நன்னூல்படைப்புகள்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

இனியவைகூறல்.

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௰.
இனியவைகூறல்.

குறளெண் – ௯௧. (அச்சில் உள்ளவாறு.)

“இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.”

அளைஇ = கலந்த. படிறு = வஞ்சனை.

‘ஆல்’ என்பது அசைச்சொல். அசைச்சொற்கள் தம்முடன்தாம் புணருமேயற்றி பிறச்சொற்களுடன் புணராது; புணரின் அசைச்சொல்தன்மை கெடும். ‘இன்சொல்லால்’ என்பதன் இடையெழுத்து குறைந்ததே ‘இன்சொலால்’ எனும் வடிவம்.

“ஈரமளைஇ, படிறிலவா(கு)ம் செம்பொருளினைக்கண்டார்வாய்ச்சொல் இன்சொல்(ஆல்)” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

ஈரம் அளைஇ, படிறு இலவாம் என்பன வேறுவேறுபண்புகளைக்குறித்து எண்ணுப்பொருளில்வந்த பெயரெச்சங்கள்; இப்பெயரெச்சங்களின் முடிக்குஞ்சொல் ‘செம்பொருள்’ என்பதாம். எண்ணப்படும் பெயரெச்சங்கள் புணராமல் தனித்திருக்கவேண்டும். புணர்ச்சிபெற்றால் எண்ணுப்பொருள் நீங்கி பொருந்தாப்பொருள்தரும்.

செம்மைவடிவம் —
“இன்சொலால் ஈர மளைஇ படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.”

குறளெண் – ௯௩. (அச்சில் உள்ளவாறு.)

“அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.“

அமர்ந்து = விரும்பி, மலர்ந்து.

“அகன் அமர்ந்து, முகன் அமர்ந்து இன்சொலனாக பெறின், ஈதலின் நன்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

அகன் (அகம்), முகன் (முகம்) என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் முற்றுப்பொருளைத்தரும். முற்றுப்பொருளைத்தரும் சொற்கள் எதனுடனும் புணரா.

ஒரு முற்றுச்சொல்லை காரணங்கருதி எச்சநிலைக்கு மாற்றும்போது அந்த எச்சநிலையே முற்றுப்பொருளை அவாவிநின்று புணர்ச்சிக்கு காரணமாகிறது. எச்சநிலை நீங்கி முற்றுப்பொருளைத்தர நாம் கருதிய காரணத்தை வெளிப்படுத்தும் சொற்கள் புணரும்.

‘ஈதலின்’ என்பதில் ‘இன்’ எனும் ஐந்தாம்வேற்றுமைவுருபு நிற்கிறது. ‘அமர்ந்து’ எனும் வினையெச்சம் ‘ஈதல்’ எனும் பெயருடன் புணராது.

ஈதலின் என்பதில் ‘இன்’ எனும் ஐந்தாம்வேற்றுமைவுருபு நிற்கிறது.
‘நன்றே’ என்பது தேற்றேகாரம் பெற்ற பெயர்ச்சொல். இன்சொல், ஈதல் ஆகிய இரண்டும் ஒப்பிடப்பட்டுள்ளன. ஒப்புப்பொருளில்வந்த இன்னுருபு ஈதல் எனும் சொற்குரியது. ஒப்புப்பொருளில் வரும் ஐந்தாம்வேற்றுமைவுருபு பெயருடன் புணராது. எல்லைப்பொருளில் வரும் ‘இன்’ உருபுமட்டுமே பெயர்ச்சொல்லுடன் புணரும். இந்த இன்னுருபின் ஈற்றுகரம் கெட்டு நன்றுடன் புணரின் ஒப்புப்பொருள் நீங்கும்.

‘அமர்ந்து’ எனும் வினையெச்சம் ‘இன்சொல்’ எனும் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“அகன்அமர்ந்து* ஈதலின் நன்றே முகன்அமர்ந்து*
இன்சொல னாக பெறின்.“

* குற்றியலுகரம் துகரம் அலகு பெறாது.

குறளெண் – ௯௪. (அச்சில் உள்ளவாறு.)

“முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்.”

“முகம் மலர்ந்து, இனிது நோக்கி (அருகில் வந்ததும்) அகத்தில் இன்சொல்லுடைமையே அறம்” எனவிரிந்து ஆற்றொழுக்காக பொருள்தரும்.

’நோக்கி’ எனும் வினையெச்சத்துடன் ‘அகம்’ எனும் பெயர்ச்சொல் புணராது.

தேற்றேகாரம் எதனுடனும் புணராது. ‘இன்சொலினதே’ என்பது தேற்றேகாரச்சொல்.

செம்மைவடிவம் —
“முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.”

குறளெண் – ௯௫. (அச்சில் உள்ளவாறு.)
“துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு.”

“யார்மாட்டும் இன்பத்தைத்தரும் இன்சொல்லை உடையவர்க்கு துன்பந்தரும் துவ்வாமை (வறுமை) இல்லையாகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘துவ்வாமை’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாகும். ‘இல்’ என்பது ‘இல்லை’ எனும் பொருள்தரும் குறிப்பு வினைமுற்று. திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘யார்மாட்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘இன்புறூஉம்’ என்பது வினையெச்சம். ‘இன்சொல்’ என்பது பெயர்ச்சொல். வினையெச்சம் பெயர்ச்சொல்லுடன் புணராது.

செம்மைவடிவம் —
“துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.”

குறள் – 95. (அச்சில் உள்ளவாறு.)

“பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.”

“பணிவுடைய ஒருவற்கணி இன்சொலனாதல் ; மற்றுப்பிற (அணி) அல்ல” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க. ‘அணி’ என்பது ஈரிடத்தும் சென்றுபொருந்தி பொருள்தரும்.

‘ஒருவர்’ மறுபெயர்ச்சொல். ‘ஆதலொருவர்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி.

‘அணி’ என்பது ‘அணிகலன்’ எனும் பொருள்தரும் பெயர்ச்சொல். ‘அல்ல’ என்பது குறிப்புவினைமுற்று. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்
கணிஅல்ல மற்றுப் பிற.”

குறளெண் – ௯௬. (அச்சில் உள்ளவாறு.)

“அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.”

“நல்லவை நாடி இனிய சொலின் அல்லவை தேய அறம் பெருகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘தேய’ என்பது வினையெச்சம். ‘அறம்’ என்பது பெயர்ச்சொல். வினையெச்சம் பெயர்ச்சொல்லுடன் புணராது.

‘பெருகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. வினைமுற்றின் ஈறு நீங்காது.

‘நாடி’ என்பது ‘நல்லவை’ என்பதனைத்தழுவும்; ‘இனிய’ என்பது ‘சொலின்’ என்பதனைத்தழுவும். ‘நாடியினிய’ என்பன தழுவாச்சொற்கள். தழுவுஞ்சொற்களே புணரும்.

செம்மைவடிவம் —
“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.”

குறளெண் – ௯௭. (அச்சில் உள்ளவாறு.)

“நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.”

“பயனை ஈன்று பண்பின் தலைமையானது பிரியாச்சொல் நயத்தினை ஈன்று நன்றி பயக்கும்” என்றவாறு விரித்து அவ்வாறே கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘பயனீன்று பண்பிற்றலைப்பிரியாச்சொல்’ என்பது நெடுந்தொடரெழுவாய்.

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.

குறள் – ௯௮.

“சிறுமையு ணீங்கிய வின்சொல் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்.”

“சிறுமையில் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந்தரும்” எனவிரியும்.

‘நீங்கிய இன்சொல்’ என்பது பெயரெச்சம். பெயரெச்சம் புணராது.

‘சிறுமையுள்’ என்பது ஏழாம்வேற்றுமைவருபுபேற்ற சொல்.
இடைச்சொல் எனப்படும் ‘உள்’ எனும் ஏழன்வேற்றுமைவுருபு தனித்துநின்று பொருள்தராது. ‘சிறுமை’ எனும் பெயர்ச்சொல்லுடன் சேர்ந்துவிட்டது. பெயர்ச்சொல்லின் ஓரங்கமான ‘உள்’ எனும் ஏழனுருபை நிலைமொழியாக்கி ‘நீங்கிய’ எனும் பெயரெச்சத்தை புணர்த்தினால் வேற்றுமைவுருபின் தன்மை நீங்கிவிடும். நிலைமொழியும் வருமொழியும் பொருள்பொருந்த தழுவுவதே புணர்ச்சி. பொருள்கெடுமாறு நிலைமொழியீறும் வருமொழிமுதலும் இடனடிப்படையில் மட்டுமே புணர்வது மயங்குபுணர்ச்சி.

‘இம்மையும் மறுமையும்’ எனும் எண்ணும்மை முடியுமிடத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா. மேலும் எண்ணும்மை தம்முள்தாம் புணரும்; மற்றவற்றுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையு
மிம்மையும் இன்பந் தரும்.”

குறள் – ௯௯. (அச்சில் உள்ளவாறு.)
“இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.”

“இன்சொல் இனிது ஈன்றல் காண்பவன் வன்சொல் வழங்குவது எவன் கொல்லோ” என பொருள்படும். கொல்+ஓ → கொல்+ல்+ஓ → கொல்லோ → இடைகுறைந்து ‘கொலோ’ என நின்ற அசைச்சொல்.
எவன் = எதற்கு.

‘இன்சொல்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லானதால் எதனுடனும் புணராது.

‘காண்பான்’ எனும் வினையாலணையும்பெயரை ‘எவன்’ எனும் வினாச்சொல் தழுவாது. தழுவாச்சொற்கள் புணராது. இவ்வினாச்சொல் ஈற்றில்நின்று வினாப்பொருளைத்தரும். புணர்த்தியபின் பிரித்து வேறிடத்துக்குக்கொண்டு சென்றால் புணர்ச்சி தானே நீங்கிவிடும். புணர்ந்தால் பிரியாது; பிரிவதானால் புணராது.

செம்மைவடிவம் —
“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.”

குறளெண் – ௱. (அச்சில் உள்ளவாறு.)

“இனிய வுளவாக யின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”

‘உளவாக’ எனும் வினையெச்சம் ‘இனிய’ எனுஞ்சொற்கானது. ‘இன்னாத’ வினையெச்சம் ‘கூறல்’ எனுஞ்சொற்கானது. ‘இன்னாதன’ என்பதன் கடையெழுத்து குறைந்து ‘இன்னாத’ என நின்றது. ‘உளவாகயின்னாத’ என்பது தழுவுஞ்சொற்களன்று. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘இருப்ப’ என்பது வினையெச்சம். இதன் முடிக்குஞ்சொல் ‘கவர்ந்தற்று’ ‘காய்’ என்பது இடைப்பிறவரலாக வந்த பெயர்ச்சொல். வினையெச்சம் பெயர்ச்சொல்லுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“இனிய வுளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று.”

நன்றி.
முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button