
குறள் – ௲௨௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.”
உள்ள = நினைத்த அளவில்.
களித்தலும் = வேட்கையால் களித்தல்.
மகிழ்தலும் = இன்புறுதலும்.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நினைக்க வேட்கையால் களித்தலும், கண்டு மகிழ்தலும் கள்ளுக்கு இல்லை; காதலுக்கு உண்டு” என்பதாம்.
‘உள்ள’ என்னும் வினையெச்சம் ‘களித்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
களித்தலும், மகிழ்தலும் ஆகிய தெரிநிலைவும்மைகள் புணரின் பொருட்செறிவு குன்றும். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
உள்ளுதலும், காணுதலும் வேறுவேறு வினைமுதற்குரிய வினைகள். வேறுவேறு வினைமுதற்குரிய வினைகள் புணரா.
செம்மைவடிவம் —
“உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.”
குறள் – ௲௨௱௮௰௨ (அச்சில் உள்ளவாறு).
“தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின்.”
தினைத்துணையும் = தினையளவும். மீச்சிறிது என்னும் பொருளது.
ஊடாமை = பிணங்காமை.
பனைத்துணையும் = பனையளவும். மிகப்பெரிது என்னும் பொருளது.
காமம்= காதல்.
நிறைய = மிகுந்து.
வரின் = வந்தால்.
“பனைத்துணையும் நிறைய காமம் வரின் தினைத்துணையும் ஊடாமை வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பனையளவினும் மிகுந்த காதல் வந்தால் தினையளவும் பிணங்காமை வேண்டும்” என்பதாம்.
தினைத்துணையும், பனைத்துணையும் என்பன தெரிநிலைவும்மைச்சொற்கள். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘காமம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.”
குறள் – ௲௨௱௮௰௩ (அச்சில் உள்ளவாறு).
“பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்.”
பேணாது = (தலைமகளைப்) போற்றாது.
பெட்பவே = (தலைமகன் தான்) விரும்பியவாறே.
செய்யினும் = செய்தாலும்.
கொண்கனை = கணவனை.
அமையல = அமைதியுறா.
கண் = விழிகள்.
“பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணாது கண் அமையல” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தன்னைப்போற்றாது அவர் விரும்பிவாறே செய்தாலும் கணவனைக்காணாது கண்கள் அமைதியுறா” என்பதாம்.
‘செய்யினும்’ என்பது ‘செய்யார்’ என்னும் எதிர்மறைப்பொருளை தருவதால் எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை புணரின் எதிரமறைப்பொருட்செறிவு குன்றும். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.”
குறள் – ௲௨௱௮௰௪ (அச்சில் உள்ளவாறு).
“ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு.”
ஊடற்கண் = பிணங்குதற்கு.
சென்றேன்மன் = சென்றேன். ‘கூடுதற்கண் சென்றேன்’ என்னும் பொருள்தரும் ‘மன்’ என்பது ஒழியிசையிடைச்சொல்.
கூடற்கண் = கூடலுக்கு.
“தோழி ஊடற்கண் சென்றேன்மன் அதுமறந்து என்னெஞ்சு கூடற்கண் சென்றது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தோழி பிணங்குதற்குச்சென்றேன். அதனை மறந்து எனது நெஞ்சு கூடலுக்குச்சென்றது” என்பதாம்.
‘ஊடற்கண்’ என்பதன்கண் நான்காம்வேற்றுமைப்பொருளில்வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘ஊடல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சென்றேன்மன்’ என்பதன்கண் வந்த ‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் ‘ஊடற்பொருட்டு அன்றென’ எதிர்மறைப்பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தோழியது’ என்பது பொருளற்ற புணர்ச்சி. ‘அது’ என்பது ஊடலைச்சுட்டும். ‘தோழி என்பது விளிப்பெயர். விளிப்பெயர் எதனுடனும் புணராது.
“கூடற்கண்’ என்பதன்கண் நான்காம்வேற்றுமைப்பொருளில்வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கூடல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சென்றது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது*என் னெஞ்சு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௱௮௰௫ (அச்சில் உள்ளவாறு).
“எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.”
எழுதுங்கால் = கண்ணெழுதும்போது. கோல் = அஞ்சனக்கோல். மைதீட்டும் குச்சி.
கொண்கன் = கணவன்.
பழி = குற்றம்.
கண்டவிடத்து = கண்டபோது.
“எழுதுங்கால் கோல்காணாக்கண்ணேபோல் கொண்கன்கண்டவிடத்து பழிகாணேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“விழிகளுக்கு மைதீட்டும்போது அஞ்சனக்கோலைக்காணாத கண்களைப்போல் கணவனைக்காணும்போது அவரது குற்றங்களைக்காணேன்” என்பதாம்.
‘எழுதுங்கால்’ என்னும் வினையெச்சம் ‘கோல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘போல்’ என்னும் உவமவுருபு கண்’ என்னும் பெயரைச்சார்ந்துநின்று ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.”
குறள் – ௲௨௱௮௰௬ (அச்சில் உள்ளவாறு).
“காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
காணேன் றவறல் லவை.”
காணுங்கால் = காணும்போது.
காணேன் = அறியேன்.
தவறாய = தவறானவை.
தவறல்லவை = தவறல்லாதவை.
“(கணவனைக்) காணுங்கால் தவறாய காணேன். காணாக்கால் தவறல்லவை காணேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவனைக்காணும்போது அவரது தவறுகளைக்காணேன்; எல்லாம் நிறையாக தெரிகிறது. அவரைக்காணாதபோது அவரது தவறுகளையே காண்கிறேன்; எல்லாம் குறையாக தெரிகிறது” என்பதாம்.
‘காணேன்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை.”
குறள் – ௲௨௱௮௰௭ (அச்சில் உள்ளவாறு).
“உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தென் புலந்து.”
உய்த்தல் = நீரொடு போதல்.
புனல் = நீர். ஈண்டு ஆறு.
பொய்த்தல் = நீடியாமை, பயனின்மை.
என் = யாது.
புலந்து = பிணங்கி.
“உய்த்தலறிந்து புனல்பாய்பவரே போல் பொய்த்தலறிந்து புலந்து என்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நீரொடு போதல் உறுதியென அறிந்து ஆற்றில் பாய்பவரே போல் பிணங்குதல் நீடிக்காதென அறிந்தே பிணங்குவதால் பயன் யாது. ஏதுமில்லை” என்பதாம்.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘பாய்பவர்’ என்னும் பெயரைச்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அறிந்து’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்த லறிந்து*என் புலந்து.”
* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௱௮௰௮ (அச்சில் உள்ளவாறு).
“இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.”
இளித்தக்க = இழிவான.
இன்னா = துன்பம்.
செயினும் = செய்தாலும்.
களித்தார்க்கு = மகிழ்ந்தார்க்கு.
கள் அற்றே = கள்ளினை போன்றதே.
கள்வ = வஞ்சக, உள்ளங்கவர்ந்தவ. நின்மார்பு = நினது மார்பு.
“கள்வ களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே நின்மார்பு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உள்ளங்கவர்ந்தவனே தன்னை உண்டு மகிழ்ந்தார்க்கு இழிவான துன்பங்களை செய்தாலும் அவரால் மேன்மேலும் விரும்பப்படும் கள்ளினைப்போன்றதே நினது மார்பு” என்பதாம்.
‘இளித்தக்க இன்னா’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘செயினும்’ என்னும் இறந்தது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘களித்தார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘கள்’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘கள்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள்அற்றே கள்வநின் மார்பு.”
குறள் – ௲௨௱௮௰௯ (அச்சில் உள்ளவாறு).
“மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.”
மெல்லிது= மென்மையது.
காமம் = காதல்.
செவ்வி = அழகு, இனிமை.
தலைப்படுவார் = ஈடுபடுவார்.
“காமம் மலரினும் மெல்லிது சிலர் அதன்செவ்விதலைப்படுவார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காதல் மலரினும் மென்மையானது. சிலரே அதனது அழகினை உணர்ந்து ஈடுபடுவார்” என்பதாம்.
‘மலரினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல் புணரின் சிறப்பும்மைப்பொருட்செறிவு குன்றும். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘காமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘சிலர்’ என்பது எழுவாயாகும் . எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.”
குறள் – ௲௨௱௯௰ அச்சில் உள்ளவாறு).
“கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத
லென்னினுந் தான்விதுப் புற்று.”
துனித்தே = ஊடி, பிணங்கி.
புல்லுதல் = தழுவுதல்.
விதுப்புற்று = விரைவு கொண்டு.
கலங்கினாள் = மயங்கினாள்.
இது தலைமகன்கூற்று.
“கண்ணில் துனித்தே புல்லுதல்
என்னினும் தான் விதுப்புற்று கலங்கினாள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கண்களில் பிணக்கினைக்காட்டி தழுவுதலில் என்னினும் விரைவு கொண்டு மயங்கினாள்” என்பதாம். பிணக்கு உடனே நீங்க விரைந்து தழுவினாளென்பது.
‘கண்ணில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘புல்லுதல்’ என்னும் தொழிற்பெயர் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது.
‘புல்லுதலென்னினும்’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி. இது ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொற்பொருளைத்தராது இடைச்சொல்லாய் மயங்கி ‘புல்லுதலானாலும்’ என்னும் மயங்குபொருளைத்தரும்.
‘என்னினும்’ என்னும் எதிரது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கண்ணில் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.”
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



