இலக்கணம்தமிழ்

குறள்களின் பெருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௫௧. தெரிந்து தெளிதல்.

குறள் – ௫௱௧ (அச்சில் உள்ளவாறு).

“அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும்.”

உயிரச்சம் = சாதலுக்கு அஞ்சுதல்.
திறம் = தகுதி, மனப்பான்மை.
தேறுதல் = ஏற்றல், நம்புதல்.

“அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகியவற்றில் ஒருவரது தகுதியை/ மனப்பாங்கினைத்தெரிந்து தெளிந்தபின் அவரை ஏற்கவேண்டும்” என்பதாம்.

உறுதியான தனிப்பொருள்தரும் எண்ணும்மைகள் பொருள்மயங்காவண்ணம் புணர்த்தப்படவேண்டும். ‘பொருளின்பம்’ என்பது ‘பொருளினால் பெறப்படும் இன்பம்’ எனவும்‌ பொருள்படும்.

உறுதியான தனிப்பொருள்தரும் எண்ணும்மைகள் பொருள்மயங்காவண்ணம் புணர்த்தப்படவேண்டும். ‘இன்பமுயிரச்சம்’ என்பது ‘இன்பத்தினால் நிகழும் உயிரச்சம்’ எனவும்‌ பொருள்படும்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. ‘உயிரச்ச நான்கின்’ எனப்புணராது. ‘உயிரச்சம்’ என்றவாறு தனித்துநிற்கும்.

‘நான்கின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘நான்கு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.”

 

குறள் – ௫௱௨ (அச்சில் உள்ளவாறு).

“குடிபிறந்து குற்றத்தி னீங்கி வடுபரியு
நாணுடையான் கட்டே தெளிவு.”

வடு = பழி.
பரியும் = வரும்.
நாணம் = பழிபாவங்களுக்கு அஞ்சுதல்.

“நற்குடியில் பிறந்து குற்றங்களில் நீங்கி பழி வருமோ என நாணி இருப்பவனையே தெரிந்தெடுக்க/ தேர்க” என்பதாம்.

‘குற்றத்தின்’ என்பதன்கண் வெளிப்பட்ட ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு அத்துசாரியைபெற்று ‘குற்றம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பரியும்’ என்ற செய்யுமென்னும் வாய்பாட்டுவினையெச்சம் ‘நாணம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கட்டே’ என்பது தனிச்சொல்லன்று. இடத்தே எனப்பொருள்படும் தேற்றேகாரம்பெற்ற இந்த ஏழாம்வேற்றுமைவுருபு நாணுடையான் என்னுஞ்சொல்லின் விகுதி. ‘கண்ணே’ என்னும் பொருளது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“குடிபிறந்து குற்றத்தின் நீங்கி வடுபரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.”

 

குறள் – ௫௱௩ (அச்சில் உள்ளவாறு).

“அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.”

அரிய = அரும்பொருள்கள்.
ஆசு = குற்றம்.
தெரியுங்கால் = ஆராயுங்கால்.
வெளிறு = அறியாமை, குறை.
இன்மை = இல்லாமை.
அரிதே = இயலாததே.

“தெரியுங்கால் அரியகற்று ஆசற்றார்கண்ணும் வெளிறின்மை அரிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஆராயுங்கால் அரும்பொருள்களைக்கற்று குற்றமற்றவரிடமும் அறியாமையின்மை அரிதே“ என்பதாம்.

‘கற்று’ என்னும் வினையெச்சம் ‘ஆசு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘ஆசற்றார்கண்ணும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘தெரியுங்கால்’ என்னும் வினையெச்சம் ‘இன்மை’ என்னும் பண்புப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘இன்மை’ என்னும் பண்புப்பெயர் ‘வெளிறு’ என்னும் பெயருடன் கூடி பொருள்தரும். வேறோரிடஞ்சென்று பொருந்தி பொருள்தருஞ்சொற்கள் புணரா.

செம்மைவடிவம் —
“அரியகற்று* ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.”

* குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௪ (அச்சில் உள்ளவாறு).

“குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.”

குணம் = மேன்மை.
நாடி = ஆராய்ந்து.
குற்றம் = கீழ்மை, குறை.
மிகை = மிகுதி.
மிக்க= மிகுந்த.

“ஒருவரது மேன்மைகளை ஆராயந்து அவர்தம் குறைகளையும் ஆராய்ந்து அவற்றுள் மிகுதியாக உள்ளதன்பால் அவரைக்கருதுக” என்பதாம்.

குணம், குற்றம் என்னும் இருவேறு பண்புகள் புணராது தனித்துநின்று தம்மை அறிவிக்கும்.

‘நாடி’ என்னும் வினையெச்சம் ‘அவை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“குணநாடி குற்றமு நாடி அவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.”

 

குறள் – ௫௱௫ (அச்சில் உள்ளவாறு).

“பெருமைக்கு மேனைச் சிறுமைக்குத் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.”

பெருமை = மேன்மை.
ஏனை = மற்றை.
சிறுமை = கீழ்மை.
கருமம் = வினை, செயல்.
கட்டளைக்கல் = உரைகல்.

“ஒருவரது மேன்மைக்கும் அவரது கீழ்மைக்கும் அவர்தம் வினைகளே உரைகல் ஆகும்” என்பதாம்.

பெருமைக்கும், சிறுமைக்கும் என்பன எண்ணும்மைகள். எண்ணும்மைகள் தம்முள் புணரும் பிறவற்றுடன் புணரா.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.”

 

குறள் – ௫௱௬ (அச்சில் உள்ளவாறு).

“அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.”

அற்றார் = ஏதுமற்றார்/ அன்பற்றார்.
தேறுதல்= தெளிந்து ஏற்றல்.
ஒம்புக = விலக்குக.
மற்று = ஏனெனில்.
பற்றிலர் = பற்றற்றார்.
நாணார் = பழிக்கு அஞ்சார்.

“ஏதுமற்றாரை/ அன்பற்றவரை தெரிந்து தேர்வுசெய்தலை விலக்குக. ஏனெனில் அவர் பற்றுக்கோடற்றார்; பழிகளுக்கு அஞ்சார்” என்பதாம்.

‘அற்றாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவிரி ‘தேறுதல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘தேர்தல்’ என்னும் தொழிற்பெயர் ‘ஓம்புக’ என்னும் வினைமுற்றுடன் புணராது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.”

 

குறள் – ௫௱௭ (அச்சில் உள்ளவாறு).

“காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.”

காதன்மை = அன்புடைமை.
கந்தா(க) = காரணமாக.
அறிவு = அறிய வேண்டியவை.
அறிவறியார்‌ = அறியவேண்டியவையறியார்
தேறுதல் = தேர்ந்து கொள்ளல்.
பேதைமை = அறியாமை, மடமை.

“அறிய வேண்டியதை அறியாரை அன்பின் காரணமாக வினைக்குரியராக தேர்ந்து கொள்ளல் மடமையால் விளையும் எல்லா விளைவுகளையும் தரும்” என்பதாம்.

‘கந்தாக’ எனவரவேண்டியது ‘கந்தா’ என ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல்லின் ஈற்றெழுத்து குறைந்து நின்றது . ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்னும் முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாம் தரும்.”

 

குறள் – ௫௱௮ (அச்சில் உள்ளவாறு).

“தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.”

தேரான் = ஆராயாதான். தேராது என்னும் பொருளது.
தெளிந்தான் = தெரிவு செய்தான்.
வழிமுறை = வழியினர்க்கும்.
தீரா = முடிவுறா.
இடுப்பை = துன்பம்.

“பிறனைத்தேரான் தெளிந்தான்வழிமுறை தீரா இடும்பைதரும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிறனைத்தேராது தெரிவு செய்வது அவர்தம் வழியினர்க்கும் தீராத துன்பங்களைத்தரும்” என்பதாம்.

‘தேரான்’ என்பது ‘தேராது’ என்னும் பொருள்படும்.

‘பிறனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபு ‘தெளிந்தான்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘தீரா விடும்பை’ என்னும் ஈறுகெட்டயெதிர்மறைப்பெயரெச்சம் வகரவுடம்படுமெய்பெறுவதினும் யகரவுடம்படுமெய்பெற்று ‘தீராயிடும்பை’ என்றாதல் ஒலியொப்புமைதரும். ‘உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்’ என்பது தொல்காப்பியம்.

‘வழிமுறை’ என்பது ‘வழியினர்க்கும்’ என நான்காம்வேற்றுமைவுருபும் எச்சவும்மையும் பெற்று விரியும்.

செம்மைவடிவம் —
“தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா யிடும்பை தரும்.”

 

குறள் – ௫௱௯ (அச்சில் உள்ளவாறு).

“தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள்.”

தேறற்க = தெளியற்க.
தேராது = ஆராயாது.
தேர்ந்தபின் = தெளிந்தபின்.
தேறுக = உறுதி கொள்க.
தேறும்பொருள் = தெளிந்த பொருள் (கருதிய வினை).

“தேராது யாரையும் தேறற்க. தேர்ந்தபின் தேறும் பொருள் தேறுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“யாரையும் ஆராயாது தேர்ந்தெடுக்க வேண்டா. ஆராய்ந்து ஒருவரைத்தேர்ந்தபின் அவரிடம் வினைகளை ஒப்படைக்க உறுதிகொள்க” என்பதாம்.

‘யாரையும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

‘தேர்ந்தபின்’ என்பதன்கண் வந்த ‘பின்’ என்னும் காலயிடப்பெயர் ‘தேறுக’ என்னும் வினைமுற்றுடன் புணராது. முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.”

 

குறள் – ௫௱௰ (அச்சில் உள்ளவாறு).

“தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.”

தேரான் = ஆராயாதான்.
தெளிவும் = தேறுதலும்.
தீரா = நீங்கா.
இடும்பை= துன்பம்.

“ஆராயாதானின் தேர்ந்தெடுத்தலும், ஆராய்ந்து தேர்ந்தெடுத்தபின் அவர்கண் ஐயுறுதலும் நீங்காத்துன்பத்தைத்தரும்” என்பதாம்.

கருத்து மாறுமிடங்கள் புணரா. ‘தெளிவும்’, ‘ஐயுறவும்’ என்னும் எண்ணும்மைகள் எதனுடனும் புணரா.

‘தீராவிடும்பை’ என்னும் வகரவுடம்படுமெய்யினும் ‘தீராயிடும்பை’ என்னும் யகரவுடம்படுமெய் ஒலியொப்புமையும் தெளிந்த பொருளும் கொண்டது. ‘உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்’ என்பது தொல்காப்பியம்.

‘தெளிந்தான்கண்’ என்பதில் வந்த ‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘தெளிந்தான்’ என்னும் எழுவாயுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா யிடும்பை தரும்.”

தொகுத்தெழுதயவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button