இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி:”தலைப்பு – ௬. வாழ்க்கைத்துணைநலம்”.

கசடற மொழிபயில்!

பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௧.

“மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”

“மனைக்குத்தக்க மாண்பினை உடையவளாகி தன்னை (ஏற்றுக்)கொண்டவனது வளத்திற்கு தகுந்தவளாக நடப்பவள் வாழ்க்கைத்துணை ஆவாள்” எனவிரியும்.

‘ஆகி’ என்பது வினையெச்சம். ‘தன்’ என்பது ‘இல்லாள்’ என்பதன் மறுபெயர்ச்சொல். வினையெச்சம் வினையொடு புணரும்; மறுபெயர்ச்சொல்லுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“மனைத்தக்க மாண்புடைய ளாகிதற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௨.

“மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.”

“இல்லாள்கண் மனைமாட்சி இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

ஒருசொல் வேறோர் இடத்தில் சென்று நின்று பொருள்தருவதாயின் அதற்கேதுவாக அச்சொல்லை புணர்ச்சியின்றி தனித்து நிறுத்தவேண்டும். புணர்ந்தபின் அப்புணர்மொழியிலிருந்து ஒருசொல்லைப்பிரித்தால் அப்புணர்ச்சி தானே நீங்கும். அவ்வாறாயின் புணர்ச்சியால் பயனில்லை.

‘வாழ்க்கையெனைமாட்சித்தாயினும்’ என்பதில் ‘வாழ்க்கை+ எனைமாட்சி’ ஆகிய இருசொற்கு இடையே எதுவும் தொகவில்லை; புதுப்பொருள் எதுவும் தோன்றவில்லை. ‘வாழ்க்கை’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாக எழுவாயாக நிற்கிறது. தனது இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘ஆயினும்’ எனுஞ்சொல்லில் வரும் ‘உம்’ சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௩.

“இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை.”

‘இல்லவண்’ என்பது அச்சுப்பிழை. ‘இல்லவள்’ என்பதே செஞ்சொல்.

“இல்லத்தின்கண் இல்லாள் மாண்புள்ளாளாயின் இல்லாதது என்? மாண்பில்ளாளாயின் உள்ளது என்?” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

இல்லதென், உள்ளதென் என்பன வினாமுற்றுகள். முற்றுச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௪.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.”

“கற்பென்னுந்திண்மை உண்டாகப்பெறின் பெண்ணிற்பெருந்தக்க யாவுள” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘கற்பென்னுந்திண்மை’ என்பது ஒரு பெயர்ச்சொல். வேறுபடுத்தப்படாத இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மைஉண் டாகப் பெறின்.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௫.

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”

“தெய்வத்தைத்தொழாது கொழுந
னைத்தொழுதெழுவாள் பெய்யென மழை பெய்யும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘பெய்யும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. வினைமுற்றினையடுத்து விட்டிசைக்கவேண்டும். ‘பெய்யுமழை’ என்பது பொருளற்றது.

செம்மைவடிவம் —
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௬.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

“தன்னைக்காத்து தன்னை (ஏற்றுக்)கொண்டவனைப்பேணி தகைசான்ற அறவுரைகளின்வழி நடப்பதில் சோர்விலாள் பெண் ஆவாள்” எனவிரியும்.

தற்காத்து, பேணி, சொற்காத்து என்பன வினையெச்சங்கள். தன், தகை, சோர்வு என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௭.

“சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.”

“மகளிரை சிறைபடுத்தும் காவல் எவன் செய்யும். நிறைகுணங்கள் நல்கும் காவலே மகளிர்க்கு தலையாயது” எனவிரியும். மகளிர் என்பது ஈரிடத்தும் சென்று பொருந்தும். இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘செய்யும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மை வடிவம் —
“சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௮.

“பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.”

இக்குறளுக்குக்கான பரிமேலழகனாரின் உரை வருமாறு — “பெண்டிர் தம்மையெய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின் புத்தேளிர் வாழுமுலகின்கண் அவரால் பெருஞ்சிறப்பினைப்பெறுவர். வழிபடுதல் என்பது சொல்லெச்சம்”
இவ்வுரையில் ‘பெறின்’ எனும் சொல்லுக்கான விளக்கம் இல்லை.

இக்குறளுக்குக்கான நாமக்கல் கவிஞரின் உரை வருமாறு — “பெண்களுக்கு பெருஞ்சிறப்பாகிய கற்பினை உடைய பெண்ணை கணவன் மனைவியாக அடைந்தால் தேவர்கள் வாழும் உலகத்தை அடைவார்கள்.” இதனில் சொல்லெச்சம் எதுவுமில்லை. ‘பெற்றான்’ என்பதற்கு கணவனென கவிஞர் பொருள் கொண்டார்.
வாழ்க்கைத்துணைநலம் எனின் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் வாழ்க்கைத்துணைநலம். பெண்டிரால் கணவன் பெறும் சிறப்பினை இக்குறள் உரைப்பதாக நாமக்கல் கவிஞரின் உரைப்பது பொருத்தமாக உள்ளதெனினும் பெருஞ்சிறப்பு என்பதனை கற்பெனச்சுருக்கியிருக்க வேண்டா.

“நிறைகாக்கும் பெண்டிரைப்பெறின் பெற்றான் புத்தேளிர் வாழும் உலகின் பெருஞ்சிறப்பைப்பெறுவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க. ‘நிறைகாக்கும்’ என்பது சொல்லெச்சம்.

ஒரு சொல்லைப்பிரித்து பொருளுணர்வதானால் அவை தழுவாச்சொல்லாகும். அதனைப்புணர்த்தக்கூடாது. தழுவுஞ்சொற்களே புணரும். அவ்வாறு புணர்ந்தவை பிரியாமலே பொருள்தரும்.

செம்மைவடிவம் —
“பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழு முலகு.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௫௰௯.

“புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை.”

‘இல்லை’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இகழ்வார்முன்’ என்றவிடத்து விட்டிசைக்கும். ‘முன்னேறு’ என்பது மயங்குபுணர்ச்சி. இயல்பில் நேர்ப்பொருள்தரும் குறள்கள் இதுபோன்ற வேண்டாப்புணர்ச்சிகளால் மயங்குகின்றன.

‘போல்’ என்னும் உவமவுருபு எதனுடனும் புணராது.

“இகழ்வார்முன் ஏறு போன்ற பீடுநடை, எது புகழ்தருமென்ற புரிதல் இல்லாத இல்லாளை உடையோர்க்கு இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

செம்மைவடிவம் —
“புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.”

தலைப்பு – ௬.
வாழ்க்கைத்துணைநலம்.
குறள் – ௬௰.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு.“

‘அதன்’ என்பது சுட்டுப்பெயர்ச்சொல். சுட்டுப்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

நன்கலம், நன்மக்கட்பேறு என்பன எண்ணுப்பொருளன்று . ‘ஆவது’ எனும் சொல்லுருபு மறைந்துள்ளது. நன்கலநன்மக்கட்பேறன்று; மனைமாட்சியின் நன்கலமாவது நன்மக்கட்பேறாகும். கலம் = அணிகலன்.

இவ்வாறு சொற் புணர்ச்சியைப்பிரித்தால் செய்யுளழகு என்னாவது; இசை என்னாவதென வினவலாம். மொழியின் தலையாய நோக்கம் கருத்தினை வெளிப்படுத்துவது; மொழியின் வடிவங்களும் அதற்கானவையே. கருத்து செம்மையாக வெளிப்படுங்கால் அதனில் இயற்கையாய் அமையும் இசையே போதுமானது; செயற்கையாக இசையைக்கூட்ட வேண்டா. மேலும் வெண்பா செப்பலோசைக்கானது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.“

நன்றி.
முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button