
குறள் – ௫௱௪௧ (அச்சில் உள்ளவாறு).
“ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.”
ஓர்ந்து = ஆராய்ந்து.
கண்ணோடாது = பக்கச்சார்பின்றி.
இறை (இறைமை) = நடுநிலை(மை).
தேர்ந்து = முடிவு.
செய்வஃதே = செய்வதே.
முறை = நெறி.
“யார்மாட்டும் கண்ணோடாது ஓர்ந்து இறைபுரிந்து தேர்ந்து செய்வஃதே முறை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘இறைமை’ என்பது ‘இறை’ எனவும் ‘செய்வதே’ என்பது ‘செய்வஃதே’ எனவும் நின்றன.
“யாரிடமும் பக்கச்சார்பின்றி ஆராய்ந்து நடுநிலையில் பொருந்தி முடிவு செய்வதே நெறி” என்பதாம்.
‘ஓடாது’ என்னும் வினையெச்சம் ‘இறை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘புரிந்து’ என்னும் வினையெச்சம் ‘யார்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘யார்மாட்டும்’ என்பது முற்றும்மைபெற்ற சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஓர்ந்துகண் ணோடாது* இறைபுரிந்து* யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௪௨ (அச்சில் உள்ளவாறு).
“வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.”
வான் = மழை.
நோக்கி = வேண்டி, எதிர்பார்த்து.
கோன் = செங்கோல், நடுநிலைமை.
“உலகெல்லாம் வானோக்கி வாழும். குடி மன்னவன்கோனோக்கி வாழும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உலகவுயிர்கள் மழையை வேண்டி வாழும். அதுபோல குடிகள் மன்னவனது நடுநிலைமையை வேண்டி வாழும்” என்பதாம்.
‘வாழும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.”
குறள் – ௫௱௪௩ (அச்சில் உள்ளவாறு).
“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
அந்தணர் = அறவோர்.
நூற்கும் = மறைநூல்களுக்கும்.
ஆதியாய் = முதன்மையாய், காரணமாய்.
கோல் = நடுநிலைமை.
“அந்தணரது நூற்கும் அறத்திற்கும் மன்னவன்கோல் ஆதியாய் நின்றது“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறவோரது மறைநூல்களுக்கும் அறத்திற்கும் மன்னவனது நடுநிலைமை/நெறிதவறாமை காரணமாய் நின்றது” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணர்வதாயினும் பொருள் மயங்காது புணரும். மறத்திற்கும் என்பதனை அறத்திற்கும் என பொருளுணர்வதாயின் புணர்ந்த வேண்டா.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. ‘அறத்திற்கும்’ என நிற்கும்.
செம்மைவடிவம் —
“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
குறள் – ௫௱௪௪ (அச்சில் உள்ளவாறு).
“குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு.”
தழீஇ = பற்றி, தழுவி, அரவணைத்து.
கோலோச்சும் = நெறிபிறழாமல் ஆளும்.
மாநிலம் = சிறந்த நாடு.
உலகு = குடிமக்கள்.
“குடிதழீஇ கோலோச்சும் மாநிலமன்னனடிதழீஇ உலகு நிற்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஓச்சும்’ என்னும் வினையெச்சம் ‘மாநிலமன்னன்’ என்னும் பெயருடன் புணராது; புணரின் ஏவல்வினைமுற்றாகும். புணர்ச்சியைப்பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா.
‘தழீஇ’ என்னும் வினையெச்சம் ‘கோலினை’ எனவிரியும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘நிற்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்ன
னடிதழீஇ நிற்கும் உலகு.”
குறள் – ௫௱௪௫ (அச்சில் உள்ளவாறு).
“இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.”
இயல்புளி = இயல்பால்.
கோலோச்சும் = நெறிபிறழாது ஆளும்.
பெயலும் = பருவமழை பெய்தலும்.
விளையுளும் = பயிர்விளைவும்.
தொக்கு = ஒருங்குகூடி.
நாட்ட = நாட்டின்கண்.
‘உளி’ மூன்றாம்வேற்றுமையின் பொருள்தருவதோர் இடைச்சொல்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இயல்பினால் நெறிபிறழாமல் ஆளும் மன்னவனது நாட்டின்கண் பருவமழையும் குன்றாத பயிர்விளைவும் ஒருங்கமையும். வானும் நிலனும் ஒன்றுசேர்ந்து தொழிற்பட்டு வளம் சுரக்கும்” என்பதாம். ‘அமையும்’ என்பது சொல்லெச்சம்.
மூன்றாம்வேற்றுமையின் பொருள்தரும் ‘உளி’ என்னும் இடைச்சொல் ‘இயல்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஓச்சும்’ என்னும் வினையெச்சம் ‘மன்னவன்’ என்னும் பெயருடன் புணராது; மவ்வீறு நீங்கின் ஏவல்வினைமுற்றாகும். புணர்ச்சியைப்பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. ‘விளையுளுந்தொக்கு’ எனப்புணராது.
செம்மைவடிவம் —
“இயல்புளி கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.”
குறள் – ௫௱௪௬ (அச்சில் உள்ளவாறு).
“வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.”
வென்றி = வெற்றி.
கோடாது = நெறிபிறழாது.
எனின் = என்றால்.
“வெற்றிதருவது வேலன்று மன்னவனது கோல் அதூஉம் கோடாதெனின்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெறிபிறழா மன்னனது செங்கோலே வெற்றியைத்தரும்; வேலன்று” என்பதாம்.
செய்யுளல் ‘மன்னவன்கோல்’ என்பது பெயர்ப்பயனிலையாய் முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தருமிடங்கள் புணரா.
‘அதூஉம்’ என்பது தெரிநிலைசுட்டும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது. இடைச்சொற்கள் ஒன்றனுடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தியபின் மற்றொரு சொல்லுடன் புணரா.
செம்மைவடிவம் —
“வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடா தெனின்.”
குறள் – ௫௱௪௭ (அச்சில் உள்ளவாறு).
“இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.”
இறை = மன்னவன்.
முட்டு = தடை.
முட்டாச்செயின் = தடையின்றி செய்தால்.
முறை = நெறி.
“வையமெல்லாம் இறை காக்கும். முட்டாச்செயின் அவனை முறைகாக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வையத்தையெல்லாம் மன்னவன் காக்கும். நெறிகளை முட்டின்றி செய்தால் அந்நெறி அவனைக்காக்கும்” என்பதாம்.
‘முட்டின்றி’ என்னும் பொருள்தரும் ‘முட்டா’ என்னும் வினைச்சொல் புணராது தனித்து நிற்கும்.
‘எல்லாம்’ என்னும் முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டா செயின்.”
குறள் – ௫௱௪௮ (அச்சில் உள்ளவாறு).
“எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்.”
எண் = எளிமை.
பதம் = தகுதி.
ஓரா(ன்) = ஆராயான்.
முறை = நெறி.
தண்பதம் = தாழ்நிலை.
“எண்பதத்தான் ஓரா(ன்) முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஓரான்’ என்பதன் கடையெழுத்து குறைந்து ‘ஓரா’யென நின்றது.
“காட்சிக்கு எளியனாய் ஆராயான் நெறிசெய்யா மன்னவன் தாழ்நிலையால் தானே கெடுவான்” என்பதாம்.
‘எண்பதத்தான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘பதம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தண்பதத்தான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘பதம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“எண்பதத்தான் ஓரா(ன்) முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.”
குறள் – ௫௱௪௯ (அச்சில் உள்ளவாறு).
“குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.”
குடி = குடிமக்கள்.
புறம் = பிறரிடமிருந்து.
ஓம்பி = பேணி, பாதுகாத்து.
கடிதல் = களைதல், ஒறுத்தல்.
வடுவன்று = குற்றமன்று, பழியன்று.
தொழில் = கடமை.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“குடிமக்களை புறத்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து அவர்தம் குற்றங்களை களைதலும் ஒறுத்தலும் குற்றமன்று. அவை வேந்தனது கடமை” என்பதாம்.
‘ஓம்பி’ என்னும் வினையெச்சம் ‘குற்றம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“குடிபுறங் காத்தோம்பி குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.”
குறள் – ௫௱௫௰ (அச்சில் உள்ளவாறு).
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”
வேந்து = வேந்தன்.
ஒறுத்தல் = களைதல்.
பைங்கூழ் = பசும்பயிர்.
களைகட்டு = களைநீக்குதல்.
நேர் = ஒப்பு.
“கொடியாரை கொலையின் வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டு அதனொடு நேர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வேந்தன் கொடியாரைக்கொன்று ஒறுத்தல் களைகளைக்களைந்து பசும்பயிரை காத்தலுக்கு ஒப்பு” என்பதாம்.
‘கொலையில்’ என்பதன்கண் மூன்றாம்வேற்றுமைப்பொருளில் வந்த ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘கொலை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வேந்து’ என்பது ‘வேந்தன்’ என்னும் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கொலையில் கொடியாரை வேந்து*ஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




