
குறள் – ௪௱௧ (அச்சில் உள்ளவாறு).
“வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.”
வினை = செயல்.
வலி = வலிமை, ஆற்றல்.
மாற்றான் = எதிராள், தடைகள்.
துணை = உதவுவார்.
“செயலின் வலிமையும், அதனை முடிக்கக்கருதும் தனது ஆற்றலையும், தடைகளின் வலிமையையும், தமக்கு உதவுவார் ஆற்றலையும் சீர்தூக்கிப்பார்த்து செய்க” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியும் தூக்கிச் செயல்.”
குறள் – ௪௱௨ (அச்சில் உள்ளவாறு).
“ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.”
ஒல்வது = இயலுவது.
செல்வார்க்கு = செய்வார்க்கு.
செல்லாதது = முடியாதது.
“தமக்கு இயலுவதை அறிவது. அறிந்த அதன்கண் நின்று செய்வார்க்கு முடியாதது இல்லை” என்பதாம்.
‘அறிவது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அதன்கண்’ என்பதன்கண் வந்த ஏழாம்வேற்றுமைவுருபு சுட்டுப்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தங்கி’ என்னும் வினையெச்சம் ‘செய்வார்க்கு’ என்ற வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இல் (இல்லை) என்னும் குறிப்புவினைமுற்று ‘செல்லாததில்’ எனப்புணர்ந்தால் வினைமுற்றின் தன்மையிழந்து வேற்றுமைவுருபாக மயங்கும்; வினைமுற்றாக உணர புணர்ச்சி தானே நீங்கும்.
மயங்குபுணர்ச்சி எம்மொழியிலும் இல்லை.
‘செய்வார்க்கு’ என்னும் வினையாலணையும்பெயரையடுத்து விட்டிசைக்கும். இதனையடுத்துநிற்கும் சகரத்தை ஒலித்து ‘செல்லாதது’ என்பதை தொடர்ந்தொலிக்கமுடியாது. தமிழில் ஒலியாயெழுத்து இல்லை. விட்டிசைக்குமிடங்கள் புணரா.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஒல்வ தறிவது* அறிந்தன் கண்தங்கி
செய்வார்க்கு செல்லாதது* இல்.”
*குற்றியலுகரமாகிய இருதுகரமும் அலகுபெறாது.
குறள் – ௪௱௩ (அச்சில் உள்ளவாறு).
“உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.”
உடைத்தம் = தம்முடைய.
ஊக்கம் = மனயெழுச்சி.
ஊக்கி = தொடங்கி.
இடைக்கண் = இடையில்.
முரிந்தார் = தவறியார்.
“தம்முடைய ஆற்றலை அறியாது மனயெழுச்சியால் ஒரு செயலைத்தொடங்கி செய்ய தவறியார் பலர்” என்பதாம். உடைய என்பது அவாய்நின்றமையின் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. அவாய்நிலை = ஒருசொல் தன்னொடு பொருந்தி பொருள் முடிதற்குரிய மற்றொருசொல்லை வேண்டிநிற்கும்நிலை.
‘வலியறியார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஊக்கத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘ஊக்கம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஊக்கி’ என்னும் வினையெச்சம் ‘இடை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.”
குறள் – ௪௱௪ (அச்சில் உள்ளவாறு).
“அமைந்தாங் கொழுகா னளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.”
அமைந்து = (நட்புடன்) பொருந்தி.
ஒழுகான் = நடவான்.
அளவு = வலிமை.
வியத்தல் = தற்புகழ்ச்சி.
“அயலாரொடு பொருந்தி நடவான், தனது வலிமையை அறியான், தற்புகழ்வான் விரைந்து கெடுவான்”
என்பதாம்.
வெவ்வேறு கருத்துகள் அடுத்தடுத்துவரும்போது அவை தம்முள்புணரா.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.”
குறள் – ௪௱௫ (அச்சில் உள்ளவாறு).
“பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.”
பீலி = மயிலிறகு.
பெய் = ஏற்றுதல்.
சாகாடு = வண்டி.
இறும் = முறியும்.
சால = மிகுதி.
பெயின் = ஏற்றின்.
“பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்” என்பது சொற்பிரிப்பு.
“எளிய மயிலிறகென்னும் பண்டத்தையும் அளவுக்கு மிகுதியாக ஏற்ற வண்டியின் வலிய அச்சும் முறியும்” என்பதாம்.
‘சாகாடும்’ என்னும் தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘அச்சிறும்’ என்பது ‘அச்சு இறும்’ என்றாகும் எழுவாய்த்தொடர். இதன்கண் வந்த ‘அச்சு’ என்னும் இயல்புபொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. ‘அச்சிறும்’ என்னும் புணர்ச்சி பொருள்மயக்கங்தரும்.
‘பண்டம்’ என்பது ‘பண்டத்தை’ எனவிரியும். ‘பண்டம்’ எனுஞ்சொல் ‘சால’ என்னும் உரிச்சொல்லுடன் புணராது. இரண்டாம்வேற்றுமைவுருபு வினையொடுமட்டுமே புணரும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பீலிபெய் சாகாடும் அச்சு*இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.”
*குற்றியலுகரமாகிய சுகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௬ (அச்சில் உள்ளவாறு).
“நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.”
இறந்து = கடந்து.
ஊக்கின் = ஏறின்.
இறுதி = அழிவு.
“மரநுனிக்கிளையில் ஏறினவர் அதற்குமேலும் ஏறினால் அவரது உயிர் நீங்கும்” என்பதாம்.
‘நுனிக்கொம்பரேறினார்’ என்பது தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது. ‘நுனிக்கொம்பர்’ (கொம்பினது நுனி) என்பது ‘கடைக்கண்’ (கண்ணினது கடை) என்பதுபோல பின்முன்னாக தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை.
‘ஊக்கின்’ என்னும் வினையெச்சம் ‘உயிர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“நுனிக்கொம்ப ரேறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.”
குறள் – ௪௱௭ (அச்சில் உள்ளவாறு).
“ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.”
ஆற்றின் = கொடுப்பதாயின்.
ஈக = கொடுக்க.
போற்றி = பேணி, காத்து.
“கொடுக்கும்போது தம்மிடமுள்ள பொருளின் அளவையறிந்து அதற்கேற்ப கொடுக்கவேண்டும். அங்ஙனம் கொடுத்தல் பொருளைப்பேணும் நெறியாகும். “வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்” — திரிகடுகம் – 21. எல்லைக்கேற்ற ஈதலாவது தனது வருவாயை நான்கு. கூறாக்கி, அவற்றுள் இரண்டனை தன்செலவாக்கி, மேலிடர் வந்துழி அதனை நீக்குதற்பொருட்டு ஒன்றனை வைப்பாக்கி, நின்ற ஒன்றனை ஈதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது“ என்பதாம்.
‘ஆற்றின்’ என்னும் வினையெச்சம் ‘அளவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஈக’ என்பது ஏவல்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.”
குறள் – ௪௱௮ (அச்சில் உள்ளவாறு).
“ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.”
ஆகு = வரவு.
ஆகாறு = வரவுவழி.
இட்டிது = குறுகியது.
போகு = செலவு.
போகாறு = செலவுவழி.
“போகு ஆறு அகலாக்கடை ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடில்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பொருள் செலவழியும் வழி அகலாதபோது பொருள் வரும்வழியின் அளவு குறுகியதாயினும் கேடில்லை” என்பதாம்.
‘ஆயினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை.”
குறள் – ௪௱௯ (அச்சில் உள்ளவாறு).
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
வில்லாகித் தோன்றாக் கெடும்.”
அளவு = வருவாயளவு.
“தன்னுடைய வருவாயனவினை அறிந்து வாழாதவனது வாழ்க்கை உள்ளதுபோல தோன்றி, பின்னர் அத்தோற்றமும் இன்றிக்கெடும்” என்பதாம்.
‘வாழாதான்வாழ்க்கை’ என்னும் வேற்றுமைவுருபு தொக்க இப்பெயர்ச்சொல் ‘உள’ என்னும் வினையுடன் புணராது. திரிபில்பெயர்ச்சொல் வினையுடன் புணராது.
‘போல’ என்னும் உவமவுருபு ‘உள’ என்னும் வினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இல்லாகி’ என்னுஞ்சொல்லினையடுத்து விட்டிசைக்கும். இச்சொல்லினை தகரமெய்யுடன் தொடர்ந்தொலிக்க இயலாது. தோன்றா என்பதன் தகரமே ஒலிக்கும். தமிழில் ஒலியாயெழுத்தில்லை. எனவே தகரமெய் வராது. விட்டிசைக்குமிடங்கள் புணரா.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி தோன்றாக் கெடும்.”
குறள் – ௪௮௰ (அச்சில் உள்ளவாறு).
“உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.”
உள = உள்ளது.
வரை = அளவு.
தூக்காத = சீர்தூக்காத.
ஒப்புரவு = உதவுதல்.
வள = வளமை.
வல்லை = விரைந்து.
“தம்மிடமுள்ள அளவினை சீர்தூக்கிப்பாராது உதவுதல் அவ்வளத்தின் அளவினை விரைந்து கெடுக்கும்” என்பதாம்.
‘தூக்காத வொப்புரவாண்மை’ என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘வல்லை’ என்னும் வினையடை ‘கெடும்’ என்னும் வினையை விளக்கி புணராது நிற்கும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லை கெடும்.”
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




