இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

காமத்துப்பால். இயல் — கற்பியல். தலைப்பு - ௱௨௰௭. அவர்வயின் விதும்பல். விதும்பல் = விரைதல். வேட்கைமிகுதியால் தலைமகனும் தலைமகளும் ஒருவரையொருவர் காணுதற்கு விரைதல்.

குறள் – ௲௨௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு).

“வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.”

வாளற்று = ஒளியிழந்து.
புற்கு என்ற = மங்குதல் ஆயின.
ஒற்றி = சுவரில் குறித்து குறித்து.
அவர் = ஈண்டு கணவரைச்சுட்டியது.

“கண்ணும் வாளற்று புற்கென்ற அவர் சென்ற நாளொற்றி விரல் தேய்ந்த” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அவர் வரும்வழிபார்த்து எனது கண்கள் ஒளியிழந்து மங்கின. அவர் பிரிந்த நாள்களை சுவரில் குறித்து குறித்து விரல்கள் தேய்ந்தன” என்பதாம்.

‘வாளற்றுப்புற்கென்ற’ என்னும் புணர்மொழி உணர்ச்சியில்லாதது. ‘மங்கின’ என்னும் பொருள்தரும் ‘புற்கென்ற’ என்னும் வினைமுற்று தனித்துநின்று உணர்ச்சியைத்தரும்.

‘கண்ணும்’ என்பது இறந்தது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வாளற்று புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.”

 

குறள் – ௲௨௱௬௰௨ (அச்சில் உள்ளவாறு).

“இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேல்
கலங்கழியுங் காரிகை நீத்து.”

இலங்கிழாய் = ஒளிரும் அணிகலன்களையணிந்த தோழியே.
இன்று = இன்றைக்கு.
என்றோண்மேல் = எனது தோளிலணிந்த.
கலம் = அணிகலன்கள், தோள்வளை முதலான.
கழியும் = கழலும், நீங்கும்.
காரிகை = அழகு.
நீத்து = நீக்கி.

“இலங்கிழாய் இன்று மறப்பின் என்காரிகை நீத்து தோண்மேல்கலம் கழியும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒளிரும் அணிகலன்களையணிந்த தோழியே இன்றைக்கு யான் அவரை (கணவரை) மறந்தால் எனது அழகு நீங்கி தோளிலணிந்த அணிகலன்கள் கழன்று நீங்கும்” என்பதாம்.

‘இலங்கிழாய்’ என்னும் விளிச்சொல் புணராது தனித்துநின்று விளிப்பொருளை உணர்த்தும். விளிச்சொல் புணராது.

‘மறப்பின்’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கலம்’ என்பது எழுவாயாகும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘கழியும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இலங்கிழாய் இன்று மறப்பின்என் றோண்மேல்
கலம்கழியும் காரிகை நீத்து.”

 

குறள் – ௲௨௱௬௰௩ (அச்சில் உள்ளவாறு).

“உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்.”

உரன் நசைஇ →உரன் நசை = வலிமையை விரும்பி. ஈண்டு பொருள்தேடி என்பது.
உள்ளம் = ஊக்கம்.
சென்றார் = சென்றவர் (கணவர்).
வரன் நசைஇ → வரன் நசை = திரும்ப வருவதை விரும்பி.
இன்னும் = இன்றளவும்.
உளேன் = உயிர்வாழ்கிறேன்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“பொருளீட்டலை விரும்பி ஊக்கத்தை துணையாக கொண்டு சென்றவர் திரும்ப வருவதை விரும்பி இன்றளவும் உயிர்வாழ்கிறேன்” என்பதாம்.

‘நசைஇ (விரும்பி)’ என்னும் வினையெச்சம் ‘ஊக்கம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘துணையாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘துணை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நசைஇ (விரும்பி)’ என்னும் வினையெச்சம் ‘இன்னும் (இன்றும்)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது. மேலும் அளபெடுத்தசொல் விட்டிசைத்து தான் அளபெடுத்ததை உணர்த்தும்.

‘இன்னும்’ என்னும் இறந்தது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உரனசைஇ உள்ளந் துணையாக சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்.”

 

குறள் – ௲௨௱௬௰௪ (அச்சில் உள்ளவாறு).

“கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு.”

கூடிய காமம் = மிகுந்த காதல்.
பிரிந்தார் = பிரிந்தவர் (கணவர்).
வரவு = வருதல்.
உள்ளி = நினைத்து.
கோடு = மரக்கொம்பு.
கொடு = கொண்டு என்பதன் இடைக்குறை.
ஏறும் = உயரும், மேலேறும்.

“என்னெஞ்சு பிரிந்தவர் கூடிய காமத்(தொடு) வரவுள்ளி கோடுகொ(ண்)டு ஏறும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஒடு’ என்னும் வேற்றுமைவுருபு தொக்குநின்றது.

“எனது நெஞ்சு பொருள்தேடி பிரிந்தவர்‌ மிகுந்த காதலுடன் வருவதை நினைத்து மரக்கொம்பினைப்பற்றிக்கொண்டுமேலேறும். தலைமகளுக்கு காதல் மிகுகிறது” என்பதாம்.

‘பிரிந்தார்’ என்னும் வினையாலணையும்பெயர் எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உள்ளி’ என்னும் வினையெச்சம் ‘கோடு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘ஏறும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளி கோடுகொ டேறும்என் னெஞ்சு.”

 

குறள் – ௲௨௱௬௰௫ (அச்சில் உள்ளவாறு).

“காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி
னீங்குமென் மென்றோட் பசப்பு.”

காண்கமன் = காண்பேனாக. ‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் ‘காணேன்’ என்னும் பொருளைத்தந்தது.
கொண்கன் = கணவன்.
மென்றொட்பசப்பு = மென்மையான தோள்களது பசலை.

“கொண்கனைக்காண்கமன் கண்ணாரக்கண்டபின் என்மென்றோட்பசப்பு நீங்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கணவரைக்காண்பேனாக. அவரைக்கண்ணாரக்கண்டபின் எனது மென்மையான தோள்களது பசலை நீங்கும். ஆயினும் இவை நிகழா” என்பதாம்.

‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் ‘காண்க என்னும் வியங்கோள்வினைமுற்றுடன் புணர்ந்து ‘காணேன்’ என்னும் பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கொண்கனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘கண்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘கண்டபின்’ என்பதன்கண் வந்த ‘பின்’ என்னும் காலயிடைச்சொல் ‘கண்ட’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து அதனை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நீங்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காண்கமன் கொண்கனை கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்றோட் பசப்பு.”

 

குறள் – ௲௨௱௬௰௬ (அச்சில் உள்ளவாறு).

“வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
பைதனோ யெல்லாங் கெட.”

வருகமன் = வருக. ‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் இப்பொழுது ‘வாரார்’ என்னும் பொருள்தரும்.
கொண்கன் = கணவன்.
பருகுவன் = (அவாதீர) துய்ப்பன்.
பைதனோய் = துன்பந்தரும் நலக்கேடு.
கெட = நீங்க.

‘கொண்கன் ஒருநாள் வருகமன் பைதனோயெல்லாம் கெட பருகுவன்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கணவர் ஒருநாள் வருவார். துன்பந்தரும் நலக்கேடுகளெல்லாம் நீங்க அவரைத்துய்ப்பன்” என்பதாம்.

‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் ‘வருக’ என்னும் வியங்கோள்வினைமுற்றுடன் புணர்ந்து ‘இப்போது வாரார்’ என்னும் பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கொண்கன்’ என்பது எழுவாயாகும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘நாள்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணரின் தன்முற்றுப்பொருளை இழக்கும். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல் புணரின் முற்றுப்பொருள் நீங்கும். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதனோ யெல்லாம் கெட.”

 

குறள் – ௲௨௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).

“புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.”

புலப்பேன்கொல் = ஊடுவேனோ, பிணங்குவேனோ. ‘கொல்’ என்பது ஐயயிடைச்சொல்.
புல்லுவேன்கொல்லோ = தழுவுவேனோ. ‘கொல்’ என்பது ஐயயிடைச்சொல். ஓகாரம் அசைச்சொல்.
கலப்பேன்கொல் = புணர்வேனோ, கலப்பேனோ. ‘கொல்’ என்பது ஐயயிடைச்சொல்.
கண்ணன்ன = கண்களை ஒத்த.
கேளிர் = உறவினர் (கணவர்).
வரின் = வந்தால்.

“கண்ணன்ன கேளிர் வரின் புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கண்களை ஒத்த கணவர் வந்தால் பிணங்குவேனோ தழுவுவேனோ புணர்வேனோ” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௲௨௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).

“வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து.”

வினைகலந்து = பொருளீட்டும் வினையில் ஈடுபட்டு.
வென்றீக = பொருளீட்டி திரும்ப.
வேந்தன் = தலைவன் (கணவன்).
மனைகலந்து = மனையாளொடு கூடி.
அயர்கம் = மகிழ்வோம், துய்போம்.
விருந்து = ஈண்டு புணர்ச்சி என்பது.

“வேந்தன் வினைகலந்து வென்றீக மனைகலந்து மாலை விருந்து (உண்டு) அயர்கம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘உண்டு’ என்பது சொல்லெச்சம்.

“தலைவன் (கணவன்) பொருளீட்டும் வினையில் ஈடுபட்டு பொருளீட்டி திரும்ப மனையாளொடு கூடி மாலைப்பொழுதில் விருந்துண்டு மகிழ்வோம்” என்பதாம்.

‘அயர்கம்’ என்பது வினைமுற்று. ஈண்டு வினைமுற்று வருமொழியாகி புணராது. ‘மாலை’ என்பதுடன் ‘விருந்து’ என்னுஞ்சொல்லைத்தழுவும்.

செம்மைவடிவம் —
“வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.”

 

குறள் – ௲௨௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).

“ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.”

எழுநாள் = ஏழு நாள்கள். ஈண்டு பலநாள் என்பது.
செல்லும் = கடக்கும், கழியும்.
சேட்சென்றார் = தொலைவின்கண் சென்றார்.
வருநாள் = வரும் நாள்.
வைத்து = நினைத்து.
ஏங்குபவர்க்கு = தவிப்பவர்க்கு.

“சேட்சென்றார் வரும் நாள் வைத்து ஏங்குபவர்க்கு ஒருநாள் எழுநாள் போல் செல்லும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பொருளீட்ட தொலைவின்கண் சென்றார் வரும் நாளை நினைத்து தவிப்பவர்க்கு ஒருநாள் பலநாள் போல கடக்கும்” என்பதாம்.

‘ஒருநாள்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘போல்’ என்னும் உவமவுருபு ‘எழுநாள்’ என்னும் பெயரைச்சார்ந்து உவமப்பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘செல்லும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘வைத்து’ என்னும் வினையெச்சம் ஏங்குபவர்க்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் ‘புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத்து* ஏங்கு பவர்க்கு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௭௰ (அச்சில் உள்ளவாறு).

“பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
முள்ள முடைந்துக்கக் கால்.”

பெறின் என்னாம் = பொருளைப்பெற்று யாது பயன்.
பெற்றக்கால் என்னாம் = மனையாளை பெற்றதால் யாது பயன்.
உறின் என்னாம் = இருப்பதால் யாது பயன்.
உள்ளம் = நெஞ்சம்.
உடைந்து = அழிந்து, கெட்டு.
உக்கக்கால் = பதனழிந்தவிடத்து, விருப்பம் அழிந்தபின்.

இது தலைவனின் கூற்று.
“உள்ளம் உடைந்து உக்கக்கால் பெறின் என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின் என்னாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மனையாளின் நெஞ்சம் பதனழிந்து கெடுமாயின் பொருளை ஈட்டியதால் யாது பயன் மனையாளை அடைந்ததால் யாது பயன் நான் இருப்பதால் யாது பயன். யாதொரு பயனுமில்லை” என்பதாம்.

பெறின், உற்றக்கால், உறின் ஆகிய வினையெச்சங்கள் ’என்னாம்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘என்னாம்’ என்னும் வினாச்சொல் வருமொழியாகி புணராதுநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.

‘உள்ளம்’ என்பது எழுவாயாகும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உடைந்துக்கக்கால்’ என்பது வலிந்த புணர்ச்சி. புணர்மொழியை பிரிக்காமல் ‘உக்கக்கால்’ என்னும் வினையெச்சத்தை அறியயியலாது. பிரித்து பொருளறிவதாயின் புணர்த்தவேண்டா.

செம்மைவடிவம் —
“பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்
உள்ளம் உடைந்து*உக்கக் கால்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button