
குறள் – ௬௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு).
“சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு
தாழ்ச்சியுட் டங்குத றீது.”
சூழ்ச்சி = ஆராய்ச்சி.
முடிவு = இறுதி.
துணிவு = உறுதி.
தாழ்ச்சி= காலநீட்டிப்பு.
தீது = கேடு, குற்றம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஆராய்ச்சியின் இறுதி வினைமுடிப்பாமென்னும் உறுதிகொள்ளல். அவ்வுறுதி காலநீட்டிப்பின்கண் தங்குதல் கேடுதரும்” என்பதாம்.
’எய்தல்’ என்பது பயனிலையாகி பொருள்முடிவைத்தருகிறது. முற்றுப்பொருள்தருஞ்சொற்கள் புணரா.
‘தாழ்ச்சியுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘தாழ்ச்சி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தங்குதல்’ என்னும் தொழிற்பெயர் ‘தீது’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணராது. திரிபில்பெயர்ச்சொல் வினையுடன் புணராது.
செம்மைவடிவம் —
“சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.”
குறள் – ௬௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.”
தூங்குக = காலந்தாழ்த்துக, காலம்நீட்டிக்க.
செயற்பால = செய்யத்தக்கன .
தூங்காது = காலந்தாழ்த்தாது, விரைந்து.
“தூங்கிச்செயற்பால தூங்குக. தூங்காது செய்யும்வினைதூங்கற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காலந்தாழ்த்திச்செய்யவேண்டிய வினைகளை காலந்தாழ்த்திச்செய்க. காலந்தாழ்தாது செய்யவேண்டிய வினைகளை காலந்தாழ்தாது செய்க” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௬௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.”
ஒல்லும்வாய் = இயலும்வகை.
ஒல்லாக்கால் = இயலாதபோது. செல்லும்வாய் = ஏற்றவழி.
நோக்கி = கண்டு, அறிந்து.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இயலும்வகைகளிலெல்லாம் வினைபுரிதல் நன்றே. இயலாதபோது ஏற்றவழிகளைக்கண்டு வினைசெய்க” என்பதாம்.
‘நன்றே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது. மேலும் கருத்துமுடிவினைத்தருவதால் அடுத்த கருத்துடன் புணராது.
கருத்துமாற்றத்தை அறிவிக்கும் ‘ஒல்லாக்கால்’ என்னும் வினையெச்சம் புணராது விட்டிசைத்து பொருட்டெளிவைத்தரும். விட்டிசைக்குமிடம் புணராது.
செம்மைவடிவம் —
“ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.”
குறள் – ௬௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும்.”
எச்சம் = எஞ்சியது.
நினையுங்கால் = ஆராயும்போது.
தீயெச்சம் = தீயின் எச்சம். தீயின் அவியாக்குறை.
தெறும் = அழிக்கும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“செய்யத்தொடங்கிய செயல், ஒழிக்கத்தொடங்கிய பகையென்ற இரண்டிலும் முடிக்காதுவிட்ட எச்சங்களை ஆராய்ந்தால் அவ்வெச்சங்கள் முற்றாக அணைக்காத தீயின் எச்சத்தைப்போல பின்வளர்ந்து அழிக்கும்” என்பதாம்.
‘என்று’ என்னும் இடைச்சொல் வினை, பகை என்னும் இரண்டு பெயர்களுடன் சென்றுபொருந்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இரண்டின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இரண்டு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘எச்சம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘நினையுங்கால்’ என்னும் வினையெச்சம் ‘தீயெச்சம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘போல’ என்னும் உவமவுருபு எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வினைபகை யென்று*இரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போல தெறும்.”
குறள் – ௬௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).
“பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல்.”
இருள்தீர = மயக்கம் நீங்க.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘வினையிடன்’ என்பது ‘வினையின்கண்’ எனவும் பொருள்படும் மயங்குபுணர்ச்சி. எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்காவண்ணம் புணரும்.
‘ஒடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு முன்னின்ற பெயர்கள் ஐந்தனுடனும் சென்று பொருந்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஐந்தும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘இருடீர’ என்பது மயங்குபுணர்ச்சி. இடையில் இடைச்சொற்கள் ஏதும் தொகவில்லை. இருள் என்பது எழுவாயாக நிற்கிறது.
வினையெச்சங்கள் தம்முள் புணரும். ‘தீரவெண்ணி’ என்பதினும் ‘தீரயெண்ணி’ என்றவாறு யகரவுடம்படுமெய்பெறுதல் ஒலியொப்பும் பொருளெளிமையும் கொண்டது. “உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” என்பது தொல்காப்பியம்.
செம்மைவடிவம் —
“பொருள்கருவி காலம் வினைஇடனொடு* ஐந்தும்
இருள்தீர யெண்ணிச் செயல்.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).
“முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.”
முடிவும் = வினைமுடிதலும் அதற்குரிய முயற்சியும்.
படுபயன் = பெறும் பயன்.
பார்த்து = கருதி, ஆராய்ந்து.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கருதிய வினை முடிதற்குரிய தன்மையும் அதற்குரிய முயற்சியும், இடையில் நேரும் தடைகளுயும், வினை முற்றுபெறுங்கால் பெறும் பயனையும் ஆராய்ந்து செய்க” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்காவண்ணம் புணரும்.
செம்மைவடிவம் —
“முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.”
குறள் – ௬௱௭௰௭ (அச்சில் உள்ளவாறு).
“செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல்.”
உள்ளறிவான் = தன்மைகளையறிவான்
உள்ளம் = கருத்து.
கொளல் = ஏற்றல்.
இக்குறள் பின்வருமாறு விரியும். “செய்யும் வினையை செய்வானது செயல்முறையாவது அவ்வினையை உள்ளறிவானது உள்ளத்தைக்கொளல்.”
“ஒரு வினையை செய்வானது செயல்முறையானது அவ்வினையின் தன்மைகளை அறிந்து முன்னரே செய்து முடித்தானது கருத்தைக்கொள்ளல்” என்பதாம்.
‘செய்முறையவ்வினை’ என்னும் புணர்மொழியில் எதுவும் தொகவில்லை. ‘அவ்வினை’ என்பது செய்வினையைச்சுட்டுகிறது; செய்யும்முறையையன்று. அவாவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல்.”
குறள் – ௬௱௭௰௮ (அச்சில் உள்ளவாறு).
“வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று.”
கோடல் = கொள்ளல்.
நனைகவுள் = மதநீரால் நனையும் யானையின் கன்னம்.
யாத்து = பிடிப்பது.
அற்று = ஒக்கும், போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒரு செயலைச்செய்கையில் அச்செயலால் மற்றுமொரு செயலை முடித்தல் மதநீரால் நனைந்த கன்னங்களைக்கொண்ட யானையை வைத்து வேறொரு யானையைப்பிடித்துக்கட்டுதலை ஒக்கும்” என்பதாம்.
‘நனைகவுள்’ என்னும் வினைத்தொகை ‘யானை’ என்னும் பெயருக்கு அடையாக வந்தது. ‘கோடல்’ என்னும் தொழிற்பெயரைத்தழுவாது. தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.”
குறள் – ௬௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).
“நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.”
நட்டார் = நட்பானார் (நண்பர்).
ஒட்டார் = உறவாகார் (பகைவர்).
ஒட்டி = உறவாக்கி.
கொளல் = கொள்ளல்.
“ஒட்டாரையொட்டிக்கொளல் நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பகைவரொடு உறவாகாரை தமக்கு உறவாக்கிக்கொள்வது நண்பர்க்கு நல்லது செய்தலிலும் விரைந்து செய்யப்படவேண்டியதே” என்பதாம்.
‘விரைந்ததே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை யொட்டிக் கொளல்.”
குறள் – ௬௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சி குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.”
உறை = உறையுமிடம் (பகுதி, நாடு).
உண்ணடுங்கல் → உள்நடுங்கல் = தம்முடன் உள்ளோர் நடுங்கல்.
குறைபெறினும் = குறைவாக இருப்பினும், தமக்கு குறை நேரினும்.
‘உறைசிறியார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நடுங்கலஞ்சி’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. நடுங்குதலும் அஞ்சுதலும் முறையே குடிகள், அரசன் ஆகிய இருவேறு வினைமுதல்களின் செயல்கள். வேறுவேறு வினைமுதல்களின் செயல்கள் புணரா.
‘பெறின்’ என்பது ‘பெறினும்’ என்னும் இழிவுச்சிறப்பும்மையாக விரியும். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
இரண்டாம்வேற்றுமைத்தொகையான ‘பெரியார்பணிந்து’ என்பது ‘பெரியாரைப்பணிந்து’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது இயல்பாகும்.
செம்மைவடிவம் —
“உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சி குறைபெறின்
கொள்வர் பெரியார் பணிந்து.”
தொகுத்தெழிதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



