இலக்கணம்தமிழ்நன்னூல்படைப்புகள்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௰௫. ஒழுக்கமுடைமை.

குறள் – ௧௩௧. (அச்சில் உள்ளவாறு.)

“ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.”

‘தரலான்’ என்பது ‘ஆன்’ எனும் மூன்றாம்வேற்றுமைவுருபேற்ற சொல். மூன்றாம்வேற்றுமைவுருபு வினையொடு புணர்ந்து தனது பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும். இடைச்சொல்லாம் வேற்றுமைவுருபு வினைக்கு பின்னொட்டாகவும் பெயர்க்கு முன்னொட்டாகவும் ஆகாது. மேலும் மூன்றாம்வேற்றுமை வினைச்சொல்லுடன் புணருமேயன்றி பெயர்ச்சொல்லுடன் புணராது.
நான்காஞ்சீரில்வந்த ‘ஒழுக்கம்’ தன்னையறிவித்து இயல்புப்பொருளில் வந்த பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உயிரினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மைச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”

குறள் – ௧௩௨. (அச்சில் உள்ளவாறு.)

“பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.”

பரிந்து = விரும்பி.
ஓம்பு = பேணு, சீர்தூக்கு.
தேரினும் = தெளியினும்.

“ஒழுக்கத்தைப்பரிந்தோம்பிக்காக்க. தெரிந்து ஓம்பி தேரினும் அதுவே துணை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
மூன்றாஞ்சீரில் வரும் ‘ஒழுக்கம்’ என்பது பெயர்ப்பயனிலையாய் நின்று பொருள்முடிவினைத்தருகின்றது. முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘தேரினும்’ என்பது சிறப்பும்மை பெற்ற வினையெச்சம். இதில் ‘இன்’ என்பது வினையெச்சவிகுதி. ‘உம்’ என்பது சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘அஃதே’ என்பது தேற்றேகாரம்பெற்ற சுட்டுச்சொல். சுட்டுச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.”

குறள் – ௧௩௩. (அச்சில் உள்ளவாறு.)

“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்.”

ஒழுக்கம், இழுக்கம் எனும் இருவேறு நிலைகளின் பயனும் விளைவும் விளக்கப்பட்டன. ‘குடிமை’ என்னுமிடத்தில் ஒழுக்கங்குறித்த கருத்து முடிகிறது. ஒரு கருத்து முடியுமிடத்தில் புணர்ச்சி நிகழாது.
‘இழுக்கம்’ என்பது தனது இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.”

குறள் – ௧௩௪. (அச்சில் உள்ளவாறு.)

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”

ஓத்து = நூல் (இயல்).
பார்ப்பான் = அந்தணன்.

“ஓத்து மறப்பினும் (கற்றுக்) கொளல் ஆகும். ஒழுக்கம் குன்ற பார்ப்பானது பிறப்பு கெடும்” எனவிரித்து அவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘கற்று’ என்பது சொல்லெச்சம்.
‘மறப்பினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘ஓத்து’ என்பது நூலினின் பகுதியைக்குறிக்கும் (இயல்) பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘ஒழுக்கம்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். ‘குன்ற’ என்பது வினையெச்சம். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘குன்றக்கெடும்’ எனப்புணராது. ‘குன்றுதல்’ எனும் தொழில் ஒழுக்கத்திற்குரியது. ‘கெடுதல்’ எனும் தொழில் பிறப்புக்குரியது. வேறுவேறு பெயர்களுடன் புணர வேண்டிய தொழில்கள் தம்முள் புணரா. அதேபோல் பிறப்பொழுக்கம் என்பதும் வேறுவேறு தொழில்களை ஏற்பதால் தம்முள் புணரா.

செம்மைவடிவம் —
“மறப்பினும் ஓத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பு*ஒழுக்கம் குன்ற கெடும்.”

*குற்றியலுகரமாம் புகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.

குறள் – ௧௩௫. (அச்சில் உள்ளவாறு.)

“அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு.”

“அழுக்காற்றினை உடையான்கண் ஆக்கம் இல்லாததுபோன்று ஒழுக்கம் இல்லாதவன்கண் உயர்வு இல்லை” எனவிரித்து இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இக்குறளில் ஈரிடத்து ‘கண்’ எனும் ஏழாம்வேற்றுமைவுருபு வந்துள்ளது.
‘கண்’ என்பது தனிச்சொல்போல் ஒற்று இரட்டித்து, இரட்டித்த ஒற்றின்மேல் வந்த உயிர் ஏறாது. இவ்வாறு எழுத்திடத்தின் அடிப்படையில் புணர்ந்தால் வேற்றுமையுருபின் இயல்பு நீங்கி பெயர்ச்சொல்லாய் மயங்கும். உடல்மேல் உயிரொன்றுமானாலும் பொருள் மயங்குமிடத்து உயிரேறாது தனித்தே நிற்கும். ‘உடையான்கண்’ என வினையாலணையும்பெயரை வேறுபடுத்திய உருபு ஆக்கம் எனும் மற்றொரு பெயருக்கு முன்னொட்டாகாது. இதேபோல் ‘இலான்கண்’ என்பதுவும்
‘இல்லை’ என்பது குறிப்பு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.”

குறள் – ௧௩௬. (அச்சில் உள்ளவாறு.)

“ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.”

ஏதம் = துன்பம்.
ஒல்கார் = தளரார். (ஒல்குதல் = தளர்தல்.)

“இழுக்கத்தின் ஏதம் படுபாக்கறிந்து உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
சொற்கள் புணர்ந்தால் புணர்ந்தநிலையில் வைத்தே பொருளுணரவேண்டும். புணர்மொழியிலிருந்து ஒருசொல்லைப்பிரித்து வேறோரிடத்து வைத்து பொருள்காண்போமானால் நாம் புணர்த்தியது தவறென அறிக. புணர்ச்சிவிதிகள் செய்யுளுக்கும் பொதுவானவை.
இழுக்கத்தின், ஒழுக்கத்தின் என்பதில் வரும் ஏழாம்வேற்றுமை இன்னுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது. அதன்பின் தன்னையடுத்துவரும் ‘ஒல்கார்’ எனும் வினைக்கும் ‘ஏதம்’ எனும் பெயருக்கும் முன்னொட்டாகாது. இன்னுருபையடுத்து வருமுயிர். னகரமெய்யின்மேல் ஏறியே ஆகவேண்டுமென்பதில்லை. இடைச்சொற்களாம் வேற்றுமையுருபுகள் தனித்து பொருள்தரும் சொற்கள் அல்ல. ஒருசொல்லை இடனாக ஏற்று வேற்றுமைவுருபுகள் புணர்ந்தபின் வேற்றுமையுருபின் இயல்பு மயங்குமாறு வலிந்த புணர்ச்சிகளைச்செய்யவேண்டா.
இக்குறளில் முதலைந்துசீர்களும் புணர்ந்துள்ளதால் எவ்வாறு கொண்டுகூட்டி பொருள்காண்பது. ‘ஏதம்’ என்பது இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொல். ‘உரவோர்’ என்பது எழுவாயாகும் திரிபில்பெயர்ச்சொல். ‘ஒல்கார்’ என்பது வினைமுற்று. இவையெல்லாம் புணரா.

செம்மைவடிவம் —
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.”

குறள் – ௧௩௭. (அச்சில் உள்ளவாறு.)

“ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.”

“ஒழுக்கத்தால் மேன்மையை எய்துவர். இழுக்கத்தால் எய்தாப்பழியை எய்துவர்” எனவிரித்து இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க.
ஒழுக்கம், இழுக்கம் ஆகிய இரண்டின் விளைபயன்கள் விளக்கப்பட்டது.
‘மேன்மை’ என்னுமிடத்து ஒழுக்கங்குறித்த கருத்து முடிகிறது. ஒரு கருத்து முடியுமிடத்து முற்றுப்பொருள் கிட்டும். முற்றுப்பொருளையடுத்து புணர்ச்சி நிகழாது.
ஐந்தாஞ்சீரில் வந்த ‘எய்துவர்’ வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எய்தா’ எனும் ஈறுகெட்டயெதிர்மறைப்பெயரெச்சம் ‘பழி’ எனும் பெயரைத்தழுவும். பகரமெய் இதனை அறிவிக்கிறது.

செம்மைவடிவம் —
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.”

குறள் – ௧௩௮. (அச்சில் உள்ளவாறு.)

“நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.”

நன்றி = நன்மை.
இடும்பை = துன்பம்.

“நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும். தீயொழுக்கம் என்றும் இடும்பையைத்தரும்” என்பதாம்.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்றின் ஈறு நீங்காது. வினைமுற்று எதனுடனும் புணராது.
குறளில் சீர்களமைந்தவரிசையில் ‘நல்லொழுக்கம்’ என்னுமிடத்தில் முற்றுப்பொருள் கிட்டுகிறது. முற்றுப்பொருள் வருமிடத்தில் புணர்ச்சி நிகழாது.
‘தீயொழுக்கம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘என்றும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.”

குறள் – ௧௩௯. (அச்சில் உள்ளவாறு.)

“ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.”

ஒல்லாவே = இயலாதே.
ஏ = தேற்றேகாரம்
வழுக்கியும் = தவறியும்.

“ஒழுக்கமுடையவர்க்கு தீய வழுக்கியும் வாயால் சொலல் ஒல்லாவே“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒழுக்கத்தை உடையவர்க்கு தீயவற்றை வாயால் தவறியும் சொல்லுதல் இயலாதே ” என்பதாம்.
‘ஒல்லாவே’ என்பது தேற்றேகாரம்பெற்ற எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. மேலும் தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
ஒரு வினைமுற்று வருமொழியாகி புணர்ச்சிபெறாமல் தனித்து நிற்பதே சிறப்பு. எவ்விடத்தும் வினைமுற்றே முதன்மைபெறும். ‘உடையவர்க்கு’ எனும் குற்றியலுகரச்சொற்குப்பின் வருவதாலேயே உயிர்முதன்வினைமுற்று வருமொழியாகி தனது முதன்மையை இழக்கவேண்டியதில்லை. இவ்விடத்தில் புணர்ச்சி பிழையின்று. விட்டிசைப்பதால் கருத்துணர்தல் மிகுவதைக்காணீர்.

செம்மைவடிவம் —
“ஒழுக்க முடையவர்க்கு* ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.”

*குற்றியலுகரமாம் குகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.

குறள் – ௧௪௦. (அச்சில் உள்ளவாறு.)

“உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.”

“உலகத்தோடு ஒட்டவொழுகல் கல்லாதார் பலகற்றும் அறிவிலாதவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘உலகத்தோடு’ என்பதில் வரும் மூன்றாம்வேற்றுமைவுருபு ஓடு புணர்ந்து தனது பணியை முடித்தது. மீளவும் புணர்ந்தால் தன்பொருளில் மயங்கும். ஒரே உருபு பெயர்க்கு பின்னொட்டாகவும் வினையெச்சத்திற்கு முன்னொட்டாகவும் வராது.
‘பலகற்றும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘கல்லார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய் ஆகும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உலகத்தோடு ஒட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.”

எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button