
குறள் – ௬௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு).
“துணைநல மாக்கங் தரூஉம் வினைநலம்
வேண்டிய யெல்லாந் தரும்.”
நலம் = நன்மை.
ஆக்கம் = செல்வம்.
தரூஉம் → தரும்.
வினை = நற்செயல், நற்கருமம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஒருவர்க்கு துணையினது நன்மை செல்வத்தைத்தரும். செய்யும் நல்வினையின் நன்மை விரும்பியனயெல்லாம் தரும்” என்பதாம்.
‘துணைநலம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய யெல்லாம் தரும்.”
குறள் – ௬௱௫௰௨ (அச்சில் உள்ளவாறு).
“என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.”
என்றும் = எக்காலத்தும்.
ஒருவுதல் = விலக்கல்.
நன்றி = நன்மை.
பயவா = தராத.
“புகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“புகழொடு நன்மையைத்தராத செயல்களை எக்காலத்தும் விலக்க வேண்டும்” என்பதாம்.
‘என்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.”
குறள் – ௬௱௫௰௩ (அச்சில் உள்ளவாறு).
“ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்.”
ஓஒதல் → ஓதல் = ஒழித்தல், விடுதல்.
ஒளி = சிறப்பு, புகழ்.
மாழ்கும் = கெடும்.
ஆஅதும் = ஆவோம்.
“மேன்மேலும் உயர்வோம் என்பவர் தமது சிறப்பைக்கெடுக்கும் செயல்களை செய்வதை விடுதல் வேண்டும்” என்பதாம்.
‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஒளிமாழ்கும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘ஆஅதும்’ என்பது முற்றெச்சம். முற்றெச்சம் எதனுடனும் புணராது.
‘என்னுமவர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் மறுபெயர்ச்சொல் (அவர்) புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னும் அவர்.”
குறள் – ௬௱௫௰௪ (அச்சில் உள்ளவாறு).
“இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.”
இடுக்கண் = துன்பம்.
இளி = இழிவு.
இளிவந்த = இழிவான.
நடுக்கற்ற = உறுதியான, நிலைத்த.
காட்சி = அறிவு.
“நடுக்கற்ற காட்சியவர் இடுக்கண்படினும் இளிவந்த செய்யார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உறுதியான அறிவுடையார் துன்புறினும் இழிவுதரும் வினைகளைச்செய்யார்” என்பதாம்.
‘இடுக்கண்படினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.”
குறள் – ௬௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).
“எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.”
எற்றென்று = ஏன் செய்தோமென்று.
இரங்குவது = வருந்துவது.
மற்று = மேலும்.
அன்ன = அத்தகைய, அவ்வாறான.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஏன் செய்தோமென்று வருந்தும் வினைகளைச்செய்யவேண்டா. அவ்வாறு செய்திருந்தாலும்
மேலும் அத்தகைய வினைகளைச்செய்யாதது நன்மைதரும்” என்பதாம்.
‘எற்று’ என்னும் வினாச்சொல்லுடன் ‘என்று’ என்னும் இடைச்சொல் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“எற்றென்று* இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱௫௰௬ (அச்சில் உள்ளவாறு).
“ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”
ஈன்றாள் = பெற்றெடுத்த அன்னை.
“ஈன்றாள்பசிகாண்பானாயினும் சான்றோர் பழிக்கும் வினைசெய்யற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பெற்றெடுத்த அன்னையினது பசியைத்தணித்தற்பொருட்டும் சான்றோர் பழிக்குஞ்செயல்களைச்செய்யற்க” என்பதாம்.
‘ஆயினும்’ என்பதன்கண் உயர்வுச்சிறப்பும்மை வந்தது. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”
குறள் – ௬௱௫௰௭ (அச்சில் உள்ளவாறு).
“பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.”
பழி = இழிவு.
மலைந்து = ஏற்று.
ஆக்கம் = செல்வம்.
கழிநல்குரவு = மிக்க வறுமை.
தலை = உயர்ந்தது, சிறந்தது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இழிவினை ஏற்று அடைந்த செல்வத்தினும் சான்றோரது மிக்க வறுமையே சிறந்தது” என்பதாம்.
‘எய்திய ஆக்கம்’ என்னும் பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும். ‘எய்தியவாக்கம்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி.
‘ஆக்கத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமை அத்துச்சாரியைபெற்று ‘ஆக்கம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பழிமலைந் தெய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.”
குறள் – ௬௱௫௰௮ (அச்சில் உள்ளவாறு).
“கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்.”
கடிந்த = அறவோரால் விலக்கப்பட்ட வினைகள்.
ஒரார் = விலக்காதார் (ஒராது எனப்பொருள்படும் முற்றெச்சம்).
முடிந்தாலும் = கருதிய பயனைத்தந்தாலும்.
பீழை = துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அறவோரால் கடிந்து விலக்கப்பட்டவைகளை தாமும் கடிந்து விலக்காமல் செய்தார்க்கு அவை கருதிய பயனைத்தந்தாலும் பின்பு துன்பத்தையே தரும்” என்பதாம்.
‘செய்தார்க்கு’ என்னும் குவ்வுருபேற்ற சொல் வினைசாராதுபொருள்தரும் ’அவை’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்துபொருள்தரும் பெயருடன் மட்டுமே புணரும்.
‘தாம்’ என்னும் இடைச்சொல் ‘அவை’ என்னும் சுட்டுப்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு* அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱௫௰௯ (அச்சில் உள்ளவாறு).
“அழக்கொண்ட வெல்லா மழப்போ
மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.”
போம் = போகும்.
நற்பாலவை = நல்வினையால் ஈட்டியவை.
“அழக்கொண்டவெல்லாம் அழப்போம். நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பிறர் வருந்தி அழ அவரிடமிருந்து கவர்ந்ததெல்லாம் கவர்ந்தவன் வருந்தி அழ நீங்கும். நல்வழியில் ஈட்டியவற்றை ஒருகால் இழப்பினும் பிற்காலத்தில் அவை இழந்தவனை அடைந்து நன்மைபயக்கும்” என்பதாம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘பயக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘போ(கு)ம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.”
குறள் – ௬௱௬௰ (அச்சில் உள்ளவாறு).
“சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று,”
சலம் = வஞ்சனை, தீச்செயல்.
ஏம் → ஏமம் என்பதன் இடைக்குறை. = காவல்.
ஆர்த்தல் = செய்தல்.
பசுமட்கலம் = ஈரமட்கலம்.
இரீஇ = ஒழுகி.
அற்று = போன்றது, ஒத்தது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வஞ்சனைகளால் பொருளீட்டி அப்பொருளை காவல் செய்தல் ஈரமண்ணால் செய்த கலத்துள் நீரைப்பெய்து கொள்கலம் உடைந்து நீரும் ஒழுகியதை ஒத்தது” என்பதாம்.
‘சலத்தால்’ என்பதன்கண் வந்த ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமை அத்துச்சாரியைபெற்று ‘சலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘செய்து’ என்னும் வினையெச்சம் ‘ஏமம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘கலத்துள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘கலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கலத்துணீர்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. ‘கலத்துள் நீர்’ எனவிரியும் இப்புணர்மொழியில் ‘உள்’ என்னும் வேற்றுமைவுருபு மறுபுணர்ச்சிபெறாது.
செம்மைவடிவம் —
“சலத்தால் பொருள்செய்து*ஏ மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று,”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




