்.
ஏவல் = கட்டளை.
இல் = இல்லை.
“பெண்ணேவல்செய்வார்கண் அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காமம்வேண்டி மனையாளது கட்டளைகளைச்செய்வாரிடத்து அறச்செயல்களும் மாண்புற்ற செல்வமும் பிற செயல்களும் நிகழா” என்பதாம்.
‘அறவினையுமான்ற’ என்பது தழுவாப்புணர்ச்சி. ‘ஆன்ற’ என்னும் பெயரெச்சம் ‘பொருள்’ என்னும் பெயரை முடிக்குஞ்சொல்லாக கொள்ளும். மேலும் புணர்ச்சியை நீக்காமல் ‘ஆன்ற’ என்னும் பொருளை உணரமுடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.
‘செய்வார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘செய்வார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.”
குறள் – ௯௱௰ (அச்சில் உள்ளவாறு).
“எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.”
எண் = ஆராய்ச்சி, ஆய்வு.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
சேர்ந்தாம் = சேர்ததால் உண்டாகும். பேதைமை = மடமை.
இல் = இல்லை.
“எண்சேர்ந்த நெஞ்சத்து இடனுடையார்க்கு பெண்சேர்ந்தாம் பேதைமை எஞ்ஞான்றும் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஆராய்ச்சியுடன் கூடிய மனமுடையார்க்கு காமம்வேண்டி மனையாளைச்சேர்ந்ததால் உண்டாகும் மடமை எப்போதும் இல்லை” என்பதாம்.
‘உடையார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘எஞ்ஞான்றும்’ என்னும் வினையைச்சாராது பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘பேதைமையில்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. இப்புணர்ச்சியில் ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று வேற்றுமைவுருபாகவும் மயங்கும். எனவே புணராது.
செம்மைவடிவம் —
“எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு* எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




